Published:Updated:

தினம் 2,000 க்ளிக் முதல் ஷங்கரின் ஜாலி கலாட்டா வரை..! 2.0 ஸ்பாட் ஆச்சர்யங்கள் #VikatanExclusive

தினம் 2,000 க்ளிக் முதல் ஷங்கரின் ஜாலி கலாட்டா வரை..! 2.0 ஸ்பாட் ஆச்சர்யங்கள் #VikatanExclusive
தினம் 2,000 க்ளிக் முதல் ஷங்கரின் ஜாலி கலாட்டா வரை..! 2.0 ஸ்பாட் ஆச்சர்யங்கள் #VikatanExclusive

‘ ‘2.0’ படத்தின் முக்கிய காட்சிகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கவேண்டியுள்ளது’ என இயக்குநர் ஷங்கர் ஒரு ட்விட்டை தட்டி விட, பற்றிக் கொண்டது எதிர்பார்ப்பு. படத்தை பற்றின அப்பேட்களை தெரிந்து கொள்ள ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவை தொடர்பு கொண்டோம். 

‘2.0’ படத்தில் பணியாற்றிய அனுபவம்..?

“ ‘சிவாஜி’ படத்தில் இருந்துதான் நான் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்கிட்ட உதவியாளராக சேர்ந்தேன். அந்த படத்திற்கு பிறகு மாஸ்டரா நான் ஷங்கர் சார் படத்துல ஒர்க் பண்ணப்போறேன்னு நினைக்கும் போதே பெருமையாக இருந்தது. அதுவும் மிகப்பெரிய படம், மிகப்பெரிய ஸ்டார். ரொம்பவே பதற்றமாக இருந்துச்சு. ஆனால், நான் நினைச்சதை விட ஷூட்டிங் ஸ்பாட் வேற மாதிரி இருந்தது. எப்போதுமே செம ஜாலியா கலாட்டாவா இருக்குற டைரக்டர், என்னோட உதவியாளர்களுக்கும் மரியாதை கொடுக்கிற சூப்பர் ஸ்டார்னு படப்பிடிப்பில் நடந்த அனைத்துமே ஆச்சர்யம் தான். 

ஷங்கர் சார் படத்துல எவ்வளவு பெரிய கருத்தெல்லாம் சொல்றாரு, ரொம்ப பிரமாண்டமா படம் எடுக்குறார். ஆனால், ஸ்பாட்டில் எப்போதும் ஜாலியாக தான் இருப்பார். அவரோட இருக்கும் போது வயிறு வலிக்க, வலிக்க சிரிச்சிருக்கேன். அந்த மாதிரி தான் அவர் தினமும் இருப்பார். நான் ஒரு நாள் அவர்கிட்ட, ‘எப்படி சார் இவ்வளவு ஜாலியா இருக்கீங்க’ன்னு கேட்டேன். அதுக்கு, ‘ஜாலியா இருந்தா தான் கிரியேட்டிவ் வளரும்’னு சொன்னார். ஆனால், ஷூட்டுக்கு முன்னாடியே இன்னைக்கு என்ன சீன் எடுக்கணும், எப்படி எடுக்கணும்னு எல்லாத்தையும் பக்காவா நோட் பண்ணி வச்சிருப்பார். அதை கரெக்ட்டா எடுத்திடுவார். அவர் அப்படி கரெக்ட்டா வச்சிருக்கனால நமக்கும் ஒர்க் பண்ண ரொம்ப ஈசியா இருக்கும். அதே மாதிரி படத்துல எந்தெந்த கேரக்டர் எப்படி எப்படி நடிக்கணும்னு அவங்ககிட்ட நடிச்சிக்காட்டுவார். அந்தளவுக்கு நடிப்புலையும் பட்டைய கிளப்பிடுவார். 

‘2.0’ ஷூட்டிங் முதல் நாள் அன்னைக்கு, ‘சிவாஜி’ படத்துல நான் ஒர்க் பண்ணுனதை ரஜினி சார்கிட்ட சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கலாம்னு போனேன். ஆனால், அவரே என்கிட்ட ‘நீங்க தான சிவாஜில பீட்டர் ஹெய்ன்கூட ஒர்க் பண்ணுனீங்க’னு கேட்குறார். அந்தளவுக்கு யாரையும் மறக்காம எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார் ரஜினி. பெரிய நடிகரோட ஒர்க் பண்றோம்கிற எண்ணமே நமக்கு வராது. அந்தளவுக்கு ஃப்ரெண்லியாகவும் பழகுவார். 

