Published:Updated:

”விஜய் சேதுபதி என் ஹீரோ மட்டுமல்ல... என் குருவும் அவர்தான்!” - ஒளிப்பதிவாளர் சங்கர்

முத்து பகவத்
”விஜய் சேதுபதி என் ஹீரோ மட்டுமல்ல... என் குருவும் அவர்தான்!” - ஒளிப்பதிவாளர் சங்கர்
”விஜய் சேதுபதி என் ஹீரோ மட்டுமல்ல... என் குருவும் அவர்தான்!” - ஒளிப்பதிவாளர் சங்கர்

“சினிமாதான் நம்மை வழிநடத்தணும், ஆரோக்கியமான படங்கள்தான் தமிழ் சினிமாவுக்குத் தேவை. அதுவும் மக்களுக்கு விருப்பமான விதத்தில் எடுக்கணும்” சினிமாவின் மீது கொண்ட காதலினால் சத்தியமங்கலத்திலிருந்து கோலிவுட் நகரில் வந்து இறங்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சங்கர்,  ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவந்த புரூஸ்லீ படத்தின் கேமராமேன். 

“சென்னை வந்ததே இயக்குநராகணுங்கிற ஆசையால தான். படிச்சது விஸ்காம், எங்க ஊர் காட்டுக்குள்ள மிருகங்களைப் போட்டோ எடுக்கணுங்கிற ஆசையினாலேயே போட்டோகிராபி படிச்சேன். சென்னை வந்ததும் போட்டோகிராபர் ஜி.வெங்கட்ராம் சார்கிட்டதான் வேலைசெஞ்சேன். பாலா, ஷங்கர், முருகதாஸ் இவங்கள்ல யார்கிட்டயாச்சும் உதவி இயக்குநரா சேரணும்னு முயற்சி பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்தில் ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. ராஜீவ்மேனன் இன்ஸ்டிடியூட்ல ஒளிப்பதிவுக்குனு தனியா படிச்சேன். அப்போ ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கான குறும்படத்தில் ஒளிப்பதிவு செய்ற வாய்ப்பு கிடைச்சது. கெட்டியா பிடிச்சிக்கிட்டேன்.

’தெகிடி’ இயக்குநர் ரமேஷ், ‘முண்டாசுப்பட்டி’ ராம், ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார்னு எல்லோருமே ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியிலிருந்து வந்தவங்கதான். அவங்களோட குறும்படத்துக்கெல்லாம் நான்தான் கேமராமேன்.  ‘குரங்குபொம்மை’, ‘புரூஸ்லீ’ பட இயக்குநர்கள் ஆரம்ப காலத்துல பண்ணின குறும்படங்களுக்கும் நான் ஒளிப்பதிவு பண்ணிருக்கேன். அவங்களோட நட்புதான், என்னை இங்க வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு.”  

சினிமா அறிமுகம்? 

“‘பீட்சால அசிஸ்டென்ட் கேமராமேனா கொஞ்ச நாள்.  அடுத்ததா ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்காக 20 நாட்கள் வேலை செய்திருப்பேன். அவ்வளவுதான் சினிமா அனுபவம். முழுக்க முழுக்க குறும்படத்திற்குத்தான் வேலை செஞ்சேன். பெரிய அளவுல யார்கிட்டயும் உதவியாளரா வேலை செய்யாம, நேரடியா ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் கேமராமேனா அறிமுகமாகிட்டேன். அதுவும் என்னோட சொந்த ஊரான சத்தியமங்கலத்தில்தான் ஷூட்டிங் பண்ணோம். மறக்கவே முடியாது அந்த முதல்நாளை. அடுத்து ஜி.வி.பிரகாஷ் ப்ரோ நடிச்ச  ‘புரூஸ்லீ’ ”   

 புரூஸ்லி படப்பிடிப்புத் தளத்தில் ஜி.வி.எப்படி இருந்தார்? 

“ரொம்ப புத்திசாலித்தனமானவர் ஜி.வி.ப்ரோ. டெக்னிக்கலாகவும் ஸ்கிரிப்ட்ரிலும் ரொம்ப அறிவுசார்ந்து யோசிக்கக்கூடியவர்.  புரூஸ்லீக்காக நியூ இயர் இரவு நடந்த ஷூட்டிங் தான் மறக்கவே முடியாது. ”இன்னைக்கு கூட லீவு விட மாட்டீங்களா’னு செம கலாய். எப்போதுமே ஷூட்டிங் ஸ்பாட்ல செம ஆக்டிவ். எல்லோரையும் கலாய்ச்சுகிட்டு, விளையாட்டுத்தனமாத்தான் இருப்பார்.” 

 இயக்குநரானால் நீங்க இயக்குற கதைகள் எந்தமாதிரி இருக்கும்? 

“கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணலாம், ஆனால் இயக்குநரா மாறும் போது, எதார்த்தம் சார்ந்த படங்களைத்தான் தேர்வுசெய்வேன். சமூகத்துல நடக்குற நல்ல விஷயங்களைச் சொல்லணும். ‘காக்காமுட்டை’, ‘முண்டாசுபட்டி’ மாதிரியான நேர்மையான படங்கள் பண்ணணுங்கிறதுதான் ஆசை.” 

விஜய்சேதுபதிக்கும் உங்களுக்குமான நட்பு பற்றிச்சொல்லுங்க? 

“சேதுஅண்ணன் ஹீரோவா வெளிய தெரியுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்பவும் இருக்கார்.  எப்போ சந்திச்சாலும் சினிமா பற்றித்தான் பேசுவார்.  என்னுடைய குருவாதான் அவரைப் பார்க்கறேன். நான் உதவியாளரா ஒளிப்பதிவு பண்ணின முதல் பட ஹீரோ அவர்.. அதே மாதிரி  நான் இயக்குற முதல் படத்துக்கும் அவர்தான் ஹீரோ. நடக்கும்னு நினைக்கிறேன். அவர் ஆக்டர் மட்டுமில்லை. நல்ல கேரக்டர்.”

அடுத்தடுத்து என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க? 

“‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கத்துல விஷ்ணு, அமலாபால் நடிச்சிட்டு இருக்குற படத்தோட ஷூட்டிங் போய்ட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம, ஆதி,  நிக்கி கல்ராணி நடிச்சிருக்கிற ‘மரகதநாணயம்’, ‘காலக்கூத்து’ படங்கள் ரிலீஸூக்கு ரெடியா இருக்கு.”  

-முத்து பகவத்