Published:Updated:

சாதாரண மனுஷனெல்லாம் சினிமா எடுத்து வெளியிட முடியாது பாஸ்! - `யாக்கை’ குழந்தை வேலப்பன் #VikatanExclusive

சாதாரண மனுஷனெல்லாம் சினிமா எடுத்து வெளியிட முடியாது பாஸ்! - `யாக்கை’ குழந்தை வேலப்பன் #VikatanExclusive
சாதாரண மனுஷனெல்லாம் சினிமா எடுத்து வெளியிட முடியாது பாஸ்! - `யாக்கை’ குழந்தை வேலப்பன் #VikatanExclusive

தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கிற பிளஸ் டூ மாணவர் மாதிரி தான் இருக்கிறார் குழந்தை வேலப்பன். `யாக்கை' படத்தின் இயக்குனர். எந்த இயக்குனரின் முகவரியும் இல்லாமல் குறும்படங்களின் வழி சினிமாவுக்கு வந்தவர். ஏற்கெனவே, பெண்கள் கடத்தலை களமாக கொண்ட `ஆண்மை தவறேல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர், `யாக்கை' மூலம் மருத்துவ உலகில் நடக்கும் கொடூரங்களை காட்டியிருக்கிறார். நம்மாழ்வாரின் சீடர், குழந்தைகள் உரிமை ஆர்வலர் என சில வேறுபட்ட முகங்களும் உண்டு, குழந்தைக்கு!

சாதாரண மனுஷனெல்லாம் சினிமா எடுத்து வெளியிட முடியாது பாஸ்! - `யாக்கை’ குழந்தை வேலப்பன் #VikatanExclusive

“ரொம்ப சந்தோஷமா இருக்கு பாஸ். முடிஞ்ச அளவுக்கு இயல்பான சினிமாவா இருக்கனும்ன்னு பார்த்து பார்த்து எடுத்தபடம். நான் பேசவந்த அரசியல் ஓரளவுக்கு மக்கள்கிட்ட போய் சேந்திருக்கு... உண்மையிலேயே, கடைசி நிமிடம் வரைக்கும் இந்தப்படம் ரிலீசாகுமா ஆகாதான்னு சந்தேகம் இருந்துச்சு. சினிமா ரொம்ப மோசமான சூழல்ல இருக்கு. பின்புலம் இல்லாத ஒருத்தன், சினிமாவுக்குள்ள வந்து ஜெயிக்கிறது சாதாரணமில்லை. யாக்கையை வெளியில கொண்டு வர்றதுக்குள்ள மனசும் உடம்பும் சோர்ந்து போயிடுச்சு. நிரந்தமா படுக்கையில விழுந்திடுவேனோன்னு கூட பயம் வந்திடுச்சு. பிரமோஷன் பண்ணக்கூட பணமில்லை... நாலு பேரு நல்ல விதமா பேசும்போது தான் உடம்புல கொஞ்சம் உற்சாகம் வருது...- உணர்ச்சிவசப்படுகிறார் குழந்தை வேலப்பன்.

குழந்தைக்கு சொந்த ஊர், மதுரைக்கு அருகில் உள்ள மார்க்கம்பட்டி. படித்தது, கோவையில் விஷூவல் கம்யூனிகேஷன். படிப்பு முடித்ததும் மதுரைக்குச் செல்லாமல் நேரடியாக சென்னைக்கு வந்து விட்டார். 

“நான் தான் வீட்டுக்கு மூத்தபிள்ளை. தங்கச்சி, தம்பியெல்லாம் வேற இலக்கு வச்சுப் படிச்சாங்க. நமக்கு சின்ன வயசுலேயே சினிமா தான். அப்பா எங்கூர்ல இருந்து டென்ட் கொட்டகையை லீஸ்க்கு எடுத்திருந்தார். டிக்கெட் கொடுக்கிறதுல இருந்து, ஆபரேட்டர் வேலை வரைக்கும் எல்லாத்தையும் இழுத்துப்போட்டுப் பார்ப்பேன். பிலிம் ரோலை உடம்புல சுத்திக்கிட்டே திரிவேன். தம்பிகளும், தங்கையும் சாப்ட்வேர் லைனுக்குப் போயிட்டாங்க.. நான் விஷூவல் கம்யூனிகேஷன் எடுத்தேன். படிப்பு முடிச்சதும், நேரா கோவையில இருந்து சென்னைக்கு வந்துட்டேன். நாம படிச்ச படிப்புக்கு பெரிய இயக்குனர்கள், நம்மை உடனே உதவி இயக்குனரா சேத்துக்குவாங்கன்னு எதிர்பார்த்து சில பேரோட வீட்டுக்குப் போனேன். எல்லா வீடுகள்லயும் பெரிய வரிசை நின்னுச்சு. ஒரு வாசலும் திறக்கலே. 

சாதாரண மனுஷனெல்லாம் சினிமா எடுத்து வெளியிட முடியாது பாஸ்! - `யாக்கை’ குழந்தை வேலப்பன் #VikatanExclusive

இனி யார் வீட்டு முன்னாலும் போய் நிற்கக்கூடாது... அவங்களாவே நம்மை கூப்பிடுற மாதிரி ஏதாவது செய்யனும். அப்பாக்கிட்ட, `ஒரு குறும்படம் எடுக்கப்போறேன்... பணம் கொடுங்க'ன்னு கேட்டேன். யாக்கை ஹீரோவோட அப்பா மாதிரி தான் என் அப்பாவும். எதுவுமே கேட்காம 1 லட்சம் கொடுத்தார். என்மேல அவ்வளவு நம்பிக்கை. அதைவச்சு `குற்றவாளி'ன்னு ஒரு குறும்படம் எடுத்தேன். அந்தப் படத்தோட வெளியீட்டு விழாவுக்கு பாலாஜி சக்திவேல் சார், சிங்கம்புலி அண்ணன், சீனு ராமசாமி சார், தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் சாரையெல்லாம் அழைச்சேன். என் அழைப்பை ஏத்துக்கிட்டு எல்லோரும் வந்தாங்க. படத்தை திரையிட்டு முடிச்சபிறகு, `என்னை யாராவது உதவி இயக்குனரா சேத்துக்கங்க'ன்னு ஓபனா கேட்டேன். பாலாஜி சக்திவேல் சார், `அடுத்த படத்துல உன்னைச் சேத்துக்கறேன்'னு சொன்னார். இது நடந்து ஒருவாரத்துல, கிருஷ்ணகாந்த் சார், `உடனடியா ஆபீஸ் வா'ன்னு அழைச்சார். போய் பார்த்தேன். `என்ன வெறுங்கையோட வந்திருக்கே... ஸ்கிரிப்ட் எங்கே?'ன்னு கேட்டார். எனக்கு அதிர்ச்சி. அன்றைய நிலையில என்கிட்ட எந்தக் கதையும் இல்லை. `சீக்கிரமே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணு... நாம படம் பண்ணலாம்'ன்னு சொல்லி அனுப்பிட்டார். 

சினிமாவைப் பத்தி எந்த கள அனுபவமுமே இல்லாம, ஒரு கதை பண்றது அவ்வளவு எளிதா இல்லை. லீடே கிடைக்காம ஒரு மாசம் அலைஞ்சேன். அந்த தருணத்தில ஆந்திராவுல ரெண்டு பொண்ணுங்க காணாமப் போயிட்டாங்க. அவங்களை துபாய்ல பாலியல் தொழில் நடக்கிற இடத்துல இருந்து மீட்டாங்க. அந்த செய்தி என்னை பாதிச்சுச்சு. ஏராளமான காவலர்கள் இருக்காங்க. விமான நிலையத்துல எவ்வளவோ செக்கப் ஏற்பாடுகள் இருக்கு. இதையெல்லாம் கடந்து அவங்களை எப்படி துபாய் கடத்த முடிஞ்சதுன்னு அதிர்ச்சியா இருந்துச்சு. அது தொடர்பா தகவல்களைத் திரட்ட ஆரம்பிச்சேன். அதுல இன்னும் அதிர்ச்சியாக தகவல்கள் கிடைச்சுச்சு. அரசு ஏஜென்சிகளோட புள்ளி விபரப்படி, சென்னையில மட்டும் 16,800 பாலியல் தொழிலாளர்கள் இருக்காங்க. 7800 ஆண்கள் புரோக்கிங் பண்றாங்க... இந்தியாவோட தென்மாநிலங்கள்ல கடத்தப்படுற பெண்கள் கோவா பைனா பீச்க்கு கொண்டு போகப்பட்டு அங்கிருந்து கடல் மார்க்கமா வெளிநாடுகளுக்கு அனுப்படுறாங்க. இதுபத்தி நிறைய தகவல்கள் சேகரிச்சேன். பாதிக்கப்பட்டவங்களைத் தேடிப்பிடிச்சு பேசினேன்.  

