Published:Updated:

”திருநங்கைகளுக்காகத்தான் இந்த மியூசிக் ஆல்பம்!” - கிருத்திகா உதயநிதியின் புது ப்ராஜக்ட் #StandByMe

”திருநங்கைகளுக்காகத்தான் இந்த மியூசிக் ஆல்பம்!” - கிருத்திகா உதயநிதியின் புது ப்ராஜக்ட் #StandByMe
”திருநங்கைகளுக்காகத்தான் இந்த மியூசிக் ஆல்பம்!” - கிருத்திகா உதயநிதியின் புது ப்ராஜக்ட் #StandByMe

”திருநங்கைகளுக்காகத்தான் இந்த மியூசிக் ஆல்பம்!” - கிருத்திகா உதயநிதியின் புது ப்ராஜக்ட் #StandByMe

கிருத்திகா உதயநிதியின் புதிய பிராஜெக்ட் ‘ஸ்டான்ட் பை மீ'க்கு இசை சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம். ‘ஸ்டான்ட் பை மீ' திரைப்படம் அல்ல,  திருநங்கைகளின் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வுக்காக 'சியர்' என்கிற தொண்டுநிறுவனத்துடன் இணைந்து கிருத்திகா இயக்கியுள்ள மியூசிக் வீடியோ.

“திடீரென திருநங்கைகளின் மீது ஏற்பட்ட கரிசனத்தின் வெளிப்பாடு அல்ல இது... நீண்டகால ஆதங்கம்” என்கிற முன்குறிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் கிருத்திகா உதயநிதி.

''சியர் அமைப்பைச் சேர்ந்த அஷ்வின் திருநங்கைகளுக்கான நலப்பணிகள் பண்ணிட்டிருந்தார். அஷ்வின் என்னைச் சந்திச்சபோது, சமுதாயத்துல ஒடுக்கப்பட்ட நிலையில இருக்கிறதையும், அவங்க நிலையை மாத்த ஏதாவது செய்யணும்ங்கிறதையும் பத்திப் பேசினார். திருநங்கைகளோட பிரச்னைகளை குறும்படமா எடுத்துத்தர முடியுமானு கேட்டாங்க. குறும்படத்தைவிட, மியூசிக் வீடியோவா பண்ணினா இன்னும் அதிகம் பேரைப் போய் சேரும்னு பிளான் பண்ணினோம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்னு இந்த மியூசிக் வீடியோவுக்காக நான் அணுகின எல்லாருமே யோசிக்காம உடனே ஓகே சொன்னாங்க. எல்லாம் முடிவாகி, எட்டு மாசமா இதுக்கான வேலைகள் போயிட்டிருக்கு... திருநங்கைகளோட வாழ்க்கைத் தரம் பத்தின கவலை எனக்குள்ளயும் ரொம்ப காலமா இருந்தது. வேலை வாய்ப்பு, சமுதாய அங்கீகாரம், உணர்வுகளுக்கான மதிப்புனு திருநங்கைகளோட கோரிக்கைகள் எல்லாமே நியாயமானவை. அதைத்தான் நாங்க இந்த மியூசிக் ஆல்பம் மூலமாகவும் சொல்லப் போறோம். பிப்ரவரி 14 ரிலீஸ்...'' 

இதற்கு முதல் விதை போட்ட  அஷ்வினை அறிமுகப்படுத்துகிறார் கிருத்திகா உதயநிதி.

