Published:Updated:

" ‘பவர் பாண்டி'ல பல விஷயங்கள் கத்துகிட்டேன்!’' - எடிட்டர் பிரசன்னா ஜிகே

ப.சூரியராஜ்
" ‘பவர் பாண்டி'ல பல விஷயங்கள் கத்துகிட்டேன்!’' - எடிட்டர் பிரசன்னா ஜிகே
" ‘பவர் பாண்டி'ல பல விஷயங்கள் கத்துகிட்டேன்!’' - எடிட்டர் பிரசன்னா ஜிகே

பிரசன்னா ஜிகே, இன்றைய தேதியில் இவர் தான் கோலிவுட்டின் பிஸியான படத்தொகுப்பாளர். நம்மை வெறித்தன வெயிட்டிங்கில் வைத்திருக்கும் திரைப்படங்களில் சில, இவர் ஸ்டுடியோவில் தான் இறுதி வடிவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. `பவர் பாண்டி' படத்தின் எடிட்டிங்கில் பரபரப்பாய் இருந்தவரை கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்தி பேசினோம்.

"என் பெயர் பிரசன்னா ஜிகே. பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சுட்டு, எல்.வி.பிரசாத் அகாடமியில் எடிட்டிங் கோர்ஸ் முடிச்சேன். முக்கியமான விஷயம் கல்யாணம் ஆகிடுச்சு" என கலகலப்பாய் ஆரம்பித்தார் பிரசன்னா.

பிரசன்னா ஜிகே படத்தொகுப்பாளரான கதை...

"எடிட்டிங் கோர்ஸ் முடிச்ச பிறகு எடிட்டர் லியோ ஜான் பால் கிட்டே அசிஸ்டென்டா சேர்ந்தேன். அப்புறம், அங்கிருந்து எடிட்டர் டி.சுரேஷிடம் சேர்ந்தேன். அவர் எடிட் செய்த `காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் அசோஸியேட் எடிட்டர் நான் தான். சி.எஸ்.அமுதன் இயக்கிய 'ரெண்டாவது படம்' படத்துக்கு ஸ்பாட் எடிட்டிங் பண்ணேன். இடையில் சில விளம்பரங்களுக்கும் குறும்படங்களுக்கும் எடிட் பண்ண வாய்ப்பு கிடைச்சது. இப்படி எல்லா இடத்திலும் வேலை பார்த்ததில் நிறைய நுட்பங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. அதன் பிறகு திரைப்படத்திற்கு எடிட்டிங் பண்ற வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனாலும், நான் ஶ்ரீகர் பிரசாத் சாரிடம் போய் சேர்ந்தேன்.`ஆரம்பம்' படத்தில் ஆரம்பிச்சு தொடர்ந்து பத்து படங்கள் அவரோடு ஒர்க் பண்ணினேன். நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். தனியா படம் பண்ண முடியம்ங்கிற தைரியம் வந்தது. கூடவே, `மாரி' பட வாய்ப்பும் வந்தது. படம் ரிலீஸாகி டைட்டில் கார்டில் `படத்தொகுப்பு - பிரசன்னா ஜிகே'னு பெயரும் வந்தது."

`பவர் பாண்டி',`நெஞ்சம் மறப்பதில்லை',`மாரியப்பன்' என நீங்க வேலைபார்க்கும் பெரும்பாலான படங்களுக்கும் தனுஷுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குதே எப்படி அது?

''தனுஷ் சார் 'மாரி' படம் பார்த்து முடிச்சதும் எனக்கு கை கொடுத்து பாராட்டினார். செல்வராகவன் சார் `நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு எடிட்டர் தேடிட்டு இருந்தப்போ தனுஷ் சார்தான் என்னை சிபாரிசு செய்திருக்கார். உடனே, செல்வா சார் என்னை கூப்பிட்டு ஐந்து சீன்களை கொடுத்து எடிட் பண்ண சொன்னார். நானும் எடிட் செய்து காமிச்சேன். அது அவருக்கு பிடிச்சு போக `கன்டினியூ பண்ணுங்க'னு சொன்னார். இப்படித்தான் `நெஞ்சம் மறப்பதில்லை' வாய்ப்பு கிடைச்சது. `மாரியப்பன்' பட வாய்ப்பு ஐஸ்வர்யா மேடமே கூப்பிட்டு கொடுத்தாங்க. இப்போ, செல்வா சாரின் அடுத்த படம் `மன்னவன் வந்தானடி'க்கும் நான் தான் எடிட்டர். சூப்பர்ல...’’

தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குதா?

"சினிமா பிலிம்ல இருந்து டிஜிட்டல் மாறினதுக்கு பிறகு எடிட்டர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் அதிகமாகிட்ட மாதிரி ஃபீல் பண்றேன்’"

ஒரு எடிட்டராக சமூக வலைதளங்களில் வரும் வீடியோ மீம்களை பார்க்கும்போது என்ன தோணும்?

`` `வீடியோ எடிட் பண்றது அவ்வளவு சுலபமாகிடுச்சே'னு தோணும். `மாரி' பட டிரெய்லரை வெச்சு தோனி வெர்ஷன், மோடி வெர்ஷன், ட்ரம்ப் வெர்ஷன்னு பல வெர்ஷன்கள் வந்துச்சு. ஒவ்வொரு வெர்ஷனையும் அவ்வளவு ரசிச்சு பார்த்தேன். அதேநேரம், வெறும் சாஃப்ட்வேர் உபயோகிச்சு வீடியோவை வெட்டி, ஒட்டினால் மட்டும் அது முழுமையான எடிட்டராக முடியாது. 'ஸ்கில்'ங்கிறது முக்கியமா வேணும். அது பயிற்சியாலும், அனுபவத்தாலும் மட்டுமே வரும் விஷயம்.’’

பொதுவா படத்தொகுப்புங்கிறது பெரும் மன அழுத்தத்தை தரும் வேலையாக பார்க்கப்படுதே...

"அதற்கு காரணம், ஒரு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பமானதிலிருந்து  படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஓடும் வரையிலும் எடிட்டருக்கு வேலை இருந்துட்டே இருக்கும். இயக்குநருக்கு பிறகு ஒரு எடிட்டர் தான் ஒரு படத்தோடு அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கும். நாம சரியா டைம் மேனேஜ் செய்து, கிடைக்குற கேப்பில் ஓய்வு எடுத்துகிட்டால் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம். வேலையை கரெக்டா பார்க்குறது எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு இடையில் கொஞ்சம் ஓய்வு எடுக்கிறதும் முக்கியம். சமீபத்தில் தான் இதை புரிஞ்சுகிட்டேன்."

நீங்கள் ஓய்வு நேரங்கள்ல என்ன பண்ணுவீங்க?

’’வீடியோ கேம் விளையாடுவேன். அதற்கெனவே ஒரு சிஸ்டம் வெச்சுருக்கேன்.இப்போ ஒரு நாலு மாசமா `ஃபார் க்ரை'னு ஒரு கேம் விளையாடிட்டு இருக்கேன்.’’

உங்களுடைய அடுத்த புராஜெக்ட்ஸ்...

’’ `மரகத நாணயம்' படம் ரிலீஸ் ஆகப்போகுது. செல்வா சாரோட `நெஞ்சம் மறப்பதில்லை' அப்புறம் 'மன்னவன் வந்தானடி', கலையரசன் ஹீரோவா பண்ற `சைனா', கதிர் ஹீரோவா நடிக்குற `சத்ரு', தனுஷ் சார் டைரக்‌ஷனில் `பவர் பாண்டி', 'முண்டாசுப்பட்டி' ராமின் அடுத்த படம்,`யானும் தீயவன்',`மாரியப்பன்'னு அடுத்தடுத்து வெயிட்டிங்...’’

-ப.சூரியராஜ்
படங்கள் : ர.வருண்பிரசாத்