Published:Updated:

”ஃபேஸ்புக் எனக்கு செட் ஆகலை பிரதர்!” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு? #VikatanExclusive

”ஃபேஸ்புக் எனக்கு செட் ஆகலை பிரதர்!” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு? #VikatanExclusive
”ஃபேஸ்புக் எனக்கு செட் ஆகலை பிரதர்!” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு? #VikatanExclusive

விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் பரபரவென உயரம் தொட்டவர்.  தற்போது விஜய் சேதுபதிக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களே இல்லை. ரொம்ப பிஸி. "நாளைக்கு மலேசியா போறேன் பிரதர். திரும்பி வர கொஞ்ச லேட் ஆகும்." என்றவரிடம் சில கேள்விகளை கேட்டோம்.

“சினிமாவுல நீங்க எந்தப் பாதையை நோக்கி போறீங்க?"

"நான் எதை நோக்கியும் போகலைங்க. இருப்பதைச் சுவாரஸ்யமா செய்யணும்னுதான் டிரை பண்ணுறேன். இருக்கற இடத்தை விட்டுட்டு இன்னொரு இடத்தை நோக்கிப் போகணும்னு நினைக்கற ஆள் நான் கிடையாது. இந்த பால் அடிச்சா அங்க இருந்து இங்க வந்திடலாம். அந்தக் கணக்கு எல்லாம் போடலை. இருக்கற பந்தை ஒழுங்கா அடிக்கணும். நடிக்கற படங்கள் என்னையும், ஆடியன்ஸையும் ரொம்ப சுவாரஸ்யமா வைச்சுக்கணும் நினைக்கறேன். மத்தபடி, நான் நடிச்சு தள்ளணும், என்னைப் பற்றி வித்தியாசமாகச் சொல்லணும். ஒரு பெரிய ரேஞ்ச்ல என்னைக் காட்டிக்கணும்னு அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட அடையாளமும் எனக்கு வேண்டாம். தட்ஸ் இட்." 

“நீங்க ரொம்ப யதார்த்தமாக நடிக்கறீங்கனு எல்லாரும் பாராட்டுறாங்க. உங்க நடிப்பு எப்படி எல்லாம் வளர்ச்சி அடைஞ்சிருக்கு?”
 
“நான் நடிக்க வந்த சமயத்துல... அதாவது ஹீரோவான புதுசுல, கொடுத்த டயலாக்கை எல்லாம் மனப்பாடம் பண்ணி அப்படியே சீன்ல சொல்லிடணும்னு நினைச்சேன். அதுக்கு அடுத்த கட்டம் வரும்போது சீன்ல பெஸ்ட்டா  பண்ணணும்னு தோணுச்சு. அதுக்கும் அடுத்த கட்டம், எல்லாரும் பாராட்டுற மாதிரி நடிக்கணும்னு நினைச்சேன். இப்ப, எனக்கு நான் நடிக்கறது உண்மையா இருக்கணும். It should touch myself. எனக்கு நான் நடிச்சது தப்புனு பட்டுச்சுன்னா, நானே டைரக்டர்கிட்ட போய் ஒன்ஸ்மோர் கேட்பேன். கேட்குறேன். இப்படித்தான் என் நடிப்பைத் தகுதிப்படுத்திகிட்டேன்." 

"உங்களைப் பொறுத்தவரை நடிப்புன்னா அதுக்கான வரையறை ஏதாவது இருக்கா?" 

யோசிக்கிறார் "எனக்கு நடிக்க ரொம்பப் பிடிச்சு இருக்கு. எல்லாரும், நான் நடிக்கறது யதார்த்தமாக இருக்குனு சொல்வாங்க. அப்படி யதார்த்தமா நடிப்பதற்குதான் உண்மையாவே நிறைய நடிக்க வேண்டியிருக்கு. வெளியே தெரியாத மாதிரி உள்ளுக்குள்ள நிறைய மசாலா சேர்த்துதான் நடிக்கறேன். ஆனா, உண்மையாகவே நடிப்புன்னா என்னென்னு சொல்லுறதுனு தெரியலையே. அப்படி சொல்லுறதும் ரொம்ப கஷ்டம்தான். 

"தோல்விகள், அவமானங்கள், துரோகங்கள் எல்லாம் சந்திக்கும்போது உங்களை நீங்க எப்படிக் காத்துக்கிட்டீங்க?" 

சிரிக்கிறார் "நான் காசு இல்லாம இருந்த நாட்கள் எல்லாம் நிறைய இருக்கு. ஆனா, அதை எல்லாம் தாண்டி இப்ப ஒரு இடத்துல இருக்கேன்ல?  இதுதான்  அந்த வாழ்க்கையை விட ரொம்பக் கஷ்டமா இருக்கு. நிறைய ஏமாற்றங்கள், நிறையத் துரோகங்கள், நிறையப் பொய்யான பேச்சுகள்னு நிறைய பார்க்கிறேன். முக்கியமா எதையும் தெரியாத மாதிரிவேற மூஞ்சியை வைச்சுக்கணும். வெளிய இருந்து பார்க்கும்போது 'வளர்ந்துட்டாங்க. இனிமே இவங்களுக்குப் பிரச்னையே இல்லை. ஏமாற்றங்களே இல்லை'னு நினைக்கிறாங்க. அந்த மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை பிரதர். நான் சினிமா வாழ்க்கையை மட்டும் சொல்லலை. மொத்தமா சொல்லுறேன். சுத்தி இருக்கற எல்லா விஷயங்களையும் சேர்த்துதான் சொல்லுறேன். எப்படியோ என்னை இதுல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்." 

