Published:Updated:

ரஜினிகாந்த்-திலிருந்து வெளில வாங்க பாபி சிம்ஹா சார்! - 'பாம்பு சட்டை’ படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
ரஜினிகாந்த்-திலிருந்து வெளில வாங்க பாபி சிம்ஹா சார்! - 'பாம்பு சட்டை’ படம் எப்படி?
ரஜினிகாந்த்-திலிருந்து வெளில வாங்க பாபி சிம்ஹா சார்! - 'பாம்பு சட்டை’ படம் எப்படி?

ள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பல் ஒருவரிடம் மாட்டிக்கொள்ளும் பாபி சிம்ஹாவுக்கு, 'கெட்டவனா இரு அல்லது நல்லவனாக வாழ்' என்கிறது சூழல். ரொம்ப நல்லவரான பாபிசிம்ஹா இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கிறார்... என்பதைச் சொல்கிறது ஆடம்தாசன் இயக்கியிருக்கும் இந்த 'பாம்புசட்டை'.
 

அண்ணனை இழந்த பாபிசிம்ஹாவும், அவரது அண்ணி பானுவும் தாய், பிள்ளையாக ஒரே வீட்டில் இருக்கிறார்கள். கிடைக்கிற வேலையைப் பார்க்கிற பாபிசிம்ஹாவுக்கு கீர்த்தி சுரேஷ் மீது காதல் வருகிறது. இந்தக் காதல் டிராக்கில் பயணித்துக்கொண்டே, அண்ணிக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சிகளையும் தொடர்கிறார் பாபிசிம்ஹா. அதற்கு, 'ஐந்து லட்சம் பணம் தேவை' என்ற சூழல் வருகிறது. அண்ணி, காதலி, நட்பு வட்டங்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டிய அந்தப் பணத்தோடு, கள்ளநோட்டுக் கும்பல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார் பாபிசிம்ஹா. இந்த கள்ளநோட்டு நெட்வொர்க்கில் சேர்ந்தே ஆகவேண்டிய சூழலில், பாபிசிம்ஹா என்ன செய்தார்? காதலியைக் கரம்பிடித்தாரா, அண்ணிக்குத் திருமணம் நடந்ததா, கள்ளநோட்டு கும்பல் என்ன ஆனது என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை சொல்கிறது படத்தின் திரைக்கதை. 

பாபிசிம்ஹா, கீர்த்திசுரேஷ், பானு, கே.ராஜன், குருசோமசுந்தரம், சார்லி, ஆர்.வி.உதயகுமார், மொட்டை ராஜேந்திரன், சரவண சுப்பையா, கவிஞர் விக்ரமாதித்யன்... என நட்சத்திரங்களால் நிரம்பி வழிகிறது படம். தட்சிணாமூர்த்தி கேரக்டரில் பாபிசிம்ஹா கச்சிதம். கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். 'ஆட்சியில் இருப்பது மோடி, நீதான் என் ஜோடி' என டரியல் கவிதைகள் சொல்கிறார். அண்ணி மீது அவ்வளவு மரியாதையாக இருக்கிறார். எதுகை மோனையில் எதார்த்தம் பேசுகிறார். பணத்தைப் பறிகொடுத்துவிட்டு விரக்தியாக நிற்கிறார். விரக்தியின் உச்சகட்டமாக, ஒரு காட்சியில் நிர்வாணமாகக்கூட ஓடுகிறார்.  ஆனால், காதல் காட்சிகளில் அவர் காட்டும் மேனரிஸங்கள் அதரப்பழசு. ரஜினிகாந்தை அடிக்கடி இமிடேட் செய்துகொண்டே இருக்கிறார். கொஞ்சம் ரஜினிகாந்த் ஸ்டைலில்  இருந்து வெளில வாங்க சார்! முக்கியமாக, அவருக்கு மாட்டியிருக்கும் 'விக்' துருத்திக்கொண்டு நிற்கிறது! 

