Published:Updated:

பம்பாய் நாயகனாக, அரவிந்த்சாமிக்கு முன் மணிரத்னத்தின் சாய்ஸ் யார் தெரியுமா? #22YearsOfBombay

பா.விஜயலட்சுமி
பம்பாய் நாயகனாக, அரவிந்த்சாமிக்கு முன் மணிரத்னத்தின் சாய்ஸ் யார் தெரியுமா? #22YearsOfBombay
பம்பாய் நாயகனாக, அரவிந்த்சாமிக்கு முன் மணிரத்னத்தின் சாய்ஸ் யார் தெரியுமா? #22YearsOfBombay

மனிதர்களைச் சுமந்து செல்லும் படகுகள்...தலைக்கு மேல் கடகடவென சப்தமெழுப்பிச் செல்லும் ரயில்வண்டி...குளிரக் குளிர சில்லென்று கடல் நீரின் வேகத்தில் வீசும் காற்று... முகத்தில் மோதும் நெல்லை மண்ணின் மாங்குடி, சேகர், ஷைலா பானு ஆகிய இருவருக்கும் சொந்த ஊர். அவன் பிறப்பால் இந்து...அவள் பிறப்பால் முஸ்லிம். ‘கண்ணாளனே’ என்று கண்களால் கட்டிப் போடுபவளின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான் சேகர். இரண்டு வெவ்வேறு வழித்தடங்களில் பாயும் நதிகள், ஒன்றிணைந்து எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு கடற்கரையின் ஓரத்திலிருந்து, தஞ்சமடையும் மற்றொரு கடற்கரைதான் ‘பம்பாய்’, இன்றைய மும்பை. மதத்தைத் தாண்டி காதலைச் சொல்லிய படம் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’. இன்று அதற்கு வயது 22. 

படம் வந்து 22 வருடங்கள் கடந்துவிட்டதைக் கூட நம்ப முடியாத அளவிற்கு இன்றும் பலரின் கண்களுக்குள்ளும், காதுகளுக்குள்ளும் ஒ(ளி)லித்துக்கொண்டிருக்கிறது அதன் இசையும், காட்சிகளும். காரணம்...முதலில் மணிரத்னம், இரண்டாவது ஏ.ஆர்.ரஹ்மான்... மூன்றாவது ராஜீவ் மேனன். மணிரத்னத்தின் அக்மார்க் அழகியல்கள் அத்தனையும் இந்தப்படத்திலும் உண்டு. மனிதருக்கு கடல் மீது என்னதான் காதலோ? அவருடைய படங்களில் முடிந்தவரை கடல் இருக்கும்...கூடவே காதலும் இருக்கும். இந்தப் படத்தில் அரசியலும் இருக்கும். 

இன்றைக்கும் மதவாதப் பிரச்னைகள் இருக்கிறது. கட்டமைப்புகள் கடந்த காதலுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. அதுவும் தென் மாவட்டங்களிலோ கேட்கவே வேண்டாம். அப்படிப்பட்ட நிலையில் 22 வருடங்களுக்கு முன்பே, தைரியமாக தென்மாவட்டத்தின் மதம் கடந்த காதலை திரையில் காட்டிய துணிச்சல் மணிரத்னத்துக்கு உண்டு. 

‘நா உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா?’ சேகராகவே வாழ்ந்திருந்த அரவிந்த்சாமி, ஷைலா பானுவான மனிஷா கொய்ராலாவிடம் கேட்கும்போது, பின்னணியில் அந்த வார்த்தைகளுக்கு வலு சேர்த்திருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் பியானோவின் ரீங்காரமும்,  உயிரை உருக்கும் புல்லாங்குழலின் இசையும். ’கண்ணாளனே’வும், ’உயிரே’வும் குயிலின் மெல்லிசையாய் மனம் வருட, திங்குதிங்கென்று ஆடவைக்கும் வெஸ்டர்ன் ஃபோக் வடிவங்கள் ’அந்த அரபிக்கடலோரம்’, ’குச்சி குச்சி ராக்கம்மா’ பாடல்கள். 

கண்ணுக்குள் தொடங்கி உயிருக்குள் புகுந்து, அரபிக்கடலின் ஆர்ப்பரிப்பு ரஹ்மானின் இசை.   நெற்றிமுடி மெலிதாய்ப் பறப்பதில் இருந்து, ஷைலாபானுவின் பேசும் கண்கள், சேகரின் நெற்றி மரு, நாசரின் கோபக் கொந்தளிப்பு, கிட்டியின் அலட்டில்லாத நடிப்பு அத்தனையையும் பதிவு செய்திருக்கும், ராஜீவ் மேனனின் கேமரா. மனிதர்களை மட்டுமல்ல, அரபிக்கடலின் அழகு, அன்றைய மும்பையின் வெம்மை நிறைந்த தெருக்கள், மழைத்துளிகள், நெல்லை மண்ணின் குளிர்காற்று, கடலலை மோதும் பாறைகளின் நேர்த்தி என்று ராஜீவ் மேனனின் கேமராக் கண்கள் இயற்கையில் கொட்டிக் கிடக்கும் அழகையும் படமாக்கியதுடன், அதற்கு எதிராக செயற்கைத்தனமாய் மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மதச்சண்டைக் கலவரங்கள், அதனால் இழக்கப்பட்டவற்றையும் அப்படியே கண் முன்னே நிறுத்தியிருக்கும். 

அரசியல் களமும், அன்புக்களமும் சேர்ந்தது பம்பாயின் கதை. 1992-93களில் மும்பையைச் சூறையாடிய மதவேறுபாடுகளின் உண்மைக்கதையிலிருந்து பிறந்தது பம்பாயின் கற்பனை. சமூகத்தில் கிளைவிட்டிருந்த மதம் சார்ந்த அரசியலையும் பேசியதால், படம் வெளியானபோதே குழுவிற்கு ஏராளமான எதிர்ப்புகள். இயக்குனர் மணிரத்னத்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளெல்லாம் வீசப்படும் அளவிற்கு, மதம் ரத்தத்தில் ஊறிப்போய்கிடந்தது. சேகர் நாராயணனாக நடிக்க முதலில் மணியின் சாய்ஸ், நடிகர் விக்ரம். விக்ரமினால் கால்ஷீட் கொடிக்கமுடியாத நிலையில், சேகராக செலக்ட் ஆனவர் அரவிந்த்சாமி. தனிஒருவன், போகன் என வில்லத்தனம் காட்டும் அரவிந்த்சாமி, இன்றைக்கும் போல அன்றைக்கும் அழகன். கூர்நாசியுடன், முகம்சிவந்த வெட்கம் காட்டும் மனிஷா கொய்ராலா பேரழகி.

ஒரு பேட்டியில் பம்பாய் பற்றிப் பேசிய மனிஷா, ‘முதலில் நான் படத்தை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், மணிரத்னம் பற்றி அறிந்தபிறகு தயங்காமல் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன்.இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால் என்னுடைய திரைப்பட கனவே முடிந்துவிடும் என்று நிறைய பேர் என்னை பயமுறுத்தினார்கள்” என்றிருக்கிறார். அதையும் தாண்டி படம் ப்ளாக்பஸ்டர். குவித்த விருதுகளும் ஏராளம். எல்லா விருதுகளையும் விட... 22 வருடத்திற்குப் பிறகும் பேசவைக்கிற படைப்பு! 

மதப்பிரிவுகளைக் கடந்து மனங்கள் ஒன்றிணைவதுதான் காதல். அது கடலோடு கடல் கலக்கும் ஒற்றுமையின் நேசம். 22 வருடத்திற்கு முன்பு வெளியான மணிரத்னத்தின் பம்பாய் சொல்லிச் சென்றது ஓர் அழுத்தமான உண்மை; ‘காதல் மனம் சார்ந்தது...மதம் சார்ந்ததல்ல’ என்பதே அது! 

-பா.விஜயலட்சுமி