Published:Updated:

“இன்னும் கொஞ்சம் வருசம் என் இம்சையைப் பொறுத்துக்கோங்க!” - ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலகலத்த மணிரத்னம்!

“இன்னும் கொஞ்சம்  வருசம்  என் இம்சையைப் பொறுத்துக்கோங்க!” - ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலகலத்த மணிரத்னம்!
“இன்னும் கொஞ்சம் வருசம் என் இம்சையைப் பொறுத்துக்கோங்க!” - ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலகலத்த மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்க காதலாகி காதலிலே உருவாகி வரும் படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒவ்வொரு பாடலுமே செம ஹிட். ‘காற்றுவெளியிடை’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியில் ரோஜாவில் தொடங்கிய பயணத்திற்கு இது 25-வது ஆண்டு. இசைக்கொண்டாட்டத்தோடு நிகழ்ச்சியும் தொடங்கியது. 

மதன்கார்க்கி: 

“பாடல்களைக் கேட்டு ரசிக்க மிகப் பெரிய ரசிகப் பட்டாளமே இருக்கு. இவர்களுக்கான பாடலை என்னுடைய தந்தை எப்படியெல்லாம் எழுதியிருப்பார் என்பதும், இந்த 25 வருட பயணமும் அசாத்தியமானது. சமூக நிகழ்வுகளில் தொடங்கி காதல் வரைக்கும் பாடல்களில் கவிதையாக மீட்டியிருப்பதை இன்னும் 25 ஆண்டுகள் பேசினால்தான் தீரும். ஆனால் அதை நான் பேசப்போவதில்லை. தந்தையின் பாடல்களின் மூலமாகவே பேசவேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் பாடலைக் கோர்த்து, இதை அவர்களுக்கே மாலையாக அணிவிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். 

‘சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை... ’

‘தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப்பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளியோடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் இரண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

‘போனவை அது போகட்டும் வந்தவை இனி வாழட்டும் 
தேசத்தின் எல்லைக் கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்.... ’

‘குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூரைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்...’

‘மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
ஒத்தையடிப் பாதை உன்கூட பொடி நட... ’

‘ஆணுக்கோ பத்து நிமிஷம் பொண்ணுக்கோ ஐந்து நிமிஷம்
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய பொண்ணு 
கிண்டி கெழங்கெடுப்பா...” 

-‘ரோஜா’வில் தொடங்கி, ‘காற்றுவெளியிடை’ வரைக்கும் மதன்கார்க்கிக்குப் பிடித்த 25 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதிலிருக்கும் பாடல் வரிகளைக் கவிதையாகச் சொல்லிச் சென்றார் மதன்கார்க்கி. 

ஏ.ஆர்.ரஹ்மான்: 

“மணிசார் கிடைச்சது எனக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த 25 ஆண்டுப் பயணத்தை இப்போ நினைச்சுப் பார்த்தாக்கூட ஆச்சர்யமாகத்தான் இருக்கு. எங்க டீமோட வேலை செய்யுறது எப்பொழுதுமே சந்தோஷமா இருக்கும்.” 

மணிரத்னம்: 

“இந்த 25 ஆண்டுப் பயணம் நேத்து நடந்த மாதிரி இருக்கு. அப்போ இருந்த அதே சிரிப்புதான் இப்பவும் ரஹ்மான்கிட்ட பார்க்குறேன். ஆனா இப்போ ரஹ்மான் ரொம்ப பெரிய இடத்துக்குப் போய்ட்டது ரொம்ப சந்தோஷமான விஷயம். என்னோட ஒவ்வொரு படத்துக்குமே, அவரோட முதல் படம் மாதிரி ஸ்பெஷலா புதுசாதான் மியூசிக் கொடுப்பார். அடுத்த நாள் ஷூட்டிங் இருக்கும். முந்தைய நாள் பாட்டு ட்யூன் கேட்கலாம்னு போவோம். ஆனா படத்துக்கான தீம் மியூசிக் முடிச்சி வச்சிருப்பார். ‘நாளைக்கு ஷூட்டிங் இருக்கே’னு அவர்கிட்ட கோவப்படக்கூட முடியாது. ஏன்னா அவர் போட்டு வச்சிருக்குற தீம் மியூசிக் கேட்டுட்டோம்னா, மத்ததெல்லாம் மறந்துபோய்டும். இசையைத் தேடிப்பிடிச்சுக் கொடுப்பார் ரஹ்மான். இவரும் வைரமுத்து சாரும் இந்த 25 ஆண்டுகளா பொறுமையா என்கூட இருந்துட்டாங்க. இன்னும் சில ஆண்டுகள் மட்டும் என் இம்சையைப் பொறுத்துக்கிட்டா போதும். அடுத்த படத்துக்கு கம்போசிங் எப்போனு இப்போவே சொல்லிடுங்க ரஹ்மான்...” - மேடையிலேயே கேட்டுக்கொண்டே சிரித்தார் மணிரத்னம். 

“காற்றுவெளியிடை படத்துல போர் விமானியா கார்த்தி நடிச்சிருக்கார்.  விமானப் படை அதிகாரியின் பின்னணியில் வரும் காதல் கதை. முழு ஷூட்டிங்கும் காஷ்மீர்ல நடத்திருக்கோம். ஒவ்வொருமுறை ஷூட்டிங்கிற்காகப் போகும்போதும், போர்ப்படை அதிகாரிகள், ஜவான்களைக் கடந்து போகணும். ஒவ்வொரு முறையுமே பிரமிப்பா தான் இருக்கும். அவங்க எதையுமே வெளிக்காட்ட மாட்டாங்க. நமக்காகத்தான் எல்லையில் வீரர்கள் இருக்காங்க. இந்தப் படம் மூலமாக இராணுவ அதிகாரிகளுக்கு என்னுடைய மரியாதையையும் நன்றியையும் சொல்லிக்கிறேன்.”  

அதிதி ராவ்: 

“சின்ன வயசுக் கனவு, மணி சாரால இப்போ நிஜமாகியிருக்கு. மணிசார் திரைக்கதையும், ரவிவர்மன் சாரோட மேஜிக்கல் கேமிராவும் படத்தை வேற பரிமாணத்துல கொண்டு வந்துருச்சு. மணி சார் படத்துல நடிக்கிறதுனாலே தனி எனர்ஜி வந்துடும். நிஜமாகவே மெட்ராஸ் டாக்கீஸ் டீம் என்னோட குடும்பம் மாதிரிதான். என்னோட ஃபேவரைட் ஸ்டார் கார்த்தி. அவரோடையே நடிக்கிறதுலாம் நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஃபீல் ஹேப்பி & லவ்லி..” 

சூர்யா: 

“ஆயுத எழுத்து நடிக்கும்போது, அதே படத்துல கார்த்தி உதவி இயக்குநரா வேலை பார்த்தார். ஷுட்டிங் நேரத்தில் கூட்டத்தை விலக்கி விட்டுக்கிட்டு இருப்பார். இப்போ மணி சார் படத்தோட ஹீரோ. கார்த்திக்கு இது மிகப்பெரிய சாதனைதான். ‘காற்றுவெளியிடை’ போஸ்டர் ரிலீஸாகும்போது செம ஷாக். கார்த்தியை இந்த கெட்டப்பில் நாங்க பார்த்ததே கிடையாது. இதுக்கு முன்னாடி பண்ண பட ஸ்டைல்லயே, மணிசார் படத்தையும் பண்ணிடலாம்னு நம்பிக்கை இருக்கும். ஆனா மணிசார், “ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்..”னு  நம்ம கெட்டப்பையே மாத்திடுவார். நாம பார்க்காத கார்த்தியைக் காட்டிருக்கார். ஒவ்வொரு படத்துலயுமே ஹீரோக்களை வேற மாதிரி மாத்திடுவார். விமானம் ஓட்டுறது கார் ஓட்டுற மாதிரி கிடையாது. நிறைய விஷயங்களை ஞாபகம் வச்சிக்கணும். பொறுமையும் நிதானமும் தேவை. அதை கார்த்தி நல்லாவே பண்ணிருக்கார். 

நான் ‘ஆயுத எழுத்து’ படத்துல நடிச்ச பிறகு, பொண்டாட்டிங்கிற வார்த்தையை இப்போ வரைக்கும் உபயோகப்படுத்துறேன். அது மட்டுமில்லாம உங்ககிட்ட நான் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்ச ஒரு கேள்வி.. ‘புதுசு புதுசா நிறைய விஷயங்கள்.. இவ்வளவு எனர்ஜியை எங்க இருந்து எடுத்துட்டு வறீங்க... அந்த சீக்ரெட் சொல்லுங்க?’ மணிசார் எல்லாருக்குமே இன்ஸ்பிரேஷன்தான்...” 

கார்த்தி: 

காற்றுவெளியிடை’ எனக்கு கனவுப்படம்னு சொன்னா அது பொய்யா இருக்கும். இவ்வளவு நல்ல கனவுலாம் எனக்கு வந்ததே இல்லை. ஆசைப்படலாம், பேராசைப் படக்கூடாது. மணிசார் படத்துல நான் நடிப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை.இப்பக்கூட கிள்ளிபார்த்துப்பேன். இது கனவு இல்லை.. நிஜம் தான். சினிமா தெரியாம, மணிசாரைச் சந்திச்சு, உங்க கிட்ட வேலைப்பார்க்கணும்னு சொன்னேன். அவர் என்கிட்ட பேசுன முதல் வார்த்தை ‘Most Welcome'. நான் உதவியாளரா இருக்கும் போது, 5.30க்கு ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்போம். 6 மணிக்கெல்லாம் சார் வந்துடுவார். இந்த அளவுக்கு ஒழுக்கம் கத்துக்கிட்டது அவர்கிட்டதான். எத்தனைப் படம் பண்ணாலும் அந்த எனர்ஜி மட்டும் அவர் கிட்ட அப்படியே இருக்கும். 

‘நடிக்க வாய்ப்பு வந்தா முயற்சி பண்ணு’ அப்டின்னு ஒரு நாள் மணிசார் சொன்னார். எனக்கு டைரக்‌ஷன் வராதுனு அப்போவே முடிவுபண்ணிட்டார்.  ‘பருத்தி வீரன்’ படத்துல நடிக்கிறதுக்கு மணிசாரோட வார்த்தைகள் தான் தைரியம் கொடுத்துச்சு. 

இந்தப் படத்துக்காக மீசையை எடுக்குறதே பெரும் போராட்டமா இருந்துச்சு. பைலட்டா நடிக்கிறது ரொம்ப சவாலான விஷயம். நிறைய கத்துக்கிட்டேன். அந்த நேரத்தில் இருந்த ஃபீல் வேற எங்கயுமே உணரவும் முடியாது. இந்தப் படம் போர்க்கதை கிடையாது. முழுக்க முழுக்க காதல் கதை தான். அலைபாயுதே, ஓகே கண்மணியை எதிர்பார்த்து வராதீங்க. மணி சார் ஸ்டைல ஒரு லவ் ஸ்டோரி. அதுவும் எமோஷனல் காதல் கதை. 

எத்தனை ஆண்டு கழிச்சிப் பார்த்தாலும் மணிசார் படம் எப்போதுமே ட்ரெண்டா தான் இருக்கும். ‘ஆய்த எழுத்து’ தியேட்டர்ல படம் முடிஞ்சு என்டு கார்டு போடும்போது, 20 பேரை நிக்கவச்சு என் பேர் வரும்போது காட்டியிருக்கேன். நான் இப்போதும் எப்போதுமே மணி சாரோட அசிஸ்டென்ட் டைரக்டர் தான்.” 

-முத்து பகவத்-