மண்டைக்குள்ள அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல ஏதாவது ஒரு கதை ஓடிட்டேதான் இருக்கு. டைரக்‌ஷனும் அவ்வளவு ஈஸி இல்லை. அதுக்கு ஒரு தைரியம் வரணும். நான் இயக்குநரானா மகிழ்ச்சிதான்.

"தமிழ் சினிமாவில் பாகவதர் காலம் முதல் உங்கள் காலம் வரை இருவரை ஒப்பிடுவது தவிர்க்க முடியாது என நினைக்கிறீர்களா?" 

"நோ கமெண்ட். இதைப் பத்தி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை." 

"நீங்க ஃபேஸ்புக், ட்விட்டர்ல இருக்கீங்களா?" 

"நான் ட்விட்டர்ல கிடையாது. முதல்ல ஃபேஸ்புக்ல இருந்தேன். இப்ப இல்ல. ஒரு காமெடி, ஒரு சந்தோஷமான செய்தியை பார்த்தோம்னா... அதுக்கு அடுத்து ஒரு கொடூரமான சம்பவமோ, போட்டோவோ வந்துடுது. ஒரே மனநிலையை ஃபேஸ்புக் தக்க வைக்க மாட்டேங்குது. அதோட டிசைனே அப்படித்தான்னாலும் அது எனக்கு ஒத்துவரலை. அதுனால ஃபேஸ்புக்ல இருந்து எப்பவோ வெளியே வந்துட்டேன். என் ஃபேஸ்புக் பேஜ் மட்டும் இருக்கு. என் நண்பர் ஒருத்தர் அதை பாத்துகிறார்." 

"இப்போது தமிழ் சினிமாவின் சூழல் எப்படி இருக்கு?" 

"எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நல்லாத்தான் இருக்கு. படங்கள் வந்துட்டே இருக்கு. வாரத்துக்கு ஒரு படம் வந்தாலும் சரி, ரெண்டு படம் வந்தாலும் சரி, அதைப் பார்க்க அதற்கான ஆடியன்ஸும் வந்துட்டேதான் இருக்காங்க. நிறைய வெரைட்டியான படங்கள் வந்தாலும் அதற்கு ஏற்றமாதிரி ரசிக்கறாங்க. புதுசு புதுசா நிறைய முயற்சிகள் நடக்குது. இந்த ரசனைமாற்றம் ஒருத்தர்கிட்ட மட்டும் ஏற்படுவது இல்லை. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், ரசிகர்கள் என எல்லாரிடமுமே ஏற்பட்டு இருக்கு. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கானு கேட்டா எனக்குச் சொல்ல தெரியலை. அப்ப நான் இங்க கிடையாது. இப்ப நிறையப் புதுப்புது கதைகள், சிந்தனைகள் எல்லாம் உள்ளே வருது. யங்ஸ்டர்ஸ் நிறையப் பேரு உள்ளே வந்து இருக்காங்க. அவங்களுக்கான வாசலும் இப்ப ஓபன் ஆகியிருக்கு." 

"உங்களுக்குப் படம் இயக்கும் ஆசை இருக்கா?" 

பட்டெனப் பதில் வருகிறது "நிறைய இருக்கு பிரதர். மண்டைக்குள்ள அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல ஏதாவது ஒரு கதை ஓடிட்டேதான் இருக்கு. டைரக்‌ஷனும் அவ்வளவு ஈஸி இல்லை. அதுக்கு ஒரு தைரியம் வரணும். நான் இயக்குநரானா மகிழ்ச்சிதான். ஒவ்வொரு நாளும் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டே செம சர்ப்ரைஸ் பண்ணுது. ஒருநாள் திடீர்னு ரொம்ப நல்லா ஷாட் ரொம்ப நல்லா வந்திருது. திடீர்னு ஒருநாள் சொதப்புது. இப்படி எல்லாமே நடக்குது. ஆர்ட்ல ரொம்ப முக்கியமானது நம்மை நாமே சர்ப்ரைஸ் பண்ணிக்கறதுதான். அதை நாம ஏத்துக்கணும். அப்பதான் நம்மகிட்ட இருந்து இன்னமும் நிறைய சர்ப்ரைஸ் வரும். டைரக்‌ஷனும் சர்ப்ரைஸா அமையுதானு பார்க்கலாம்." 

"சரி, நீங்க படம் எடுத்தால் என்ன ஜானர்ல எடுப்பீங்க?" 

சிரிக்கிறார் "இப்ப எந்த ஐடியாவுமே இல்லையே பிரதர். ஆசை மட்டும்தான் இருக்கு. சினிமாவுக்கு வந்து நீங்க நடிகர் ஆகிட்டீங்கன்னா... உங்களுக்குமே இந்த ஆசை வரக்கூடியதுதான்." 

"2017-ல என்ன திட்டம் வச்சு இருக்கீங்க?" 

"இந்த வருஷம் என் படங்கள் மினிமம் அஞ்சாவது வரும்னு தோணுது. 'கவண்' ரிலீஸ் ஆகுது. ‘புரியாத புதிர்’ ரிலீஸ் லிஸ்ட்ல இருக்கு.  'இடம் பொருள் ஏவல்' ரிலீஸ் ஆகணும்னு ஆசைப்படுறேன்.  'விக்ரம் வேதா'னு படம் சீக்கரம் வெளியாகும். நல்லது நடந்தால் சரிதான்." என  தம்ஸ்அப் காட்டுகிறார் விஜய் சேதுபதி.

- நா.சிபிச்சக்கரவர்த்தி 
படங்கள் : அ.முத்துகுமார்