Published:Updated:

செய்தியாளர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? #VikatanExclusive

செய்தியாளர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?  #VikatanExclusive
செய்தியாளர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? #VikatanExclusive

தமிழகத்தில் தற்போது பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சம் இல்லாமல் போயிவிட்டது. எந்த மூலை முடுக்கிலும் சின்னதாக ஒரு சம்பவம் நடந்தாலும், அது ஊடக வெளிச்சத்தில் படமாகக் காட்டப்பட்டு விடுகிறது.  இந்த விவாதத்துக்கெல்லாம் மையக் காரணமாக இருக்கும், ஊடக செய்தியாளர்கள் எல்லாம் அந்த செய்தி முடிந்ததும், அடுத்த செய்தியை தேடிப் போய்விடுவார்கள் என்று ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. ஆனால் பிரேக்கிங் நியூஸ்களை செய்தியாக வழங்குவதைத் தாண்டி, தனிப்பட்ட பார்வையில் பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த நண்பர்களுடன் சேர்ந்து நடப்பு நிகழ்வுகளை எப்படி அணுகி, பேசி விவாதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல் எழுந்தது. பலரும்  ஒன்று கூடுவது சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி எதிரில் உள்ள டீ கடையில்தான் என்ற செய்தி கிடைத்ததும் அங்கு ஒரு ரவுண்ட் அடித்தோம்!

"பாத்தீங்கள்ல என்  தலைவன் டிரம்ப்-ப? " கையில் இருந்த லெமன் டீ கிளாசை உருட்டிக்கொண்டே, நக்கலாக பேசுகிறார் சத்தியம் தொலைக்காட்சி செய்தியாளர் நித்தியானந்தன். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சென்னை ரசிகர் மன்றத் தலைவர் இவர்தான் என்று புரிந்தது.  

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் ஓய்வாய் சந்திக்கும்போது, தங்களுக்குள் பேசிக்கொள்ளும் லாங்வேஜ் இது. அவர்களின் ’நண்பேன்டா’ பேச்சைக் கண்டு வியந்துபோன நாம், ஆர்வ மிகுதியில் அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். 

என்ன பாஸ்.. நியூஸ்க்கே நியூஸா, என்று நம்மையே கலாய்க்கத் துவங்கினார்கள். 

"புயலுக்கு அப்பறம் சென்னைல மிச்சம் மீதி இருக்கிற மரத்துல, இன்னைக்கோ நாளைக்கோன்னு நின்னுட்டிருக்க இந்த மரம், டூ வீலர் நிறுத்த நல்ல ஒரு இடம், இதையெல்லாம் விட இன்னைக்கு இல்லாட்டினாலும் குடிச்ச டீக்கு நாளைக்கு காசு தருவாங்கன்னு நம்புற இந்த டீக்கடக்காரு, இதெல்லாம்தான் எங்களை இங்க தினமும் வரவைக்குது" அசீப் இதைச் சொல்லிட்டு திரும்பும்போது, டீக்கடைக்காரரின் சின்னதான புன்முறுவலைப் பார்க்க முடிகிறது. நியூஸ்18 சேனலில் தலைமை செய்தியாளராக பணியாற்றுகிறார் அசீப்.

"காலைல வேலைக்குப் போறது மட்டும்தான் எங்க கைல, திரும்ப எத்தன மணிக்கு வேல முடியும்ன்றது அன்னைக்கு சென்னையில நடக்குற சம்பவங்களை பொறுத்தது. இதுதான் பத்திரிகையாளர்களோட நெலம" இதைச் சொன்னது  நியூஸ்18 சேனல் செய்தியாளர்  விஷ்ணு.

"இந்த வேலை மேல இருக்க ஒரு தீராத காதல். அதுதாங்க இந்த உற்சாகத்துக்குக் காரணம்" விஷ்ணு இதைக்கூறும்போது, அது எவ்வளவு உண்மை என்பதை உணர முடிந்தது. பின்னாடியே நின்று நக்கலான சிரிப்புடன், ‘இருக்கட்டும்.. இருக்கட்டும்..’ என்று தலையாட்டுகிறார் நியூஸ்7 செய்தி வாசிப்பாளரும், இணை ஆசிரியருமான நெல்சன்.

"நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் குறித்து விவாதிச்சுட்டு இருந்தோம், அதற்குள் நீங்களே வந்துட்டிங்க" என்றார் நெல்சன். தொடர்ந்து பேசச் சொன்னோம்.   

"சோசியல் மீடியால உத்தரப்பிரேதசம் தேர்தல் பற்றிப் பேசுறதவிட, இரோம் ஷர்மிளாவை பத்திதான் அதிகமாப் பேசுறாங்க. மணிப்பூர் மக்களை, மானாவரியா திட்றாய்ங்க" இது நியூஸ்18 செய்தியாளர் சிபி. 

"டேய்.. உண்மையில மக்கள் தெளிவாயிருக்காங்க டா. ஷர்மிளா ஜெயிச்சு எதுவும் நடந்திற போறதில்லன்றது அவங்களுக்கு நல்லாத் தெரியும். அதனாலதான் அவங்களுக்கு ஓட்டுப்போடல" கலைஞர் தொலைக்காட்சியின் செய்தியாளர் தமிழரசனோட கருத்து இது. 

விவாதம் சில நேரங்களில் சூடுபிடிக்கும்போது, சுற்றி நிற்கும் பார்வையாளர்களையும் கவர்கின்றது. அப்போதுதான் பைக்கை நிறுத்திவிட்டு டீ கடைக்கு நுழைய முயன்ற ஒருவர் விவாதத்தில் காதை கொடுக்கின்றார். 

"தங்களோட பிரச்னைக்கும், தேர்தலுக்கும் உள்ள தொடர்ப மக்கள் சரியா புரிஞ்சு வச்சிருக்காங்க. அடிப்படையில ஒரு சாரார் ஓட்டுப்போடுறது நிறுத்தி ரொம்ப வருஷம் ஆச்சு. ஏன்னா, பலமுறை ஓட்டுபோட்டும் பிரச்னை மட்டும் தீராம இருக்குறத, அவங்க பார்த்துட்டுதான இருக்காங்க" இதை சொல்லிவிட்டு தங்களை கவனிக்கும் மூன்றாம் நபரை பார்க்கிறார் அசீப். 

"ஒவ்வொரு தேர்தல்லயும் Anti incumbency னு சொல்றாங்களே, இதுலயிருந்தே புரியல, இதுனால் வரைக்கும் அமைஞ்ச அரசாங்கம் எதுவும் மக்கள் பிரச்னைய தீர்க்கலன்னு. சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த எல்லா தேர்தல்லயும் ஆண்ட அரசு மேல வெறுப்புன்றது தொடர்ந்துட்டுதானே இருக்கு" தமிழரசனின் இந்தக் கருத்துக்கு சிலரின் தலையாட்டல்கள் லைக்ஸ் பட்டனாய் இருந்தன.   

இந்த விவாதம் ஒரு பக்கம் நடக்க, புதியதலைமுறை உதவி ஆசிரியர் பிரியா, சன் டி.வி. உதவி ஆசிரியர் ஜெயபாதூரி, நியூஸ்18 செய்தியாளர் தமிழரசி என மூவரும் இன்னொரு புறம் வேறொரு குழு அமைத்து பேசிக் கொண்டிருந்தனர்.  .

இரவு 8.30 மணி. 

நுங்கம்பாக்கம் டென்னிஸ் கிரவுண்டில் இவர்களுடன் இன்னும் சில ஊடக நண்பர்களும் சேர்கிறார்கள். விளையாடத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என ஊடக நண்பர்கள் புடைசூழ அனைவருமே பேஸ்கட் பால் விளையாடி மனதை ஆசுவாசப்படுத்துகிறார்கள். இரவு 10 மணி வரை நீளும் இந்த விளையாட்டில் சில நேரங்களில், சென்னை-28-ல் முதல் பார்ட்டில் வரும்.. போங்கு ஆட்டமும் நடப்பதுண்டு. விளையாட்டை தாண்டி, இங்கு ஒரு ஃபுல் எண்டர்டைமைன்ட் காமெடிக்கு நிச்சயம் கேரன்டி உண்டு. இந்த விளையாட்டின்போது, உடலில் வரும் வியர்வையைத் தாண்டி, சிரித்து சிரித்து வயிறு வலி வருவது மட்டும் நிச்சயம். விளையாட்டோடு அன்றைய நாள் முற்று பெறுகிறது.

