Published:Updated:

இந்த படங்களின் இரண்டாம் பாகம் வருமா, வராதா?

இந்த படங்களின் இரண்டாம் பாகம் வருமா, வராதா?
இந்த படங்களின் இரண்டாம் பாகம் வருமா, வராதா?

அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் சில படங்களின் இரண்டாம் பாகங்களின் லிஸ்ட் தான் இது. இரண்டாவது பாகம் பற்றி அடிக்கடி சம்பந்தப்பட்டவர்கள் பேசிக் கொண்டாலும் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை. அதில் சில படங்கள் இங்கே.

ஆயிரத்தில் ஒருவன் 2 :

'பிடிக்கும் ஆனா பிடிக்காது' வகைப் படங்களில் ஒன்று. சோழர்கள் கடத்திச்சென்ற குலதெய்வ சிலையை மீட்கச் செல்பவர்கள், பல ஆயிரம் வருடங்கள் கழித்தும் உயிர் வாழும் சோழர்களைப் பார்த்து அதிர்ச்சி ஆவார்கள். குலதெய்வ சிலையை மீட்டாகிவிட்டது. சோழர்களையும் அழித்துவிட்டால் முடிந்தது கதை. போரில் பெரும்பாலான சோழர்கள் சாக, சோழ அரசனின் குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் தலைமறைவாகிவிடுவார் ஹீரோ கார்த்தி. படம் தொடங்கிய இடத்திலே முடியும் இந்த ஒரு சுவாரஸ்யமே இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியது. செல்வராகவனும் ரசிகர்களை ஏமாற்றாமல், 'சோழனின் பயணம் தொடரும்' என்றே முடித்தார். இரண்டாம் பாகத்தில் ஹீரோ கார்த்தி சோழ இளவரசனோடு எங்கே போயிருப்பார்? என்ன செய்வார்? பாண்டியர்கள் இந்தமுறையும் சோழர்களைக் கண்டுபிடித்து அழித்துவிடுவார்களா? முதல் பாகத்தில் இருந்த சோழர்களின் ஆபத்தான பொறிகளைப் போல், இரண்டாம் பாகத்தில் என்னென்ன பொறிகள் இருக்கும்... என இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதற்கான விஷயங்களும், அவை எப்படியெல்லாம் இருக்கும் என்கிற கற்பனைகளும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் அதிகம்.

சந்திரமுகி 2 :

பழிவாங்கவேண்டிய ராஜாவுக்குப் பதிலாக, ராஜாவின் உருவ பொம்மையைக் கொழுத்திவிட்டு சந்திரமுகியை ஏமாற்றியிருப்பார்கள். 'பல வருட வன்மத்தை இப்படி சப்பையா முடிச்சிட்டாங்களே?' என படம் பார்த்து வருத்தப்பட்டதற்காகவே, இப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடலாம். முதல் பாகத்தில் பொம்மையை வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று தெரிந்த சந்திரமுகி மீண்டும் ஜோதிகாவின் உடம்புக்குள் புகுந்துகொண்டாலே, படம் படு ஜோராக ஆரம்பித்துவிடும். ஏமாற்றிய மனோதத்துவ நிபுணர் ரஜினிகாந்த், உறுதுணையாக இருந்த பிரபு எல்லோருக்கும் இனி எப்பவுமே டென்ஷன்தான். ஆனால், முதல் பாகத்தில் சம்பந்தமே இல்லாமல் வீட்டுக்குள் சுருண்டு கிடந்து, க்ளைமாக்ஸில் வெளியேறிய பாம்புக்கு ஒரு ஃபிளாஷ்பேக் கதை கட்டாயம் வேண்டும்.

