Published:Updated:

ஹலோ... ‘மன்மத ராசா’ இசையமைப்பாளர் எங்கே?

ஹலோ...  ‘மன்மத ராசா’ இசையமைப்பாளர் எங்கே?
ஹலோ... ‘மன்மத ராசா’ இசையமைப்பாளர் எங்கே?

சில ஆண்டுகளுக்கு முன்பு, `எங்க சார் இருந்தீங்க இவ்ளோ நாளா?' என ஆச்சரியப்பட வைத்து தற்போது `எங்க சார் இருக்கீங்க ஆளையே காணோம்' என தேடவைத்திருக்கும் தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர்கள் லிஸ்ட் இதோ...

சதீஷ் சக்ரவர்த்தி :

'கனிமொழி' மற்றும் 'லீலை' என சதீஷ் சக்ரவர்த்தியின் இசைப்பயணம் அசத்தலாக ஆரம்பித்தது. ‘முழுமதி முழுமதி நிலவை கேளடி’, ‘ஒரு கிளி ஒரு கிளி’, ‘ஜில்லென்று ஒரு கலவரம்’ பாடல்கள் மூலம் பலரது ப்ளே லிஸ்டையும் சிலரது ரிங்டோனையும் ஆக்கிரமித்திருந்த சதீஷ் சக்ரவர்த்தி, அதற்கு பிறகு `நீலம்',`நேர் எதிர்',`யாசகன்' ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். 2010 ஆம் ஆண்டில் சினிமாத்துறையில் கால் பதித்த சதீஷ் சக்ரவர்த்தி இதுவரை மொத்தமே ஏழு படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் இவர் இசையில் எந்த பாடல்களும் வெளியாகவில்லை.


விஜய் எபினேசர் :

விஜய் எபினேசர் இசையில் வெளியான முதல் திரைப்படம் `கண்டேன்'. அந்த படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. க்ரிஷ் மற்றும் டாக்டர் பர்ன் பாடிய `எங்கே என் இதயம்' பாடல் ரிப்பீட் மோடில் ஒலித்தது. அதன் பிறகு, விஜய் எபினேசர் இசையமைத்த `கலகலப்பு' திரைப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அப்போதைய டிரெண்டை பிடித்து `ஏஞ்சலினா’, ‘இவளுங்க இம்சை தாங்க முடியல...' என செமையான பாடல்களை தந்திருப்பார். பின்னர், `யா யா',`பப்பாளி' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர், கடைசியாக இசையமைத்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியான 'ஓம் சாந்தி ஓம்'.

போபோ சசி :

`குளிர் 100 டிகிரி', தமிழில் போபோ சசி இசையமைத்த முதல் திரைப்படம். `மனசெல்லாம் உன்னை நினைத்து',`ஹிப்ஹாப் ஹுரே' என படத்தின் எல்லா பாடல்களுமே தாறுமாறு ஹிட். நண்பனை பிரிந்தவர்கள் `மனசெல்லாம் உன்னை நினைத்து' பாடலை கேட்டால் அழுது விடுவார்கள். அதேநேரம், `ஹிப்ஹாப் ஹுரே...', `பூம் ஷக்காலாய் பூம்...' பாடல்கள் கேட்கையில் செம ஃபீல் தரும். இசையமைப்பாளர் முரளியின் மகனான போபோ சசி `குளிர் 100 டிகிரி' படத்திற்கு பிறகு எந்த தமிழ்த் திரைப்படத்திற்கும் இசையமைக்கவில்லை. கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு, தமிழில் அவர் இசையமைத்த பாடல் தான் `கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் லோகாலிட்டி பாய்ஸ்.

தினா :

`ஜனா','திருப்பாச்சி' என ஒரே ஆண்டில் தல-தளபதி இருவரது படத்திற்கும் இசையமைத்தவர். `மன்மத ராசா' எனும் ஒரே பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானவர். ‘மன்மதராசா’, ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’, ‘படிச்சுப் பார்த்தேன் ஏறவில்லை’ என ஆட்டம்போட வைக்கும் பல குத்துப்பாடல்களை தந்திருக்கும் தீனா, 'கருப்புசாமி குத்தகைதாரர்' படத்தில் 'உப்புக்கல்லு...', `பொறி' படத்தில் `பேருந்தில் நீ எனக்கு...' போன்ற மனதை மயக்கும் மெலடி பாடல்களையும் தந்துள்ளார். அப்படி ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தவரின் பெயரை கடந்த சில ஆண்டுகளில் எங்கும் காணமுடியாமல் போய்விட்டது.

பிரவீன் மணி :

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் பிரவீன் மணிக்கு தமிழில் வெளியான `லிட்டில் ஜான்' தான் முதல் திரைப்படம். அதில் 'பூவுக்கு பிறந்தநாள்...' மற்றும் `பாடவா பாடவா...' பாடல்கள் இரண்டும் இன்று கேட்டாலும் தரமாக இருக்கும். அதை தொடர்ந்து ஒற்றன், தூத்துக்குடி, சிக்குபுக்கு, பயணம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர், கடைசியாக வினய் நடித்த `மிரட்டல்' திரைப்படத்திற்கு இசையமைத்ததோடு சரி.

ரமேஷ் விநாயகம் :

`நள தமயந்தி','அழகிய தீயே' ஆகிய படங்களின் இசையைமைப்பாளர். `அழகிய தீயே' படத்தில் வரும் ‘விழிகளின் அருகினில் வானம்’ பாடல் இன்றும் பலரது ஃபேவரைட். இவர் இசையில் கடைசியாக வெளியான திரைப்படம் 'மொசக்குட்டி'.

சுந்தர் சி.பாபு :

`வாள மீனுக்கு விளங்கு மீனுக்கு கல்யாணம்' என்ற அதிரிபுதிரி ஹிட் கொடுத்தவர். மிஷ்கின் மற்றும் சமுத்திரகனியின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர். `நாடோடிகள்' திரைப்படம் எந்தெந்த மொழிகளில் ரீமேக் ஆகியதோ, எல்லா மொழிகளிலும் இவர் இசையமைத்த `சம்போ சிவ சம்போ' பாடல் இடம்பெற்றிருக்கும். இடையில், சில காலங்கள் காணாமல் போயிருந்த சுந்தர் சி.பாபு கடைசியாக மாகாபா ஆனந்த நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான `அட்டி' திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

ஜோஷ்வா  ஸ்ரீதர் காதல் படத்திற்குப் பிறகு வெப்பம், பறந்து செல்லவா என்று வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார். ஆனால் இன்னமும் காதல் படத்தின் சென்சேஷனல் ஹிட்டான ‘உனக்கென இருப்பேன்’ பாடல் போல இன்னொரு தெறி ஹிட் வரவில்லை.

இளம் தலைமுறை கலக்கீட்டிருக்கு சார்... நீங்களும் வரணும்... நீங்க எல்லோரும் வரணும்.. பழைய ஃபார்முக்கு வரணும்..!    

-ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு