Published:Updated:

‘அடுத்த படத்தில் மூணு கெட்டப் சைக்கோ..!’ - ‘செங்கல் சைக்கோ’ ராம்குமார் #VikatanExclusive

விகடன் விமர்சனக்குழு
‘அடுத்த படத்தில் மூணு கெட்டப் சைக்கோ..!’ - ‘செங்கல் சைக்கோ’ ராம்குமார் #VikatanExclusive
‘அடுத்த படத்தில் மூணு கெட்டப் சைக்கோ..!’ - ‘செங்கல் சைக்கோ’ ராம்குமார் #VikatanExclusive

“எந்த வசனமும் இல்லாத ஒரு கேரக்டர், என்னோட பதினைஞ்சு வருஷப் போராட்டத்தை ஒரே நாள்ல திருப்பிப் போட்ட ஒரு கேரக்டர்தான் செங்கல் சைக்கோ. என்னை நம்பி அந்த கேரக்டரைக் கொடுத்த டைரக்டர் ஆதிக் சாருக்கு காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்”- உற்சாகமும் நம்பிக்கையுமாய் பேசத் தொடங்குகிறார் ராம்குமார். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா'வில் செங்கல் சைக்கோ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். கிருஷ்ணகிரியில் ஷூட்டிங்கில் இருந்தவருடன் ஒரு மினி பேட்டி...

''யார் நீங்க, இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க?''

''சொந்த ஊரு மதுரை. வீட்டுல அண்ணன் தம்பி தங்கச்சி எல்லாருமே நல்லா படிச்சவங்க, நான் மட்டும் பத்தாவது முடிச்சுட்டு சினிமால சாதிக்கணும்னு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால சென்னைக்குக் கிளம்பி வந்தேன், கலா மாஸ்டர் கிட்டதான் டான்ஸரா என்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சேன், இரண்டு வருஷம் டான்ஸ் கத்துக்கிட்டு   அஞ்சு வருஷம் டான்ஸரா இருந்தேன். டான்ஸ் போதும் நடிக்கலாம்னு ஆரம்பிச்சப்போ 'பேராண்மை' பண்ணினேன். 'பேராண்மை' ,'ஆயிரத்தில் ஒருவன்', 'பொல்லாதவன்', இப்படி நிறையப் படங்கள்ல நடிச்சேன். எதுலேயும் அவ்ளோ ரீச் ஆகலை. ஆதிக் சார் ஒரு செங்கல்லைக் கொடுத்து அடிடான்னு சொன்னாரு, அடிச்சேன், படமும் ஹிட் என்னோட கேரக்டரும் ஹிட், ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

''செங்கல் சைக்கோ கேரக்டர் தியேட்டர்ல பார்த்தப்போ எப்படி இருந்துச்சு?''

''டைரக்டர்  சொன்ன மாதிரியே தியேட்டர்ல பார்த்தப்போ அவ்வளவு கைத்தட்டல் கிடைச்சுது. அப்புறம் ஜி.வி பிரகாஷ் சாரே போன் பண்ணி, படத்துல எனக்குக்கூட கிளாப்ஸ் இல்லை, உனக்குதான் கிளாப்ஸ் நீதாண்டா ஹீரோன்னு சொன்னார், இப்போகூட வாட்ஸ்அப்லையோ ஃபேஸ்புக்லையோ என்னோட போட்டோ போட்டு எதாச்சும் மீம்ஸ் வர்றதைப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கும். அதுக்கு முன்னால நிறையப் படங்கள் பண்ணியிருக்கேன். இந்த ஒரு படத்துல என்னை எங்கேயோ கொண்டுபோய் விட்டிருக்கார். இது எல்லாமே ஆதிக் ரவிச்சந்திரன் சார் கொடுத்த வாழ்க்கை.''

''எப்படி இருந்துச்சு அந்த கேரக்டரோட அனுபவங்கள்?''

''சொன்னா நம்ப மாட்டீங்க. கும்பகோணத்துல ஷூட்டிங் போயிட்டு இருந்துச்சு. ஷூட்டிங் பிரேக்ல பக்கத்துல இருந்த டீக்கடைப் பக்கம் போயிருந்தேன். உண்மையிலே பிச்சைக்காரன்னு நினைச்சுக் கையில காசு கொடுத்துட்டுப் போயிட்டாங்க. அப்போவே ஆதிக் சார் சொன்னாரு, இந்த கேரக்டர் நிச்சயம் ஹிட்டுதான்னு. மறுநாள் திருவிடை மருதூர்ல கோயில்ல ஷூட்டிங், ஷாட் ரெடின்னதும் என்னைக் கூப்பிட்டாங்க, உள்ளே கோயிலுக்குள்ள என்னை விடலை. நான் ஆர்ட்டிஸ்ட்னு சொன்னா நம்பாம அங்கே இருந்த யானைப்பாகன் எல்லாம் அடிக்க வந்துட்டாங்க. அப்புறம் புரொடக்‌ஷன் மேனேஜர் வந்து சொன்ன பிறகுதான் உள்ளேயே விட்டாங்க.''

''அடுத்து என்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?''

''இப்போ 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'லயும் அதே செங்கல் சைக்கோ கேரக்டர்ல தாத்தா, அப்பா, பையன்னு மூணு கெட்டப்ல தலைமுறை செங்கல் சைக்கோவா நடிச்சுருக்கேன். சோலோ டான்ஸ், சோலோ ஃபைட்டுன்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள் பண்ண வேண்டிய கேரக்டர் எனக்குக் கொடுத்துருக்காரு இயக்குநர். விஐபி-2ல கஜோல் மேடம்கூட காமெடி ரோல் பண்ணிருக்கேன். அபபுறம் பிரபுதேவா சார் படம்னு வாழ்க்கை போயிட்டு இருக்கு.''

வாழ்த்துகள் செங்கல்!

- ந.புஹாரி ராஜா