Published:Updated:

அலமாரியை மையமாக வைத்து ஒரு படமா! வந்தா மிஸ் பண்ணிடாதீங்க! #RegionalMovies

பா.ஜான்ஸன்
அலமாரியை மையமாக வைத்து ஒரு படமா! வந்தா மிஸ் பண்ணிடாதீங்க!  #RegionalMovies
அலமாரியை மையமாக வைத்து ஒரு படமா! வந்தா மிஸ் பண்ணிடாதீங்க! #RegionalMovies

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் வேற்று மொழிப் படங்களில் பல நல்ல படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. சென்ற வாரம் வெளியான 'அங்கமலே டைரீஸ்' எதிர்பார்த்தது போலவே பலத்த வரவேற்புகளைப் பெற்றிருக்கிறது. இனியும் தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் பொழுதுபோக்குத் திரைப்படங்கள், சீரியஸ் படங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து கொடுக்க முயல்கிறேன். இந்த வாரம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் படங்கள் கீழே.

அலமாரா :

நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான 'ஓம் சாந்தி ஒசானா' படத்தின் கதாசிரியர் மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியிருக்கும் படம் ’அலமாரா’. ‘ஆடு’, ’ஆன் மரியா களிப்பிலாணு’ என இரண்டு வித்தியாச ரூட் பிடித்துப் படம் இயக்கியவர், இந்த முறையும் வித்தியாசம் தான் காட்டியிருக்கிறார். ஒரு அலமாரியைச் சுற்றிப் பின்னப்பட்ட, புதுமணம் முடித்த தம்பதியின் கதை. ஒரு பொருளை மையப்படுத்தி மலையாளத்தில் இதற்கு முன் 'மங்க்கி பென்' என்ற படம் வந்திருந்தது. படத்தில் அந்த பேனாவுக்கு மிக முக்கியமான ரோல். அது போல இதில் அலமாரிக்கு ஒரு முக்கியமான பாத்திரம் என எதிர்பார்க்கலாம். படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

அனார்கலி ஆஃப் ஆர்ஹ்:

ஸ்வரா பாஸ்கருக்கு பாலிவுட்டில் செம்ம ரோல் அமையவில்லையோ என்கிற கவலை பலருக்கும் உண்டு. செவன் அப் விளம்பரத்தில் முன்பு பார்த்திருக்கலாம், அதன் பின் தனுஷ் நடித்த இந்திப் படமான ராஞ்னா படத்தில் நடித்திருந்தார். முழுநீள கதாபாத்திரமாக 'நில் பேட்டி சன்னாட்டா' படத்தில் கவனிக்கப்பட்டார். அதை எல்லாம் விட இந்தப் படத்தில் வேறு லெவலுக்கு போகும் வாய்ப்பு. ஏறக்குறைய ‘டர்டி பிக்சர்’ வித்யாபாலனுக்கு கிடைத்த வாய்ப்பு ஸ்வராவுக்கு ‘அனார்கலி ஆஃப் அர்ஹ்’ படத்தில். கவர்ச்சி நடனம் ஆடும் அனார்கலியின் வளர்ச்சி, சந்திக்கும் பிரச்னை என நகரும் கதை. அவினாஷ் தாஸ் இயக்கியிருக்கும் இப்படம் இந்த மாதம் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.

டாக்டர் ரக்மாபாய்:

இது மராத்தி சினிமாவின் பயோபிக். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ருக்மாபாயின் கதை தான் அது. 1864ன் பம்பாய், அப்போது பிறந்த ருக்மாபாய் சிறு வயதிலேயே தந்தையை இழக்கிறார். அப்போது மறுமணம் பரவலாகி வரும் காலகட்டம். பல எதிர்ப்புகளையும் மீறி ருக்மாபாயின் தாய் ஜெயந்தி, மனைவியை இழந்த அர்ஜுனை மறுமணம் செய்து கொள்கிறார். அவர் ஒரு மருத்துவர். அர்ஜுன் ருக்மாபாயை தன் சொந்த மகள் போலவே வளர்க்கிறார், ருக்மாவுக்கு அர்ஜுனைப் போல ஒரு மருத்துவர் ஆக விருப்பம். அது பெண்கள் நான்காம் வகுப்புக்கு மேல் படித்தாலே அதைத் தடுக்கப் பார்க்கும் காலம். இந்த சூழலில் ருக்மா எப்படி மருத்துவர் ஆகிறார் என்கிற கதையை டாக்டர் ரக்மாபாய் என்கிற பெயரில் படமாக்கியிருக்கிறார் ஆனந்த் நாராயணன் மகாதேவன். ரக்மாபாயாகா தனிஷா சாட்டர்ஜி நடித்திருக்கிறார். சீக்கிரமே படம் வெளியாகிவிடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

வெங்கடபுரம்:

ராகுல் தெலுங்கு சினிமாக்களில், இதற்கு முன் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தவர். ‘வெங்கடபுரம்’ படத்தில் ஹீரோவாக ஒரு வாய்ப்பு, புதுமுக இயக்குநர் வேணு மடிகண்டி இயக்கியிருக்கும் வெங்கடபுரம் படத்தின் மூலம் அது அமைந்திருக்கிறது. வைசாக்கின் பீம்லி பீச் அருகே ஒரு பெண்ணின் பிணம் மூட்டையில் கட்டப்பட்டு கிடக்கிறது. அந்தக் கொலையை செய்தது யார் என போலீஸ் விசாரிக்க, கொலைகாரன் அந்தப் பெண்ணின் பாய் ஃப்ரெண்ட் என தெரிகிறது. விசாரணை தொடர்கிறது, என்ன நடந்தது என்பது தான் ப்ளாட். படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்து அதற்கென ஒரு எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.

- பா.ஜான்ஸன்