Published:Updated:

" 'ஹோப்' படத்துக்கு கிரெடிட்ஸ் கொடுக்காதது தவறுதான்!" - 'நிசப்தம்' இயக்குநர்

நா.சிபிச்சக்கரவர்த்தி
" 'ஹோப்' படத்துக்கு கிரெடிட்ஸ் கொடுக்காதது தவறுதான்!" - 'நிசப்தம்' இயக்குநர்
" 'ஹோப்' படத்துக்கு கிரெடிட்ஸ் கொடுக்காதது தவறுதான்!" - 'நிசப்தம்' இயக்குநர்

'நிசப்தம்' படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைப் பற்றிப் பேசிய அழுத்தமான திரைப்படம். ஒரு குடிகாரனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் குழந்தையின் மனநிலை என்ன; குழந்தையின் வலியைத் தீர்க்க முடியாமல் பெற்றோர்கள் படும் அவஸ்தை எத்தகையது; இந்த  வழக்கின் போக்கு  எப்படி என பெங்களூருவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது எனப் படம் தொடங்கும்போதே சொல்லி இருந்தார்கள். ஆனால், இது கொரியப் படமான  'ஹோப்' படத்தின் காப்பி என்பது பெரும் நெருடலாக இருந்தது.  'நிசப்தம்' பட இயக்குநர்  மைக்கேல் அருணிடம் இந்தக் கேள்வியில் இருந்தே பேட்டியைத் தொடங்கினேன். 

"நீங்கள் இயக்கிய 'நிசப்தம்' படம் கொரியன் படமான 'ஹோப்' படத்தோட காப்பியா இருக்கே?"

"நீங்க உட்பட, எல்லாரும் 'ஹோப்' படத்தை பார்த்து 'நிசப்தம்' படத்தை எடுத்துவிட்டதாகச் சொல்றீங்க. அதுக்கான பதிலை நான் சொல்லித்தான் ஆகணும். என் தங்கை கொரியாவுல இருந்தப்ப... இந்தப் படம் அங்கே வெளிவந்தது. என்னை இந்தப் படம் பார்க்கச் சொன்னவங்க,  'இந்த மாதிரி ஷோசியல் சப்ஜெக்ட்  படமா எடுங்களேன்'னு சொன்னாங்க. நானும் அந்த சமயத்துல சினிமா இயக்கும் முயற்சியில இருந்தேன். அப்போதான் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளிக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தான் ஒரு  கொடூரன். இந்தச்  செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஒரு இயக்குநராக நல்ல விஷயத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கணும் என்ற அக்கறை எனக்குள்ள இருந்துச்சு. அதுதான் எங்க தயாரிப்புலயே என் ப்ரெண்ட்ஸ்கிட்ட கடன் வாங்கி 'நிசப்தம்' படத்தை இயக்கினேன்." 

"ஆனா, சீன் பை சீன் 'ஹோப்' படத்தின் காப்பினு படம் பார்க்கும்போதே தெரியுதே.."

"ம்ம்ம்... இதைக் காப்பினு சொல்லிட முடியாது. இன்ஸ்பிரேஷன். நான் டிரெய்லர் ரிலீஸ் பண்ணும்போது யாரும் எதுவும் விமர்சனம் பண்ணலை. அப்போ யாரும் 'ஹோப்' படத்தின் தழுவல்னு கண்டுபிடிக்கலை. அப்பவே இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை ஆடியன்ஸ் எப்படி மிஸ் பண்ணாங்கனுதான் யோசிச்சேன். இப்போ 'நிசப்தம்' படம் மூலமா எல்லாருக்குமே 'ஹோப்' படம் ரீச் ஆகிடுச்சு. அது எனக்குச் சந்தோஷம்தான்."

"படம் ஆரம்பிக்கும் போதோ, முடியும்போதோ 'ஹோப்' படத்துக்கு முறையான கிரெடிட்ஸ் கொடுத்து இருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காதே?"

