பாகுபலி 2 - டிரெய்லர்... 7 பாய்ண்ட்டுகளில் ஒரு மினி ப்ரிவ்யூ! #Baahubali2

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தக் கேள்வி. அதற்காகவே படத்தின் இரண்டாம் பாகத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது, இப்போது வெளிவந்திருக்கும் படத்தின் டிரெய்லர் அதற்கு ஓரளவு சமாதானம் தந்திருக்கிறது. கூடவே ஏப்ரல் 28-ம் தேதி படம் வெளியாகிறது என்கிற அறிவிப்பும் கொண்டாட்டத்தைத் துவங்கி வைத்திருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த பாகத்துக்கான மிகப் பெரிய ஓப்பனிங், முதல் பாகத்தில் க்ளைமாக்ஸிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

பாகுபலி

"முழுக்கதையும் நான் முதல் பாகத்தில் சொல்லவில்லை, எனவே மீதிக் கதையை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும்" என ராஜமௌலியும் சொல்லியிருந்தார். இந்த டிரெய்லரில் இருந்தே ஓரளவு கதையை கணித்திருக்க முடியும். இரண்டாம் பாகத்தில் நாம் என்ன பார்க்கப் போகிறோம், என்ன கதையாக இருக்கும் என்கிற மினி ப்ரிவ்யூ தான் இது.

1.நடந்தது என்ன?

Baahubali

முதல் பாகம் பாகுபலியை கட்டப்பா கொல்கிறார் என்கிற முடிச்சுடன் முடிந்திருக்கும். அதிலிருந்து தான் இரண்டாம் பாகம் துவங்கும் என்பது நாம் அறிந்ததுதான்.  மகிழ்மதியில் இருக்க வேண்டிய பாகுபலியின் மகன் ஏன் மறைத்து வைக்கப்படுகிறார்? ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற நினைக்கும் பல்வாள் தேவன், இளவரசன் சிவடுவைக் (மகேந்திர பாகுபலி) கொன்றுவிடுவார் என்கிற பயம் தான் காரணம் என்பதையும் அதில் காட்டியிருப்பார்கள்.  என்ன தந்திரம் செய்து மொத்தமாக அத்தனை பேரையும் அழித்து, பல்வாள் தேவன் அரசன் ஆனான் என்பதுதான் நாம்  தெரிந்து கொள்ள வேண்டியது.

2. மகாராணி தேவசேனா:

Anushka

அனுஷ்கா நடித்திருக்கும் தேவசேனா கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் தான் சொல்லப்பட இருக்கிறது. தேவசேனா ஏன் இப்படி சிறை வைக்கப்பட்டிருக்கிறார், என்ன நடந்தது என இவரது ரோலும் படத்தின் மேல் உள்ள ஆர்வத்துக்கு ஒரு காரணம். மகனின் வருகையை முதல் பாகத்திலேயே சொல்லிருந்தார். அவரை மகன் எப்படி விடுவிக்கிறார், அவர் மூலமாக பாகுபலி பற்றி இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்பதும் முக்கியமான விஷயம்.

3. பாகுபலி - தேவசேனா காதல்:

Prabhas

முதல் பாகத்தில் அவந்திகா - சிவுடுவின் காதல் போர்ஷன் மிகச் சின்னது. ஆனால், காதலை ஒரு ட்ரம்ப் கார்டாக வைத்து சிவுடுவை அருவிக்கு மேலே எடுத்து வந்திருப்பார் ராஜமௌலி. அதே காதல் தான் சிவுடுவை யார் என அறிந்து கொள்ளவும் அழைத்துச் செல்லும். அது போல இந்த பாகத்தில் பாகுபலி - தேவசேனா காதல் முக்கியமான திருப்பத்துக்கு காரணமாக அமையலாம்.

4. கட்டப்பாவின் துரோகம்:

Sathyaraj

ராஜவிசுவாசி கட்டப்பா மிகுந்த அன்பு வைத்திருக்கும் பாகுபலியைக் கொல்ல ஒரு பலமான காரணம் இருந்தே தீரும். அதற்குக் காரணமாக பல்வாள் தேவன் இருப்பான் என்பது உறுதியாக தெரிந்தாலும், அப்படி என்ன சொல்லி இந்த துரோகத்தை செய்ய வைத்திருப்பான் என்கிற சந்தேகம்தான் சுவாரஸ்யமே. படத்தின் டிரெய்லரிலேயே "நீர் என் அருகில் இருக்கும் வரைக்கும் என்னைக் கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா" என்கிற வசனம் வருகிறது. இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த ஒருவனைக் கொல்ல, பணமோ, பதவியோ ஒரு காரணமாக இருக்காது. வேறு என்ன என்பதை ஏப்ரல் 28ல் தெரிந்து கொள்ள முடியும்.

5. பழிக்குப் பழி:

S. S. Rajamouli

எப்படியும் கட்டப்பா மூலமாகவும், தேவசேனா மூலமாகவும், ‘நான்தான் மகேந்திர பாகுபலி’ என தெரிந்து கொள்வான் சிவுடு. பிறகு தன் தந்தை இறப்புக்கு காரணமாக இருந்த பல்வாள் தேவனை அழிக்க கிளம்புகிறான் என்பதாகத்தான் கதை தொடரும். தந்தை பாகுபலியாகவே மாறும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

6. பல்வாள் தேவன் VS மகேந்திர பாகுபலி:

Rana Daggubati

தம்பியை அழித்து ராஜ்ஜியத்தில் அமர்ந்த பல்வாள் தேவனுக்கு, தம்பி மகனையும் கொல்ல வேண்டிய சூழல் வரும். முதல் பாகத்திலேயே பல பிரமாண்ட போர்களக் காட்சிகளைப் பார்த்துவிட்டோம். அதைவிட அதிகமாக பல்வாள் தேவன், மகேந்திர பாகுபலி இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

7. பாகுபலி இறக்கவில்லையா?:

Tamannaah

பாகுபலியை கட்டப்பா கொன்ற அதே இடத்தில் இன்னொரு காட்சி ஒன்று நடப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டிருக்கிறது. கட்டப்பா மண்டியிட்டபடி இருக்க, அவருக்கு எதிரில் பாகுபலி அமர்ந்திருப்பதாக ஒரு காட்சி. அதே போர்க்களம். அது ஒருவேளை மகேந்திர பாகுபலியாக (மகன்) இருந்தால் பிரச்னை இல்லை. ஒருவேளை அமரேந்திர பாகுபலியாக (அப்பா) இருந்தால்? அமரேந்திரன் சாகவில்லை எனவும் “நீ என்னைக் குத்திவிட்டதாகச் சொல்” என்று கட்டப்பாவுக்கு சொல்வது போலவும் கற்பனை செய்தால்.. சுவாரஸ்யம் கூடுகிறது! 

மேலே உள்ள காட்சி, கட்டப்பா வாளால் குத்திய பின்பு நடந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், பின்னணியில் நெருப்பு எரிய அரசர் உடையில் ஒருவர் நடந்து வருவது போல ஒரு என்ட்ரி,   டிரெய்லரில் மிக வேகமாக வந்து செல்கிறது.  ஒருவேளை அது அமரேந்திர பாகுபலியாக இருந்தால், முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியைக் கொல்வது போல காட்சி வைத்து படத்தை முடித்த ராஜமௌலி, முன் பத்தியில் நாம் சொன்னது போன்ற ஒரு ட்விஸ்ட் வைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

-பா. ஜான்சன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!