Published:Updated:

வாவ்...தமிழில் செம சினிமா! - ‘மாநகரம்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
வாவ்...தமிழில் செம சினிமா! - ‘மாநகரம்' விமர்சனம்
வாவ்...தமிழில் செம சினிமா! - ‘மாநகரம்' விமர்சனம்

நான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இவை ஒரு சம்பவத்தில் மாநகரின் இயக்கத்தில் என்னவெல்லாம் சலனங்களை உண்டாக்குகிறது என திக் திடுக் திரைக்கதையில் விவரிக்கிறது ‘மாநகரம்’..!

படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்... படக்குழுவுக்கு அழுத்தமான கைகுலுக்கல் மற்றும் பாராட்டு. சென்னைக்கு மாநகர அந்தஸ்து கொடுக்கும் பின்னணியை,  அந்த அந்தஸ்துக்காக சென்னை கொடுக்கும் விலையை இவ்வளவு உயிரும் உணர்வுமாக கண்முன் கொண்டு வந்ததற்கு சபாஷ்..!    

 ஸ்டார் வேல்யூ, மாஸ் புரமோஷன், டாப் ஸ்டார் நடிகர்கள், உலகளாவிய ரிலீஸ் என்று தமிழ் சினிமா உலகம் பரபரக்கிறது. இடையே, ’சிங்கம்’ சூர்யா வில்லனை விரட்டி முந்துவதுபோல், சில படங்கள் அப்படியான எந்த அலட்டலும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களின் அபிமானத்தை கொள்ளை கொள்ளும். அந்தப் பட்டியலில் நச்சென நங்கூரம் பாய்ச்சுகிறது ’மாநகரம்’.

வேலை தேடிச் சென்னை வரும் ஸ்ரீ, காதலிக்கச் சொல்லி ரெஜினா பின்னால் சுற்றும் சந்தீப் கிருஷ்ணன், மகனின் மருத்துவத்திற்காக சென்னை வரும் கேப் ஓட்டுனர் சார்லி, ஊரில் பெரிய தாதா மதுசூதனன் ராவ், அதே ஊரில் இருக்கும் குட்டி தாதா அருண் அலெக்சாண்டர் இவர்கள் வாழ்வில் தனித்தனியே நடக்கும் சில நிகழ்வுகள். அது ஒருவருக்கொருவர் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது.  எந்தப் புள்ளியில் அந்தத் தொடர்பு ஒன்று சேர்கிறது, அது விபரீதமாகி எப்படி முடிகிறது என்பதே படம்.  இப்படியான ஒரு இன்டர்லிங்க் டைப் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெல்டன் நண்பா!

முகத்தைக் காட்டாமல் ஸ்ரீயின் உடல்மொழியைக் காட்டி ஆரம்பிக்கும் அந்த ஆரம்பக் காட்சிகளிலேயே கவர்கிறது படம். தொடர்ந்து ஒரு டாஸ்மாக் சீன். படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் பலரும் அங்கே தொடர்பற்று இருப்பார்கள். எல்லாருக்குள்ளும் கேயாஸ் தியரி போல தொடர்பைக் கொண்டு வந்து, படத்தை முடிக்குமிடம்... வாவ்!

படத்தின் காஸ்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, வசனம், படத் தொகுப்பு என ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டும்... அதே சமயம் உறுத்தல் துருத்தல் இல்லாமலும் படத்தை பக்கா பேக்கேஜ் ஆக்குகிறது. படத்தின் கதையையும் மற்றவற்றையும் விவரித்தால் ஸ்பாய்லர் அபாயம் இருப்பதால்... சில சுவாரஸ்ய ஷேரிங்குகள் மட்டும் இங்கே..!
    

*  படம் துவங்கி சில நிமிடங்களில் ஸ்ரீயை ரோட்டில் போட்டு அடிக்கிறது ஒரு கும்பல். அதை தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள். இதன் பிறகு டைட்டில் கார்டு (டைட்டில் வடிவமைப்பு... சூப்பர்ப்). அது முடிந்த பின்பு, ரேடியோவில் ’சென்னை தினம்’ பற்றி பேசிக் கொண்டே, ‘சென்னைதான் இந்திய அளவில் பாதுகாப்பான நகரம்’ என்ற பெருமிதத்தைப் பகிர்கிறார்கள்.   

