Published:Updated:

கூகுள் க்ளாஸுடன் கலக்கும் 'மக்கள் தளபதி'! ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
கூகுள் க்ளாஸுடன் கலக்கும் 'மக்கள் தளபதி'! ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் எப்படி?
கூகுள் க்ளாஸுடன் கலக்கும் 'மக்கள் தளபதி'! ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் எப்படி?

கூகுள் க்ளாஸுடன் கலக்கும் 'மக்கள் தளபதி'! ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் எப்படி?

மனித சோட்டாபீம், நடமாடும் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கின்ஸ், தமிழகத்து சுரேஷ்கோபி, மக்கள் தளபதி, ஆர்.கே நடித்து வெளியாகியிருக்கும் `வைகை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் எப்படியிருக்குன்னா...

சென்னை டூ மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் மூன்று இளம்பெண்கள் கொல்லப்படுகிறார்கள். யார் அந்தக் கொலைகளைச் செய்தது, கொலைக்கான காரணம் என்ன எனும் கேள்விகள் தான் `வைகை எக்ஸ்பிரஸ்' படத்தின் ஒன்-லைன். கேரளநாட்டில் சுரேஷ்கோபி நடித்து வல்லிய ஹிட் அடித்த 'நதியா கொல்லப்பட்ட ராத்திரி' படத்தை தமிழில் அப்படியே ரீமேக்கியிருக்கிறார்கள்.

அந்த கொலை வழக்குகளை விசாரிக்கும் ரயில்வே தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி சரபுதீனாக நடித்திருக்கிறார் `மக்கள் தளபதி` ஆர்.கே. `எல்லாம் அவன் செயல்' படத்தில் எந்த மாடுலேஷனில் டயலாக் பேசினாரோ அதே மாடுலேஷனிலேயே இந்த படத்திலும் டயலாக் பேசுகிறார். அதேபோல், பெரும்பாலான காட்சிகளில் கண்களில், கூலிங் கிளாஸுடனே வலம் வந்து, தான் ஒரு `மக்கள் மிஷ்கின்' என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார். இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. வேறு ஏதாவது படத்தில் நன்றாக நடிக்கவும் ஆரம்பித்துவிடுவார் என நம்புவோம். நீதுசந்திராவிற்கு படத்தில் ராதிகா, ஜோதிகா என இரட்டை வேடம். இனியா, சுஜா ஆகியோருக்கு வெறும் ஒரு வேடம் தான். (பாவத்த...)  மேலும், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், சுமன், ரமேஷ் கண்ணா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். 

துப்பாக்கி சுடும் வீராங்கனை நீது, போலீஸ் ஜான் விஜய், எழுத்தாளர் மனோபாலா, நிருபர் கோமல் சர்மா, டாக்டர் சுஜா, சுஜாவின் நண்பர்கள், சிங்கமுத்து, சிங்கமுத்துவின் பைத்தியகார மகன் சுட்டி அரவிந்த், டிடிஆர் எம்.எஸ்.பாஸ்கர், சினிமா நடிகை ஓவியா, அவரது அக்கா அர்ச்சனா, எம்.பி.சுமனின் உறவினர் பெண் ஒருவர்  என பெரும் பட்டாளமே சென்னையிலிருந்து மதுரை செல்லும் `வைகை எக்ஸ்பிரஸின் ஏசி கம்பார்ட்மென்டில் பயணம் செய்கிறது. அவர்களில் திடீரென நீதுசந்திரா, கோமல் சர்மா மற்றும் சுமனின் உறவினர் பெண் ஆகியோர் மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார்கள். இந்த வழக்கை முதலில் விசாரிக்கும் காவல்துறை அதிகாரி  நாசர் குழம்பிப்போகிறார். அதனால் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ரயில்வே தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஆர்.கேவிடம் கொடுக்கிறார் எம்.பி.சுமன். கொலையாளியை ஆர்.கே. கண்டுபிடித்தாரா, யார் அந்த கொலையாளி என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