தனி ஒருவன் 2 :

படத்தில் மொத்த பிரச்னைக்குமான ஒற்றை எதிரி சித்தார்த் அபிமன்யுவின் கதை முடிந்துவிட்டதுதான். ஆனால், தீமைதான் வெல்லும் யார் தடுத்தாலும்... என்ற பாயின்ட் இரண்டாம் பாகத்துக்குப் பொருந்தும். அழகிய எதிரிகளை உருவாக்கி, துடிப்பான போலீஸ் அதிகாரி மித்ரனை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தி, தனி ஒருவனாக களத்தில் இறக்கலாம். முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்தாலே பார்க்க ஆவலாக இருக்கும் சித்தார்த் அபிமன்யு ரசிகர்கள் அதிகம் என்பதால், இரண்டாம் பாகத்துக்கு நிச்சயம் வரவேற்பு உண்டு!

சிங்கம் 4 :

'சிங்கம்' படத்துக்கு அடுத்த பாகம் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். பெரும்பாலும் தனது படங்களில் இரண்டாம் பாகத்துக்கும் சேர்த்து துண்டைப் போட்டு முடித்துவைக்கும் ஹரி, நான்காவது பாகத்தில் கூட ஓயவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸுக்காக 'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தில் இருக்கிறார். நிச்சயம் 'சிங்கம்-4'ம் சீறிப்பாயும் என நம்புவோமாக!

மங்காத்தா 2 :

அஜித் - விஜய் இணைந்து நடிக்க பொருத்தமான கதை. தமிழ்சினிமாவில் நெகட்டிவ் ஹீரோவைப் பிரதானப்படுத்திய படம். பிளாக் பஸ்டர் ஹிட். இதைவிட இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. அஜித்தின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான இதிலும், இரண்டாம் பாகத்துக்கான இடம் நிறைய இருக்கிறது. க்ளைமாக்ஸில் அஜித் அவ்ளோதானா... என நிமிரும்போது, 'நாங்க ரெண்டுபேருமே கூட்டு' என கிளாஸிக் ட்விஸ்ட் கொடுப்பார்கள் அஜித் - அர்ஜூன் அண்ட் கோ. இந்த ட்வி்ஸ்ட்டை இன்னும் கொஞ்சம் கூர்தீட்டி, அஜித் - அர்ஜூன் இருவருமே நல்ல போலீஸ் அதிகாரிகள்தான். ஏன் இப்படிச் செய்தார்கள் என்றால்... என ஆரம்பித்தால், 'மங்காத்தா-2'வும் மாஸ்தான்!

துப்பாக்கி 2 :

அஜித்துக்கு 'மங்காத்தா' என்றால், விஜய்க்கு 'துப்பாக்கி'. எந்த இடத்திலும் இறங்கிப்போகாத திரைக்கதைக்கு 'விடுமுறைக்காக ஊருக்கு வரும் சில ராணுவ வீரர்கள், ஊரில் சந்திக்கும் சில பிரச்னைகளை சாகசங்களால் முறியடிக்கிறார்கள்' என்ற கதை கை கொடுத்தது. ஹீரோ விஜய்க்கும், ஹீரோயின் காஜல் அகர்வாலுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அடுத்த விடுமுறையில்தான் திருமணம் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த விடுமுறையில் ஏற்கெனவே விஜய் மற்றும் அவருடைய நண்பர்களால் பழிவாங்கப்பட்ட தீவிரவாதிகள் அடுத்தடுத்த திட்டங்களைத் தீட்டட்டும். மீண்டும் வழக்கம்போல விடுமுறைக்கு வரும் ஹீரோ, 'எல்லாத்தையும் தீர்த்துகட்டிட்டுதான் உன் கழுத்துல தாலி கட்டுவேன்' என காஜலுக்கு வாக்கு கொடுத்துவிட்டு, வில்லன்களோடு புகுந்து விளையாடும். 'துப்பாக்கி 2' ஜோராக இருக்கும். ரசிகர்களும், 'போய் வரவா...' என்றுதான் பாடியிருக்கிறார் விஜய் என நம்பிக்கையோடு ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்கள். முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைவதாக ஒரு டாக் வந்து கொண்டிருக்கிறது அது துப்பாக்கி 2வாக இருந்தால் செம்ம கொண்டாட்டம்தான் ரசிகர்களுக்கு.

- கே.ஜி.மணிகண்டன்