Published:Updated:

செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீவராசி? - லைஃப் படம் எப்படி? #Life

விகடன் விமர்சனக்குழு
செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீவராசி? - லைஃப் படம் எப்படி? #Life
செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீவராசி? - லைஃப் படம் எப்படி? #Life

செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீவராசி? - லைஃப் படம் எப்படி? #Life

சயின்ஸ்ஃபிக்‌ஷன் + ஏலியன் கலவையில் வந்திருக்கிறது 'லைஃப்' படம். அந்த லைஃப் யாருடையது என்பதுதான் படத்தின் திருப்பம். டேனியல் எஸ்பினோசா இயக்கியிருக்கும் இந்த 'லைஃப்' எப்படியிருக்கிறது?

ஆறு பேர் அடங்கிய குழு ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும்போது, செவ்வாய் கிரகத்தின் மண்ணில் உயிரினம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மனித வரலாற்றின் முக்கிய சாதனையாகக் கருதப்படும் இந்த உயிரினத்திற்கு, 'கால்வின்' எனப் பெயர் சூட்டுகிறார்கள். கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம் பல்வேறு சூழலில் உயிர்வாழும் தன்மையைப் பெற்றிருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினம், ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஆய்வுக்கூடத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கால்வினின் ஒவ்வொரு மாற்றமும் அவர்களுக்குப் புத்துணர்வையும், சாதித்துவிட்ட சந்தோஷத்தையும் தருகிறது. அதே கால்வின்தான் அவர்கள் அத்தனை பேருக்கும் பிறகு எமனாக நிற்கிறது. ஏன், எப்படி என்பது ரத்தம் வழியும் மீதிக்கதை.

முழுப் படமும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் நடக்கும் கதை. எனவே, விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்த வேண்டும். அதைச் சரியாகச் செய்திருக்கிறது 'லைஃப்'. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கால்வினைப் பற்றிய தகவல்களும், அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளும் ஆடியன்ஸுக்குச் சரியாகக் கடத்தியிருப்பது படத்தின் ஸ்பெஷல். அந்த உயிரினத்தை ஏலியன் என்று குறிப்பிடாமல், 'கால்வின்' எனப் பெயரிட்டு அழைப்பதும், வேற்றுக்கிரக உயிரினம் என்றாலே மனிதர்களைப் போன்ற உயிரினங்கள்தான் என்ற மனநிலையை மாற்றி, ஆக்டோபஸ் போன்ற தோற்றத்தில் கால்வினைச் சிந்தித்திருப்பதும்கூட நல்ல விஷயம். நுண்ணோக்கியில் பார்க்கும் அளவுக்கு இருக்கும் கால்வின், குறுகிய காலத்திலேயே படிப்படியான வளர்ச்சிபெற்று, ஆராய்ச்சியாளர்களின் கை காலை முறித்துப்போடும் அளவுக்கு அசுரனாக வளர்வதைக் காட்டிய விதம் செம!

விண்கலத்தில் இருக்கும் சிலரையும், க்ளைமாக்ஸில் வரும் சிலரையும் சேர்த்தாலும் மொத்தக் கதைக்கும் பதினைந்துக்கும் குறைவான கதாபாத்திரங்கள்தான். கதைக்கும் அது போதுமானதுதான். நடிப்பைப் பொறுத்தவரை ஜேக் கெலன்ஹல், ரெபேக்கா ஃபெர்கசன், ரேய்ன் ரெனால்ட்ஸ், அர்யான் பகர் என நால்வருக்கும் 'இந்தக் கேரக்டரெல்லாம் ஜூஜூபி' என எளிமையாகக் கடக்கிறார்கள். ஹிராய்க்கிக்கு மட்டும் ஒரு சூப்பர் சீன் இருக்கிறது. விண்வெளியில் இருந்தபடி தனது மனைவியின் பிரசவத்தை டேப்லெட்டில் பார்க்கிறார். குழந்தை பிறந்ததும் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறார். கால்வினின் கண்காணிப்பில் இருக்கும்போது, 'எப்படியும் உங்ககிட்ட வந்துடுவேன்' என மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து பேசுகிறார். மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கும் அர்யான் பகருக்கும் நடிப்பில் கொஞ்சம் வாய்ப்பியிருக்கிறது. அதை நன்றாகவும் பயன்படுத்தியிருக்கிறார். 'Dead Pool' படம் மூலம் மாஸ் காட்டிய ரேய்ன், இவ்வளவு சின்னக் கேரக்டரில் நடிக்க எப்படிச் சம்மதித்தார் என்பது ஆச்சரியம். 

ஆனால், அத்தனைபேரையும்விட கதிகலங்க வைப்பது கால்வின் மட்டுமே. கிராஃபிக்ஸ் கதாபாத்திரம்தான் என்றாலும், அதைப் பார்க்கும்போது பதபதைப்பு எகிறுகிறது. ஆனால், கிராஃபிக்ஸில் இருக்கும் தத்ரூபத்தைத் தாண்டி, கால்வினைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லை. ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியேறி, அருகில் இருக்கும் பரிசோதனை எலியைத் துவம்சம் செய்யும் காட்சி அற்புதம். 'கிராவிட்டி' படத்திலேயே ஸ்பேஸ் ஸ்டேஷன் பற்றிய ஆச்சரியங்களைப் பார்த்துவிட்டதால், அதைத்தாண்டி எதுவும் இதில் ஸ்பெஷலாக இல்லை என்பது பெரும்குறையாகத் தெரிகிறது. ஆனால் மோசமென்று சொல்லமுடியாமல் காட்சியமைப்புகளில் கவனம் ஈர்க்கிறார்கள்.  மெகா டுவிஸ்ட் என நினைத்து, க்ளைமாக்ஸில் இயக்குநர் வைத்திருக்கும் காட்சி, எளிதில் யூகிக்கக்கூடியதே!

தவிர, மிக மிக வழக்கமான திரைக்கதையால் கதை சொன்ன விதமும் படத்தின் பெரிய மைனஸ். சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஹாரர் பட ரசிகர்களுக்கு இது பிடிக்கலாம் அல்லது 'வழக்கமான ஏலியன் பூச்சாண்டிக் கதை' என கடந்தும் போகலாம். மொத்தத்தில், கால்வினின் ரத்தம் தெறிக்கும் அதிரடிகள் தவிர, பெரிய கவர்ச்சி எதுவும் இல்லாமல், ஆவரேஜான ஹாலிவுட் படமாக இருக்கிறது இந்த 'லைஃப்'. 

அடுத்த கட்டுரைக்கு