Published:Updated:

'பாவனாவுக்கு காட்டுற அக்கறையை நந்தினி, ஹாசினிக்கும் காட்டுங்களேன்!' - லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம் #VikatanExclusive

'பாவனாவுக்கு காட்டுற அக்கறையை நந்தினி, ஹாசினிக்கும் காட்டுங்களேன்!' - லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம் #VikatanExclusive
'பாவனாவுக்கு காட்டுற அக்கறையை நந்தினி, ஹாசினிக்கும் காட்டுங்களேன்!' - லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம் #VikatanExclusive

தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் வாய்ந்தவர்களில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இயக்குனரும், டிவி பிரபலமும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்தொன்று, செய்திகளில் தவறாக பதிவுசெய்யப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், தமிழ் சினிமாவில் பெண்களின் உண்மையான நிலையென்ன என்பதையும் அவர் எடுத்துக் காட்டிப் பேசியது உருவகப்படுத்தப்பட்ட விதத்தைப் பற்றி அவரிடமே கேட்டோம்.

“ஏன் இப்படி ஒரு தவறான விஷயத்தைப் பரப்புகிறார்கள்? நான் பெண் என்பதாலேயா? இல்லை நான் மனதில் பட்ட விஷயங்களை மறைக்காமல் பேசுவதாலா? தப்புத்தப்பான புரிதல்...மோசமான மொழிமாற்றம். நல்லவேளை நான் பேசிய வீடியோவை முன்னாடியே யூடியூப்ல போட்டதால் தப்பிச்சேன்'’என்று எடுத்த எடுப்பிலேயே உள்ளக் கொதிப்பினை அப்பட்டமாக வெளிப்படுத்தினார் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடர்ந்து அவரிடம் கேள்விகளை அடுக்கினோம். எல்லாவற்றுக்கும் சளைக்காமல், தெளிவான பதில்களைக் கொடுத்தார் அவர். 

“இந்த பிரச்னை எங்க ஆரம்பிச்சது? நீங்க பேசியது எதைப்பற்றி?”

“நான் பேசியது ஒன்று...மற்றவர்கள் புரிந்து கொண்டது வேறு. பெண்களுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, கல்லூரி மாணவிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதே மாதிரி, சினிமா பாதுகாப்பான இடமா என்பதாக எழுந்த கேள்விகளுக்கும் பதிலாக என்னுடைய எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்து, ஒரு ஆங்கில நாளிதழுக்கும் என்னுடைய பேட்டியை அளித்திருந்தேன். அதுதான் முற்றிலும் தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.”

“பெண்கள் எல்லாத்துறைகளிலும் உயர்வான இடம் பெறவேண்டும்னு சொல்றீங்க. ஆனால், உங்களது டிவி நிகழ்ச்சியில் பெண்களை அழவைத்துப் பார்ப்பது ஏன்?”

”சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நான் என்னைக்குமே பெண்களை, ‘நல்லா அழு...ஏன்மா ரொம்ப கஷ்டமா இருக்கா?’ அப்படினுலாம் பச்சாதாபத்தைத் தூண்டின வகையில் பேசினதே கிடையாது. அழும்போதே, ‘தயவுசெய்து அழாதீங்க...பொண்ணுனா தைரியமா இருக்க வேண்டாமா?’ என்றுதான் கேட்டுருக்கேன்.  அப்படி நான் டி.ஆர்.பிக்காக பேசற ஆளா இருந்தால், இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு எத்தனையோ எதிர்ப்புகள். நிகழ்ச்சிக்காக என்னுடைய நேர்த்தியான உடையணிதலைக் கூட கிண்டலடித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நிகழ்ச்சியை நெறிப்படுத்துவரோ, அலுவலகம் செல்பவரோ நேர்த்தியான உடையில்லாமல், கிழிந்த உடையுடனா செல்வார்கள்? அதையும் தாண்டி எனக்கு இது ஒரு வேலை. கிட்டதட்ட 33 வருஷம் எனக்கு பல்வேறு துறைகளில் அனுபவம் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன். டி.ஆர்.பி, சேனல் விளம்பரம் என்று நீங்கள் சொல்லும் எதுவா வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னோட வேலையில் நான் எப்படி நடந்துக்கறேன் அப்படிங்கறதுதான் முக்கியம். ஏதாவது ஒரு எபிசோட்ல ‘நீங்க தாராளமா எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம்....மாமியாரைக் கொடுமைப்படுத்து...டிசிப்ளின் இல்லாம இருங்க’னு தவறான வழிகாட்டுதலைக் கொடுத்திருக்கேனா? கண்டிப்பா யாரும் சுட்டிக் காட்ட முடியாது. ஒரு சில சின்னச்சின்ன தவறுகள் இருக்கலாம். ஏன்னா, எடிட்டிங் என் கையில் கிடையாது. ஆனால், எந்த ஒரு பிரச்னையையும் ஊதிப் பெருசாக்கினதே கிடையாது. ஒரு குழந்தை மீதான வன்முறை பற்றிய குற்றச்சாட்டு எங்கள் நிகழ்ச்சியால் வெளிச்சத்துக்கு வரும்போது அதே மாதிரி எத்தனை தவறுகள் வெளிச்சத்துக்கு வருது தெரியுமா?”

“ஒரு குடும்பப் பிரச்னையோ, தனிமனிதர்கள் சார்ந்த சிக்கல்களோ இப்படி எல்லார்க்கும் தெரியும் வகையில் வெளிப்படுவது சரியானதுதானா?”

“உங்க கிட்ட ஒரு விஷயம் நான் கேட்கறேன். சுசித்ரா பிரச்னை உங்களுக்கு தெரியும். ட்விட்டரில் யாரோ அவங்களோட பேஜை ஹேக் பண்ணி தவறுதலா உபயோகப்படுத்தியிருக்காங்கனே வச்சுக்குவோமே. அதுக்காக நீங்க ட்விட்டர் மேல கேஸ் போடமுடியுமா? அது ஒரு சோஷியல் ப்ளாட்பார்ம். ட்விட்டர் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்த கிடைச்சுருக்கற வழியோ, அப்படிதான் ‘சொல்வதெல்லாம் உண்மை’யும், லட்சுமி ராமகிருஷ்ணனும்.

மெடிக்கல் ஹெல்ப் தேவைப்படறவங்களுக்கு, படிப்பு தேவைப்படறவங்களுக்கு, குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சலுக்கு உள்ளானவங்களுக்குன்னு, இந்த நிகழ்ச்சி பலதரப்பட்ட மனிதர்களுக்கு தீர்வும், வழிகாட்டுதலும் கொடுத்திருக்கு. தவறு செய்தவர்களையும் சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கு.”

“நிகழ்ச்சி ஆரம்பிச்சு 1000 எபிசோடுகளைத் தாண்டிடுச்சு. அதில் உங்களை ரொம்ப பாதிச்ச பிரச்னை எது?”

“ஒருமுறை நிகழ்ச்சிக்கு பார்வையற்ற ஒரு இளைஞர் வந்து கலந்துகிட்டார். கல்யாணத்துக்குப் பிறகு அந்தப்பையனுக்கு கண் பார்வை பறிபோயிடுச்சு. பையனோட குடும்பத்தோட சப்போர்ட் அந்தப் பொண்ணுக்கு இல்லை. கணவருக்கும் பார்வை இல்லாததால வேலை இல்லை. என்ன செய்யறதுனு தெரியாம அந்தப் பொண்ணு பிரிஞ்சு போய்டறா. இரண்டு பேரும் நிகழ்ச்சியில் கலந்துகிட்டாங்க. அந்த எபிசோடை பார்த்த ஒரு ஹோட்டல் முதலாளி, அந்தப் பையனைப் பத்தி எங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு உடனடியா வேலை கொடுத்துட்டார். இப்போ ரீசண்ட்டா நான் ஷூட் போறப்போ, ரிஷப்ஷன்ல ஸ்மார்ட்டா ஒரு பையனும், ஒரு பொண்ணும் உட்கார்ந்துருந்தாங்க. எனக்கு யாருனு தெரியலை. அப்புறம்தான் தெரிஞ்சது, அந்தப் பையனும், மனைவியும்தான் அது. வேலைக்கு சேர்ந்தபிறகு மனைவியும் அவரைப் புரிஞ்சுகிட்டு இன்னைக்கு சந்தோஷமா இருக்காங்க. இந்த விஷயத்தை நான் ஒரு ரூம்குள்ள உட்கார்ந்து பேசியிருந்தா தீர்வு கிடைச்சுருக்கவே கிடைச்சுருக்காது. யாரோ ஒருத்தருக்கு வாழ்க்கை புதுசா மாறும்போது அதில் கிடைக்கற சந்தோஷமே தனி. அதைத்தான் நான் பண்றேன்.”

