Published:Updated:

‘அஞ்சு பேரு, ஒரு ரூம், லைவ் சவுண்ட்!’ - ‘ஷோ டைம்’ குறும்பட மேக்கிங்!

விகடன் விமர்சனக்குழு
‘அஞ்சு பேரு, ஒரு ரூம்,  லைவ் சவுண்ட்!’ - ‘ஷோ டைம்’ குறும்பட மேக்கிங்!
‘அஞ்சு பேரு, ஒரு ரூம், லைவ் சவுண்ட்!’ - ‘ஷோ டைம்’ குறும்பட மேக்கிங்!

''நமக்கு வேலை குடுக்குறவன் நம்மள கடவுளா பார்க்குறான், நம்மளால சாகப்போறவன் நம்மள சாத்தானா பார்க்குறான். லக்கிலி, கடவுளையும் சாத்தானையும்  பார்த்தது கிடையாது, ஆனா அது மேல ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கும்'' இப்படி ஷார்ப்பான வசனங்கள், ஸ்டைலிஷ் மேக்கிங், படம் முழுக்க லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் என வழக்கமான யூடியூப் குறும்படங்களில் இருந்து தனித்துத் தெரிகிறது 'ஷோ டைம்' குறும்படம். 'ஷோ டைம்' ஆர்ட்டிஸ்டுகளுடன் ஒரு ஜாலி மீட் அப்.

"எட்டு வருஷத்துக்கு முன்னால நான், அஷோக், மோகன், வினோத் எல்லோரும் அமெரிக்கன் காலேஜ்ல ஒரே செட். அப்படித்தான் எங்களுக்குள்ள அறிமுகம் ஆச்சு. அதுக்குப்பிறகு நான் ஆர்.ஜே ஆகிட்டேன். வினோத் சினிமாவுல உதவி ஒளிப்பதிவாளராகிட்டான். மோகன் டான்ஸ் கோச்சிங்னு அவங்க அவங்க பாதையில போயிட்டோம். திரும்பவும் இந்தக் குறும்படத்தோட டைரக்டர் நடேஷ் மூலமாதான் இந்தக் குறும்படத்துக்காக ஒண்ணா சேர்ந்தோம். நடேஷும் வினோத்தும் ஃப்ரெண்ட்ஸ். ஆறு மாசத்துக்கு சார்லி, ஜான், ராஃபி, பாபின்னு எங்களுக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் கூப்பிடும்போது படத்தோட கேரக்டர் பேரைச் சொல்லித்தான் கூப்பிட்டுக்குவோம். படத்தோட ஷூட்டிங் செம்ம த்ரில்லிங்கா இருக்கும். நைட் பத்து மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிப்போம். காலையில நாலு மணிக்குத்தான் முடிப்போம். எனக்கு ஏழு மணிக்கு ரேடியோவுல பேசியாகணும். இங்க நாலு மணிக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு அங்க ஏழு மணிக்கு ஸ்டூடியோவுக்குள்ள அடுத்த ஷோவுக்கு ரெடி ஆகும்போது தூக்கமில்லாமல்தான் இருக்கும். இப்போ படம் பார்த்துட்டுக் கிடைக்கிற பாராட்டுல நாம கஷ்டப்பட்டதுக்கெல்லாம் ஒரு பலன் கிடைச்சுருக்குன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்கிறார் ரமணா, இந்தப் படத்தில் இவர்தான் ஜான். "அது மட்டும் இல்ல பாஸ்... நான் பேசிக்கலா ஆர்.ஜேவா, ஷோ பண்ணும்போது நாக்கு நம்ம கன்ட்ரோல்ல இருக்காது. ஆனா கேமராவுக்கு முன்னால நிற்கும்போது எல்லாமே சரியா இருக்கணும்னு எனக்கே புதுசாதான் இருந்துச்சு. எல்லா க்ரெடிட்டும் டைரக்டருக்குத்தான்" என்கிறார்.

இடையிலே மோகன்,  "ஷூட்டிங் அப்போ செம்ம காமெடியா இருக்கும். எங்களுக்கு டைரக்டர் மட்டும் இல்லை ப்ரொடியூசரும் நடேஷ்தான். நடேஷ் மட்டும்தான் பிசினஸ் பார்த்துக்கிட்டு இருந்தார். கம்போசிங் பண்ணும்போது மெஷின் பிரச்னை ஆகிடும், அதோட செலவு இப்படி எல்லாத்துக்குமே நடேஷ்தான். நடேஷ் இந்தப் படத்துல நடிச்சுருப்பார்.. ஏன் பாஸ் நடிக்க வந்தீங்கன்னு நீங்க கேளுங்களேன்" என நமக்கு எடுத்துக் கொடுக்கிறார்.

