Published:Updated:

“இதான் தியேட்டர்ல படம் பார்க்கிறதில்லை!” ரசிகர்களின் கருத்து... தமிழ் சினிமாவினரின் கவனத்துக்கு! #VikatanSurvey முடிவுகள்

“இதான் தியேட்டர்ல படம் பார்க்கிறதில்லை!” ரசிகர்களின் கருத்து... தமிழ் சினிமாவினரின் கவனத்துக்கு! #VikatanSurvey முடிவுகள்
“இதான் தியேட்டர்ல படம் பார்க்கிறதில்லை!” ரசிகர்களின் கருத்து... தமிழ் சினிமாவினரின் கவனத்துக்கு! #VikatanSurvey முடிவுகள்

எந்தத் திரைப்படம் வெளிவந்தாலும் படக்குழுவினரின் வேண்டுகோள், ‘தியேட்டர் சென்று பாருங்கள்’ என்பதுதான். ஆனாலும் படம் வெளியானதுமே, சில இணைய தளங்களில் வெளியாகி பரபரப்புக் கூட்டுவதும், அதற்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது. 

தியேட்டரில் படம் பார்ப்பதில், ரசிகர்களுக்கு என்ன தயக்கம்? விகடன் இந்தக் கேள்வியை வாசகர்கள் முன் வைத்தது. மிகவும் அடிப்படையான ஐந்தே ஐந்து கேள்விகளை நிச்சயம் பதில் சொல்லும் வண்ணமும், ஆப்ஷனாக கடந்த வருடத்தில் திட்டமிட்டு திரையரங்குக்குச் சென்று பார்த்த படம் எது என்றும் #VikatanSurvey-யில் கேட்டிருந்தோம்.

சில சுவாரஸ்ய முடிவுகளோடு, பெரும்பாலான ரசிகர்களின் மனநிலையைப் பிரதிபலித்திருந்தது அந்த சர்வே.

முதல்கேள்வியாக ‘ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கத் தூண்டும் அம்சம் என்ன?’ என்ற கேள்விக்கு 69.5% பேர் ‘நல்ல கதையம்சத்துடன் நேர்த்தியாக எடுக்கப்படுகிற படம்’ என்பதைத் தேர்வு செய்திருந்தார்கள். ஆதர்ச நடிகர், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம், ஆதர்ச இயக்குநர் எல்லாம் முறையே அடுத்தடுத்து வந்தாலும், கதையம்சம் என்ற தேர்வுக்கு கிட்டத்தில் கூட நெருங்கவில்லை அவை.  

அடுத்ததாக ‘தியேட்டருக்குச் செல்லாமல் தவிர்க்கச் செய்யும் முதல் விஷயம்?’ என்று கேட்டிருந்தோம். நிறைய விஷயங்கள் ஒட்டுமொத்தக் காரணங்களாக இருப்பினும் முதல் காரணமாக எது இருக்கும் என்ற கேள்விக்கு, பெரும்பாலானோரின் பதில் ‘டிக்கெட்டை விட பல மடங்கு அதிகமான பார்க்கிங், ஸ்நாக்ஸ் கட்டணம்’ என்பது இருந்தது. 45.2% பேர் அதைத் தேர்வு செய்திருந்தனர். அடுத்ததாக 27.5% பேர் தியேட்டரின் தரத்துக்கு மீறிய கட்டணம் என்றும், 24.9% பேர் சுமாரான படத்துக்கெல்லாம் தியேட்டர் போக முடியாது பாஸ்’ என்றும் சொல்கின்றனர். டிக்கெட் கவுண்டர் கூட்டமும், பிளாக் டிக்கெட்டும் 2.3% பேரைப் பாதித்திருக்கிறது.

முன்றாவதாக, ‘தியேட்டரில் தான் பார்ப்பேன் என முடிவெடுப்பது எதை வைத்து?’ என்பது கேள்வி. 40.4% பேர் ‘விமர்சனங்களை வைத்து’ என்றிருக்கிறார்கள். அடுத்ததாக 29.9% பேர் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்திற்காகவும், 22.5% பேர் நடிக, நடிகையர், டெக்னீஷியன்ஸ்களுக்காகவும் தியேட்டருக்கு வரத் தயாராக இருக்கிறார்கள். நண்பர்களிடம் கேட்டு இந்த முடிவை எடுப்பவர்கள் 7.1% பேர்.

கடைசிக் கேள்வியாக சக ரசிகர்களிடம் நீங்கள் விரும்பாத விஷயம் என்ன என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்வியின் நோக்கமே, படக்குழு, தியேட்டர் நிர்வாகம் இவற்றைத் தாண்டி நாமும் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வைப்பதே.

