Published:Updated:

கிடுகிடுக்கச் செய்யும் நிசப்தத்தின் பேரொலி! - 'நிசப்தம்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
கிடுகிடுக்கச் செய்யும் நிசப்தத்தின் பேரொலி! - 'நிசப்தம்' விமர்சனம்
கிடுகிடுக்கச் செய்யும் நிசப்தத்தின் பேரொலி! - 'நிசப்தம்' விமர்சனம்

கிடுகிடுக்கச் செய்யும் நிசப்தத்தின் பேரொலி! - 'நிசப்தம்' விமர்சனம்

சில படங்களை நேரத்தை கடத்துவதற்காக பார்ப்போம். சில படங்களை சினிமா என்னும் கலைக்காக, அதன் நேர்த்திக்காக பார்ப்போம். எப்போதாவது சில படங்களை அது சொல்ல வரும் விஷயத்துக்காகவும், அதன் உண்மைக்காகவும், சமூகம் மீது அந்தப் படைப்பு கொண்டிருக்கும் அக்கறைக்காகவும் நாம் பார்க்க வேண்டும். அந்தக் கலைஞர்களுக்கு நமது தார்மீக ஆதரவை கொடுக்க வேண்டும். அப்படி ஒரு ஆதரவை கோருகிறது “நிசப்தம்”. இயக்குநருக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நமது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

காதல் திருமணம் புரிந்த தம்பதி அஜய் - அபிநயா. இவர்களுக்கு சாதன்யா முதல் குழந்தை. நடுத்தர வர்க்கம் என்றாலும், சந்தோஷமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருநாள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு குடிகாரனால் பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகிறாள் குழந்தை சாதன்யா. அதன் பிறகு ஆண்களையும், இச்சமூகத்தையும்,  எதிர்கொள்ள அவள் மனம் படும் பாடு, அந்தக் குழந்தையின் வலியை தீர்க்க முடியாமல் பெற்றோர்கள் படும் அவஸ்தை, அந்த வழக்கின் போக்கு என செல்கிறது கதை. பெங்களூருவில் நடந்த உண்மைச்சம்பவம் இயக்குநரை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஒரு குற்றம் நடக்கிறதென்றால், அதை மட்டும் வைத்து கதை பண்ணுவது வழக்கம். இயக்குநர் மைக்கேல் அருண், அச்சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதன் முன்பகுதி, குற்றம் நடக்கும் இடம், அதன் பின்னான சிக்கல் என மூன்று அடுக்குகளை அடுக்குகிறார். இதை ஒரு முழுமையான கலைப்படைப்பாக்கும் முஸ்தீபுகள் ஏதுமின்றி, நிதானமாக ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செய்கிறார். பட்ஜெட், தேர்ந்த நடிகர்கள் இல்லாதது போன்ற பல குறைகளையும் கதையில் இருக்கும் உண்மைத்தன்மை தோற்கடிக்கிறது. 

கதையில் எல்லோருமே நல்லவர்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப, கிடைக்கும் வாய்ப்புகளுக்கு ஏற்ப பிறருக்கு உதவி செய்கிறார்கள். அஜயின் மேலாளர், காவல் அதிகாரி, கார்ட்டூன் உடைகளை வாடகைக்கு கொடுப்பவர் என படத்தில் வரும் அத்தனை பேரும் நல்லவர்கள்; ஒருவனைத் தவிர. ஆனால், ஒருவனுடைய ஒரே ஒரு மோசமான நடவடிக்கை இவ்வளவு நல்ல விஷயங்களையும் தவிடுபொடி ஆக்க முடியும் என்கிற யதார்த்தத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. நாம் எவ்வளவு மோசமானதொரு உலகில் வாழ வேண்டியிருக்கிறது என நினைக்கும்போதே மனம் பதறுகிறது.

”உங்கள் குழந்தையின் ஆசன வாயை எடுக்க வேண்டும். இல்லையேல், உயிருக்கே ஆபத்தாக முடியும். செயற்கை வாயை பொருத்திக்கொள்ளலாம்” என மருத்துவர் குழந்தையின் தகப்பனிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. இதை எழுதும்போதே உடலெல்லாம் கண்களாகி அழத் தோன்றுகிறது. 

