Published:Updated:

'கொஞ்சம் இறக்கம் வச்சு தைச்சுருக்கலாம்!' - இது விக்ரமனின் லாலா லேண்ட்!

'கொஞ்சம் இறக்கம் வச்சு தைச்சுருக்கலாம்!' - இது விக்ரமனின் லாலா லேண்ட்!
'கொஞ்சம் இறக்கம் வச்சு தைச்சுருக்கலாம்!' - இது விக்ரமனின் லாலா லேண்ட்!

'கொஞ்சம் இறக்கம் வச்சு தைச்சுருக்கலாம்!' - இது விக்ரமனின் லாலா லேண்ட்!

ஆஸ்கர்தான் வாங்க முடியல. ஆஸ்கர் விருது வாங்கின லாலா லேண்ட் படத்தையாச்சும் நம்ம ஊர் டைரக்டர்ஸ் யாராவது எடுத்தா எப்டி இருக்கும்னு யோசிச்சுப் பாப்போமே.. லாலான்னு ஹம்மிங் வர்றதால நம்ம  விக்ரமன் எடுத்திருந்தார்னா எப்படி இருக்கும்னு பாப்போமா மக்களே.. (சரி என்னபண்ணுறது மனசை தேத்திக்கிட்டுப் படிங்க)

ஊர்லேயே ரொம்ப ஃபேமஸான ஒரு தையல் கடை. அங்கே இருந்துதான் ஆரம்பிக்குது படத்தோட கதை. முதன்முதலா பாட்டுக்கச்சேரி அரங்கேற்றம் பண்ணப்போற படத்தோட  ஹீரோ, அந்த நிகழ்ச்சிக்காக பச்சையில கோடு போட்ட  நீல கலர் துணியைக் கொடுத்து  ஜிப்பா ஒண்ணு தைக்கச்சொல்லி அதை வாங்கிட்டுப்போறதுக்காக கடைக்கு வர்றார். ஆனா வந்து பார்க்கிறவருக்கு பெரிய சோகம். காஜா வைக்கிற பையன் எக்குத்தப்பா பட்டன் வெச்சு ஹீரோவோட ஜிப்பாவை அரை ஜான் அரை ஜானா கம்மி பண்ணி ஜிப்பாவை சட்டையாவே ஆக்கிடுறார் கடைக்காரர். அதைப்பார்த்துக் கொதிச்சுப்போய் ஏம்ப்பா ஊருக்குள் எத்தனையோ ரமேஷ் கடை, சுரேஷ் கடைலாம் இருக்கும்போது உங்க கடையில எதுக்குக் கொண்டுவந்து கொடுத்தேன் நல்லா தைப்பீங்கனுதானே... இப்படிப் பண்ணிட்டீங்களேனு சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போதுதான் 'ஏம்ப்பா வளர்ற ஆளுதானே கொஞ்சம் இறக்கம் வெச்சுத் தச்சிருந்தா என்ன?' னு பக்கத்துல இருந்து ஒரு பொண்ணோட குரல் வருது. வேற என்னா ஹீரோயின் இன்ட்ரோதான்.

லாலாலா லலலாலாலானு ஹீரோ ஸ்லோமோசனில் திரும்பி யாருன்னு பார்த்தா அதே கடையில ஜாக்கெட் தைக்கக் கொடுத்துருந்த ஹீரோயின். அடடே நம்மளுக்கும் ஒரு பொண்ணு சப்போர்ட்டா? இதுக்காகவே காஜா பையனுக்கு தனியா ஒரு ட்ரீட் வைக்கணுமேன்னு மனசுக்குள்ளேயே மங்கல இசை ஓட ரெண்டு பேரோட கண்ணுலேயும் மின்னல் வெட்டுது. அப்புறம் என்ன.. லாலாலானு காதல் பத்திக்கிருது.

'என் ஜாக்கெட்டையும் இப்படித்தான் ஜன்னல் வெச்சுத்தாரேன்னு சொல்லிட்டு வின்டோ ஏ.சியே வைக்கிற மாதிரி பெரிய ஓட்டையாக்கிட்டாங்க. ஃப்ரீயாவிடுங்க' என அப்பப்போ தனியாக உட்கார்ந்து பேசி ரெண்டு பேரும் காதல் வளர்க்கிறாங்க.