அப்படிப்பார்க்கும்போது, 47% ரசிகர்கள், தியேட்டரில் பிறர் பேசிக்கொண்டிருப்பது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருப்பதாகக் கருதுகிறார்கள். 26.4% பேர், பிறர் செல்ஃபோன் நோண்டிக்கொண்டிருப்பதில் கடுப்பாகியிருக்கிறார்கள். 15.6% பேர்.. ச்சீ! போங்கள்! ‘ஹி..ஹி.. இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா?’

11.1% பேருக்கு பிறர் தாமதமாக வருவது எரிச்சலான விஷயமாக இருக்கிறது. யோசிக்கணும்பா!

கடந்த 1 வருடத்தில்  தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு, தியேட்டரில் பார்த்த படம் எது என்று கேட்டிருந்தோம்.  அந்த 1 வருடத்தில் என்பதையெல்லாம் விடுத்து, பலரும் பல படங்களைக் குறிப்பிட்டிருந்தனர். வேதாளம், ரெமோ, ஜோக்கர், காக்காமுட்டை, டங்கல், துருவங்கள் 16, மாநகரம், அதே கண்கள், சி3, பைரவா, தெறி என்று கலந்து கட்டி வந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருந்த படம்.. பாகுபலி.

பெரும்பாலான ரசிகர்கள் இந்த இடத்தில் குறிப்பிட்டிருந்த படம்.. கபாலி!

சில சுவாரஸ்ய கமெண்ட்ஸ்:

தியேட்டர் குறித்த மக்கள் மனசு சர்வேயில் பல சுவாரஸ்ய கமெண்ட்ஸ் ஆலோசனைகள் வந்திருந்தன. அவற்றிலும் பெரும்பாலும் பார்க்கிங், ஸ்நாக்ஸ் கட்டணத்தில் எரிச்சல் அடைந்திருந்தனர். ஒரு சில கமெண்ட்ஸ் இங்கே: 

$ சண்டே சண்டே ஒரு ஹாலிவுட் படம் நிச்சயம் பார்த்துடுவேன். தமிழ்ப்படமெல்லாம் ஒன்லி ஆன்லைன். நல்லா இருந்தா ஒரு மாசம் வெய்ட் பண்ணி HDல பார்ப்பேன்!  

$ டிக்கெட் விலை 10 , 20 , 30 மற்றும் 40 என்று நான்கு பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும். குடும்பத்தோடு தியேட்டர்களில் கூட்டம் குவியும்.பார்க்கிங் விலை இரு சக்கர வாகனம் என்றால் 10 , கார் என்றால் 20 மட்டுமே இருக்க வேண்டும்.ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும் பொழுது கூடுதலாய் கட்டணம் எடுக்கக் கூடாது. பாபகார்ன், சமோசா, மற்றும் எந்த தின்பண்டமும் வெளியே விற்கும் அதே விலையில்தான் விற்க வேண்டும். வெளியே ஒன்றும் நஷ்டத்திற்கு விற்கவில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும். இதை எல்லாம் செய்தால் இருக்கும் தியேட்டர்களே பத்தாது என்ற அளவில் மக்கள் குடும்பத்தோடு குவிவார்கள்.

$ பள்ளி மாணவ மாணவிகளை யூனிபோர்மில் அனுமதிக்க கூடாது


போன முறை குடும்பத்தோடு தியேட்டர் சென்ற போது, ஏன் போனோம் என்று இருந்தது. எங்களுக்கு கொஞ்சம் முன்னால் இருந்த மூன்று பேர் நாகரிகம் இல்லாமல், படம் முழுதும் பேசிக் கொண்டே இருந்தனர். இது போதாது என்று, சிலர் கைபேசியில் தொணதொணவென்று பேசி கொண்டே இருந்தனர்.

முன்பெல்லாம் திரைப்படத்தில் வரும் பாடல்களைக் கேட்டு, காட்சி எப்படி இருக்கும் என்பதற்காக தியேட்டருக்குப் போனார்கள். இப்போது பாடல்களில் இரைச்சலைத் தவிர வேறேதும் இல்லை. ஒரே மாதிரி டான்ஸ். Google play store ல் பாடல் காட்சிகளைப் பதிவிறக்கம் செய்தால் போதும். மொபைலில் பார்த்து விடலாம்

********************************

இறுதியாக ஒன்று சொல்லலாம். தீர்ப்பெல்லாம் இல்லை. திரைத்துறையினர் இதைச் சிந்திக்கலாம்.

நான்காவது கேள்வியின் ரிசல்ட்  மூலம் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.  குற்ற உணர்ச்சியோடு பார்க்கும் 38.5% பேரை தரமான படங்கள் கொடுப்பதன்மூலமும், தியேட்டரில் பார்க்கிங், ஸ்நாக்ஸ் கட்டணங்களை முறைப்படுத்துவதன் மூலமும் தியேட்டருக்கு  வரவழைத்தால், 60.3% பேர் தியேட்டரில் பார்க்கும் ரகமாகத்தான் இருப்பார்கள்.      
 
நோட் பண்ணிக்கோங்க!