வேணி கேரக்டரில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், 'அட' என ஆச்சரியப்படுத்துகிறார். 'தப்பு செஞ்சாதான் தப்புனு இல்லை. செய்யணும்னு நினைச்சாலே தப்புதான்' என நல்லபிள்ளையாக காதலனை வழிநடத்துகிறார். அலட்டல்கள் இல்லாமல், ஓவர் மேக்கப் இல்லாமல், கலர் கலர் காஸ்டியூம்கள் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் செம்ம!. பாபிசிம்ஹாவின் அண்ணியாக பானு, கீர்த்தியின் அப்பா சார்லி இருவரும் சென்டிமென்ட் ஏரியாவில் ஸ்கோர் செய்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் வழக்கம்போல, அவரே நடித்து அவரே சிரித்துக்கொண்டு நம்மையும் சிரிக்கவைக்க முயற்சிக்கிறார். வில்லன் கே.ராஜன், குருசோமசுந்தரம் இருவரும் கவனம் பெற்றாலும், சமூகத்தில் மனிதர்கள் அணிந்திருக்கும் முகமூடிகளை பாபிசிம்ஹாவுக்கு அவ்வப்போது எடுத்துச்சொல்லி கவனம் பெறுகிறார் குருசோமசுந்தரம். மற்ற அனைவரையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார்கள், அவ்வளவுதான். 

காதலும், காமெடியுமாய்க் கடக்கும் முதல் பாதியின் வேகம் இரண்டாம் பாதியில் இல்லவே இல்லை. எளிமையாக இலக்கை அடைந்துவிடக்கூடிய திரைக்கதையை அங்கும் இங்குமாக இழுத்துப் பிடித்து விளையாடியிருக்கிறார் இயக்குநர் ஆடம்தாசன். சென்னை திரிசூல மலைப்பகுதியின் களம் தமிழ்சினிமாவுக்குப் புதுசு. வாட்டர்கேன் போடும் ஹீரோ, தையல் வேலை பார்க்கும் ஹீரோயின், ஜூவல்லரியில் வேலை பார்க்கும் பானு, சாக்கடை அள்ளும் தொழிலாளியாக சார்லி... என படம் முழுக்க எளிமையான மக்களின் வாழ்வைப் பதிவு செய்திருப்பது 'நச்' ஐடியா. பணத்திற்காக பாக்ஸிங் பண்ணுவது, ஆபத்தான கழிவுநீரில் இறங்குவது... என சில காட்சிகளை வலிந்து திணித்திருக்கிறார்கள். 

ஒரு பருக்கைச் சோறுக்கு சார்லி கொடுக்கும் விளக்கம், விதவையான பானுவிடம் பாட்டி ஒருவர் சொல்லும் கதை, நாப்கின் வாங்கத் தயங்கும் பாபிசிம்ஹாவை மெடிக்கலில் இருக்கும் பெண் கிண்டல் அடிப்பது... என கிடைக்கிற கேப்பில் சமூகக் கருத்துக்களைச் செருகியிருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின், வில்லன் என எல்லோருமே பண்டல் பண்டலாக வசனத்தை இறக்குகிறார்கள். சில நேரங்களில் வசனம் செயற்கையாகத் திணிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. படம் பார்க்கும் ரசிகர், கதையையும் படத்தின் தலைப்பையும் பொருத்திப் பார்த்துக்கொள்ளமாட்டார்களா... அதுக்கும் வசனம் மூலம் விளக்கம் கொடுப்பது தேவையே இல்லை!. அஜிஷ் இசையில் பெரிய மெனக்கெடல் இல்லையென்றாலும், பின்னணி இசைக்கு உழைத்திருக்கிறார். வெங்கடேஷின் ஒளிப்பதிவு அருமை. 'இரண்டாம் பாதி எப்போதுதான் முடியும்?' என சலிப்பை எடிட்டர் இன்னும் கொஞ்சம் 'கத்தரி' போட்டிருந்தால் தவிர்த்திருக்கலாமோ, என்னவோ? 

'எத்தனைமுறை விழுந்தாலும் எவனால திரும்ப எந்திரிக்க முடியுமோ... அவனாலதான் ஜெயிக்கவும் முடியும்' என்பதுதான் படம் சொல்லும் செய்தி. அதைக் கச்சிதமாகச் சொல்லத் தவறியிருக்கிறது. கள்ள நோட்டு நெட்வொர்க்கை ஓரளவுக்குக் காட்டியிருப்பதாலும், பணத்திற்கான எளிய மக்கள் படும் அவலங்களைச் சொல்லியிருப்பதாலும், பாம்புச்சட்டையை எட்டிப்பார்க்கலாம்.