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரசிகர்கள் வந்தாங்கன்னா சில நடிகர்கள் அவங்ககிட்ட பேசமாட்டாங்க. ஏன்னா, ஷூட்டிங் பாதிக்கும், உடம்பு சோர்வா இருக்கும்னு பல காரணங்கள் இருக்கும். ஆனால், ரஜினி சாரை பார்க்க தினமும் 2000 ரசிகர்களுக்கு மேல் வருவாங்க. அவங்ககிட்ட பேசி, போட்டோ எடுத்துட்டு தான் அனுப்புவார். பெரிய ஆள், சின்ன ஆள்னு பார்க்காம எல்லா ரசிகர்கள்கிட்டேயும் ஒரே மாதிரி நடந்துக்குவார். அதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. ஒரு ஊர்ல ஷூட்டிங் முடிச்சிட்டு கிளம்பும் போது அந்த ஊர்ல இருந்த எல்லார்கிட்டையும் வணக்கம் சொல்லிட்டு தான் கிளம்புனார். 

ரஜினி சார் நிறைய ஸ்டன்ட் மாஸ்டர்கிட்ட ஒர்க் பண்ணியிருப்பார். நானெல்லாம் அவர் முன்னாடி சின்ன பையன். ஆனால், ஸ்டன்ட் பண்ணும் போது நாம என்ன சொல்றோமோ அதை அப்படியே பண்ணுவார். அதில் எந்த மாற்றமும் பண்ண மாட்டார். ஒரு சீன் முடிஞ்சுட்டா, நல்லா வந்திருக்கா மாஸ்டர், இல்ல இன்னொரு டைம் பண்ணலாமானு குழந்தை மாதிரி கேட்பார். ஷங்கர் சார் கட் சொல்ற வரை நடிச்சிட்டு தான் இருப்பார். அவ்வளவு ஈடுபாடோட ஒர்க் பண்ணினார். எனக்கு மட்டும் இல்ல என் உதவியாளர்களுக்கும் மரியாதை கொடுத்து, அவங்களோட ஸ்டன்ட் ப்ராக்டிஸ் பண்ணுவார்.” 

‘குற்றம்23’ படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பெருசா பேசப்படுது, அதைப் பற்றி சொல்லுங்க..?

“ ‘என்னை அறிந்தால்’ படத்துலையும் ஒரு கன்னடப் படத்துலையும் அருண் விஜய்யோடு ஒர்க் பண்ணுனேன். அந்த படங்களில் சண்டைக்காட்சிகளுக்கு அருண் விஜய் அதிகம் மெனக்கெட்டார். அவருக்கு சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் எடுக்குறது ரொம்ப பிடிக்கும். அதுக்கான தீனியாக தான் ‘குற்றம்23’ படம் அமைஞ்சது. அருண் விஜய்யும், அரவிந்த் ஆகாஷும் ஒரு ரூம்குள்ள சண்டை போடும் காட்சியில் இரண்டு பேருக்கும் பயங்கரமா அடிபட்டது. அதையும் மீறி தான் அவங்க சிறப்பா பண்ணியிருந்தாங்க. ‘குற்றம்23’ படத்தில் சண்டை காட்சிகள் நல்லா வந்ததுக்கு காரணம் அதில் நடிச்ச நடிகர்களால் தான்.”

‘பவர் பாண்டி’ படத்துல ராஜ்கிரணுக்கு ஸ்டன்ட் கோரியோ பண்ணியிருக்கீங்க. அதைப் பற்றி சொல்லுங்க..?

“ ராஜ்கிரண் சாரைப் பற்றி சொல்றதுக்கு முன்னால தனுஷைப் பற்றி சொல்லணும்னு ஆசைப்படுறேன். ‘யாரடி நீ மோகினி’ படத்தில் இருந்து தனுஷோட  ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன். ஒரு நடிகரா எனக்கு அறிமுகமானார் தனுஷ். அப்பறம் பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் இப்போ இயக்குநர்னு பல பரிணாமங்கள் எடுத்துட்டார். அதைப் பார்க்கும் போதுலாம் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். எப்படி எல்லாத்துறையிலையும் சிறப்பாக இருக்கார்னு. 

‘பவர் பாண்டி’ படத்துலையும் இயக்குநராகவும் மிரட்டியிருக்கார். ஒரு வயதான கேரக்டருக்கு கரெக்ட்டான கதை. அவருக்கான ஆக்ஷன் காட்சிகளையும் அவ்வளவு ரியலா வச்சிருக்கார். அந்த சண்டைக்காட்சிகளைப் பற்றி நான் சொன்னா நல்லா இருக்காது. நீங்கள் படத்தில் பார்க்கும் போது புரியும். ராஜ்கிரண் சாரோட எனர்ஜி இன்னும் அப்படியே தான் இருக்கு. பழைய படங்களில் எப்படி சண்டைப் போட்டாரோ அதை மாதிரி தான் இந்த படத்திலும் இருப்பார். 

மா.பாண்டியராஜன்