"ஆமாம். நாங்க கிரெடிட்ஸ் கொடுக்காதது தவறுதான். இந்தத் தவறு எனக்கான பெரிய பாடம். இனி இதுபோல நடக்காது."

"சரி, நடிகை அபிநயாவை  அந்த அம்மா கேரக்டருக்கு எப்படி பொருந்துவாங்கனு தோணுச்சு?" 

"அவங்க  பெங்களூருக்கு ஒரு படத்துல நடிக்க வந்திருந்தாங்க. அப்பவே நடிப்பை நேர்ல பார்த்தேன். செம ஆக்டர். இந்த ஸ்கிரிப்ட்டுக்கு இவங்கதான் சரியான சாய்ஸ்னு தோணுச்சு. அவங்க அப்பாகிட்ட கதையைச் சொன்னேன். அதை அவங்க அபிநயாகிட்ட சொன்னாங்க. அபிநயாவுக்கும் இந்தக் கதை பிடிச்சு இருந்துச்சு. அம்மாவா நடிக்க 'ஓகே' சொன்னாங்க. ஷூட்டிங் ஸ்பாட்லயும் நான் என்ன சீன்னு அவங்களுக்கு எழுதி கொடுத்துடுவேன். அதை அப்படியே உள் வாங்கிட்டு என்கிட்ட ஒருமுறை நடிச்சுக் காட்டுவாங்க. அதுல ஏதாவது திருத்தம் இருந்தா சொல்வேன். அதையும் சரி பண்ணிட்டு, டேக்ல பிரமாதப்படுத்திடுவாங்க. அதேமாதிரிதான் படத்தோட ஹீரோ அஜய்யும். அவர் என் நண்பர்தான். நான் வேற ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அப்போ அந்தக் கதைக்கான ஹீரோவை நாங்க ரெண்டு பேரும் ஆபிஸ் ஆபிஸாக போய்த் தேடிட்டு இருப்போம். என்னை எல்லாப் பக்கமும் கூட்டிட்டு போவது அஜய்தான். நான் இயக்குநர் ஆகணும்னு முயற்சியில இருந்தப்போ... அவர் ஹீரோ ஆகணும் முயற்சி செஞ்சுட்டு இருந்தார். இந்த 'நிசப்தம்' கதை ரெடியானதும், அஜய்தான் ஹீரோனு முடிவு பண்ணிட்டேன்."

"எப்படி பேபி சாதன்யாவை அவ்வளவு எதார்த்தமாக நடிக்க வைச்சீங்க?"

"அதுவும் ஒரு சுவாரஸ்யமான கதை. நான் இந்தப்  பொண்ணு கேரக்டருக்கு ஏகப்பட்ட பேரைத் தேடினேன். யாருமே செட்  ஆகலை. ஒரு பொண்ணுக்கு செட் ஆகும்னி தோணுச்சு. அவங்க அப்பாவுக்குப் போன் பண்ணி கதையைச் சொன்னேன். 'என் பொண்ணு இந்த மாதிரி கதையில நடிக்க வைக்க விருப்பம் இல்லை'னு சொல்லி வெச்சுட்டார். இனி யார்கிட்டேயும் கதையை போன்ல சொல்லக்கூடாது, நேர்லதான் சொல்லணும்னு நினைச்சுகிட்டேன். அப்போதான் சாதன்யா நடிச்ச 'பேபி' பட டிரெய்லரைப் பார்த்தேன். சாதன்யா இந்தக் கதைக்குப் பொருந்துவாங்கனு தோணுச்சு. உடனே அவங்க அப்பா, அம்மாவை நேர்ல சந்திச்சேன். கதை கேட்ட அவங்க அம்மா 'இதுல நம்ம பொண்ணை நடிக்க வைக்க வேண்டாம்'னுதான் முதல்ல சொன்னாங்க. ஆனா, அவங்க அப்பாதான் அவங்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவெச்சார். 'பெற்றோர்களுக்கு எல்லாம் விழிப்பு உணர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். அதுல எங்க பொண்ணு நடிப்பதில் எங்களுக்குச் சந்தோஷம்தான்'னு சொன்னார். நாங்க யாருமே சாதன்யாவுக்கு இந்தக் கதையைச் சொல்லலை. ரொம்ப துறுதுறுனு இருப்பா... எதைச் சொன்னாலும் உடனே புரிஞ்சுப்பா... நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும்தான், 'இப்படிப் பண்ணுங்க'னு சொல்லிக் கொடுப்போம். சாதன்யா ஷாட்ல நடிச்சுட்டு இருக்கும்போதும், நான் மைக்ல 'முகத்தை லெப்ட்ல வைச்சுக்கோங்க. கண்ல லேசா சோகத்தை கொண்டுவாங்க'னு சொல்வேன். அதை  அப்படியே பண்ணிடுவா... அந்த ஹாஸ்பிடல் ஷாட் எடுக்கும்போது அவங்க அம்மா, அப்பானு யாரையும் உள்ளே விடலை. நாங்க வர வேண்டாம்னு சொல்லிட்டோம். ஆனா, சாதன்யா அவங்க அம்மாகிட்ட, 'நீங்க கவலைப்படாம இருங்க. நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு வந்தா... சாதன்யா செம பிரிலியண்ட்." 