”உங்களையும் மனரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லியிருக்கீங்க. சினிமாவில் பெண்களுக்கு என்னதான் நடக்கிறது?”

“என்னுடைய வார்த்தைகளைக் கூர்ந்து கவனிச்சிருந்தீங்கனா இதற்கு பதில் கிடைச்சிருக்கும். என்னை கால்ஷீட்டுக்காக அணுகிய ஒருத்தர், காம்ப்ரமைஸ் அப்படிங்கறதைப் பத்தி பேசினார். நான் கால்ஷீட் காம்ப்ரமைஸா இருக்கும்னு நினைச்சேன். ஆனால், அதுக்கப்புறம்தான் அது வேற ஒரு காம்ப்ரமைஸ்னு தெரிஞ்சது. அப்போ எனக்கு வயசு 40க்கு மேல. எப்படி இருந்துருக்கும்னு நினைச்சு பாருங்க எனக்கு. இது சினிமாலனு கிடையாது. எந்த இடத்திலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த குழந்தையும், பாதிக்கப்பட்ட இளம்பெண்களும் சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் கிடையாது. ஒரு பெண் முயற்சி செய்து மேலேறி வந்தால் கூட, ‘அவ இந்த இடத்துக்கு எப்படி வந்தா அப்படினு எனக்கு தெரியாதா?’ என்று சொல்வது இந்த சமூகத்துக்கு பழக்கமான ஒரு விஷயமாயிடுச்சு. பாலியல் துன்புறுத்தல் அப்படிங்கறது கையைப்பிடிச்சு இழுக்கறதோ, மற்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுறதோ மட்டும் கிடையாது. அதையும் தாண்டி ஒரு பெண்ணை மனம் சார்ந்து காயப்படுத்துதல், உருவத்தை கிண்டல் அடிக்கறது ஆகியவையும் பாலியல் துன்புறுத்தல்தான். சினிமாவோ, மற்ற வேலைகளோ அதுக்கு காரணம் கிடையாது. அது தனிமனிதர்களின் ஒழுக்கம், அவர்களுடைய நடவடிக்கை சார்ந்தது. என்னைப் பொறுத்தமட்டில் சினிமா ரொம்ப பாதுகாப்பான இடம்.”

“ஒரு பெண் சினிமாவில் நடிப்பு தாண்டி மற்ற துறைகளில் வளரும்போது ஏன் விமர்சனங்களை எதிர்கொள்ள முடிவதில்லை?”

“யார் சொன்னது விமர்சனங்களை எதிர்கொள்ள முடியறதில்லைனு? விமர்சனங்களை உள்வாங்கிட்டு அதற்கு பதில் யார் வேணும்னாலும் சொல்லலாமே. தவறைச் சுட்டிக் காட்டும்போது, அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டியது நம்மோட கடமை. நான் விமர்சனத்தை ஏற்றுக் கொள்வேன். அதற்கு பதிலும் கொடுப்பேன். ஏனெனில், ஒருவிஷயத்தை முகத்துக்கு நேரா எதிர்கொள்ளாம, ஒளிஞ்சுக்கறது மிகப்பெரிய கோழைத்தனம்.

| என்னை ரொம்ப மரியாதையா நடத்தின, என்னோட திறமையைப் புரிஞ்சுகிட்ட எத்தனையோ பேர் சினிமாத்துறையில் இருக்காங்க.|

“சினிமா நீங்க சொல்வது மாதிரி பாதுகாப்பான ஒரு இடமா இருந்தாலும், அதையும் தாண்டி பெண்களுக்கு பாதிப்புகள் இருந்துகிட்டுதானே இருக்கு?”

