Published:Updated:

“சினிமா எடுக்க அடிப்படைத் தேவை இதுதான்!” - வெற்றி மாறனின் ரகசியம்

நா.சிபிச்சக்கரவர்த்தி
“சினிமா எடுக்க அடிப்படைத் தேவை இதுதான்!” - வெற்றி மாறனின் ரகசியம்
“சினிமா எடுக்க அடிப்படைத் தேவை இதுதான்!” - வெற்றி மாறனின் ரகசியம்

'வாசகம் பிலிம் ஸ்கூல்' என்ற சினிமா பயிற்சிப் பள்ளி ஞாயிறன்று சாலிகிராமத்தில் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு இயக்குநர் அகத்தியன், இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன் என பலரும் கலந்துகொண்டனர். குத்துவிளக்கு ஏற்றி இந்த பயிற்சிப் பள்ளியை தொடங்கி வைத்த வெற்றிமாறன், தன் குரு பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"கிரியேட்டிவ் ஆர்ட்டை கற்றுத் தருவது ரொம்ப கஷ்டமான விஷயம். இதுக்கு இலக்கண வரையறை ரொம்பக் குறைவு. இதை வெறும் தியரிக்குள்ள அடக்கிவிட முடியாது. என்ன செய்யணும் என்பதை வேணும்னா கற்றுக்கொள்ளலாம். சில மாஸ்டர்ஸ் நம்ம வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுடுவாங்க. பாலுமகேந்திரா சார் மாதிரி. நீங்க பாலுமகேந்திரா சார் கூட ஒரு வருஷம் இருந்தீங்கன்னா உங்க வாழ்க்கையை மாத்திடுவார். அதுவே அஞ்சு வருஷம் இருந்தீங்கன்னா... உங்களை அவராகவே மாத்திடுவார். எண்ணங்கள், சிந்தனை, நடை, உடைனு எல்லாமே... (தன் உடையை காட்டி) இது கூட அவர்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டதுதான். இந்த மாதிரி நிறைய விஷயங்களை அவர் கொடுத்துட்டே இருப்பார். அவருடைய தாக்கத்துல இருந்து யாரும் மீளவே முடியாது. அவருடைய நிழலுக்கு கீழே தான் இன்னமும் நாங்க இருப்பது மாதிரி இருக்கும். அந்த மாதிரி ஒருத்தர்கிட்ட இருந்து பிலிம் கத்துக்கிட்டது பாக்கியம். நான் பாலுமகேந்திரா சார்கிட்ட அடிக்கடி சண்டை போடுவேன். அப்படி சண்டை போட்டு முதல் முறை வெளியே வந்து ஒரு இயக்குநர்கிட்ட உதவியாளராக சேரப் போனேன். அந்த இயக்குநர் நீங்க தான் சார்" என அவர் அருகில் இருந்த இயக்குநர் அகத்தியனைக் காண்பித்தார்.

அகத்தியன் அதற்கு பதில் மரியாதையாக எழுந்து வெற்றிமாறனுக்கு 'வணக்கம்' வைத்து அமர்ந்தார். தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், "நான் உங்ககிட்ட ரெஸ்யூம் எல்லாம் கொடுத்து பேசினேன். நீங்க பாலுமகேந்திரா நல்ல டைரக்டர் தான? ஏன் அவர்கிட்ட இருந்து வந்தீங்கனு கேட்டீங்க. நான், அவர் டெலிவிஷன்ல வொர்க் பண்ணிட்டு இருக்கார். எனக்கு பிலிம்ல வொர்க் பண்ணணும்னு ஆசை. அதுதான் உங்ககிட்ட வந்தேன்னு சொன்னேன். அப்ப 'காதல் கவிதை' படம் ப்ரீ புரடெக்‌ஷன்ல இருந்தது. நான் சொல்லுறேன்னு சொன்னீங்க சார்.  

அடுத்து இன்னைக்கு எல்லார்கிட்டயும் கேமரா இருக்கு. எல்லாருக்குமே  How to make filmsனு தெரியும். ஆனா, What to make films என்பதுதான் இங்க பெரிய கேள்வியே. எல்லாமே இன்னைக்குப் படம்தான். இந்த ரூமுக்குள்ள 100 பேர் இருக்காங்கன்னா இதை வைச்சு கூடப் படம் எடுக்கலாம். ஆனா, எதைப் படம் எடுக்கணும்? எதுக்காகப் படம் எடுக்கணும் என்பதுதான் முக்கியம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொடுக்கக் கூடிய அடிப்படைப் பயிற்சிகள் தான் சினிமாவுக்கு தேவைனு நினைக்கறேன். டெக்னிக் மட்டும் திரைப்படமாகாது. கன்டென்ட் தான் திரைப்படமாகும். அதுதான் அடிப்படை! 

என் மாமா பொண்ணு இன்னைக்கு என்னை பார்க்க வந்தாங்க. 'என்னம்மா பண்ணப்போறேன்னு கேட்டேன்?",  'I dont know.. . i want to do this'னு ஆரம்பிச்சாங்க. எல்லாக் கேள்விகளுக்குமே, 'I dont know'  தான் ஆரம்பிக்கறாங்க. இன்னைக்கு இருக்கற யங்ஸ்டர்ஸ் பெரிய குழப்பத்துல இருக்காங்க. ஆனா, எல்லாமே தெரிஞ்ச மாதிரி தான் ஃபீல் பண்ணுறாங்க. அதுனால ஒரு குரு குலத் தன்மையில் ஒரு பாடத் திட்டம் இப்ப அவசியம்தான்னு தோணுது. 

எங்களுக்கு சினிமா கத்துக்கொடுத்த குரு... அப்படிப்பட்ட ஒரு குரு. அவர்கிட்ட நாம சரண்டர் ஆனா தான் எதையுமே கத்துக்கவே முடியும். அவர்கிட்ட சரண்டர் ஆகி தான் எல்லாருமே இந்த இடத்துக்கு வந்திருக்கோம். அவர்கிட்ட, 'உங்க அசிஸ்டென்ட் எல்லாம் எப்படி இவ்வளவு நல்லாப் படம் பண்ணுறாங்கனு கேட்டால், அவர் சொல்லும் பதில், "என் நிலத்தில் விழுந்த வித்துக்கள் எல்லாம் வீரியமான வித்துக்கள்'னு சொல்வார். எங்களை உருவாக்கிய கிரெடிட்ஸைக் கூட ஒருநாளும் அவர் எடுத்துக்கிட்டது கிடையாது. அவருடைய அசிஸ்டென்ட் எடுத்த ஒவ்வொருத்தருடைய படத்தையும்  ஒரு பிலிம் ஸ்டூடென்ட்  மாதிரிதான் பார்ப்பார். நம்ம பையன் எடுத்து இருக்கான்னு குறைச்சு மதிப்பிடவும் மாட்டார். அதே சமயத்துல தூக்கிப் பிடிக்கவும் மாட்டார். ஒரு சமநிலையில் இருக்கக் கூடிய பெரிய ஆசிரியர் பாலுமகேந்திரா சார். அடுத்து, தாய் மொழியில்தான் இந்த உலகத்தைப் புரிஞ்சுக்கவும், தெரிஞ்சுக்கவும், அறிஞ்சுக்கவும் முடியும். அப்படி சினிமாவைத் தாய் மொழியில் கத்துக்கிறது தான் தரமானதா இருக்கும்" என நம்பிக்கையாக முடித்தார் வெற்றி மாறன்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள் : பா.சரவணகுமார்