Published:Updated:

அலமாரியால் விவாகரத்து நடக்கிறதா? - ‘அலமாரா’ படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
அலமாரியால் விவாகரத்து நடக்கிறதா? -  ‘அலமாரா’ படம் எப்படி?
அலமாரியால் விவாகரத்து நடக்கிறதா? - ‘அலமாரா’ படம் எப்படி?

"ஒவ்வொருத்தர் வீட்டிலும் எல்லாருடைய கோபத்தைக் காட்ட ஒரு பொருள் இருக்கும். யார் மேல கோபம்னாலும் அந்தப் பொருள் மேல தான் காட்டுவாங்க. இந்த வீட்டில் அந்தப் பொருள் ஓர் அலமாரி. அது நான் தான்" - என்கிறது ஓர் அலமாரி.

இப்படிப்பட்ட ஒரு அலமாரியின் கதை தான் இந்த அலமாரா. 2013ல் 'மங்கி பென்' என்ற படம் மலையாளத்தில் வெளியானது. படத்தில் பேனாவுக்கு ஒரு முக்கிய ரோல் இருக்கும். சரியாக படிக்காமல் இருக்கும் சிறுவன்தான் ஹீரோ. தாத்தாவிடமிருந்து அந்த மங்கி பென் கிடைத்த பின் அவனது வாழ்க்கையே மாறிவிடும். ஆனால், அது ஃபேன்டசி கதை எதுவும் கிடையாது. பேனாவை சின்ன கருவியாக வைத்து கதை நகர்த்தப்பட்டிருக்கும். அதே போல் தான் இப்போது வெளியாகியிருக்கும் அலமாரா படமும். வயது கூடிக் கொண்டே போகும் அருணுக்கு (சன்னி வைன்) 47வது முறையாக பார்த்த பெண் அமைந்துவிட திருமணத்துக்காக செல்வார்கள். ஆனால், மணப்பெண் தான் விரும்பியவருடன் சென்றுவிட கல்யாணம் நின்றுவிடும். கொஞ்ச நாள் இந்த கல்யாணப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தான் வேலை செய்யும் பெங்களூருக்கே சென்றுவிடுகிறார். அதே ஊருக்கு வரும் அருணின் தங்கை உடன் படித்த ஸ்வாதிக்கு (அதிதி ரவி) வீடு பார்த்துக் கொடுக்க வேண்டிய சூழல் வருகிறது. 

அவரைப் பார்த்ததும் அருணுக்கு காதல். காதல் கல்யாணத்தில் 6முடிகிறது. இதற்கு இடையில் நண்பர்களுடன் சேர்ந்து அருண் பெங்களூரில் வாங்கிய இடத்தை ஆக்கிரமிக்கிறது ஒரு ரவுடி கும்பல். இந்த இரண்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் எங்கோ ஒரு மூலையில் வளர்ந்திருக்கும் மரம் வெட்டப்பட்டு அலமாரியாக செய்யப்படுகிறது. இந்த மூன்றும் சம்பவங்களும் இணையும். அதனால் அருண் - ஸ்வாதி திருமண வாழ்க்கை விவாகரத்து வரை செல்லும். எப்படி என்பதை செம ஜாலியாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ்.

ஒரு திருமணப் பேச்சில் துவங்குவதில் ஆரம்பித்து, இருவீட்டார் குடும்பத்துக்குள்ளும் நடக்கும் கலாட்டாக்கள், சின்னச் சின்ன விஷயங்கள் கூட பிரளயமாவது எனப் பல சீரியஸ் குடும்பப் பிரச்சனைகளை காமெடியாகச் சொல்லியிருப்பது கவர்கிறது. கூடவே ஒவ்வொரு பிரச்னையின் போதும் "எல்லாம் இந்த அலமாரியால வந்தது" என அருண் புலம்புவதும், "அடேய் நீங்க சண்டை போட்டுக்கறதுக்கும், எனக்கும் என்னடா சம்பந்தம். ஆனா, என்னத்தான்டா ஈஸியா அடிச்சுப்புடுறீங்க" என அலமாரிக்கு கவுண்டர் வாய்ஸ் கொடுத்திருப்பதும் சுவாரஸ்யமான ஒன்று. 

நடிப்பில்  யாரும் குறை வைக்கவில்லை. சன்னி வைன், அதிதி, ரெஞ்சி பணிக்கர், மணிகண்டன்,  சன்னியின் நண்பனாக வரும் அஜு வர்கீஸ் என எல்லோரும் நிறைவு. ரெஞ்சி பணிக்கர் - சீமா இடையே நடக்கும் உரையாடல்களும், மனைவிக்கு பயந்து அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்களுக்கும் உடனடியாக மாற்றிப் பேசும் பாணிக்கும் கைதட்டல் பலமாகவே ஒலிக்கிறது. ஆனால் சில கதாபாத்திரங்கள் கதையை இணைப்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போன்ற ஒரு உணர்வு. அதை படம் சில இடங்களில் நகராத போது உணர முடிகிறது. குறிப்பாக அந்த பெங்களூர் நில அபகரிப்பு கும்பலும், அதனால் வரும் பிரச்சனையும் மிக செயற்கையாக இருந்தது. அடுத்தடுத்த காட்சிகளில் நடக்க இருப்பதை எளிதாக யோசிக்க முடிவதும் சின்ன குறை. இன்னும் சுவாரஸ்யமான காட்சிகளையும், அழுத்தமான உணர்வுகளையும் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்த பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் எதிர்பார்த்தது தான். ஆனால் "அலமாரியும், தொட்டிலும், கட்டிலும் இல்ல வாழ்க்கை, அது என்னென்னு வாழ்ந்து பார்த்தா தான் தெரியும்" என இயல்பாக ஒரு வசனத்தை வைத்து அதை அழகுபடுத்தியது நன்று. 'குடும்பத்துக்குள் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டால், அலமாரி இல்லை அடுப்புக்கரி கூட பிரச்சனையைத் தரும்' என்கிற சின்ன மெசேஜை போகிற போக்கில் ஜாலியாக சொல்லிவிட்டுப் போவதால் இந்த அலமாரி கொஞ்சம் நல்ல மாதிரி. வேற மாதிரி கதை வேணுமா? வாங்க டைம்பாம் வெடிக்கறதுக்குள்ள படிக்கலாம்!.

அடுத்த கட்டுரைக்கு