Published:Updated:

‘‘பெண்களின் நவீனக் குரலாக ஒலிக்கும் காற்று வெளியிடை!’’ - கவிப்பேரரசு வைரமுத்து #VikatanExclusive

‘‘பெண்களின் நவீனக் குரலாக ஒலிக்கும் காற்று வெளியிடை!’’ - கவிப்பேரரசு வைரமுத்து #VikatanExclusive
‘‘பெண்களின் நவீனக் குரலாக ஒலிக்கும் காற்று வெளியிடை!’’ - கவிப்பேரரசு வைரமுத்து #VikatanExclusive

'காற்று வெளியிடை' படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. காதலர் தினத்தில் படத்தின் புரோமோ சாங்காக வெளியான "வான் வருவான்" பாடல் பெண்ணுக்கு என்று சமூகம் வகுத்துள்ள அத்தனை எல்லைகளையும் உடைத்துள்ளது. இப்பாடல் உருவான அனுபவத்தை விகடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். 

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து...கடந்த 25 ஆண்டுகளாய் அழகுத் தமிழால்..காற்று வெளியை ஆள்கிற நட்பு இது. இவர்கள் மூவரும் இணைந்து உருவாக்கியுள்ள காதல் தமிழ்ப் பாடல்கள் மனதின் ஈரம் வாங்கி நனையும் ஒலி ஓவியங்கள். இவர்களுடைய பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தில் காதலர்களின் தேசிய கீதாமாகிவிடுகின்றன. இந்தாண்டின் காதலர் தினத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் இசை விருந்தாகி கவிப்பேரரசு வைரமுத்துவின் கார்காலக் கவிதையாக நம் காதுகளை நனைத்த ‘வான் வருவான்’ பாடல் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்து கிடந்த சங்க காலத்துக் காதல் திமிரை நிமிர்ந்து எழ வைத்துள்ளது. காமத்தின் கடைசிச் சொட்டுத் தேன் சுவையை இன்றைய நவீனப் பெண்ணின் குரலாய் குழைந்து குழைத்து பாடலாக்கியுள்ளது கவிப்பேரரசின் மந்திர விரல்கள்...

கார்த்தியின் காந்தப் பார்வையும், அதிதி ராவின் திமிர் கலந்த காதலும் வான் வெளியில் கத்தி வீசும் வன்மத்தை காட்சியில் நிறைத்தது...."வான் வருவான்" என்று வான் வானாய் கரைந்தோடும் கவிப்பேரரசு வரிகள் பல காதலர்களை தூங்கவிடாமல் புரட்டியது. காமம் பற்றி பெரிதும் பேசிவிட முடியாத தவிப்பு எப்போதும் பெண்களுக்கு உண்டு. ஆனால் அதை உடைத்து பெண்ணின் காமத்தின் ஆணி வேர் வரை அசைத்திருக்கிறது இப்பாடல் வரிகள்..கருத்தியல் ரீதியாக இப்பாடல் வரிகள் நவீனப் பெண்ணின் தீர்க்கமான குரலாக திசைகள் எங்கும் தெறிக்கிறது. 

தன் ஆணை அணு அணுவாய்ப் புரிந்துகொள்கிற பெண் இவள், ‘‘வான் வருவான் தொடுவான் 
மழை போல் விழுவான்
மர்மம் அறிவான் 
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிர்வான் 
தொலைவில் பணிவான்
கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவான் 
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்..’’ என்று கவிதையால் மனதில் ஏதோ ஒரு வலியைப் புரட்டுகிறாள்...

‘‘என் கள்ளக் காமுகனே
அவன் தான் வருவான்...’’ எனும் வரிகளில் தனக்கும் அவனுக்குமான காமத்தை வம்புக்கு இழுக்கிறாள்..

‘‘என்னோடிருந்தால் 
எவளோ நினைவான்’’ தன் காதலின் திமிரால் அவனது நினைவுகள் கூட பிசகாது என்று உறுதியாகச் சொல்கிறாள்.

‘‘அவளோடிருந்தால்
 எனையே நினைவான்’’ தன் காமத்தின் ஆழத்தை வேறு எங்கும் அவன் உணர்ந்திடவோ, கடந்திடவோ முடியாது எனும் கர்வம் கூர் ஆயுதமாய் மடமைகள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் குத்திக்கிழிக்கிறது. தன் காதல் புரவியில் ஏறி அவள் காற்றைக் கடந்து வான் சென்று தன் காதலனை அடைகிறாள்.

இந்தப் பாடல் முடிந்த பின்னும் முடியாத சொல் ஒன்று ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள்ளும் விழுந்து உயிர்வரை உருள்கிறது.
காற்று வெளியிடை இசையும், கவிதையும் புகைப்படங்களும் இப்படியொரு அனுபவத்தை அள்ளித் தந்தது. இயக்கமும், இசையும், கவிதையும் ஒற்றை நேர்கோட்டில் கை பிடித்து ரசனைக்குள் நுழைகிற பேரானந்தத்தை காற்றுவெளியிடை குழு இன்று உலக மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்பாடல் முழுமையாய் மக்கள் பார்வைக்கு வெளியாகிறது.

