Published:Updated:

வரலட்சுமி முதல் ரித்விகா வரை... நடிகைகளின் மகளிர் தினச் செய்தி இவைதான்! #CelebrateWomen

வரலட்சுமி முதல் ரித்விகா வரை...  நடிகைகளின் மகளிர் தினச் செய்தி இவைதான்! #CelebrateWomen
வரலட்சுமி முதல் ரித்விகா வரை... நடிகைகளின் மகளிர் தினச் செய்தி இவைதான்! #CelebrateWomen

லைசிறந்த இல்லத்தரசியாக, அன்பான தாயாக, பெற்றோரிடம் பாசம் மிகுந்த மகளாக, பொறுப்பான மருமகளாக, சமூகத்தின் பார்வையை எதிர்கொண்டவளாக, அலுவலகத்தில் தலை சிறந்த ஊழியராக, ஒரு நல்ல தோழியாக, சமூக வீதிகளில் சில சங்கடங்களை எதிர்கொள்ளும்போது துணிச்சல் மிக்கவளாக... இப்படி தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறாள் பெண். பெண்களைக் கொண்டாடும் இந்நாளில், தமிழ் சினிமாவின் இளம் நடிகைகள் சிலர் சக பெண்களுக்குச் சொல்லும் வாழ்த்து செய்தி இது! 

வரலட்சுமி : 

"மகளிர் நலன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளையும், நாமே தான்  உருவாக்கிக்கொள்ளவேண்டும். பெண்கள் அனைவரும் முதலில் தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம பாதுகாப்பா இருக்கிறோமா? என்பதைத்தான். இந்தச் சமூக வெளிகளில் நமக்கான பாதுகாப்பிற்காக, நாம்தான் துணிந்து, முதல் ஆளாகச் செயல்பட வேண்டும். நம்முடைய தேவைகளுக்காக நாம்தான் போராட வேண்டும். போராடுவதால், பெண்கள் பயப்படும் அளவுக்கு, எதுவுமே இங்கே நடந்துவிடப்போவதில்லை. பெண்கள் இல்லையென்றால், இங்கே ஆண்களே கிடையாது என்ற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். இதை, நாம் சக ஆண்களுக்கும் புரிய வைக்க முயல வேண்டும். பெண்ணாக இருப்பதில் 'நான்' பெருமைகொள்கிறேன். இது 'நாம்' என மாற வேண்டும். இதுதான் என் ஆசை!"

அமலாபால் :

"பெண் என்பதை பெருமைப்பட வேண்டிய ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இந்த உலகத்திலேயே பெண்தான் மிகவும் வலிமையானவளாகத் திகழ்கிறாள். ஒரு வலிமையான பெண்ணை யாராலும் ஜெயிக்க முடியாது. பெண்ணால், எதையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும். பொதுவாக, பெரும்பாலான பெண்கள் மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்கள். மற்றவர்களுக்காக அவர்கள் தங்கள் வாழ்வை அர்பணித்தாலும், அந்தப் பெண் சந்தோஷமாக இருப்பதில்லை. இருக்கவும் முடிவதில்லை. எனவே, வாழ்க்கையைக் கொஞ்சமாவது உங்களுக்காகவும் வாழுங்கள். நமக்கென்று சில சுய விழிப்பு உணர்வு இருக்கிறது. நமக்கென்று சில கனவுகள் இருக்கிறது. ஆசைகள் இருக்கிறது. அதற்காகவும் நாம் வாழ முற்படவேண்டும். மற்றவர்கள் மீது காட்டும் உங்கள் அன்பை முதலில் உங்களுக்காகவும் காட்டுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நான் அதைச் செய்கிறேன்!''

இனியா : 