சாதாரண மனுஷனெல்லாம் சினிமா எடுத்து வெளியிட முடியாது பாஸ்! - `யாக்கை’ குழந்தை வேலப்பன் #VikatanExclusive

பெண்ணைக் காணலேன்னு ஸ்டேஷனுக்குப் போற பெற்றோருக்கு கசப்பான அனுபவங்கள் தான் கிடைக்குது. `யார் கூடவாவது ஓடிப்போயிருப்பா'ன்னு பச்சையா காவலர்கள் சொல்வாங்க, 3 நாள் கழிச்சு தான் தேடவே ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள அவங்க கோவாவைக் கடந்திருப்பாங்க. இந்த லைனை வச்சுத்தான் `ஆண்மை தவறேல்' பண்ணினேன். கிருஷ்ணகாந்த், கமல்நயன் ரெண்டு பேரும் என்னை முழுசா நம்பி எல்லாத்தையும் ஒப்படைச்சாங்க. குரு இல்லாம சினிமா பண்றது அவ்வளவு எளிதில்லை பாஸ். அதை அனுபவப்பூர்வமா உணர்ந்தேன். இருந்தாலும் மோசமில்லாம, சின்னச் சின்ன அழகியல் அம்சங்களோட அந்தப்படம் வந்துச்சு. சிங்கப்பூர்ல நடந்த திரைப்படவிழாவுல, சிறந்த மினிமம் பட்ஜெட் படமாவும் தேர்வாச்சு.

`ஆண்மை தவறேல்' படத்துக்குப் பிறகு ஒரு வருடத்துக்கு எந்தக் கதையும் எழுதலே. இயல்பா எனக்குள்ள இருந்த தேடல்களை நாடிப் போனேன். நம்மாழ்வார் அய்யாக்கிட்ட போய் சரணடைஞ்சேன். அவர் போன இடத்துக்கெல்லாம் போனேன். அங்கே, குக்கூ அமைப்போட சிவராஜ் அண்ணா, இயல்வாகை அழகேஸ்வரி அக்கா, பீட்டர் அண்ணா அறிமுகம் கிடைச்சபிறகு, குழந்தைகள் உலகத்துக்குள்ளே நுழைஞ்சேன். ஜவ்வாது மலையில குழந்தைகளுக்கான ஒரு இயற்கைப் பள்ளி கட்டுற வேலையில எல்லோரும் ஒருங்கிணைஞ்சோம். குழந்தைகளுக்குப் பிடிச்ச கல்வித்திட்டம் பத்தி தெரிஞ்சுக்க ஸ்கூல் ஸ்கூலா போனோம். அப்படித்தான் திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்குள்ள நுழைஞ்சேன். அது வேற உலகமா இருந்துச்சு. அந்தக் குழந்தைகளோட தைரியமும், தன்னம்பிக்கையும் இன்னொரு கதவைத் திறந்துச்சு. அங்கே தான் `யாக்கை'க்கான கதையை கண்டுபிடிச்சேன். 