''சமூகவியல் படிச்ச பின்னணியோடு, திருநங்கைகளோட வாழ்க்கை பற்றி ஆய்வுகள் நடத்தினோம். அவங்களோட தேவைகள் என்ன, எதுக்காக ஒடுக்கப்பட்டிருக்காங்க, அவங்களுக்காக அரசுத் தரப்புல என்னென்னத் திட்டங்கள் இருக்குனு எல்லாத்தையும் ஆய்வு செய்தோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டுலதான் திருநங்கைகளுக்கான நலவாரியம் இருக்கு. அதுல உள்ள திட்டங்கள் முறையா இவங்களுக்குப் போய் சேருதானு பார்த்தோம். இவங்களுக்குள்ள மறைஞ்சிருந்த திறமைகளைக் கண்டுபிடிச்சு என்கரேஜ் பண்ணினோம். இன்னும் பெரிய அளவுல ஏதாவது செய்ய நினைச்சுதான் கிருத்திகா அக்காவை அணுகினோம். நிறைய குறும்படங்கள் இயக்கி விருதுகள் வாங்கினவர் அவர்.  திருநங்கைகளுக்காகவும் ஒரு குறும்படம் எடுத்துத் தரச் சொல்லிகேட்டபோது, சும்மா ஓகே சொல்லாம எங்கக்கூட களத்துல இறங்கி நிறைய வேலை பார்த்தாங்க. இந்த மக்களோட பழகி, அவங்களைப் புரிஞ்சுக்கிட்டுதான் அடுத்தக் கட்டத்துக்கே  தயாரானாங்க. இந்த வீடியோ முடியறவரைக்கும் சாப்பாடு, தூக்கம், வீடு எல்லாத்தையும் மறந்து எங்க கூடவே இருந்தாங்க.''

கிருத்திகாவின் அர்ப்பணிப்பு குறித்த பிரமிப்பு விலகாமல் பேசுகிறார் அஷ்வின்.

''குழந்தை பிறக்கும்போது பெற்றோருக்கு இருக்கிற உச்சக்கட்ட மகிழ்ச்சி, அந்தக் குழந்தை மூன்றாம் பாலினம்னு தெரிஞ்சதும் அப்படியே தலைகீழா மாறிடுது. 'செத்துப் போ'னு சொல்ற அளவுக்கு வெறுத்து ஒதுக்கறாங்க. அப்புறம் வாழ்க்கையைத் தேடி எங்கேயோ ஓடறாங்க. ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போது தேசமே கொந்தளிக்குது. அதுவே ஒரு திருநங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அது வெளியில தெரியறதில்லை. 'உயிர் பிழைச்சா போதும்னு தப்பிச்சு வந்தோம்'னு சொன்னவங்களைப் பார்த்து மிரண்டு போனேன். 

எனக்கே இது புது அனுபவமாகத்தான் இருந்தது. இதை ஒரு கான்செப்டா உருவாக்கிறதே பெரிய சவாலா இருந்தது. இவங்களோட வாழ்க்கையில ஏற்பட வேண்டிய மாற்றங்களைப் பத்தி சொல்லணும்னு நினைச்சேன். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசும்போது, 'அவங்க காசு பிடுங்குவாங்க... மோசமா நடந்துக்கிட்டிருக்காங்களே'னு அவங்கவங்க அனுபவங்களைச் சொன்னாங்க.

திருநங்கைகள் தரப்புலயோ, 'எங்களுக்கு யாரும் வேலை கொடுக்கிறதில்லை. தப்பான கண்ணோட்டத்துலயே பார்க்கறாங்க'னு தங்களோட தரப்பு நியாயத்தைச் சொல்றாங்க. இது ஒரு தரப்புல மட்டும் மாற்றம் தேவைப்படற விஷயமில்லை... எல்லோரும் சேர்ந்து மாறணும்னு புரிஞ்சது. சமுதாயம் இவங்களை ஏத்துக்கிட்டா இவங்க வாழ்க்கை எப்படி மாறும், ஏத்துக்கத் தவறினா அவங்க வாழ்க்கை எப்படி மாறும்னு இந்த மியூசிக் ஆல்பத்தில் ரெண்டு கோணங்கள்லயும் சொல்லியிருக்கோம். இவங்களும் நம்மளைப் போலத்தான்... அவங்களைத் தனிச்சு வைக்காதீங்க. தனியா பார்க்காதீங்கனு சொல்றதுதான் நோக்கம்..'' மியூசிக் ஆல்பத்தின் சாராம்சத்தை சுவாரஸ்யமாகச் சொல்கிறார் கிருத்திகா.

"தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகள் கேலிக்குரியவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஒரு இயக்குநராக கிருத்திகாவின் பதில் என்ன?"