“ஓய்வு நாள்ல எங்க சந்திச்சுக்குவீங்க?” - நாம் தயங்கிபடி கேட்க, “ஓய்வா.. மீடியாவுக்கா?’ என்று நம்மை எட்டாவது கிரகத்தில் இருந்துவந்த ஏலியானாய்ப் பார்த்துவிட்டு “தேனாம்பேட்டை வாங்க” என்றார் ஒருவர். 

சனிக்கிழமை. தேனாம்பேட்டை திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஊடக நண்பர் ஒருவரின் மொட்டை மாடி அறையில் செய்தியாளர்கள் குழுமியிருக்கின்றனர். 7 மணி தொடங்கி ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். மணி எட்டை தொட்டபோது, அங்கே 20-க்கும் மேற்பட்ட ஊடக நண்பர்கள் ஒன்று கூடியிருந்தார்கள். 

"வேலை முடிஞ்சு சாயங்காலத்துல ஊர சுத்தாம, நல்லதுக்கு இந்த இடத்த பயன்படுத்துறோம்ன்ற நம்பிக்கையில வீட்ல இத பெருசா எடுக்குறதுல்ல" என்று பெருந்தன்மையோடு கூறுகிறார் வீட்டுக்காரர் அருண். 

"2011-ம் வருஷத்துலயிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த கூட்டம் நடந்துட்டு வருது. அந்த வாரத்துல நடந்த முக்கியமான அரசியல் நிகழ்வு பத்தி விவாதிப்போம். அதுக்குப் பின்னால இருக்க அரசியல் மற்றும் பிரச்னைகளை புரிஞ்சிக்க முயற்சிப்போம். கடைசியா ஒரு முடிவுக்கும் வருவோம். இதில் பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவாங்க" இந்தக் கூட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வரும் முக்கிய கரணகர்த்தாக்களில் ஒருவரான சன் டி.வி. செய்தியாளர் மணி, நமக்கு இதை விளக்கினார். 

அன்றை விவாதம் தொடங்கியது. ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முதலில் தமிழரசன் பேச ஆரம்பித்தார். பாக் ஜலசந்தி, இரண்டு நாட்டு மீனவர்கள்,  இறையாண்மை,  ட்ராலிங் முறை,  கச்சத்தீவு என்று எல்லாக் கோணங்களிலும் அந்த விவாதம் நீள்கிறது.  எந்தவித சார்பும் இல்லாமல், உணர்வு வயப்படாமல், எல்லாப் பிரச்னைகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டு தீர்வை நோக்கி நகர்வதை விவாதித்துக் கொண்டிருந்தனர்.  

அன்றாடம் நடைபெறும் புதிய செய்திகளை தேடிப் போனாலும், நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி குறித்து, ஆழமாக அலசி ஆராய்வது ஊடக நண்பர்களிடையே ஆரோக்கியமான விவாதமாக இருக்கிறது. ஊடக வெளிச்சம் படாமல் இருக்கும் ஏராளமான செய்தியாளர்களை இங்கே அதிகமாக காணமுடிந்தது. யாரோ ஒருவர் எழுதியதை, யாரோ ஒருவர் படிக்கிறார் என்பது இன்றி, இவர்களின் குரலிலும் செய்திக்கான உணர்வும் வெளிப்படுவதற்கு இதுதான் காரணம் என்று தோன்றியது.

அடுத்த முறை செய்தியை யாரேனும் வாசிக்கும்போது, வேலை என்பதைத் தாண்டி - அதற்குப் பின்னால் இவர்கள் தனிப்பட்ட முயற்சியும் ஆர்வமும் இருக்கிறது.

- ரா.அருள் வளன் அரசு,  படங்கள்: தி.குமரகுருபரன்