"வேற ஒண்ணும் இல்லை தலைவா... வழக்கம் போல எல்லாரும் சொல்ற அதே காரணம்தான். ஆக்சுவலா நான் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு வேற ஆளைத்தான் செலக்ட் பண்ணி வெச்சுருந்தோம். ஆனா கடைசி நேரத்துல அவரால நடிக்க முடியலை. அதனால நானே நடிக்க வேண்டியதாப் போச்சு. பதில் க்ளிஷே மாதிரிதான் இருக்கும். ஆனா அதானே உண்மை. அஞ்சு பேரு, ஒரே ஒரு ரூம், படம் முழுக்க லைவ் ரெக்கார்டிங், இதை ஏன் நாம முயற்சி பண்ணக் கூடாதுன்னு ஒரு கேள்வி. இதுதான் இந்தப் படத்துக்கு ஆரம்ப விதை. இந்தப் படத்துல எல்லா கேரக்டருக்கும் ஆட்கள் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. அப்போ ஒரு நாள் ரமணாவைப் பார்த்தப்போ 'நாம ஒரு படம் பண்ணணும் ஜி'னு சொன்னார். அட..! நம்ம பய இருக்கும்போது எதுக்கு வெளியில இருந்து ஆளுன்னு ரமணாவயே உள்ள இழுத்துட்டோம்" என  நடேஷ் சொல்லும்போதே வினோத் தொடர்கிறார்.

"இந்தப் படத்துல மியூஸிக் எடிட்டிங்னு ரெண்டு டிபார்ட்மென்ட்டும் நான் பண்ணிருக்கேன். லைவ் சவுண்டுதான் பண்ணணும்னு உறுதியா இருந்தோம். அது படத்துல நல்லாவும் வந்துருக்கு. முதல் நாள் ஷூட் பண்ணும்போது ஏ.சி ஓடும். மறுநாள் கரன்ட் கட்டாகிடும். கண்டினியூவிட்டிக்காக கரன்ட் வர்றவரைக்கும் அந்த ஏ.சி சவுண்டுக்காக எல்லாம் காத்திருந்து எடுத்துருக்கோம். எல்லாப் படத்துக்கும் பெரும்பாலும் போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் அதிகம் இருக்கும். எங்க படத்துல அதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மி. ஏன்னா எல்லாத்தையும் ஸ்பாட்லேயே முடிச்சிடுவோம்.  நடேஷ் முழு ஷூட் எடுத்து முடிச்சதும் எனக்குள்ள ஒரு கலர் இருந்துச்சு மியூஸிக்குக்காக... ஆனா அவருக்கு என்ன மைண்ட்ல இருந்துச்சுனு தெரியலை. நான் க்ளைமாக்ஸ் போர்ஷன் மட்டும் கம்போஸ் பண்ணி அனுப்பியிருந்தேன். நடேஷுக்கு ரொம்பப் பிடிச்சுருந்துச்சு, 'இப்படித்தான் படம் ஃபுல்லா இருக்கும். ஒரு வாரம் டைம் கொடுங்க முழுசா முடிச்சிட்டு கூப்பிடுறேன்'னு சொன்னேன். படத்தை முதல் தடவை கோயம்புத்தூர்ல நடந்த காம்படீஷன்ல திரையிட்டோம். மொத்தம் 69 படங்களை அங்கே ஸ்கிரீன் பண்ணுனாங்க. எங்க படத்தை நாலாவதா போட்டாங்க. ஆனா அறுபத்தி ஒன்பது படமும் ஸ்கிரீன் பண்ணின பிறகு எங்க படத்தைப்  பாராட்டிப் பேசி மூணு அவார்டும் குடுத்தாங்க" என்கிறார் அசோக்.

"அதுக்குப் பிறகு மதுரையில ஸ்கிரீன் பண்ணப்போ ரெண்டு பாராட்டு மறக்க முடியாதது. ஒண்ணு அமெரிக்கன் காலேஜ் ப்ரொஃபசர் பிரபாகர் அய்யா எல்லாரையும் தனித்தனியா பாராட்டினாங்க. கீட்சவன் வலைப்பக்க எழுத்தாளர் பத்திரிகையாளர் சரா சுப்ரமணியம் சார் படம் பார்த்துட்டு, ஸ்கிரீன்ல மிரட்டியிருக்கீங்கன்னு சொல்லிட்டு ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டாங்க. அதோட ரீச்சே வேற அளவுல இருந்துச்சு. இன்னைக்கு வரைக்கும் இன்பாக்ஸ்ல எப்போ சென்னையில ஸ்கிரீன் பண்ணுவீங்கன்னு நிறைய விசாரிப்புகள்..." என்கிறார் நடேஷ்.

"உண்மையைச் சொல்லணும்னா இதை நாங்க குறும்படமா நினைச்சு எடுக்கலை. ஒரு முழுநீள சினிமாவா நினைச்சுத்தான் எடுத்தோம். இந்தப் படம் மூலமாக 2018-ல் எங்க டீம்ல யாராச்சும் ஒரு ஆள் பெரிய திரைக்குள்ளே போறதுக்கு ஒரு தொடக்கமா இருக்கணும்னு எல்லோருடைய உழைப்பையும் கொட்டினோம். படம் பார்த்துட்டு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரம் பெரிய திரையிலேயும் எங்களைப் பார்க்கலாம். இது ஒட்டுமொத்த டீமின் ஒருமித்த குரல்.'' என்று தம்ஸ் அப் காட்டினார் படத்தின் முக்கிய தூணான ஒளிப்பதிவாளர் பார்த்தி.

வெல்கம் மதுரை பாய்ஸ்..!

- ந.புஹாரி ராஜா