Published:Updated:

ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதுவது எப்படி? - 'புரூஸ் லீ' படம் எப்படி?

ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதுவது எப்படி? - 'புரூஸ் லீ' படம் எப்படி?
ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதுவது எப்படி? - 'புரூஸ் லீ' படம் எப்படி?

இப்போ நான் ஒரு பாம் செஞ்சு உங்க கைல கொடுத்திருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்தில் பாம் வெடிச்சிடும். அதுக்குள்ள படிச்சி முடிச்சிடுங்க... டைம் ஸ்டார்ட்ஸ் நவ்!

'புரூஸ் லீ' படம் பார்த்ததும் ஒரு யோசனை, ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு கதை எழுதுவது எப்படி என ஒரே சிந்தனை. முதலில் படத்தின் டைட்டிலில் இருந்தே ஆரம்பிக்கலாம். நல்லா கேட்சியா ஒரு டைட்டில் வைக்கணும். பிரபலமான வசனத்தை எடுத்து டைட்டிலா வைக்கலாம். இல்லன்னா, ஜெட்லி, அட்லி, டாங் லீ, கபாலி... புரூஸ் லீ  கூட வெச்சுக்கலாம். 

இனி ஹீரோவுக்குனு ஒரு பின்னணி வைக்கணும். தற்கொலை பண்ணிக்கறதுக்காக போறவர், ரத்தத்தைப் பார்த்தா காக்கா வலிப்பு வர்ற ஆள், வெர்ஜின் பையன், இல்ல 'புரூஸ் லீ'ல வர்ற மாதிரி போலீஸைப் பார்த்தா பயப்படுறவன்னு ஏதாவது வெச்சுக்கலாம். போலீஸைப் பார்த்தா பயம் வருதுன்னு சொல்றீங்க, அப்பறம் 'புரூஸ் லீ'னு டைட்டில் வைக்கிறோம்னு யோசனையா இருக்கா? அட விடுங்க ஜி, புரூஸ் லீ படம் பார்த்தா ஹீரோவுக்கு தைரியம் வரும். அதனால, ஜெமினி கணேசங்கற அவனுடைய பேரை அவங்க அம்மா புரூஸ் லீ-ன்னு மாத்திட்டாங்கனு சிறப்பா... மிகச் சிறப்பா ஒரு ப்ளாஷ்பேக் வெச்சுப்போம். கடைசி நேரத்துல சீன் வைக்கிறதுல சிக்கல் வந்தா, காமெடியனோட சித்தி, சித்தப்பா, ஒண்ணுவிட்ட பெரியப்பாவைக் கூட கூட்டிக்கிட்டு வந்துக்கலாம். 

பாம் வெடிக்க இன்னும் 6 நிமிஷம் தான் இருக்கு... டிக்... டிக் (அடுத்த டிக்குக்கு நேரமில்லை. வாங்க போலாம்)

இப்போ ஹீரோயின். ஹீரோயினுக்கு எதுவும் பெருசா மெனக்கெட அவசியம் இருக்காது பாஸ். ஹீரோவையே குழந்தை மாதிரி டீல் பண்ற தைரியமான பொண்ணு. பாட்டு போட்டா டான்ஸ் ஆடணும். இல்ல அவங்க டான்ஸ் ஆடும்போது பாட்டு போடணும். தேவைக்கு ஏற்ற அளவு சிங்கிள் ஹீரோயினா, டபுள் ஹீரோயினானு பார்த்து முடிவு பண்ணிக்கலாம். ஆனா, நல்லா டான்ஸ் ஆடணும். அவ்வளவு தான்! ஹீரோவோட அம்மா, அப்பா. ஹீரோயினோட அம்மா, அப்பா. ஃபிரெண்டோட அம்மா, அப்பா. ஃபிரெண்டு லவ் பண்ற பொண்ணோட அம்மா, அப்பா யாருமே தேவையில்லை. அட, ஹீரோ ஏன் எதுக்கு இப்படிச் சுத்திக்கிட்டு இருக்கார், என்ன பண்றார்னுகூட கேட்க வேண்டாம். ஹீரோவுக்கும், அவன் நண்பனுக்கும் ஆம்லேட், ஆஃபாயில் போட்டுக்கொடுத்து காதலிக்கிற மகத்துவக் காதலைக் காட்டுனா போச்சு. 