"மகளிர் தினம் அப்பிடின்னாலே எனக்கு எங்க அம்மாதான் முதலில் ஞாபகத்துக்கு வருவாங்க. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், எனது பள்ளி, கல்லூரி, இப்போ சினிமா வரைக்கும்...  பக்கபலமா இருந்து என்னை வழிநடத்திச் செல்வது என் அம்மாதான். இந்த மகளிர் தினம் கொண்டாடப்படும் நாளில் மட்டும் பெண்களைக் கொண்டாடினால் போதாது. எல்லா நாட்களிலும் பெண்களை மதிப்பதைக் கடைபிடித்தால்தான், அது ஆரோக்கியமானதாக இருக்கும். முக்கியமாக, பெண்களுடைய மதிப்பையும், அவங்களுடைய முக்கியத்துவத்தையும் நிறைய பேர் தெரிஞ்சுக்காம இருக்காங்க. அதே நேரத்தில், பெண்களை நிறையப் பேர் மிஸ் யூஸ் பண்றாங்க. சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பல பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே வருவது வருத்தமா இருக்கு. இனி அது நடக்கக்கூடாதுனு நான் வேண்டிக்கிறேன். ஆண்கள் பெண்களுக்கு அரணாக நிற்பார்கள் என்ற நம்பிக்கை இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அந்தக் கொஞ்சம் நம்பிக்கை அதிகரிக்கணும். அதுவரை, பெண்கள் தங்களோட பாதுகாப்பிற்கான சில தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கு. வாழ்த்துக்கள்!''

சாந்தினி : 

"இப்போது உள்ள பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல், தனி ஆளாகவே சாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எந்த ஃபீல்டுலேயும் ஆண்களை விட நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை எனப் பல பெண்கள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருப்பது ஆரோக்கியமான விஷயம். ஒவ்வொரு பெண்ணும் எப்போதுமே கான்ஃபிடென்ட்டா, போல்டா செயல்படணும். முக்கியமாக எல்லாத் தருணங்களிலும் கேர்ஃபுல்லா இருக்கணும். இதைத்தான் என் சமகாலப் பெண்களுக்கு நான் சொல்ல விரும்புறேன்."

பூர்ணா : 

"பூக்களைப் பிடிக்காதவர்கள் இங்கு யாரும் இல்லை. அந்த பூக்களைப் போல, ஒவ்வொரு பெண்ணையும் நேசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். பெண்களே... நீங்கள் நீங்களாக இருங்கள். யாருக்காவும் எப்போதும் மாறாதீங்க. எந்தத் துறையிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்ற நிலையைக் கொண்டுவரவேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்குது. அது வருத்தமான விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பு குறைவா இருக்குங்கிறதுக்கான அடையாளம் இது. நமக்காக யாரும் போராடவேண்டாம். நாமே நமக்காகப் போராடுவோம். இதுவரை இல்லையெனில், இன்றுமுதல் போராடுவோம்!''

ஐஸ்வர்யா ராஜேஷ் :

''சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவதை பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கிறேன். பெண்களை நாம் கொண்டாட இந்த ஒருநாள் மட்டும் போதாது. பெண்கள் அனுதினமும் கொண்டாடப்படவேண்டியவர்கள். எந்தத் தருணத்திலும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொண்டு, பெண்கள் சந்தோஷமாக, எப்போதும் புன்னகை மாறாத முகத்தோடு இருக்கக் கற்றுக்கொள்வோம். வாழ்த்துக்கள்!''

சந்தியா : 

''இந்த காலத்துப் பெண்கள் பெரும்பாலும் வலிமையாக இருக்கிறார்கள். வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி... எல்லா இடங்களிலும் பெண்கள் மிகத் தெளிவாக, கம்பீரமாக வலம் வருகிறார்கள். பெண்களுக்குப் பொறுப்பு உணர்வு அதிகம். பெண்களுக்கு வீட்டில் இருக்கும் மரியாதை, வீதிகளிலும் கிடைக்கவேண்டும். அதற்கு ஆண்கள்தான் உறுதுணையாக இருக்கவேண்டும். பெண்களுக்கான மதிப்பு எல்லோருக்கும், எல்லா இடங்களிலும், எல்லாத் தருணங்களிலும் கிடைக்க ஆசைப்படுகிறேன்!''

ரித்விகா :

''அனைத்து மகளிர்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள். பெண்களோட சாதனைகளை நாம் டி.வி, பேப்பர்ல பார்க்கிறோம். சினிமா உள்பட எந்தத் துறையாக இருந்தாலும், நாமதான் நமக்கான இடத்தை தீர்மானிச்சுக்கணும். போல்டா இருக்கணும். சாதிக்கத் துடிக்கிற சக பெண்களுக்கு வழிகாட்டியாவும், ரோல் மாடலாவும் இருக்கணும்னு எல்லாப் பெண்களும் உறுதி எடுத்துக்கணும். அதுதான் மற்ற பெண்களோட முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்!''

அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

- ரா.அருள் வளன் அரசு