Published:Updated:

இந்த ராத்திரி 'பேய் டே' கொண்டாடலாமா? #10YearsOfMuni

முத்து பகவத்
இந்த ராத்திரி 'பேய் டே' கொண்டாடலாமா? #10YearsOfMuni
இந்த ராத்திரி 'பேய் டே' கொண்டாடலாமா? #10YearsOfMuni

“பேயா?  நெசமாகவே பேய்லாம் இருக்கா....பேய் பார்க்க எப்படி இருக்கும்?”னு எத்தனையோ கேள்விகள் நமக்குள்ளே இன்றும் பேய்போல காற்றில் உலாத்திக் கொண்டுதான் இருக்கிறது. பேய் பத்தியெல்லாம் யார் சொல்லியிருப்பான்னும் யாருக்குமே தெரியாது.  சரி.... இன்னைக்கு நைட் எல்.ஐ.சி. பில்டிங் மேல ஜெகன்மோகினி வருமானு கேட்டா... அதுக்கும பேய் முழிதான் முழிப்பாங்க.  எப்படி இருந்தாலுமே பேய் மீதான பயமும், கியூரியாசிட்டியும் இன்று வரையிலும் குறையலைங்கிறது தான் உண்மை. 

இருக்கா இல்லையான்னு தெரியாவிட்டாலும் பேய் பற்றியான படம் என்றால் படு சுவாரஸ்யம் தான். ‘மை டியர் லிசா’, ‘ஜெகன் மோகினி’, ‘ஜமீன் கோட்டை’, ‘13ம் நம்பர் வீடு’ என்று டெரர் பேய்களை அதிகமாக தமிழ்சினிமா பார்த்திருந்த நேரம் அது. இரண்டுவிதமான பேய் பிரியர்கள் உண்டு. இரவு நேரத்தில் பேய்ப்படம் பார்ப்பதெல்லாம் சிலருக்கு பாப்கார்ன் சாப்பிடுகிற மாதிரி அசால்ட் மேட்டர். ஆனால் சிலர் பயந்து பயந்து, பார்க்கும் போதே வியர்த்து உருகிவிடுவார்கள்.

பேய் என்றாலே பயங்கரம்... ரொம்பக் கொடூரம்... குழந்தைங்க விளையாடற பொம்மைக்குள்ள ஒளிஞ்சிருக்கும்... துபாய்க்கு போனாலும் தேடி வந்து பழிவாங்கும் என்றிருந்த நேரத்தில்  பாசமான முரட்டுப் பேயை அறிமுகப்படுத்திய படம்  ‘முனி’.  ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த ‘முனி’ வெளியாகி இன்றுடன் 10 வருடங்கள் முடிந்துவிட்டது. இந்த பத்து வருடத்தில் முனிக்குப் பின் காஞ்சனாவாக இரண்டு பாகங்களும் வெளியாகிவிட்டது. மூன்றுமே அசரடிக்கும் ஹிட்.

பேய்க்கு பயப்படும் ஹீரோ, மணி ஆறடித்துவிட்டால் வீட்டில் ஆஜராகிவிடுகிறார். பேய்னு சொன்னா பாயாசம் கூட சாப்பிடமாட்டார், ஆனால் ரவுடிகளை அடி விளாசுவார்.  அந்த மாதிரியான ஹீரோவின் உடலுக்குள் பழிவாங்கத் துடிக்கும் பேய் புகுந்துவிடுகிறது. ஹீரோவும் பேயின் கதைகேட்டு இரக்கப்படுகிறார்.  ஹீரோ பேய்க்கு உதவுவதும், கெட்டவர்களை அழிப்பதும் தான் முனி. முனி மட்டுமில்லை.. காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, காஞ்சனா 4, முடிவிலி....  

ஒரே கதைதான் என்றாலும் மூன்று பாகமுமே செம ரகளை. பேய்ப் படமென்றாலே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த நேரத்தில், காமெடி அதகளமாள பேய்ப் படமாக முனி வந்தது.  அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களுக்கு மேல் வெளியாகி ஹிட்டான முதல் பேய் படமும் இதுவே.