இச்சூழலை ஒரு தகப்பன் நிஜத்தில் சந்தித்திருக்கிறான் என்பதை என்னவென்பது? எட்டு வயது குழந்தை அதன் அப்பாவை எப்படி எதிர்கொள்ளும்? இத்தனைக்கும் அந்தக் குழந்தையின் தவறு எதுவுமில்லை. ஒருவனின் காம வெறியும், துணை போன குடிவெறியும் தான் காரணம் என்னும்போது நாம் எப்படி அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியும்?

குழந்தை சாதன்யா தேர்ந்த நடிகை ஆக வருவார் என சொல்வதெல்லாம் அடுத்து. பூமி என்னும் அந்தக் கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் நிஜ பூமி சாதன்யா. எதிர்கொள்ளும் யாரிடமும் பேச முடியாமல், அவ்வளவு வலியையும் கண்கள் வழியே நமக்கு கடத்தும் வித்தையை இந்தக் குழந்தைக்கு யார் சொல்லித் தந்தது? கை உடைந்த வலியோ, கால் முறிந்த வலியோ இல்லையே இது. எல்லாம் சரி ஆகி மீண்டும் பள்ளிக்கு போகும்போது, அந்த காம வெறியன் அவளை அழைத்துச் சென்ற இடம் வருகிறது. அதை அவள் எட்டிப்பார்க்கும் அந்தக் கணம்... - கிடுகிடுக்கிறது...! அரங்கில் இருந்த அத்தனை பேரும் மனதுக்குள் ஓவென கூக்குரலிட்டு அழுதுக்கொண்டிருக்கும் மெளன சத்தம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கேட்கிறது. 

”சட்டத்தோட புராசஸே பாதிக்கப்பட்டவங்களுக்கு மன உளைச்சலை கொடுக்குது. அந்த மருத்துவத்துக்கு சட்டமா காசு தரும்?”, “இப்படி ஒரு கொடுமைக்கு குடிவெறிதான் காரணம். அப்புறம் ஏன் அரசாங்கம் தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வச்சிருக்கு” - வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் கேள்வி கேட்க வேண்டியவர்களை உலுக்குக்கின்றன வசனங்கள்.

அந்த கொடூரனால் சிதைக்கப்பட்ட பின்னும், மொபைலில் இருந்து பெற்றோருக்கு அழைக்காமல் 100க்கு அழைக்கிறாள் சாதன்யா. “நீங்க ரெண்டு பேரும் பிஸியா இருப்பீங்க இல்ல” என்கிறாள். ஒரு குழந்தைக்கு இருக்கும் பொறுப்பும், நல்மனசும் வளரும் போது எங்கேயோ நாம் தொலைத்துவிடுகிறோம்.  “குளிருது... குடைல கூட்டிட்டு போன்னு சொன்னான். ஹெல்ப் பண்றது தப்பா” என சாதன்யா கேட்கும் கேள்விக்கு பெரியவர்கள் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைப் பற்றியே இன்னமும் நம் தமிழ்சினிமா சிந்திக்கத்தொடங்கவில்லை. ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்குவதை இன்னமும் ஹீரோயிசமாக காட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் நம் வீட்டு குழந்தைகளுக்கு எந்த நேரமும் நிகழ வாய்ப்பிருக்கும் ஒரு பேராபத்தை அச்சு அசலாக கண் முன் நிறுத்திய இயக்குனரை கையெடுத்து கும்பிடலாம். இது பெற்றோர்களுக்கான திரைப்படம். ஒவ்வொரு பெற்றோரும் பார்த்தே தீரவேண்டிய படம். மாறிவரும் நம் வாழ்க்கை முறையும் குழந்தை வளர்ப்பில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களும் என்ன மாதிரியான பேராபத்தை விளைவிக்கக்கூடியவை என்கிற எச்சரிக்கை மணியை நம் உள்ளங்களில் ஓங்கி அடிக்கிறது நிசப்தம். படம் முடிந்த பின்னும் தீராமல் ஒலிக்கிறது அதன் பேரோலி! 

அடுத்த கட்டுரைக்கு