ஹீரோயினை விட முக்கியம் காமெடியன்தான். சமயத்துல ஹீரோவை விட இவர்தான் முக்கியம். பிரச்னைல மாட்டிக்கும் போது காமெடியனையும் சேர்த்து மாட்டிவிடணும். தேவைப்படும்போது அந்த காமெடியன் ஹீரோவைத் திட்டணும், அடிக்கடி 'அவ மூஞ்சி ஏற்கெனவே ஆசிட் அடிச்ச மாதிரிதான் இருக்கு', 'அவ மூஞ்சியப் பார்த்தா எனக்கே மூடு வராதுடா', 'அவள விட்டா என்னை யாரும் லவ் பண்ண மாட்டாங்கடா'னு பேச வைக்கும் படியா உன்னதமான வசனங்களை எழுதிக்கலாம். ஜிவிபியை பாத்து “நீலாம் ஹீரோவா”ன்னு அடிக்கடி கேட்டுட்டா, பேலன்ஸ் ஆகிடும். ஹீரோயின் இல்லைனாலும் பரவாயில்ல, காமெடியன் கண்டிப்பா ஹீரோ கூடவே இருக்கணும். அப்படித்தான் திரைக்கதையே எழுதணும். இல்லன்னா, உங்களால் இப்படி ஒரு செமயான படத்தை எடுக்கவே முடியாது. காமெடியன் அடிக்கிற ஜோக் மட்டும் இல்ல, படத்தில் எல்லாருமே ஜோக் அடிக்கலாம், அது ஆடியன்ஸை சிரிக்க வைக்கும் படியா இருக்கணும்னு அவசியமே கிடையாது. 'புரூஸ் லீ' படத்தில் வாழப்பழக் காமெடி ஒன்னு இருக்கு, இப்படி எல்லாம் யாராலையும் யோசிக்கவே முடியாது. கவுண்டர் பாத்தா “நான் பலாப்பழமே சாப்பிட்டுக்கிறேண்டா”ன்னு சொல்லிடுவார்.

டிக்... டிக்... இன்னும் 3 நிமிஷம் தான் இருக்கு

அட வில்லனுக்குக் கூட நீங்க பெருசா யோசிக்க வேணாம், ஏன்னா நாம காமெடி படம் எடுக்கப் போறோம். ஒரு காமெடியனையே கூட்டிட்டு வந்து வில்லனா  காமிச்சரலாம். அதுதான் எல்லாருமே பண்றாங்களேனு தோணுதா? ஹாலிவுட் வில்லன்கள் மாதிரி டிரெஸ் போட்டுக்குவார்னு புது கான்செப்ட் வெச்சிரலாம். அதுக்கு நிறைய மெனக்கெடணும் காமெடி எல்லாம் புதுசா யோசிக்கணுமேனு பயப்படாதீங்க. ஹாலிவுட் வில்லன்னு ஒரு சூப்பர் ஐடியா புடிச்சிருக்கோம், அதுவே போதும் பாஸ். ஆனா ஒண்ணு. உலக சினிமா ரெஃபரன்ஸ இதுக்கு யூஸ் பண்ண முதல் க்ரூப்பு 'புரூஸ் லீ' குரூப்புதான்.