படத்தின் ப்ளஸ் ராகவா லாரன்ஸூம் கோவை சரளாவும் தான். ஒரே படத்தில் மூன்று வெரைட்டி காட்டியிருப்பார் லாரன்ஸ்.  பேய்க்குப் பயப்படும் வெகுளித்தனம், ஆக்‌ஷன் ப்ளாக்குகளில் ஹீரோயிஸம், பேய்க்கு உதவும் இடத்தில் சென்டிமென்ட் என மூன்றுமே வேற லெவல் பெர்ஃபார்மன்ஸ்.  கூடவே ராகவா லாரன்ஸ் படமென்றால் இன்ட்ரோ பாடலில் பார்ப்பவர்களுக்கே கால்கள் ஆடத்துடிக்கும். ராகவாவிற்கு பெரிய பலம் அம்மாவாக வரும் கோவை சரளா. ‘கண்ணு ராகவா... ராகவா கண்ணு...’ என்று உடல்மொழியிலும், காமெடி டயலாக்குகளிலும் அட்டகாசம் செய்ய, அம்மா - மகன் காம்பினேஷன் ரசிகர்களை ஈர்த்தது. 

முனி படத்தில் தவிர்க்கமுடியாதவர்கள் வினுசக்கரவத்தியும், ராஜ்கிரணும் தான். முனியாக வந்து மிரட்டும் இடத்திலும், பாசத்தில் பரவசப்படுத்தும் இடத்திலும் நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார்கள். லாரன்ஸூம், ராஜ்கிணும் மாறி மாறி டயலாக் பேசி மிரட்டும் இடங்கள் பக்கா கமர்ஷியல். முதல் பாகத்தில் நச் நடிப்பில் மிளர்ந்தவர் வினுசக்கரவர்த்தி.  

முனியில் ஒரு பேய்க்கு மட்டுமே அனுமதி கொடுத்திருப்பார் ராகவா.  அடுத்தடுத்த பாகங்களில் டிக்கெட் வாங்கிக்கொண்டு பல பேய்களை உடம்புக்குள் விட்டுவிடுவார். ஒரே நபருக்கு பல பேய் பிடிப்பதும் தமிழ் சினிமாவுக்குப் புதுசு தான்.  

பேய் பார்த்து யாரும் பயப்படாதீங்க... என்று விழிப்புணர்வு தந்ததும் முனி பேய்தானே...  பேய்னா பயமுறுத்தும் என்பதைத்தாண்டி, அன்பான பேய், காமெடிப் பேய், குழந்தைப் பேய்னு பல வெரைட்டியாக பேய்களை தந்தது முனியிஸம். 

பலருக்கும் படம் பார்ப்பது மன அமைதிக்காகத்தான்.  பேய் படம் பார்த்தால் ஒரு பதட்டம் நம்மைத் தொற்றும். மன அமைதி சீர்குலையும். ஆனால்  அதையெல்லாம் தகர்த்து ஜாலியாக சிரிக்கவைத்து, சந்தோஷப்படுத்தும் ராகவா லாரன்ஸின் பேய் கதாபாத்திரங்கள். அதற்காகவே லாரன்ஸை பாராட்டலாம்.  

பேய் நல்லது.... அவை சிரிக்கவைக்கும் சாப்ளின்கள். நடுநடுவே சென்டிமென்டிலும் அழவைக்கும் என்று புரியவைத்தது முனி படங்கள். 

பேய் படத்திற்கு இவ்வளவு சீனா என்றெல்லாம் யோசிக்கவேண்டாம். குழந்தைப் பருவத்தில் பயந்து பயந்து பேய் படங்கள் பார்த்துகொண்டிருந்த நம்மை, தைரியமாக குடும்பத்துடன் பார்க்கவைத்த முதல் பேய் படம் ‘முனி’ தான்.  இன்று வரையிலும் முனி இடத்தை யாரும் தொடமுடியாது என்பது தான் உண்மை. பேய் இருக்கோ இல்லையோ, பேய்ப் படங்களை ஜாலியாக பார்க்கலாம் என்ற நம்பிக்கை தந்ததும் முனி படம் தான். 

ஆகவே மகாஜனங்களே.. எதற்கெல்லாமோ தினம் கொண்டாடுகிறோம். முனி வெளியான இந்நாளையே ‘பேய் டே’ என்று கொண்டாடலாமே ஃப்ரெண்ட்ஸ்!  ’டே’வை Dayல தான் கொண்டாடணுமா என்ன... அட்லீஸ்ட் இந்த ராத்திரியை ‘பேய் டே’வா கொண்டாடலாமா? ரெடியா??

இதுல பியூட்டி என்னன்னா, முனி படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் கழிச்சு, இதே நாள்ல ராகவா லாரன்ஸ் நடிச்சிருக்கிற, மொட்ட சிவா கெட்ட சிவா இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு. பாத்து சந்தோசப்படுங்க மக்களே... வந்துட்டான்டா முனி... 

-முத்து பகவத்-