முத்துராமலிங்கம், மொ.சி.கெ. சிவா, புரூஸ் லீ என கடந்த சில நாட்களாக கொமட்டிலேயே குத்து வாங்கி சீட்டில் சரிந்துகிடந்த நமக்கு `மக்கள் தளபதி ஆர்.கே' என டைட்டில் கார்டிலேயே ஒரு ஊமைக்குத்து குத்துகிறார்கள். படத்தில் `சட்டமன்றத்தை சட்டை பையில் வெச்சிருந்தவங்களே சட்டத்துக்கு முன்னாடி ஒண்ணுமேயில்லடா, எச்சி துப்பும்போது தெரியுதுடா நீ ஒரு எச்சக்கலைனு...' என படம் முழுக்க பன்ச்களை பறக்கவிடுகிறார் ஆர்.கே.  எக்ஸ்பிரஸ் என டைட்டில் வைத்து விட்டதால் எக்ஸ்பிரஸ் வேகத்தில் படம் நகரவேண்டும் என நினைத்து, ஹரி படங்களின் சிடிக்களை தேயத்தேயப் பார்த்து சதக் சதக் என படத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஷ். படத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இரவு நேரத்தில் பயணிப்பதால் இருட்டில் உட்கார்ந்து சதக்சத்க் என செதுக்கியதில் அது எசகுபிசகாக வந்திருக்கிறது.

படத்தில் மொத்தம் மூன்று கொலை என்பதால் ஒவ்வொரு கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் மின்னல் வேகத்தில் கண்டுபிடிக்கிறார் ஆர்.கே. ஆனால், அதற்காக ஒரு லாஜிக் வேண்டாமா பாஸ். சந்தேகத்திற்குரியவர்கள் அவ்வளவு பேரையும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடி கண்டுபிடிக்கிறார், அதுவும் அவர்கள் போக்குவரத்துமாய் இருக்கும் சாலைகளில் வைத்தே. அதனாலேயே, அவர் அணிந்திருப்பது கூலிங் கிளாஸ் அல்ல கூகுள் க்ளாஸ் என மனம் சமாதனப்படுத்துகிறது. அர்ச்சனாவுக்கு மறைந்த மாபெரும் நடிகை கல்பனாவை டப்பிங் செய்யவைத்திருக்கிறார்கள். எந்த கதாபாத்திரத்திற்கும் லிப் சின்க் ஆகவேயில்லை. படம் முழுக்க நான் சின்கிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே, யார் நடிப்பும் மனதில் நிறைவாக இல்லாதது போலவே தோன்றுகிறது.

ஒரே ஒரு கம்பார்ட்மென்ட்டிற்குள் கேமராவை வைத்து விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சீவ் சங்கர். சில இரவு நேர காட்சிகளில் ‘நாய்ஸ்’ அடிக்கிறது. அதை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இசையமைப்பாளர் தமனுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தோம் என தெரியவில்லை. அக்கட தேசத்தில் மட்டும் அழகழகான பாடல்களாய் போடுகிறார். பின்னணி இசையிலும் பெரிதாய் ஈர்க்கவில்லை. கனல் கண்ணனின் சண்டை காட்சிகள் படத்திற்கு பெரும் பலம். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கட் செய்து ரயிலை காட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் டான் மேக்ஸ். (ரயிலில் தான் கதை நகருதுனு ஐந்தாவது நிமிஷத்துலேயே ரிஜிஸ்டர் ஆகிடுச்சு ப்ரோ. அப்புறம் ஏன் சும்மா சும்மா காட்டி டயர்டு ஆக்குறீங்க. அவ்வ்வ்...) சூப்பரான ட்விஸ்டுகள், நிறைய கதாபாத்திரங்கள், நாசர் , எம்.எஸ்.பாஸ்கர் போன்ற டாப் க்ளாஸ் நடிகர்கள் இருந்தும் `வைகை எக்ஸ்பிரஸ்' நமக்கு முழு திருப்திகரமான பயணத்தை தரவில்லை. 
 

அடுத்த கட்டுரைக்கு