கருவுல உருவாகுறதுல இருந்து, முழு மனிதனாகி வாழ்ந்து முடியிற வரைக்கும் மருந்துக் கம்பெனிகளோட வாடிக்கையாளரா இருக்கோம். நாம சாப்பிடுற உணவுக்கான விதையை விற்பனை செய்யிற கம்பெனியும், நோய்க்கான மருந்தை விற்பனை செய்யிற கம்பெனியும் ஒண்ணா இருக்கு. இதுக்குப் பின்னாடி பல்லாயிரம் கோடி வணிகம் இருக்கு. இன்னொரு பக்கம், உடல் உறுப்பு விற்பனை மிகப்பெரிய நெட்வொர்க்கா நடந்துக்கிட்டிருக்கு. மெடிக்கல் டூரிசத்துல நாம பெரிசா வளர்ந்துட்டோம்ன்னு சொல்றதுக்குப் பின்னாடி மிகப்பெரிய மருத்துவ மாஃபியா இங்கே வளர்ந்துக்கிட்டிருக்குங்கிற உண்மை மறைஞ்சிருக்கு. கலிபோர்னியாவுல இருந்து டூரிஸ்ட் விசாவுல வர்ற யாரோ ஒருத்தருக்கு திடீர்ன்னு சென்னையில கிட்னி பெயிலியர் ஆகிடுது. அதே நாள்ல யாரோ ஒருத்தர் திடீர்ன்னு மூளைச்சாவு அடையிறார். அவரோட கிட்னியை எடுத்து ஹைலி பிரியாரிட்டி அடிப்படையில உடனடியா வெளிநாட்டுக்காரருக்குப் பொருத்துறாங்க. இந்த மாதிரி கடந்த 10 வருஷத்தில எத்தனை வெளிநாட்டுக்காரர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்குன்னு கணக்கெடுத்தா மிகப்பெரிய விபரீதம் புரியும். உலகத்திலேயே மிகப்பெரிய 2வது பெரிய ரெட் மார்க்கெட் சென்னை தான். 

முகலிவாக்கதுக்கு இன்னொரு பெயர் கிட்னி வாக்கம். இந்த மாபியாவுக்கு வேர் எங்கே தொடங்கி எங்கே முடியுதுன்னு கண்டுபிடிக்கவே முடியாது. கண்டுபிடிக்க முயற்சி பண்ணினா நாம உயிரோட இருக்க மாட்டோம். இதை அடிப்படையா வச்சுத்தான் `யாக்கை'யை ஆரம்பிச்சேன். கிருஷ்ணா, சுவாதி, புரட்யூசர் முத்துக்குமார், பிரகாஷ்ராஜ் சார், குரு சோமசுந்தரம்ன்னு எல்லோரும் ரொம்ப நம்பிக்கையா உள்ளே வந்தாங்க. ஆனா, பழைய சினிமா இப்போ இல்லை பாஸ். பின்புலம் இல்லாத யாரும் சினிமாவுல நிக்க முடியாது. பெரிய பெரிய கைகள் தான் இதுக்குள்ள இருக்க முடியும். இந்தப் படத்துக்காக நான் அனுபவிச்ச கஷ்டங்கள் கொஞ்சமில்லை..." -  உணர்ச்சிவசப்படுகிறார் குழந்தை வேலப்பன். 

சாதாரண மனுஷனெல்லாம் சினிமா எடுத்து வெளியிட முடியாது பாஸ்! - `யாக்கை’ குழந்தை வேலப்பன் #VikatanExclusive

