Published:Updated:

வெள்ளைத் தாடி... துள்ளல் நடை!

வந்தாச்சு ரஜினி

பிரீமியம் ஸ்டோரி
##~##

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையில் ஒன்றரை மாதங்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் சென்னை மண்ணில் கால் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

 கடந்த 13-ம் தேதி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரஜினி வந்து இறங்க... மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்கள் தேனீக் களைப்போல் மொய்த்தனர். 'சாமியே ரஜினியே... கடவுளே ரஜினியே...’ என்று ரசிகர்கள் எழுப்பிய 'ரஜினி கோஷம்’ விமான சத்தத்தை மீறி ஒலித்தது. 'எந்த வழியில் ரஜினி வெளியே வருவார்’ என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடாமல் இருக்கவே, ரசிகர்கள் தவித்துக்கொண்டு அலை பாய்ந்தனர். கடைசியில், வி.வி.ஐ.பி-க்களுக்கான 6-ம் எண் வாசல் வழியாகத்தான் ரஜினி வருகிறார் என்று தெரிய வந்ததும், அங்கே எல்லோரும் குவிந்தனர். ரஜினி வரும் வழியில் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டது.

'விமான நிலையத்தில் சில அடிகள் நடப்பார். சுற்றி உள்ள மீடியா மற்றும் ரசிகர்களுக்கு கை அசைப்பார். பின்னர் தன் இன்னோவா காரில் புறப்படுவார்’ என்று பலர் கற்பனைக் குதிரையை ஓடவிட்டனர். வேறு சிலர், 'ரஜினி வீல் சேரில் வருவாரோ... ஒருவேளை யாருக்கும் தெரியாமல் அவர் போயஸ் கார்டன் போய்விடுவாரோ?’ என்று சந்தேகத்தை எழுப்பினர்.

வெள்ளைத் தாடி... துள்ளல் நடை!

சரியாக இரவு 10-மணிக்கு 6-ம் எண் கேட் வழியாக அனைவரின் அனுமானத்தையும் தவிடுபொடியாக்கி, 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே...’ ஸ்டைலில் துள்ளிக் குதித்து வந்தார் ரஜினி. ரசிகர்கள் கூட்டத்தில் அவரது இன்னோவா கார் மிதந்தது. இரவு 10-மணிக்கு மேல் பெண்கள் கூட்டம் பெரும் திரளாகக் கூடியதைப் பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினர்.  ஆனாலும் ரஜினியை வரவேற்க ஒரு சினிமா புள்ளிகூட வரவில்லை. நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எட்டிப் பார்க்கவில்லை.  

மீனம்பாக்கத்தில் மேடை அமைத்து மீடியா வுக்குப் பேட்டியும், ரசிகர்களுக்கு நன்றியும் சொல்லும்விதமாக முதலில் திட்டமாம்.  

''உங்களுக்குக் கிட்னி கோளாறா?'' என்பது போன்ற கேள்விகளால் ரஜினி மனசு சங்கப் படும் என்பதால், அந்தத் திட்டத்தைத் தவிர்த்து விட்டனர். போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியை தங்கவைத்தால், குசலம் விசாரிக்க அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வருவார்கள். அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால், கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில், ஆசிரியர் கள் பிரச்னை, அரசு ஊழியர்கள் போராட்டம் என்று பல பிரச்னைகள் தலை விரித்து ஆடின. ஆட்சியும் தடுமாறத் தொடங்கியது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலையில் திடீரென கோளாறு ஏற்பட... உடனே, எம்.ஜி.ஆர் மீது இருந்த சின்னச் சின்னக் கோபதாபங்களை மறந்துவிட்டு, தமிழ்நாடே அலகு குத்தி, பால் குடம் எடுத்து அவர் நலம் பெற வேண்டும் என இறைஞ்சியது.

அதுபோலவே, கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ் சினிமாவே கருணாநிதி குடும்பத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ரஜினியோ, கருணாநிதியின் குடும்பக் கல்யாணத்துக்காக மதுரைக்குப் போனார், அந்தக் கட்சியின் விழாக்களிலும் கலந்துகொண்டார். இதனால் சினிமாக்காரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியிலும் ரஜினி மீது சின்னக் கசப்பு இருந்தது. ஆனால், ரஜினி எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ... அடுத்த நிமிடமே அத்தனை கசப்பும் காணாமல் போக... தமிழ் நாட்டில் மசூதி, சர்ச், கோயில் என எல்லா இடங்களிலும் மனமுருகப் பிரார்த்தனைகள் செய்தனர்.

இதோ, வெள்ளித் தாடியோடு மீண்டும் துள்ளி வந்துவிட்டார் ரஜினி!  

- எம். குணா

படம்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு