Published:Updated:

விஜய்சேதுபதிக்கு இதே வேலையாப் போச்சு! - கவண் விமர்சனம் #Kavan

விகடன் விமர்சனக்குழு
விஜய்சேதுபதிக்கு இதே வேலையாப் போச்சு! - கவண் விமர்சனம்  #Kavan
விஜய்சேதுபதிக்கு இதே வேலையாப் போச்சு! - கவண் விமர்சனம் #Kavan

கே.வி.ஆனந்த் படம் என்றால் ஓர் எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். கதைத் தேர்விலும், படமாக்கலிலும் ஆனந்தின் உழைப்பே அதற்குக் காரணம். விஜய் சேதுபதி, டி.ஆர் காம்போ என்பதாலும், ‘கோ’ என்ற வெற்றிப்படம் தந்த அதே ‘மீடியா’ சம்பந்தப்பட்ட கதை என்பதாலும்  ‘கவண்’ ஒருபடி அதிக எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது. அதைப் பூர்த்தி செய்திருக்கிறதா?

மீடியாவில் சாதிக்கும் கனவுகளோடு அது சம்பந்தப்பட்ட படிப்பை முடித்திருக்கும் விஜய் சேதுபதி, 'ஜென் ஒன்' டிவியில் பணிக்குச் சேர்கிறார். மீடியாவின் பக்கபலத்தோடு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த நினைக்கும் அவருக்குக் கிடைக்கும் அனுபவங்களும், அதன் விளைவுகளைக் கொண்டு இலக்கை அடைகிறாரா என்பதுமே படம்.  .  

ஊடகங்களினால் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதே ஊடகத்துறையின் இன்னொரு பக்கம் எப்படியிருக்கும் என்பதுதான் மையக்கரு. படத்திற்கான கதையை கே.வி.ஆனந்த், சுபா மற்றும் கபிலன் வைரமுத்து என்று மூவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். வசனம், சுபா & கபிலன் வைரமுத்து. சுபா, கே.வி.ஆனந்த் கூட்டணியோடு கபிலன் வைரமுத்துவும் கைகோர்த்திருப்பது, அவரது  ‘மெய் நிகரி’ நாவலின் மூலமாகத்தான். படம், அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

‘வழக்கம்போல விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருக்கிறார்’ - விஜய் சேதுபதி படங்களின் விமர்சனத்தைத் தட்டச்சும்போது, டெம்ப்ளேட்டாக கீபோர்டே இந்த வரிகளைத் தட்டிவிடும் போல. இவருக்கு இதே வேலையாப் போச்சு. இத்தனை படம் நடிக்கிறாரே.. ‘ஒரே மாதிரியான நடிப்பு’ என்று சொல்ல விடுவதில்லை இவர்.   கதாபாத்திரத்துக்கு தேவையான மாதிரி தன்னை மாற்றிக் கொள்வது,  அதற்கு நியாயம் கற்பிப்பது என்று கலக்குகிறார் மனுஷன்.  மடோனாவுடனான காதல்,  ஊடல் அத்தியாயங்களுக்கென்று ஓர் உடல்மொழியும், வில்லனுக்கு முன்பாக ஓர் உடல்மொழியும் காட்டி அசத்துகிறார். டாக் ஷோவுக்கான கைதட்டல் எல்லாரிடமிருந்தும் கிடைத்த பின்னும், மடோனாவின் ரியாக்‌ஷனை எதிர்பார்த்து அலையும் கண்கள்.. ச்சோ ச்ச்ச்வீட்! மடோனாவின் பாராட்டு கிடைத்ததும் பதில் ரியாக்‌ஷன் ஒன்று கொடுக்கிறார் பாருங்கள். நீ நடிகன்யா! விஜய் சேதுபதியின் வசன மாடுலேஷனும் பல இடங்களில் பக்கா மாஸ் பாஸ்!   முக்கியமாக ஒரு காட்சியில் சீரியஸாக இவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆகாஷ்தீப் திரும்ப, ‘இங்க பாரேன்’ என்று இவர் ஸ்டைலில் சொல்லும்போது க்ளாப்ஸ் பறக்கிறது. 

டி.ராஜேந்தர், படத்தின் இன்னொரு ப்ளஸ். எம்.ஜி.ஆர், ரஜினி, பாலையா, நம்பியார் என்று கலந்து கட்டி நடித்து வெளுத்து வாங்குகிறார். ஆனால் அவரது டெம்ப்ளேட் அடுக்குமொழி ஒரு சில இடங்களைத் தவிர பிற இடங்களில் சோதிக்கிறது.   மனது உடைந்துபோய்ப் பேசும் காட்சிகளில் அண்டர்ப்ளேவில் கவர்கிறார்.  

