Published:Updated:

இசைப் பிரியர்களின் ‘செல்லம்மா’ ஸ்ரேயா கோஷல்! #HBDShreyaGhoshal

இசைப் பிரியர்களின் ‘செல்லம்மா’  ஸ்ரேயா கோஷல்! #HBDShreyaGhoshal
இசைப் பிரியர்களின் ‘செல்லம்மா’ ஸ்ரேயா கோஷல்! #HBDShreyaGhoshal

சை என்ற கலையானது காதுகளின் வழி நுழைந்து நேரடியாக இதயத்துக்குச் செல்கிறது என்பார்கள். ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்களைப் பொறுத்தவரை, அது இதயத்துக்குச் செல்வதோடு அங்கேயே தங்கி உங்களோடு பயணிக்கும் தன்மையுடையது. இதை மெய்ப்பிப்பதைப் போல நான்கு தேசிய விருதுகள், தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து மொத்தம் பதினைந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருது என ஸ்ரேயா கோஷல் வீட்டு வரவேற்பரை விருதுகளால் குவிந்து கிடக்கிறது. இந்தக் குரல் தேவதையின் பிறந்தநாள் இன்று!

சூழல் 1 :

உங்கள் காதலர் அல்லது காதலியுடன் ஒரு தனிமையான தருணம் கிடைக்கிறது. ஒருவர் கைகளின் பத்து விரல்களின் இடைவெளியை மற்றொருவரின் கரங்கள் நிரப்புகின்றன. கைகோத்து காதலில் மூழ்கிக் கிடக்கும் போது இருவருக்கும் மிகப்பிடித்த பாடலொன்று காற்றில் மிதக்கிறது. சில நிமிடங்கள், உலகம் உங்களை மையமாகக் கொண்டு சுழலத் தொடங்குகிறது.

சூழல் 2 :

கடும் வாகன நெருக்கடியில் வாகனங்கள் இஞ்ச் இஞ்ச்சாக நகர்கின்றன. பொதுவாக இருபது நிமிடத்தில் சென்றுவிடக் கூடிய இடத்துக்குச் செல்ல மணிக்கணக்காகிறது. சிக்கித்தவிக்கும் அந்த வாகன நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பாடல் உங்கள் அத்தனை மன அழுத்தத்தையும் கரைத்துவிடுகிறது.

சூழல் 3 :

ஒருவாரம் உலகத்தை மறக்க நினைத்து விடுப்பு எடுத்துக்கொண்டு, மலைப்பிரதேசத்துக்குச் செல்கிறீர்கள். மலைச்சரிவில் நடந்து செல்லும்போது மெல்லிய பனிச்சாரல் இதமாகத் தூவுகிறது. 'இதல்லவா சொர்க்கம்! இந்த நொடி இன்னும் நீளாதா!' என்றபடி பனிச்சாரலில் லயித்து நிற்கிறீர்கள். மனதுக்குப் பிடித்த பாடலை உங்கள் உதடுகள் தானாகவே பாட ஆரம்பிக்கிறது.

சூழல் 4 :

மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு விஷயத்தில் கிடைத்த தோல்வி. ஆறுதல் வார்த்தைகள் கேட்டு மனம் ஆற மறுக்கிறது. வார்த்தைகள் கொடுக்காத ஆறுதலை ஆழ்மனதுக்கு இசை கொடுக்கிறது. 'மீண்டும் மோதிப் பார்த்துவிடலாம்!' என முடிவெடுத்து மனதை இலகுவாக்கி அறையைவிட்டு வெளியேறுகிறீர்கள்.

மேலே சொன்ன நான்கு சூழல் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ சூழலில், மனிதனின் வாழ்க்கையில் இசை துணை நிற்கிறது. ஸ்ரேயா கோஷல் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மேலே சொன்ன அத்தனைத் தருணங்களிலும் ஏதாவது ஒரு ஸ்ரேயா கோஷல் பாடல் தான் ஒலித்திருக்கும்.