எல்லாம் ஓ.கே ஹீரோவுக்கும் வில்லனுக்கும் என்ன பிரச்னை வர வைக்கலாம்? அது ஒன்னும் சிக்கல் இல்ல. வில்லன் பண்ற கொலையை ஹீரோ போட்டோ எடுத்திருவார். அந்த விஷயம் வில்லனுக்குத் தெரிஞ்சதும் ஹீரோயினைக் கடத்திடுவார். அதில் இலவச இணைப்பா காமெடியனோட லவ்வரையும் கடத்திடுவார். கேமராவ கொடுத்தா தான் ஹீரோயினை விடுவேன்னு சொல்றார்னு வச்சிக்கலாம். இந்தப் பிரச்சனையை வைத்து அரை மணிநேரப் படம்தான் எடுக்க முடியும். (இது ஒரு பிரச்னையானு கேட்குறது வேற விஷயம்) அதனால முன் பாதி முழுக்க பீச்ல வளையம் விட்டு கேமிரா வாங்குறது, ரோட்ல வம்பிழுக்கும் ஒருத்தன் மேல ஆசிட் அடிக்கறது, அரசியல்வாதி மன்சூர் அலிகானின் நகைச்சுவையான மேடைப்பேச்சு, வில்லனுக்கும் மொட்ட சித்தப்பாவுக்கும் நட்பு, மொட்ட சித்தப்பாவ வெச்சு ஆட்டோகாரன் பாட்டை ரீக்ரியேட் பண்றதுனு கன்னா பின்னானு கதை விடலாம். டிஜிட்டல் காலத்துல கூடவா கேமராவை கேட்கிறான்னு யோசிக்கிறிங்களா? யோசிக்கிற யாரும் எங்களுக்கு வேணாம் பாஸ்.

2 நிமிஷம் தான்... டிக்... டிக்...

கட்டாயம் இருக்க வேண்டிய நடிகர்கள் சிலர் இருக்காங்க. அவங்களுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லன்னாலும் பரவாயில்ல, நடிக்க வெச்சே ஆகணும். முன்னாள் வில்லன்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன்னு எல்லாரையும் அள்ளி போட்டுக் கொண்டுவாங்க. எங்கயாவது நடிக்க வெச்சுக்கலாம். மியூசிக் பற்றி கவலைப்படாதீங்க, ஹீரோவே மியூசிக்கும் பண்ணிடுவார். பாட்டு, பின்னணி இசை ரெண்டையும் பக்காவா பண்ணிக் கொடுத்திடுவார். அது சூப்பரா இருக்கணும்னு மட்டும் எதிர்பார்க்காதீங்க. நம்ம கிட்ட கலர்ஃபுல்லா ஒளிப்பதிவு பண்றதுக்கு ஆள் இருக்காரு. அதனால பின்னணி இசையெல்லாம் யாரும் கவனிக்கமாட்டாங்க ப்ரோ!

கதை எழுதுவது எப்படினு சொல்லிட்டு கதை எழுதலயேன்னு கேட்கறீங்களா? எனக்கும் கதை சொல்லணும்னு ஆசைதான். தியேட்டர்ல உட்கார்ந்து ரெண்டரை மணிநேரமா அதைத்தான் தேடிட்டிருந்தேன். ஆனா, ரெண்டு விஷயம் தெரிஞ்சது, ஹீரோவுக்கு பூச்சியப் பார்த்தா மட்டும் இல்ல பட்டாம்பூச்சியப் பார்த்தா கூட பயம். ரெண்டு... 'இப்படிப் போயி அப்படிப் போயி இப்படிப் போனானாம். அப்படிப் போயி இப்படிப் போயி எப்படியோ போனானாம்'ங்கிற பழமொழிக்கு அர்த்தம் இந்தப் படம் பார்த்த பிறகுதான் புரிஞ்சது. 

படத்தோட டைட்டில் கார்டுல “சில காட்சிகள் காப்பி கூட அடிச்சிருக்கலாம்”னு அவங்களே சொல்றாங்க. அதையாவது உருப்படியா பண்ணிருந்தா படமாவது நல்லா இருந்திருக்கும். அதே டைட்டில் கார்டுல குவின்டின் டொரன்டினோவும் வந்தது. என்னடா இது டொரன்டினோவுக்கு வந்த சோதனை! 

இன்னும் 3 செகண்டு தான்... 2... 1... 0 இந்த பாம் என்னா ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணுமா? தைரியம் இருந்தா அதை 'புரூஸ் லீ' படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க.