சினிமாவுல பெரிய பாடகர் ஆகணும்கிறது லட்சியம். ஆனா பாடகராகவாச்சும் ஆயிடுவேன்கிறது நிச்சயம் அப்படிங்கிற தன்னோட கனவை ஹீரோ சொல்ல, நீங்க பாடுற படத்துல நான்தான் ஹீரோயின் ஆகணும்கிறது என்னோட லட்சியம் ஆனா ஹீரோயினாகவாவது ஆயிடுவேன்கிறது நிச்சயம்னு ஹீரோயினும் மாறிமாறி சபதம் எடுத்துக்கிட்டு தீவிரமாக ஓடிக்கிட்டு இருக்கிறாங்க.. இத்தோட படத்துல இடைவேளை.

இடைவேளை முடிஞ்சு  ஓப்பன் பண்ணினா ஹீரோயினுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகி ஜவுளிக்கடையில புடவை எடுத்துக்கிட்டு இருக்கிறாங்க. இங்கிட்டு வேற ஒரு  பொண்ணோட கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோட திரியறார் ஹீரோ. என்னதான் நடந்துச்சு? அப்படியே  ஃப்ளாஷ்பேக்.

ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்த கேப்புல ஹீரோயினுக்கு ஊருக்குள் ஒரு லோக்கல் சேனல்ல பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிற வேலை கிடைச்சுடுது. லீவுல வந்த அமெரிக்க மாப்பிள்ளை ஒருத்தர் யதார்த்தமா அந்த சேனலைப் பார்க்கப்போய் ஹீரோயினோட அந்த ஃப்ளோவில் மயங்கி 'டேடி கட்டுனா இந்தப் பொண்ணைத்தான் கட்டணும்'னு ரெண்டு காலுலேயும் நிற்கிறார். அந்தப் பக்கம் மூன் சிங்கர்னு ஒரு ப்ரோக்ராம்ல லாலாலா லல லாலா லா.. னு ஜதி பாடி அடிச்சு நொறுக்குனதிலேயே இப்ம்ப்ரஸ் ஆகி  சாம்பியன் ஆகி ஹீரோவுக்கு சினிமாவுல வாய்ப்பு கிடைச்சிடுது. ஆனா படத்துலேயே இங்கதான் ட்விஸ்ட்...

ஹீரோவுக்கு சினிமா சான்ஸ் கொடுக்கிறவர் அந்த அமெரிக்க மாப்பிள்ளை. ஹீரோயினுக்கு சினிமா வாய்ப்பு குடுக்குறவர் ஹீரோ சாம்பியன் ஆன ப்ரோக்ராம்ல பாடின பாட்டுல இம்ப்ரஸ் ஆன  ஒரு பெண் புரொடியூஸர். அவருக்கு சான்ஸ் கொடுக்கணும்னா உங்க காதலை விட்டுக்கொடுத்துட்டு என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு ஹீரோயின்கிட்ட அமெரிக்க மாப்பிள்ளை சொல்ல இங்கிட்டு உங்க லவ்வருக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுக்கணும்னா என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு ஹீரோகிட்ட ப்ரொடியூஸரும் சொல்லி நிர்பந்திக்க.... அவங்க லைஃப் நல்லா இருக்கட்டுமேன்னு இவங்களும் இவங்களுக்காக அவங்களும் சொல்லாமக் கொள்ளாம ஒரே பாட்டுலேயே மாத்திமாத்திக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு தங்களோட காதலையே தியாகம் பண்ணிடுறாங்க.. இதோட ஃப்ளாஷ்பேக் கட். அப்டியே ரெண்டுபேரும் அவங்கவங்க வீட்டுல தனித்தனியா உட்கார்ந்து ஒருவேளை நாம பிரியாம இருந்து நம்ம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணியிருந்தா எப்படி இருந்திருக்கும்னு இமேஜின் பண்ணிப்பார்க்கிறாங்க.

ரெண்டுபேருமே சினிமாவுக்கு வராம ஒருபக்கம் நாயகன், இளநீரை எத்தியோப்பியாவுக்கு ஜூஸா கன்வெர்ட் பண்ணிக்கொடுக்கிற 'லாலாலா' ங்கிற ஒரு பெரிய கம்பெனி வெச்சு பெரிய ஆள் ஆகிடுறார். இந்தப் பக்கம் ஹீரோயின் மீந்துபோன இடியாப்பத்தை நூடுல்ஸ் ஆக்குற 'லாலாலா' ங்கிற ஒரு கம்பெனி வெச்சு ஓனர் ஆகிடுறதா அப்படியே கதை மெதுவா நகருது.. பேக்ரவுண்ட்ல லாலாலாங்கிற பீ.ஜி.எம்மோட படம் முடியுது...

- ஜெ.வி.பிரவீன்குமார்

அடுத்த கட்டுரைக்கு