“அது எல்லா இடத்திலும்தான் இருக்கு. நந்தினியைப் பத்தி யாரும் பேசலை. ஹாசினி பிரச்னையை பத்து நாளில் விட்டுட்டாங்க. ஆனால், பாவனா விஷயத்தை எத்தனை பேர் பேசினாங்க? அமைச்சர்கள், நடிகர்கள்னு எத்தனை பேர் அதற்கு எதிரா குரல் கொடுத்தாங்க? அதுதான் விஷயமே. மற்ற துறைகளில் வெளியில் தெரியாத பிரச்னைகள் கூட, சினிமா உலகில் உடனடியாக வெளித்தெரிந்துவிடும். பாவனாக்கு மலையாளத் திரையுலகம் அழுத்தமா குரல் கொடுத்தது. அதே அளவு நாம இங்க ஹாசினிக்கும், நந்தினிக்கும் குடுத்திருக்கணும்னு ஆதங்கப்படறேன்.  

சினிமால ஒரு பெர்சனல் விஷயம்னாலும் அதப்பத்தியே பேச்சு, விவாதம்னு போகுது.  அதனாலதான் சினிமாவே சரியில்லாத துறைனு எல்லார் மனசிலும் பதிஞ்சு போய்டுச்சு. நான் எத்தனையோ இயக்குனர்கள், சக திரைப்பட தோழர்களுடன் பணியாற்றியிருக்கேன். பெண்ணா இருந்தாலும் என்னை ரொம்ப மரியாதையா நடத்தின, என்னோட திறமையைப் புரிஞ்சுகிட்ட எத்தனையோ பேர் சினிமாத்துறையில் இருக்காங்க. அதையும் தாண்டி சில தவறானவர்களும் இருக்காங்க. அப்படிப்பட்ட ஆட்கள் சமூகம் முழுதுமே இருக்காங்க. முன்னரே நான் சொன்னது மாதிரி அது அவரவர்களோட மனசு சார்ந்ததுதான்.”

“அப்படியே இருந்தாலும் இன்னைக்கும் கூட சினிமா ஜெண்டர் பயாஸ்டாதானே இருக்கு?”

“கொஞ்சநஞ்சமில்லைமா...பயங்கரமான ஜெண்டர் பயாஸ். அதை நான் நூறு சதவீதம் ஒத்துக்கறேன். மற்ற துறைகளில் நம்ம உழைப்பை நாம முடிவு செய்வோம். சினிமா இண்டஸ்டிரியைப் பொறுத்தவரை, இண்டஸ்ட்ரிதான் அதுதான் ஒரு பெண் எவ்வளவு காலம் இந்தத் துறையில் உழைக்கணும்கறதை முடிவு பண்ணும்.”

“பெண் ஆணுக்குச் சமம்னு சொல்லப்படுற இந்த காலகட்டத்தில்தான், சினிமாவில் பெண்களை காயப்படுத்தற மாதிரியான வசனங்களும் இருக்கு. என்ன காரணம்?”

“உண்மை. முகத்தை கேவலப்படுத்தறது, உருவக் கேலி, ஹீரோயினுடன் கூட தோழியா நடிக்கற பொண்ணை டீஸ் பண்றதுனு ரொம்பவே மோசமான வசனங்கள். இது ஒருபக்கம்னா, துணைநடிகைகளோட நிலை ரொம்ப பாவம். ஒரு ஆணுக்கு இருக்கற மரியாதை, பெண்களுக்கு சினிமாவில் கிடையாது. அதுவும் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மரியாதையே கிடையாது. கேரக்டர் இல்லாதவங்கதான் சினிமாக்கு வருவாங்கனு நினைக்கறது ரொம்பவே தவறான எண்ணம். முன்னாடி மரியாதையா பேசிட்டு, பின்னாடி ‘அதைப் பத்தி எனக்கு தெரியாதா’னு பேசுவாங்க. கேள்வி கேட்கற பெண்களை இங்கே பிடிக்கவே பிடிக்காது. ‘நான் நடிக்கற கேரக்டர் அளவுக்கே நடிக்கற ஒரு ஆண் நடிகருக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம்?’னு நாம கேட்டா அடுத்த நிமிடம் சினிமாவில் நமக்கு இடமில்லை. அதனால்தான் நான் நிறைய படம் பண்றதில்லை. ஒரு ஆண் நடிகருக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கறோமோ, அதே அளவுக்கு பெண் நடிகர்களுக்கும் கிடைக்கணும். அதற்கு மீடியாக்களும் உதவி புரியணும்” என்ற முத்தாய்ப்புடன் பேட்டியை முடித்துக் கொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். 

-பா.விஜயலட்சுமி