"படத்துக்கு கண்டிப்பா நிறைய பாராட்டு கிடைச்சிருக்கும். மறக்க முடியாத பாராட்டு எது?"

"நடிகை தன்ஷிகா படம் பார்த்துட்டு இடைவேளையில தேம்பித் தேம்பி அழுதாங்க. 'இந்தப் படத்தை பெண்கள் எல்லாரும் பார்க்கணும். பெண்கள் எல்லாரும் பாதுகாப்பா இருக்கணும்'னு  படம் முடிஞ்சதும் என்கிட்ட சொன்னாங்க. அவங்க அழுதது எனக்குக் கஷ்டமா இருந்தாலும், படத்தோட உணர்வுகள் ஒரு பொண்ணா அவங்களுக்குக் கனெக்ட் ஆனது சந்தோஷம். படம் ரிலீஸ் ஆனபிறகு, என் நம்பரைத் தேடிப் பிடிச்சு முகம் தெரியாத நிறைய பேர் பாராட்டினாங்க. அது எல்லாமே எனக்கு நெகிழ்ச்சியாவும் மகிழ்ச்சியாவும் இருந்துச்சு."

"இந்த படத்தோட தயாரிப்பாளரும் நீங்கள் என்பதால் கேட்கிறேன். படம் வணீக ரிதியாக வெற்றி பெற்றதா?"

"படம்  தயாரிக்கும்போது பணம் கொஞ்சம் கையைக் கடிச்சது. என் நண்பர்கள்கிட்ட தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் கடன் வாங்கித்தான் இந்தப் படத்தை எடுத்து முடிச்சேன். இப்ப தமிழ்நாட்டுல ரித்திகா, நந்தினி பல பெண் குழந்தைகளுக்கு நடந்த கொடூரம் விவரிக்க முடியாதது. இந்த சமயத்துல படம் ரிலீஸானா மக்கள் மத்தியில ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும்னு தோணுச்சு.  எங்க படம் கூட சில பெரிய படங்களும் வெளிவந்தது அதுனால, 'நிசப்தம்' படத்துக்கு சரியான ஓப்பனிங் கிடைக்கலை. மவுத் டாக்லதான் படம் கொஞ்சம் கொஞ்சமா பிக் அப் ஆச்சு. இதுவரைக்கும் படம் லாபத்தை எட்டலை. எல்லாருக்கும் ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதைதான் நான் 'நிசப்தம்' படத்தின் உண்மையான வெற்றியாகப் பார்க்கிறேன்."

- நா.சிபிச்சக்கரவர்த்தி