Published:Updated:

என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை? #GodVsEvil

என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை? #GodVsEvil
என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை? #GodVsEvil

கீழ்காணும் விஷயங்கள் கடவுள் மனதையோ, பேய் மனதையோ புண்படுத்துவதற்காக அல்ல. இத்தனை வருட சினிமாக்களில் நாம் பார்த்த க்ளிஷேக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மட்டுமே. பர்சனலாக எடுத்துக் கொண்டு, கண்ணைக் குத்துவதோ, நைட் நேரத்தில் வந்து பயம் காட்டுவதோ நல்ல பிள்ளைக்கு அழகில்லை.

பேய்க்கு  வீடு முக்கியம்

பொதுவாக பேய்க்கு என ஒரு பேக்ரவுண்ட் தேவை. ‘வாழ்ந்து கெட்ட வீடு’ என சொல்லும் படி ஒரு வீட்டில் தான் இருக்கும். அப்போது தான்.'இந்த வீட்ல தான் அவ செத்துப்போனா, அதனால அந்த ஆவி இங்க தான் அலையுது' என பின்னால் ஒரு கேரக்டர் வசனம் பேச வசதியாக இருக்கும். அதுவே சாமிகளுக்கு என பிரத்யேகமாக கோவில் இருக்கும். தீய சக்தியால், அநியாயம் தலைவிரித்து ஆடும் போது சாமி என்ட்ரி கொடுத்து அதை அழித்துவிட்டு போய்விடுவார்.

ஒன்றுக்கு  ஒன்று சளைச்சது இல்லை

‘ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல’ என்ற அக்‌ஷய் குமாரின் கூற்றைப் போல, சாமிய அழிக்க பேயும், பேயை அழிக்க சாமியும் தீவிரமாக போராடுவார்கள். கடைசியில் கடவுளே வெல்லும் என்பது தான் மேட்டர். ஆனாலும், சாமிக்கு செம டஃப் கொடுப்பார்கள் இந்தப் பேய்களும், பில்லி சூனிய மகா மந்திரவாதிகளும்.

பேய்க்கோ, தீய சக்திக்கோ என ஒரு நாள் இருக்கும். நிறைஞ்ச அமாவாசை, 13ம் தேதி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 30 என அந்த நாளில் மட்டும் அவர்களுடைய சக்தி கன்னா பின்னாவென எகிறிக் கிடக்கும். அப்படியான நாளில் அம்மணிடமே போய் 'ஒண்டிக்கு ஒண்டி வாரியா?' என வம்பிழுக்கும் இந்தப் பேய்கள். சில நேரம் மந்திரவாதிகள் பல வருடம் தவம் கிடந்து கடவுளிடம் வரம் வாங்கி, பின்பு கடவுளையே எதிர்த்து நின்ற கதை எல்லாம் கூட இருக்கிறது. ஆனால், அம்மனுக்கு சக்தியை வர வைக்க, குரூப்பாக மஞ்சள் கலர் புடவை கட்டி அவரைப் புகழ்ந்து கோவிலை சுற்றி சுற்றி பாட்டு பாடினால் போதுமானது. 

ப்ராபர்டீஸ்:

சாமியின் பவரைக் குறைக்க நிறைய வழிகள் உண்டு. அதைச் செய்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்துக்கு சாமிக்கு பவர் இருக்காது. அதே போல் மந்திரித்த தாயத்தைக் கட்டிக் கொண்டால், பேய் உங்கள் உடலுக்குள் போக முடியாது. அது போல எலுமிச்சை, குங்குமம், வேப்பிலை, கோவில் தீர்த்தம், சிலுவை  இது போன்ற பிராப்பர்டிகள் வைத்துக் கொண்டால் எவ்வளவு பெரிய ரௌடிப் பேயாக இருந்தாலும் டரியலாகும் என்பது விதி 376.  'சாத்தானே அப்பலே போ' என விரட்டிவிடலாம்.   கருப்பு கலர் பூனை (இதே போல் சாமிகளுக்குப் பிரியமாக யானை அல்லது குரங்கு. நன்றி ராமநாராயணன் சார்), தலைமுடி, காலடி மண் இது எல்லாம் தீய விஷயங்களை பிரயோகிக்க பயன்படும் என்பதும் அதே சினிமா லாஜிக் தான். கூடு விட்டுக் கூடு பாய்தல், ஒருவர் உருவத்துக்கு மாறுவது என்கிற எக்ஸ்ட்ரா கரிகுலர் வேலைகளும் உண்டு. 

யார் சாமி இவரு

டக்கென ஒரு ஷாட்டில் மிக கோரமாக ஒரு வாட்ச் மேனையோ, பக்கத்து வீட்டு வயதான பாட்டியையோ, காய்ச்சல் மாத்திரை போட்டுக்கொள்ள மறுக்கும் ரியாக்‌ஷனில் ஒரு சிறுமியையோ காட்டுவார்கள். அது யார், எதுக்கு அந்தக் காட்சி என அடுத்த பார்ட்களில் கூட சொல்ல மாட்டார்கள். அதே போலத் தான் பேய் ஓட்ட வரும் திடீர் சாமியார்களும். அவர் 'இப்பிடியாக்கும், அப்பிடியாக்கும்' என சின்ன பில்டப்பைக் கொடுத்து அழைத்து வந்துவிடுவார்கள். அவரும் பேய், கடவுள் இரண்டு பேருடனும் நேரடித் தொடர்பில் இருப்பதால் 'என்ன தான் பிரச்னை' எனக் கேட்டு பஞ்சாயத்தை முடித்து கூட்டத்தைக் கலைத்து விடுவார். எல்லா மதத்து சாமியார்களையும் உள்ளே கொண்டுவந்து, இதில் மட்டும் மதநல்லிணக்கத்தைக் கடைபிடிப்பதில் நம் இயக்குநர்கள் கில்லாடிகள். சாமிப் படங்கள் என்றால் கரணையும், பேய்ப்படங்கள் என்றால் மொட்ட ராஜேந்திரனையும் உங்களால் பார்க்க முடியும் என்பது சிறப்பான பாய்ண்ட்.

என்னதான் வேணும்?

மிஷ்கினின் பிசாசு படம் தவிர பெரும்பாலான பேய்ப் படங்களில் பழிக்குப் பழி, நிறைவேறாத ஆசை என்கிற விஷயம் தான் முக்கியமானதாக காட்டப்பட்டிருக்கிறது. அதே போல் சாமி படங்களில் தீய சக்தியை அழிப்பது தான் முக்கிய காரணமாக இருக்கும். அதைத் தவிர கடவுளுக்கு ஸ்பெஷலான வேலையும் இருக்கப் போவது கிடையாது என்பது தான் நம்முடைய எண்ணமும். இயக்குநர் பூரி ஜெகன்னாத், ‘பிஸ்னஸ்மேன்’ படத்தில் எழுதியதைப் போல, "என்னைக்காவது கடவுள் கிட்ட போய், நீங்க நல்லாயிருக்கணும், ஆரோக்யமா இருக்கணும்" என வேண்டியிருப்போமா. எனவே அதைத் தாண்டி எதுவும் வரப்போவதில்லை. (மேல இருக்கறது மலையாளா டப்பிங் சார்.. அதைப் பார்த்து எனக்கு எலுமிச்சைப்பழம் வெச்சுடாதீங்க!)

நம்பிக்க... அதானே எல்லாம்!

"நான் ஒரு பேய்" என சொல்லி அதிரும்படி சிரித்தால் டரியலாகும் யாரும், "குழந்தாய், நான் தான் கடவுள்" என அழகாய் ஸ்லோமோஷனில், கடவுளே வந்து சிரித்தாலும் நம்பமாட்டார்கள். இதற்கு சிம்பு தேவன் இயக்கிய 'ப்ரூஸ் அல்மைட்டி' மன்னிக்கவும், 'அறை எண் 305ல் கடவுள்' படம் சிறந்த உதாரணம். இன்னொரு விஷயமும் இருக்கிறது. பேய்ப் படம் வாரத்துக்கு நூறு வந்தாலும் பார்க்க ஆள் இருக்கிறது. ஆனால், சாமி படங்களுக்கு? கதை எழுதறவங்க மொதல்ல பேய்கிட்ட கால்ஷீட் வாங்கி வெச்சுட்டுதான், மத்த கேர்கடர்ஸையே செலக்ட் பண்றாங்க.   #என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை.

மொத்தமாகப் பார்த்தால் இந்த பேட்டர்னைத் தாண்டி பேய்ப் படமோ, சாமி படமோ வந்திருக்காது. பட்டணத்தில் பூதம், அலாவுதீனும் அற்புத விளக்கும் வகையறா படங்கள் வேறு ஜானர். அதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பேசலாம்.

அதுவரை நன்றி... நமக்கம்!

- பா.ஜான்ஸன்