"வான் வருவான்" பாடலில் பெண்ணுக்கான அத்தனை எல்லைகளையும் உடைத்து எழுதியிருக்கும் தனது அனுபவத்தை உங்களோடு விகடன் வழியாக பகிர்ந்துகொள்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
‘‘இது சொல்லிலிருந்து பிறகு கருத்துகளுக்கு அழைத்துச் சென்ற பாடல். அந்தக் கதாநாயகன் ஒரு விமானம் ஓட்டி. அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். என்னை வான்வெளிக்கு அழைத்துச் செல்வாயா.. என்று கேட்கிறாள். அவன் மீது தான் கொண்ட காதல், தான் அவன் மீது கொண்டிருக்கும் காதலையும் வெளிப்படுத்த வேண்டிய சூழல். வான் வான் என்று முடியும்படி மணிரத்னம் எழுதக் கேட்டுத் தொடங்கியதே இப்பாடல்

சொற்களுக்கு பின்னால் போய் கருத்துகளைக் இழந்து விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். காதல் என்கிற உணர்வு மனித இனம் இருக்கும் வரை இருக்கும். காதலுக்கு பல பொருள்கள் உண்டு. அன்பு, பக்தி, பாசம் இப்படி காதலுக்கு பல முகங்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமான முதியோர் காதல் பற்றி பாரதிதாசன் சொல்வார். அது கருணை.  ஹார்மோன்கள் சத்தமிடுகிற வயதில், இளமை தன் நர்த்தனத்தைத் தொடங்கும் வயதில்  இனக்கவர்ச்சிக்குப் பின் அதை ஒட்டிப் பிறப்பது காதல் என்று கருதப்படுகிறது.  மன வேட்கை, உடல் வேட்கையையும் காதல் என்கிறோம். 

காதல் என்ற உணர்வு மட்டும் எப்போதும் ஒன்றாகவே உள்ளது. காலம்தோறும் இந்த கான்செப்ட் மாறுகிறது. காதலின் உள்ளடக்கத்தை இடம் மாற்றிப் போட்டுள்ளது. நவீன உலகமய காலத்தில், நுகர்வுக் கலாசாரத்தில் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். தொழில் நுட்ப வளர்ச்சி நம்மை வேறு இடத்துக்குக் கொண்டு போயுள்ளது.  

ஒரு காலத்தில் ஆணும் பெண்ணும் சந்திப்பதோ பேசுவதோ அவ்வளவு சாதாரணம் கிடையாது. அதற்கு ஊர்த் திருவிழா வர வேண்டும். அப்போதும் பார்வையால் மட்டும்தான் பேச முடியும். சாதிய அமைப்பால், மதங்களின் அமைப்பால், உறவுகளின் கட்டுமானத்தால் இறுகிக் கிடக்கிற ஒரு சமூகத்தில் காதல் என்பது ரொம்ப கள்ளத்தனமாகத்தான் பார்த்துக்கொள்ள முடிகிறது. நேரில் பேச முடியாது. தொழில்நுட்ப யுகம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்துள்ளது. யாரும் யாரோடும் பேசலாம், பழகலாம், மனம் இரண்டும் ஒன்றுபட்டால் அதற்கு மேலும் பயணப்படலாம் என்பது மாதிரியான உறவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 

அதுதான் இந்த வான் பாட்டு. பொத்தி வைத்த காதலாக இல்லாமல் பூத்துவிட்ட காதலாக, வெடித்து வந்த காதலாக, பழைய கயிறுகளை அறுத்தெரிகிற காதலாக, வெட்கத்தை உடைத்துப் போடுகிற காதலாக, அச்சத்தை நசுக்கிப் போடுகிற காதலாக நான் இதைப் பதிவு செய்துள்ளேன். இதனால்தான் இன்றைய பெண்கள் இது எங்களது உணர்வு மாதிரி இருக்கிறதே என்று கொண்டாடுகிறார்கள். கலை நிரந்தரமாக இருந்தாலும் கலை நிகழ் காலத்தையும் பிரதிபலிக்க வேண்டும். இது நிகழ்காலப் பெண்களின் மனநிலையாக இருக்கும் என்று கருதுகிறேன். எழுதுகிற போது இதில் ஒரு சர்ச்சை வரும் என்று நினைக்கவில்லை, சர்ச்சையை உண்டாக்குவது என் நோக்கமல்ல. ஆனால் இது நவீனப் பெண்களின் குரல் சார்ந்த கவிதையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படி வந்திருப்பதாக நினைக்கிறேன்’’ என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

கேட்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இப்பாடல் எழுப்பும் கேள்விகள் அதிகம். 

-யாழ் ஸ்ரீதேவி