"தனி மனிதர்கள், குடும்பப் பின்புலம் இல்லாதவங்க சினிமா எடுத்து வெளியிட முடியாது. தியேட்டர்கள் கிடைக்காது. தினமும் செத்துச் செத்துப் பிழைக்கணும். ஒரு படத்துல பல பேரோட எதிர்காலம் இருக்கு. பல நூறு பேரோட உழைப்பு இருக்கு. தயாரிப்பாளர்களோட வாழ்வாதாரமே இருக்கு. ஆனா, யாரோ சிலர் படம் வரணுமா, வரக்கூடாதா, ஓடணுமா, ஓடக்கூடாதான்னு தீர்மானிக்கிறாங்க. நிறைய பேர் சினிமாவை விட்டுப் போய்க்கிட்டிருக்காங்க. நிறைய நிஜங்கள் வெளியில தெரியிறதில்லை. நல்ல தயாரிப்பாளர், நல்ல டெக்னீஷியன்ஸ், நடிகர்கள் அமைஞ்சும் சினிமாக்குள்ள இருக்கிற புறச்சூழல் ஆரோக்கியமில்லை பாஸ். பாதிப்படம் முடியிறதுக்குள்ள இதே மாதிரி கதையோட பெரிய நடிகர்கள் நடிச்ச ரெண்டு படங்கள் வந்திடுச்சு. கதையை மாத்தி மாத்தி பண்ண வேண்டிய நிலை. எல்லாம் முடிஞ்சு ரிலீஸ் பண்றதுக்கு  தயாரானா  ’அடுத்தடுத்து வேற பெரிய படங்கள் வருது வெய்ட் பண்ணுங்க 'ன்னாங்க. பெரிய மன உளைச்சல் பாஸ். பெரிசா உடம்பு பாதிச்சுடுச்சு. இதிலயே முடிஞ்சு போயிடுவேனோன்னு பயம் கூட வந்துச்சு.   

எந்தப்படம் ஓடணும், எந்தப்படம் ஓடக்கூடாதுன்னு இப்போ மக்கள் தீர்மானிக்கிறதில்லை. எந்தப் படத்துக்கு மக்கள் வரணும், வரக்கூடாதுன்னு படம் ரிலீசாகுறத்துக்கு முன்னாடியே முடிவு செஞ்சிடுறாங்க. அவங்களைக் கடந்து தியேட்டருக்குப் படத்தைக் கொண்டு வந்தா, படம் எடுக்கிற செலவுல பாதியை படத்தை ஓட்ட செலவு பண்ண வேண்டியிருக்கு. ஃபோர்காஸ்டிங் பிசினஸ் பெரிய அளவுக்கு சினிமாவை பாதிச்சிருக்கு.  

யூடியூப் சேனல்ங்கிற பேர்ல யார் யாரோ சினிமாவை விமர்சனம் பண்றாங்க. 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிற எவருக்கும் படத்தை விமர்சனம் பண்ண உரிமையிருக்கு. அதை யாரும் தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா, அதுக்கு என்ன வரம்பு? விமர்சனத்துல திறனாய்வுத் தன்மை இருக்க வேண்டாமா? விமர்சனம் படைப்பாளிக்கு பாடமா இருக்கணும். 

போன ஞாயிற்றுக்கிழமை சத்யம் தியேட்டர்ல நான் நிற்கிறேன். கவுண்ட்ர்ல எனக்கு முன்னாடி நிற்கிற நாலு பேர், யூடியூப்ல யாக்கையோட ரிவியூவைப் பாத்துட்டு, கவுண்டர் மாறி வேற படம் பாக்கப்போறாங்க. பொய் இல்ல. கண் முன்னாடி நடந்தது. எனக்கு எப்படி இருந்திருக்கும்னு பாருங்க. படம் எடுக்கவே படாத பாடு பட்டோம் பாஸ்... எங்களால படத்தை ப்ரமோஷன் பண்ண ஒரு ரூபாய் கூட செலவு பண்ண முடியலே. ` 

இதையெல்லாம் பேசுறதால என்னை இன்னும் டார்க்கெட் பண்ணுவாங்க பாஸ். வாய்ப்புகள் கூட பறிபோகலாம். ஆனா, யாரு இதையெல்லாம் பேசுறது..? சினிமாவை கனவா சுமந்துக்கிட்டு வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்குற பலநூறு இளைஞர்களோட பிரதிநிதியா நான் பேசுறேன். பதில் சொல்லட்டும் பாஸ்..." கோவத்தில்  தெறிக்கிறார் குழந்தை வேலப்பன்.  

-வெ.நீலகண்டன்
படங்கள்: மீ.நிவேதன்

அடுத்த கட்டுரைக்கு