''இவங்களைப் புரிஞ்சுக்காத சிலர் செய்யற தவறு அது. எனக்கே கூட இவங்ககூட பழகின பிறகுதான் அவங்களோட உண்மையான நிலையும் வாழ்க்கைப் போராட்டங்களும் புரிஞ்சது. பழகற வரைக்கும் நானும் இவங்களை பாவமா, இரக்கத்தோடுதான் பார்த்திருக்கேன். அவங்களுக்கும் மனசு இருக்கு. பாசம், கோபம், காதல், ஏக்கம்னு எல்லா உணர்வுகளும் அவங்களுக்கும் உண்டுனு அப்புறம்தான் புரிஞ்சது. இவங்களை முதல் முறை சந்திச்சு கதைகளைக் கேட்ட அன்னிக்கு ராத்திரி தூக்கமே வரலை.

என்னுடைய படங்களில் ஒருபோதும் நான் இவங்களை இழிவுப்படுத்தற மாதிரி காட்ட மாட்டேன். தவிர இவங்கள்ல யாராவது என்கூட சேர்ந்து வேலை பார்க்க ஆர்வமா இருந்தாங்கன்னா வேலை கொடுக்கவும் நான் தயங்க மாட்டேன். இப்படி இருக்கிற  யாரும் தானா விரும்பி இந்த நிலையை ஏத்துக்கிறதில்லை. பிறக்கும்போதே அவங்களுக்குள்ள உண்டாகிற மாற்றம் இது. தாம் விரும்பினபடி மாறும்வரைக்கும் அவங்களால நிம்மதியா வாழ முடியாது. அது கேன்சரோட வாழறது மாதிரி கொடுமையானது. அந்த வலியை எல்லாரும் புரிஞ்சுக்கிட்டாலே அவங்களை ஏத்துக்கவும் தயாராயிடுவாங்க...'' - அக்கறையாகச் சொல்கிறார் இயக்குனர்.

சன் மியூசிக், இசைஅருவி போன்ற மிகச்சில மியூசிக் சேனல் தவிர, தமிழில் மியூசிக் ஆல்பங்களுக்கான பிளாட்ஃபார்மே இல்லை. இந்த சூழலில் திருநங்கைகள் குறித்த மியூசிக் ஆல்பம் மூலம் அவர்களது வாழ்வில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும்?

''இந்த ஒரு ஆல்பத்துல சொல்ற விஷயங்களோடு இதை நிறுத்திடக்கூடாது. இவர்களில் நிறைய பேர் வேலை கிடைச்சா உழைக்கத் தயாரா இருக்காங்க. வேலை வாங்கிக் கொடுக்கறதோடும் நிறுத்திக்க முடியாது. அப்புறம் அதுல அவங்களுக்குப் பிரச்னைகள் வந்தால் எங்களை அணுகலாம்னு நம்பிக்கையைக் கொடுத்திருக்கோம். குழந்தையா இருக்கும்போதே இவங்களுடைய பிரச்னையைக் கண்டுபிடிச்சு, அவங்களை சரியா வழிநடத்தி, தவறான நபர்கள் கைகள்ல சிக்காமப் பார்த்துக்கிற ஐடியாவும் இருக்கு. சின்ன வயசுலயே குழந்தைக்கும் பெற்றோருக்கும் கவுன்சலிங் கொடுக்கணும். இந்த ஒரு மியூசிக் ஆல்பத்தோட எனக்கும் இவங்களுக்குமான இந்த பந்தம் முடிஞ்சிடாது. எப்போதும் இவங்க கூட நான் இருப்பேன்...'' உறுதியுடன் மட்டுமல்ல உண்மையாகவும் சொல்கிறார் கிருத்திகா உதயநிதி. 

