Published:Updated:

பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம், ராதாரவி, யுவன், சுவாதி, கிருஷ்ணா - யார் காப்பாற்றுகிறார்கள்? - ‘யாக்கை' விமர்சனம்

ப.சூரியராஜ்
பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம், ராதாரவி, யுவன், சுவாதி, கிருஷ்ணா - யார் காப்பாற்றுகிறார்கள்? -  ‘யாக்கை' விமர்சனம்
பிரகாஷ்ராஜ், குருசோமசுந்தரம், ராதாரவி, யுவன், சுவாதி, கிருஷ்ணா - யார் காப்பாற்றுகிறார்கள்? - ‘யாக்கை' விமர்சனம்

தனியார் மருத்துவமனையின் ​தலைமை மருத்துவர் ராதாரவி அவரது மருத்துவமனையில் வைத்தே யாரோ ஒரு நபரால் கொல்லப்படுகிறார். கொலையாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க என்ட்ரி ஆகிறார் போலீஸ் பிரகாஷ் ராஜ். ராதாரவியின் மகன் குருசோமசுந்தரத்தின் மீது பிரகாஷ் ராஜுக்கு சந்தேகம் எழுகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க பிரகாஷ் ராஜ் துப்பு துலக்க செல்லும் எல்லா இடங்களுக்கும் குருசோமசுந்தரமும் செல்கிறார். இவை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் கிருஷ்ணா, சுவாதியின் காதல் அத்தியாயம் ஓடுகிறது. ஒரே கல்லூரியில் படிக்கும் கிருஷ்ணாவும் சுவாதியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். ராதாரவி - குருசோமசுந்தரம் - பிரகாஷ்ராஜ் எபிசோடும், கிருஷ்ணா - சுவாதி எபிசோடும் சந்தித்துக்கொள்ளும் புள்ளி என்ன..  திரைக்கதையில் இணையாக பயணிக்கும் இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே என்ன சம்பந்தம்.. ராதாரவியைக் கொலை செய்தது யார்..  ஏன்.. என்பதெல்லாம்தான் ‘யாக்கை’ படம் சொல்லும் கதை. 

​​ 

தனது முதல் படத்தில் 'ஹ்யூமன் டிராஃபிக்கிங்' எனப்படும் மாந்த கடத்துகையை பற்றி பேசிய இயக்குநர் குழந்தை வேலைப்பன், இந்த​ப் படத்தில் மருத்துவ உலகின் இருண்ட பக்கங்கள் பற்றி பேசியிருக்கிறார். சமூக பிரச்னைகளை பற்றித் தொடர்ந்து படமெடுத்து வருவதற்காகவே ஒரு சல்யூட் இயக்குநரே. படத்தின் ஹீரோ கிருஷ்ணாவுக்கு துறுதுறுப்பான கதாபாத்திரம். ஆங்காங்கே ஹெவி டோஸில் நடித்து கடுப்பேற்றவும் செய்கிறார். அந்த ஒன் சைடு காலேஜ் பேக் உங்களுக்கு என்ன ப்ரோ பாவம் பண்ணுச்சு?

​ ஹீரோயின் சுவாதி அழகாக இருக்கிறார், நன்றாகவும் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு கிட்டத்தட்ட எல்லா படங்களிலுமே ஒரே மாதிரியான ரோலோ என்று யோசிக்க வைக்கிறது. சமூக அக்கறை இருக்கறவங்க சீரியஸாவே இருப்பாங்களா என்ன? கொஞ்சம் சிரிக்க வைத்து, காதல் காட்சிகளை அதிகப்படுத்திருக்கலாம்.

சுகர் நோயால் அவதிப்படும் போலீஸ்காரராக பிரகாஷ்ராஜ். ஸ்டைலிஷான வில்லனாக குருசோமசுந்தரம், கிருஷ்ணாவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர்,நண்பனாக  ‘ஜானி’​  ஹரி கிருஷ்ணா என எல்லோருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். 

​த்ரில்லர் கதை என்பதால் திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்க்க 'நான் லீனியர்' முறையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆரம்பத்தில் குழம்ப வைத்து கடைசியில் தெளிய வைக்க வேண்டிய திரைக்கதையோ படம் முடிந்தபின்பும் பலரை குழப்பத்திலேயே வைத்திருப்பது தான் பெரும் வேதனை. ராதாரவி கொலை ஆரம்பத்தில் சென்னையில்தானே நடக்கும்? பிரகாஷ்ராஜ்கூட ‘இது சென்னைல ஆரம்பிக்கல. கோவைல” என்று பேசுவாரே... அப்பறம் கடைசில கோவைல கொலை நடப்பதாக சொல்லுவாங்க. குழப்பம், நமக்கா அவஙக்ளுக்கான்னே குழப்பமா இருக்கு. ராதாரவி கொலை, அவ்ளோ பெரிய மருத்துவமனைல நடந்து, உடலை அத்தனை பெரிய கட்டிட மாடிக்கு கொண்டுபோய்.. ஏப்பா.. இந்த லாஜிக் கிலோ என்ன விலை?

'விற்குற மருந்தெல்லாம் நோயை இல்லாமல் அழிச்சுட்டா, அப்புறம் மருந்து வியாபாரிகள் நாங்க எங்க போறது?' என படத்தில் பல வசனங்கள் ஷார்ப். அதிமுக்கியமாக ‘அவர் எதிக்ஸ் ஆர் அவுட்டேட்டட். படிக்கற படிப்புல இருந்து.. குடிக்கற தண்ணி வரைக்கும் காசுன்னு ஆனப்பறம்’ என்று ஆரம்பித்து குருசோமசுந்தரமும், பிரகாஷ்ராஜும் பேசும் க்ளைமேக்ஸ் வசனங்கள்... செம ஷார்ப்.     ஹரி கிருஷ்ணாவின் காமெடி நம்மை கைத்தட்டிச் சிரிக்க வைக்கின்றன. அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் நகைச்சுவைக் காட்சிகள் வைத்திருந்தால், படம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்திருக்கும். சத்யா பொன்மாரின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். நேர்த்தியான ஃபிரேமிங்கும் கலரிங்கும் சேர்ந்து செமத்தியான விஷுவலை நமக்கு தருகின்றது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. நீ,சொல்லி தொலையேன் மா, நான் இனி காற்றில் என பாடல்களும் சூப்பர். 

க்ளைமாக்ஸ் முடிந்தபின்னரும் சோககீதம் பாடிக்கொண்டிருப்பது படத்தின் ஒட்டுமொத்த டெம்போவையும் குறைத்து எரிச்சலூட்டுகிறது. டெக்னீஷியன்கள் தேர்வில் பலமாக கவனம் செலுத்திய விதத்தில் இயக்குநர் கவர்கிறார். ரொமாண்டிக் - த்ரில்லர் படமான 'யாக்கை' நம்மை சீட்டின் நுனிக்கெல்லாம் கொண்டு வரவில்லை. அதேபோல், சீட்டை விட்டு எழுந்து ஓடவும் வைக்கவில்லை. தாராளமாக ஒருமுறை சென்று பார்க்கலாம்.​