Published:Updated:

பானுமதி முதல் ஸ்ருதி ஹாசன் வரை.. பெண் இசையமைப்பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்!

பானுமதி முதல் ஸ்ருதி ஹாசன் வரை.. பெண் இசையமைப்பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்!
பானுமதி முதல் ஸ்ருதி ஹாசன் வரை.. பெண் இசையமைப்பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்!

மொழிகள் கடந்து எல்லோரையும் ரசிக்க வைப்பது இசை. ஒருவர் இசை உலகில் சாதிப்பதற்கு, தன் வாழ்வின் பெரும் பகுதியாக இசையை உணரவேண்டும். அப்படி இசைத்துறையில் சாதித்த பெண்கள் ஏராளம். ஆனால் தமிழ் சினிமாவில் தடம் பதித்த பெண் இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை சொற்பமே. ஆனாலும் தங்கள் திறமையால் அற்புதமான மெட்டுகளை உருவாக்கி, பலராலும் விரும்பி, ரசிக்கப்படும் பாடல்களைத் தருவதில் வியக்க வைக்கிறார்கள். பெண் இசையமைப்பாளர்களின் வருகை முக்கியம். ஏனெனில், திரைப்படத்தில், ஒரு பெண் காதல் வயப்பட்ட காட்சிக்கு பாடல் தேவைப்படுகிறது என்றுகொள்வோமானால், அந்தப் பாடல் உருவாக்கத்தில் இசையமைப்பாளர், பாடல் எழுதுபவர் என இரண்டு முக்கியமானவர்கள் ஆண்களாவே இருப்பர். அப்போது ஒரு பெண் மனநிலை நூறு சதவிகிதம் வரும் என சொல்லிவிட முடியாது. ஆனால், அதே இடத்தில் அந்த இருவரும் பெண்களாக இருக்கும்பட்சத்தில் கதையில் வரும் பெண் பாத்திரத்தின் முழு உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக பாடல் உருவாகும் என நம்பலாம். அல்லவா..

தமிழ் சினிமாவில் தன் இசைத் திறமையால் அசத்திய சிலரின் பாடல்களைக் காணவும் கேட்கவும் தயாரா?

பானுமதி:

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமானவராக கொண்டாடப்படுபவர். நடிப்பதோடு, திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது, இசையமைப்பது என பன்முக ஆளுமை நிறைந்தவர் பானுமதி. 1975-ம் ஆண்டு பானுமதி நடித்து, இசையமைத்து இயக்கியப் படம் இப்படியும் ஒரு பெண். அதில் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுக்கு அறிவுரைகளைத் தரும் இனிமையான பாடல்.

பவதாரிணி:

இசைஞானி இளையராவின் இசை வாரிசு பவதாரிணி. மிக இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். 'பாரதி' படத்தில் இவர் பாடிய 'மயில்போல..' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர மை ஃப்ரெண்ட்' படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'வெள்ளச்சி' எனும் படத்தில் 'பொய்யா போச்சே என் காதல்' எனும் பாடல் பவதாரிணி இசையில் அவரின் சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பார்.

ஏ.ஆர்.ரெஹானா:

ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி இவர். சிவாஜி, கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். பாடகர் க்ருஷ் நாயகனாக நடித்த 'புரியாத ஆனந்தம் புதிதான ஆரம்பம்' படத்துக்கு ரெஹனாதான் இசை. ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மற்றும் அமீனா இணைந்து பாடிய பாடல் இது.

எஸ்.ஜெ.ஜனனி:

இன்னும் திரைக்கும் வராத, 'பிரபா' எனும் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஜெ.ஜனனி. பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா திரைப்படத்தில் கடைசியாக பாடிய 'பூவே பேசும் பூவே' பாடலுக்கு இசையமைத்தவர். பாடல் வரிகள் ஶ்ரீதேவி, இயக்கம் நந்தன்.

ஶ்ரீவித்யா கலை:

புதுமுகங்கள் நடிக்கும் 'என்னை பிடிச்சிருக்கா' படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீவித்யா கலை. இசையோடு பாடல்களை எழுதவும் செய்கிறார். அவரின் இசையில் உருவான அழகான பாடல்..

ஸ்ருதி ஹாசன்:

நடிகர் கமல்ஹாசனின் மகள். அவரைப் போலவே நடிப்பு, பாடல் ஆகியவற்றிலும் ஆர்வத்துடன் இயங்கி வருபவர். கூடுதலாக, 'உன்னைப் போல ஒருவன்' படத்தின் இசையமைப்பாளரும்கூட. அந்தப் படத்தினைப் பிரபலப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட 'வானம் இல்லை' என்ற இந்தப் பாடல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஸ்ருதிக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவித்தன.

- வி.எஸ்.சரவணன்