கோபிகா :

''என்னைப் பத்தி நான் முழுமையா உணர்வதற்கு முன்னாடியே 'உன் நடை சரியில்லை, பேச்சு சரியில்லை'னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க என்னைப் பத்திப் பேசினாங்க. அதோட பிரதிபலிப்பு வீட்டுக்குள்ளயும் வந்தது. 'நீ இப்படியே இருந்தா, நாங்க எல்லாரும் செத்துடுவோம்'னு மிரட்டினாங்க. எல்லாரும் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க. பழைய சாப்பாடுதான் கொடுப்பாங்க. எல்லாரும் வீட்டுக்குள்ள ஒண்ணா தூங்குவாங்க. என்னை மட்டும் வெளியில படுக்க வைப்பாங்க. நண்பர்களா பழகினவங்களும் என்னைத் தப்பாப் பார்க்க ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல வாழ்க்கையையே வெறுக்கத் தொடங்கினபோது என்னை மாதிரியே உள்ள சிலரோட அறிமுகம் கிடைச்சது. நான் தனியாள் இல்லைனு தெரிஞ்சது. அதுவும் எங்க வீட்டு ஆட்களுக்குப் பிடிக்கலை.

செத்துடலாமானு யோசிச்சேன். சின்ன வயசுலேருந்தே பிரமாதமா சிலைகள் செய்வேன். அந்தத் திறமைதான் எனக்கு வாழறதுக்கான தைரியத்தைக் கொடுத்தது. வீட்டை விட்டு ஓடிவந்தேன். ஆபரேஷன் மூலம் என்னை முழுமையான பெண்ணா மாத்திக்கிட்டேன். திருநங்கைனு தெரிஞ்சதும் அடுத்தவங்களோட பார்வையும் அணுகுமுறையும் மாறிடும். ராத்திரியில அன்பொழுகப் பேசுவாங்க. பகல்ல, 'தயவுசெய்து பக்கத்துல வராதீங்க.. பேசாதீங்க...'னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்வாங்க. அது எங்களுக்கு எவ்வளவு வலிக்கும்னு யாருக்கும் புரியறதில்லை.

சியர் அமைப்புல இணைஞ்சேன். இங்கே வந்ததும் என்னை திருநங்கையா, வித்யாசமா பார்க்கிறது மாறினது. அவங்கள்ல ஒருத்தரா நடத்தினாங்க. எங்க உணர்வுக்கும் திறமைக்கும் மதிப்பு கொடுத்தாங்க.

எல்லா மனிதர்களும் சொல்லி வச்சது மாதிரி எங்களைப் பார்க்கிற முறையை மாத்திக்கிட்டாலே போதும். நாங்க யார்கிட்டயும் கெஞ்சவோ, அவமானப்படவோ தேவையில்லை. என்னை ஒதுக்கி விரட்டின என் குடும்பத்தை நான்தான் தூக்கி நிறுத்தியிருக்கேன். இப்படியொரு பிள்ளை கிடைக்க என்ன புண்ணியம் பண்ணினேன் என்று எங்கம்மா கண்ணீர் விடறாங்க. இன்னிக்கு நான் ஜெயிச்சிட்டதாகவே நினைக்கிறேன்.''

மோகனா :

''பனிரெண்டு வயசுல என்னைப் பத்தி உணர்ந்தேன். ஸ்கூல்ல கிண்டல் பண்ணுவாங்க. வீட்டுல யாருமே அதை நம்பலை. பிளஸ் டூ வரைக்கும் படிச்சேன். அப்புறம் வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்னையாயிடும்னு மும்பைக்குப் போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டு மாறினேன். அண்ணனுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னபோது 'வீட்டுக்கு வந்துடாதே... குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்'னு சொன்னான். பேச முயற்சி செய்தாலும் தவிர்ப்பான். இப்படியே பத்து வருஷங்கள் போச்சு. என்னைக் காணலைனு அம்மாவும் அப்பாவும் கோயில் கோயிலா வேண்டிக்கிட்டிருந்தாங்க. அண்ணன் என்னைப் பத்தி யாருக்கும் சொல்லலை. ஒரு டி.வி நிகழ்ச்சியில நான் பேசினதைப் பார்த்துட்டுத் தேடி வந்தாங்க. பத்து வருஷம் கழிச்சு மறுபடி குடும்பத்தோட இணைஞ்சேன். கோயம்புத்தூர்ல கொஞ்ச காலம் இருந்தேன். அங்கே நிறைய திருநங்கைகள் சமையல் வேலையில இருக்காங்க. அங்கே எந்த வீட்ல என்ன விசேஷம் நடந்தாலும் திருநங்கைகள்தான் சமையல் செய்வாங்க. எனக்கு அம்மாவா இருந்தவங்க பிரியாணி மாஸ்டர். அவங்கக்கிட்டருந்து சமையல் கத்துக்கிட்டேன். சென்னைக்கு வந்து, என் தோழியோடு சேர்ந்து கேட்டரிங் பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். இன்னிக்கு என் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கு...''

அர்ச்சனா :

''எனக்கு பூர்வீகம் பெங்களூரு. சின்ன வயசுலயே சமைக்கிறது, பாத்திரம் கழுவறது, வீட்டு வேலைகள் செய்யறதுனு பொண்ணுங்க பண்ற எல்லா  வேலைகளையும் செய்வேன். 'நீ என்ன பொம்பிளை மாதிரி பண்றே'னு அப்பா அடிப்பார். 12 வயசுல என் மாற்றத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறி, திருநங்கைகளோடு சேர்ந்துட்டேன். அது தெரிஞ்சு என்னைக் கூட்டிட்டுப் போய், என் முடியெல்லாம் வெட்டி, ஒரு  ரூமுக்குள்ள அடைச்சிட்டாங்க. என்னால முடியலை. என் நிலைமையைச் சொல்லிட்டு மும்பை போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். எங்க அத்தைக்கு என் மேல பாசம் அதிகம். அவங்க என்னை அவங்களோட மகளாகவே ஏத்துக்கிட்டாங்க. எங்க வீட்டுல யாருக்கும் என்மேல பாசம் கிடையாது. ஏதாவது தேவைன்னா மட்டும்தான் என்னைக் கூப்பிடுவாங்க. இன்னிக்கும் அதுதான் நிலைமை. என் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பே இல்லையேனு வேதனையா இருந்தது. அதுக்காகவே சொந்தக்காரங்களோட குழந்தையை தத்தெடுத்து வளர்த்திட்டிருக்கேன். பெண் குழந்தை, ஆறு வயசாகுது. அவளைப் படிக்க வைக்கிறேன். அவதான் என் உலகம். கேட்டரிங் பண்ணிட்டிருக்கேன். அக்கம்பக்கம் நல்ல மரியாதையோட நடத்தறாங்க. அந்தக் குழந்தைக்கு அம்மாவா இருக்கிற அந்த ஆனந்தம் என் வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுத்திருக்கு.''

செல்வம் :

''நான் ஒரு திருநம்பி. பெண்ணா பிறந்து பையனா மாறினேன். பசங்ககூடதான் விளையாடுவேன். பொண்ணுங்களைப் பார்த்தாலே பிடிக்காது. நான் மாறும்வரை திருநங்கை, திருநம்பினு யாரையும் பார்த்ததில்லை. பிறகுதான் என்னைப் போல நிறைய பேர் இருக்காங்கனு தெரிஞ்சது. ஒரு பெண்ணைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்திருக்கேன். அவங்க வீட்ல பிரச்னை பண்ணிப் பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. எங்கம்மா அப்பா என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. 'நீ எப்படி இருந்தாலும் எங்களுக்குப் பிள்ளையா இருந்தா போதும்'னு ஏத்துக்கிட்டாங்க. சென்னைக்கு வந்து வேலைகள் செய்தேன். சியர் ஆபீசுக்கு வந்தேன். அவங்க மூலமா எனக்கொரு வேலையும் கிடைச்சது. இப்ப ஆர்கானிக் ஃபார்மிங் பண்ணிட்டிருக்கேன். வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு. இதுதான் எனக்கான ஆதாரம்னு உணர்ந்திருக்கேன்.''

- ஆர்.வைதேகி

படங்கள்: ராஜசேகரன்

அடுத்த கட்டுரைக்கு