* தப்பென்றால் தட்டிக்கேட்கும் ஒரு ஹீரோ, தப்பே செய்யாமல் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு ஹீரோ, தப்பு மட்டுமே பண்ணிக் கொண்டிருக்கும் இரண்டு வில்லன்கள், வாய்ப்பு கிடைத்தால் தப்பு செய்யத் தயங்காத இன்ஸ்பெக்டர், வாய்ப்பு கிடைத்தும் தப்பு செய்யத் தெரியாத ஒரு ‘ஜாலிகேலி’ கேடி... இப்படி எல்லோராலும் நிறைந்திருக்கிற ‘மாநகரம்’ படத்தில் யாருக்கும் தண்டனை அல்லது தீர்ப்பு வழங்கவில்லை இயக்குநர். 

* மேற்கூறிய கேரக்டர்களின் உடல்மொழி, வசனமொழி என ஒவ்வொன்றும் ஆரம்பம் முதல் கச்சிதம். இயக்குநரின் கேரக்டர் வடிவமைப்பும் நடிகர்களின் பிரதிபலிப்பும் செம காம்போ. 

* சில நொடிகளே வரும் ஒரு சிக்னல் காட்சி. அதில் பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்குள் நிகழும் ‘வாடிக்கையாளர்’ வாக்குவாதம், சகட்டுமேனிக்கு அனைவரும் பயன்படுத்தும் ‘சென்னை பாஷை’ என ‘தலைநகரின் ஆன்மா’வை போகிற போக்கில் காட்டுகிறார்கள்.

* ஹெச்.ஆரின் குணங்கள், டிரைவரின் நல்லியல்பு, குட்டி தாதாவின் விரைந்து முடிவெடுக்கும் சமயோசிதம், இன்ஸ்பெக்டரின் நுண்ணறிவு என ஒவ்வொரு கேரக்டருக்கும் அவரவர் மனசைப் படித்த சைக்காலஜி பிடித்திருப்பது... ஆவ்ஸம்! 

* முரட்டுத்தனமாக சண்டை போடுவது, ரெஜினாவை ஒரு இறுக்கமான முகத்துடனேயே காதலிக்கும் ரோல் சந்தீப்புக்கு, பிழைப்பு தேடி சென்னை வந்து, பல பிரச்னைகளை சந்தித்ததும் ஊரை விட்டு ஓடினா போதும் என்கிற ரோலில் ஸ்ரீ, சந்தீப்பின் மேல் இருக்கும் காதலை மறைத்துக் கொண்டு அவரைச் சுற்றவிடும் ரோலில் ரெஜினா, பதற்றத்தையும், பொறுப்பையும் உடல்மொழியிலேயே வெளிப்படுத்தி வழி தெரியாமல் தெருத் தெருவாக சுத்தும் கேப் ஓட்டுநராக சார்லி, ஊரையே கன்ட்ரோலில் வைத்திருக்கும் மதுசூதனன், மதுசூதனனையே டீலில் விடும் அருண் அலெக்சாண்டர், அவரிடம் வேலை செய்யும் சதீஷ், ஷாரா மற்றும் ‘வின்னிங்’காக நடித்திருக்கும் 'முனீஸ்காந்த்’ ராமதாஸ், வாண்டடாகப் போய் மாட்டிக் கொள்ளும் சிறுவன் அம்ரீஷ் என அத்தனை பேரின் நடிப்பும் எந்தச் செயற்கையும் இன்றி இயல்பாக கதையோடு ஒட்டி இருக்கிறது. 

* மொத்தப் படத்திலும் அல்டிமேட் ஷோ ஸ்டீலர் ராமதாஸ் தான். ஒரு ரூபாய் சாக்லெட் பத்து வாங்கிவிட்டு, ‘எவ்வளவு ஆச்சு?’ எனக் கேட்பதில் துவங்கி, ‘கொன்னே சுட்ருவேன்’ என படம் முடியும் வரை கிடைக்கும் கேப்பில் எல்லாம் வெடித்துச் சிரிக்க வைக்கிறார். 'ரெண்டு நிமிஷம் டைம் வாங்கிக் கொடுங்க... நான் அவன் பி.கே.பி பையன் இல்லேனு சொல்ல வைச்சுடுறேன்’ என கோக்குமாக்கு காட்டுவது முதல் துண்டு சீட்டில் ராஜினாமா செய்தி சொல்வது வரை... ரணகளத்திலும் காமெடி டைமிங் காட்டுகிறார் ராமதாஸ்.

*சந்தீப், ஸ்ரீ, ரெஜினா என்று ஒருவரும் நடிப்பில் குறைவைக்கவில்லை. இவர்கள் கதை ஒருபுறம் நடக்க, இதற்கு சம்பந்தமே இல்லாமல் நடக்கும் ஒரு கடத்தல், நடுவில் ஒரு போலீஸ் சித்தப்பா, ஆசிட் வீச்சு ரௌடி என அத்தனை கதாபாத்திரங்களையும் தெளிவான திரைக்கதையில் இணைத்திருக்கிறார்கள். நாலு பிரதான கேரக்டர்களின் மனஓட்டம், அதைக் கொஞ்சமும் அலுப்பு தட்டாமல் கச்சிதமாக தொகுத்திருக்கும் பிலோமின் எடிட்டிங் செம்ம்ம்ம ரகம்

ஒரு நாள் இரவு துவங்கி மறுநாள் இரவு முடியும் டிராவலை மிக அழகாய் கவனிக்கும் படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் செல்வகுமார் எஸ்கே. ஆக்‌ஷனுக்கான களம் எக்ஸ்ட்ராவாகவே இருந்தாலும் இவ்வளவு அடி விழுந்தால் போதும் என சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் அன்பறிவ் கவனிக்கப்பட வேண்டியவர்கள். படத்தின் பின்னணி இசை என்பது எங்கே வேண்டுமோ, எந்த அளவில் வேண்டுமோ அங்கே அவ்வளவு மட்டுமே ஒலிக்கிறது. உதாரணமாக படம் ஆரம்பித்து ரொம்ப நேரம் கழித்து டாஸ்மாக் சீனில் லைட்டாக ஒரு பிஜிஎம் வந்து காட்சி சீரியஸாகப் போகிறது என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகி ரியல் சவுண்டுக்குப் போய்விடுகிறது. இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் நிச்சயம் பாராட்டுக்குரியவர். குட்டிதாதா குடோன் டீப்பாயில் சம்பந்தமே இல்லாமல் நடுநாயகமாக ஒரு ராயல் என்ஃபீல்ட் பெட்ரோல் டேங்க், வில்லன் டேபிளில் இருக்கும் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் என்று சதீஸ் குமாரின் ஆர்ட் டைரக்‌ஷன் அட போட வைக்கிறது. 
  
வழி தெரியாமல் ஸ்ரீயும், சார்லியும் அலையும் காட்சிகளில் நடக்கும் உரையாடலிலும் அத்தனை எதார்த்தம். 

"என்னைப் போட்டு ரோட்ல நாலு பேர் அடிக்கறாங்க, அதை தடுக்க ஒருத்தன் கூட வரல. இதெல்லாம் ஒரு ஊரா?"

"நாம கேட்ருக்கோமா சார்? நாம கேட்டா தான் நமக்காக கேக்கவும் வருவாங்க."

"சென்னைக்கு வந்து நல்லா சம்பாதிச்சிட்டு, வாய் கூசாம இந்த ஊர திட்டுவாங்க. ஆனா, எவ்வளோ திட்டுனாலும் எவனும் இங்க இருந்து கிளம்பமாட்டாங்க."

"ஒரு சிலர் பண்ற தப்பால ஊரையே திட்றதில் என்ன சார் அர்த்தம் இருக்கு?"

காமெடி என்பது படத்தோடு ஒட்டி இருக்கவேண்டும் என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு காட்சியிலும் துருத்திக் கொண்டு தெரியாமல் பல இடங்களில் கைதட்டிக் கத்தி சிரிக்க வைக்கிறார்கள். ஹீரோ ஸ்ரீ, சந்தீப்பில் துவங்கி சிறுவன் அம்ரீஷ் வரை கதாபாத்திரத் தேர்வும் கனகச்சிதம். 

நிறைய கிளைக்கதைகள் அங்கங்கே ஓடிக் கொண்டிருப்பதால், ஒரு காட்சியைப் பார்க்கும்போது, வேறு கதாபாத்திரங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதும், அடியாள் என்பதற்காக தோன்றும் ஒரு காட்சி விடாமல் எல்லாரையும் தீனா அடித்துக் கொண்டே இருப்பதையும், படம் சீரியஸாகச் சென்று கொண்டிருக்கும்போது குறுக்கிடும் பாடல்களையும் குறை என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்யலாம்.

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ’சென்னையில் என்னதான் இருக்கிறது?’ என்று பார்க்க ஒரு முறையேனும் தமிழக தலைநகருக்கு வருகை புரிவார்கள். அது போல தமிழ் சினிமா பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இந்த ‘மாநகரத்துக்கு’  வருகை தரலாம்..!

அடுத்த கட்டுரைக்கு