இனிப்புக்குப் பெயர் போன மேற்குவங்கத்தில் தான் இனிய குரலுக்குச் சொந்தக்காரியான ஸ்ரேயா கோஷல் 1984-ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையின் அணு உலை பொறியாளர் பணியின் காரணமாக ராஜஸ்தானில் தான் வளர்ந்தார். அவரது பெற்றோர்கள் இருவருக்கும் இசையில் ஆர்வம் அதிகமென்பதால், நான்கு வயதிலிருந்தே மகேஷ் சந்திர சர்மா என்ற இந்துஸ்தானி இசைக்கலைஞரிடம் ஸ்ரேயாவை இசை கற்க வைத்தனர்.

தன் 16 வயதில் 'சரிகமப' என்ற இசை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு வென்றார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயாவின் குரல் கேட்டுப் பிடித்துப்போன பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தான் இயக்கிய 'தேவ்தாஸ்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். ஸ்ரேயா பாடிய முதல் சினிமா ஆல்பமே நாடு முழுவதும் ஹிட் அடித்தது. முதல் படத்துக்காக தேசிய விருதும், ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தன. அதிலிருந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படங்களில் ஸ்ரேயா கோஷல் பாடல் நிச்சயமாக இடம்பெற்றுவிடும். இது ஸ்ரேயா கோஷல் தீவிர விசிறிகளுக்கு முன்பே தெரிந்த கதை தான். ஆனால், அதன் பின் ஸ்ரேயாவின் பயணத்தில் பல சுவாரஸ்ய இசைத் தருணங்கள் நிறைந்திருந்தன. 

"இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்துக் கண்களைத் திறந்தபோது  ரெக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். அதன்பிறகு சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவுசெய்துவிட்டது"  என தனது முதல் ரெக்கார்டிங் குறித்து நெகிழ்கிறார் ஸ்ரேயா கோஷல்.

'ஆல்பம்' படத்தில் இடம்பெற்ற 'செல்லமே செல்லம் என்பாயடா' பாடல் தான் ஸ்ரேயா கோஷல் பாடிய முதல் தமிழ் பாடல். நாடு முழுவதும் பிரபலமாகியிருந்த குரலை, தமிழில் பாட வாய்ப்பளித்தவர் கார்த்திக் ராஜா. அதற்காகவே அவருக்கு கோடான கோடி நன்றி. 'இது சித்ரா அம்மா குரல்', 'இல்லல்ல... இது ஸ்வர்ணலதா பாடியது' என ரசிகர்களுக்குள் அடிதடியே நிகழ்ந்தது. அந்த இருவரின் குரலைப் போன்று சாயல் இருந்தாலும், இந்தக் குரல் மட்டும் கொஞ்சம் வேறு மாதிரியாக வசீகரிப்பதை உணர்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை ஸ்ரேயா தமிழ் ரசிகர்களின் செல்லம் தான். ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகவும் ஸ்ரேயா பெயர் எடுத்தார்.

'முன்பே வா என் அன்பே வா' பாடலை முணுமுணுக்காத காதலர்கள் இல்லை. வெயில் படத்தில் இடம்பெற்ற 'உருகுதே மருகுதே' கேட்டு உருகிமருகாதவர்கள் இல்லை. 'நினைத்து நினைத்துப் பார்த்தால்' கேட்கும்போது ஒரு மென்சோகம் நிழலாக அருகில் வந்தமர்கிறது. 'மன்னிப்பாயா' கேட்கும்போது ஊடல் கொண்ட காதல் இணையிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடத் தோன்றுகிறது. 'எளங்காத்து வீசுதே', 'உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல', 'சஹாயனே', 'சொல்லிட்டாளே அவ காதல' என ஸ்ரேயா கோஷல் தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்ட பாடல்கள் ஏராளம். திருமணத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி இருந்தாலும், ஒரு பாடலை வருடம் முழுக்க பாடவைத்து விடுகிறார் ஸ்ரேயா. அவரை அடிக்கடி தமிழுக்கு அழைத்து வரும் டி.இமானுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

"தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடும்போது உச்சகட்ட மகிழ்ச்சியடைகிறேன். இசை அங்குதான் வாழ்கிறது"  என ஸ்ரேயா கோஷல் காரணமில்லாமல் சொல்லவில்லை. "When in Rome, do as the Romans do" - "ரோமில் இருக்கும்போது ரோம் குடிமகனாக இரு" என்ற பழமொழிக்கு மிகச்சரியான பொருத்தம் ஸ்ரேயா கோஷல். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியைத் தாய்மொழிபோல் உச்சரிப்புப் பிழையின்றி பாடும் திறமை ஸ்ரேயாவுக்கு உண்டு. தமிழ் மொழியின் சிறப்பு  'ழ'-கரம். பிற மொழிகளில் இல்லாத அந்த எழுத்தின் உச்சரிப்பை கற்றுக்கொண்டு மிக நுட்பமான இந்த மொழியில் பாடுவதென்பது அத்தனை எளிய காரியமில்லை. ஆனால், ஸ்ரேயா கோஷல் அதைச் சாதித்துக் காட்டினார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற உச்சங்கள் என்றாலும் சரி, யூத்களின் ஃபேவரிட்டான அனிருத் என்றாலும் சரி, அனைவர் இசையிலும் தனித்துவமான பாடல்களைத் தந்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல். கேரள இசையுலகில் மலையாளிகள் அல்லாதவர்கள் அவ்வளவு எளிதில் நிலைத்து நிற்கமுடியாது. உச்சரிப்பில் கொஞ்சம் பிசகினாலும் விமர்சனங்கள் பறக்கும். அங்கே மலையாளிகள் அல்லாதவர் கொண்டாடப்படுவது அதிசயம். ஸ்ரேயா அப்படியான அதிசயம். அங்கும் தனக்கென ஒரு தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டார். "ஸ்ரேயா கோஷல் பாடாத இந்திய மொழியொன்று இனி தான் பிறக்க வேண்டும்" என அவர் ரசிகர்கள் சொல்வதொன்றும் மிகையல்ல!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன்-26-ம் தேதி "ஸ்ரேயா கோஷல் டே" எனக் கொண்டாடப்படுகிறது. அவரது இனிமையான குரலுக்கு மெலடி பாடல்கள் மட்டும்தான் பொருந்தும் என்ற விமர்சனத்தை, 'அக்னீபத்' படத்தில் இடம்பெற்ற 'சிக்னி சமேலி', ராம் லீலா படத்தில் இடம்பெற்ற 'நகாடே சங்' பாடல்கள் மூலம் தகர்த்தெறிந்தார். இசையுலகில் ஸ்ரேயா தொடாத உச்சமில்லை, பாடாமல் விட்ட ஸ்டைல் இல்லை. முன்னணி இசையமைப்பாளர் ராஜா, ரஹ்மான் துவங்கி முதல் பட இசையமைப்பாளர் அஜீஷ் வரை பாரபட்சம் பார்க்காமல் தன் குரலால் பாடலை அழகுபடுத்திக் கொடுத்தார். இந்துஸ்தானி, கஸல், பஜன், பாப் ஃபோல்க் என அத்தனை இசை வடிவங்களிலும் தனக்கென முத்திரையைப் பதித்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

பாடலின் எந்த இடத்தில் உணர்ச்சியைக் கூட்டி குறைக்க வேண்டும் என ஸ்ரேயா ஒருமுறை, இசைஞானி இளையராஜாவிடம் கேட்டாராம். அதற்கு இசைஞானி, 'பாடலின் போக்கில் நீ பாடு. எங்கு எப்படி உணர்ச்சியைக் கூட்டவேண்டும் என்பதை நினைத்துக்கொண்டே இருந்தால் உன் இன்னொசன்ஸ் போய்விடும். உன் இன்னொசன்ஸ் தான் உன்னுடைய சிறப்பே!' எனச் சொன்னாராம். 34 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஸ்ரேயாவிடம் இன்னும் அந்த இன்னொசன்ஸ் அப்படியேதான் இருக்கிறது (ராஜா சாருக்கு நன்றி!).

மொழிகளைத் தாண்டி ஸ்ரேயா பாடும் எல்லாமும் எல்லோருக்கும் பிடிக்கும் போது, தமிழில் நிறைய பாடுங்கள் என அவரைத் தொந்தரவு செய்து முடிக்க விருப்பம் இல்லை. நீங்கள் பாடுங்கள் ஸ்ரேயா... அதுவே போதும் எங்களுக்கு. இந்த பாடும் தேவதைக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும், அவர் பாடியதில் உங்களுக்குப் பிடித்த பாடல்களையும் கமெண்டில் பதியலாமே ஃப்ரெண்ட்ஸ்!

- கருப்பு