கே.வி.ஆனந்தின் கதை நாயகிகளுக்கு நடிக்கும் ஸ்கோப்-பும் இருக்கும். இதிலும் அப்படியே.  சொந்தக் குரல் கொஞ்சம் படுத்தினாலும், முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். பாண்டியராஜன், விக்ராந்த், நாசர், ஜெகன், போஸ் வெங்கட் என படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

வில்லன் ஆகாஷ்தீப், படத்தில் எடுபடவே இல்லை. ஸாரி பாஸ். லிப் சிங்க் ஆகாத அவரது வசன உச்சரிப்பும், சலிக்க வைக்கிற உடல்மொழியும் படத்தின் பெரிய மைனஸ். அயன் படத்தின்போதே இவருக்கான காட்சிகளும் ஷுட் செய்திருப்பார்களோ என்று நினைக்க வைக்கிற அளவு ‘சேம் சேம்’ நடிப்பு.  ஒரு சீனுக்கு வந்தாலும் பவர்ஸ்டார் மனதில் நிற்கிறார். அதுவும், ‘ஜீனியஸ்னு சொல்லிடாதீங்க.  நீங்கெல்லாம் என்னை காமெடி பீஸா நினைக்கிற வரைக்கும் தான் எனக்கு மார்க்கெட்டு...’ என அந்த சீனில் அவர் பேசும் வசனம் ‘நச்’!   அந்த இன்டர்வெல் ப்ளாக்  நல்ல ஐடியா.  

டெலிவிஷன் மீடியா என்ற மையக்கரு ஓகே. ஆனால் பல காட்சிகள், கே.வி.ஆனந்தின் முந்தைய படங்களையே ரீ ஷுட் செய்தது போல ரிப்பீட் மெமரீஸைக் கொண்டு வருகிறது. அரசியல்வாதிகள் கூட்டத்தில் ரௌடிகள் ஊடுருவல்.  வில்லனுக்குத் துணையாக ஒரு ‘ஆன்ட்டி’ கேரக்டர். பரபரப்பான விஷயங்களை ஹீரோ செல்ஃபோனிலோ, கேமராவிலோ ஷுட் செய்து முக்கியமான நேரத்தில் பயன்படுத்துவது என்று எழுதினால் தீராத அளவு கே.வி.ஆனந்த் பாணி க்ளீஷேக்கள் இதிலும். அரதப்பழசாகிவிட்ட,  ‘இவன் கூட்டதில் அவன் ஆள் - அவன் கூட்டத்தில் இவன் ஆள்’ என்கிற   ‘கருப்பு ஆடு’ டெம்ப்ளேட் விஷயத்தை இன்னும் எத்தனை படங்களில்தான் காட்டுவீர்கள்? 

’கேள்வி முக்கியம்னு நெனைக்கறவன் சத்தமா கேட்பான். பதில்தான் முக்கியம்னு நெனைக்கறவன் மெதுவா கேட்பான்’ என்பது போல ஆங்காங்கே  வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. டிவி ஷோ காட்சிகளில் அபிநந்தன் ராமானுஜனத்திற்கு ஒளிப்பதிவு பெரும் சவாலாக இருந்திருக்கும்.  சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆண்டனி எடிட்டிங்கில் டிவி ஷோ காட்சிகளுக்கும் இன்னும் நிறைய கத்திரி போட்டிருக்கலாம்.  அவ்வப்போது ‘இந்த ரிமோட்டை எங்க வெச்சேன்’ என்று தேடச் சொல்கிற அளவு, அதிகமான டி.வி. காட்சிகள். 

ஆர்ட் டைரக்டர் DRK கிரணுக்கு டபுள் சபாஷ் . டி.ராஜேந்தரின் டிவி அலுவலகத்தை மாற்றியதில் மூளைக்கு எக்கச்சக்க வேலை கொடுத்திருக்கிறார். ஷூ-வில் பூச்செடி, 'கம்மோடி’ல் நாற்காலி, தேங்காய் சிரட்டையில் காபி கப், டேபிளிலேயே மார்க்கிங் போர்டு என்று ‘இப்பவே அந்த ஆஃபீஸைப் பார்க்கணுமே’ என்று நினைக்க வைக்கிறார். 
 
இசை ஹிப் ஹாப் ஆதி. என்ன ஆச்சு பாஸ்? ‘நானேதான் பாடுவேன்’ என்பதை மைண்டிலிருந்து எடுத்துவிட்டு, கதைக்கு மெட்டு போட்டு, அதற்கு யார் குரல் பொருத்தமோ அவரைப் பாடவைக்கலாம். பின்னணி இசையும் சோபிக்கவில்லை. 
   
மீடியா செய்யும் தப்பான விஷயங்களை தோலுரித்து காட்ட வேண்டும் என்பதற்காக பல கூடுதல் விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். அவை அனைத்தும் காதில் பூ சுற்றும் ரகம். ஒரு அரசியல் தலைவருக்கு ஜால்ரா தட்ட டாக் ஷோ நடத்த நினைப்பவர்கள்,  லைவ் ஷோவாகவா நடத்துவார்கள்?  வெறும் நான்கு பேர்கள் சேர்ந்தால் ஒரு பெரிய சேனலின் ஒளிப்பரப்பு சிஸ்டத்தையே மாற்றிட முடியுமா?    

இயக்குநர் கே.வி.ஆனந்தின் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ, அவையெல்லாம் இருக்கின்றன. அது ப்ளஸ். ஆனால், அவை மட்டுமே இருப்பது மைனஸ்..! 

பின் செல்ல