" 'போடா... போ. உனக்கு ஊர்ல தேன்மொழி, கனிமொழின்னு எவளாச்சும் வாய்க்கா வரப்புல திரிஞ்சுட்டு இருப்பா. அவளைத் தேடித்தேடி லவ் பண்ணு. நான்லாம் உனக்கு செட்டே ஆக மாட்டேன்'. நயன்தாராவுக்கு இந்த டயலாக்கை சும்மா கேசுவலாத்தான் டப்பிங் பேசினேன். ஆனா, இந்த டயலாக்கும் படமும் பெரிய ரீச் கொடுத்துச்சு" என உற்சாகமாகப் பேசுகிறார், டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் ஆர்.ஜேவாக அசத்திக்கொண்டிருக்கும் தீபா வெங்கட்.
"என்னோட முதல் மீடியா அனுபவமே டப்பிங்தான். நான் சின்னப் பொண்ணா... எட்டாவது படிச்சுட்டு இருந்த சமயத்துல, தெரிஞ்ச ஃபேமிலி ஃப்ரெண்டு மூலமா டப்பிங் ஆடிஷன்ல கலந்துக்கிட்டு ட்ரைப் பண்ணிப்பார்த்தேன். வாய்ஸ் ஓகே ஆகவே, இந்தி கார்ட்டூன் சேனலுக்குச் சென்னையில் இருந்தே டப்பிங் பேசிட்டு இருந்தேன். அந்தச் சின்ன வயசுலயே 'ஹா....ஹே'னு ஓவர் ரியாக்ஷனோடு பேசி நடிப்பேன். இன்னைக்கு வரைக்கும் டப்பிங்கை விட்டுப் பிரிய முடியாத அளவுக்கு எனக்கு குளோஸ் ஆகிடுச்சு. டப்பிங் ஆர்டிஸ்டா இருந்த என்னைப் பத்தி மீடியா, சினிமா வட்டாரத்துல தெரிய ஆரம்பிச்சு அடுத்தடுத்த ஆக்டிங் வாய்ப்புகளும் வந்துச்சு. அப்படித்தான் 'பாசமலர்கள்' படத்திலும், பாலசந்தர் சாரோட 'கையளவு மனசு' சீரியலிலும் நடிச்சேன்.
படிப்புக்குப் பாதிப்பு இல்லாமல் ஸ்கூல், டப்பிங், ஆக்டிங்னு பரபரப்பா இயங்கிட்டு இருந்தேன். என்னோட இளமைப் பருவம் த்ரில்லிங்காவும், சுவாரஸ்யமாவும் போயிட்டு இருந்துச்சு. ரெகுலர் காலேஜ் படிக்கவும் நேரம் இல்லாமல், கரஸ்லதான் யூஜி, பிஜி கோர்ஸ் முடிச்சேன். கரஸ்ல முதல் வருஷம் படிக்கும்போது, 'அப்பு' படத்தில் தேவயானிக்கு டப்பிங் பேசினேன். அதுதான் ஹீரோயினுக்காக முதன்முதலா பேசினது. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க, நிறைய நடிகைகளுக்கு வரிசையா டப்பிங் பேசிட்டு இருந்தேன். 'தில்', 'ஆனந்தம்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஏழுமலை', 'வாரணம் ஆயிரம்', 'வெடி', 'மயக்கம் என்ன', 'தெய்வத்திருமகள்', 'ருத்ரமாதேவி' என நான் டப்பிங் பேசின படங்களின் லிஸ்ட் ரொம்பப் பெருசு. சினேகா, சிம்ரன், அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஹீரோயின்களுக்கு அதிகமா டப்பிங் பேசி இருக்கேன்" என்கிற தீபா வெங்கட், டப்பிங் பேசியதில் மறக்கமுடியாத அனுபவங்களைப் பகிர்கிறார்.
" 'ஏழுமலை' படத்தில் சிம்ரன் கோபப்பட்டு, குடும்பத்தார் எல்லோரையும் திட்டும் காட்சியில் கஷ்டப்பட்டு டப்பிங் பேசினேன்., 'மயக்கம் என்ன' படத்தில் ரிச்சா கங்கோபாத்யாயா
கர்ப்பம் கலைஞ்சு அழும் காட்சியில் டப்பிங் பேசுறப்போ, நானும் அஞ்சு மாசக் கர்ப்பம். நிஜமாவே எமோஷனலாகி டப்பிங் பேசினேன். 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் அமலாபாலுக்கு டப்பிங் பேசுறப்போ நிறைமாத கர்ப்பிணியா இருந்தேன். அதனால், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, இன்னொரு நாற்காலியில் கால்களைத் தூக்கிவெச்சுக்கிட்டு பேசறதுக்கு ஏற்பாடு செஞ்சாங்க. இந்தத் தருணங்களை எல்லாம் மறக்கவே முடியாது. பதினேழு வருஷமா டப்பிங் பேசினாலும், 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவுக்கு டப்பிங் பேசினப் பிறகுதான் ரீச் அதிகம் ஆச்சு. அந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் முதன்முறையா நயன்தாராவை மீட் பண்ணிப் பேசினேன். 'நீங்க சூப்பரா டப்பிங் பேசியிருந்தீங்க'னு பாராட்டினாங்க. 'நீங்கதான் டப்பிங் பேசினீங்களா? நம்பவே முடியலை. பிரமாதமா இருந்துச்சு'னு டைரக்டர் ஷங்கர் சார் வாழ்த்தினார்'' என்கிற தீபா வெங்கட், டப்பிங் பேசுவதில் உள்ள சிரமங்களைச் சொன்னார்.
''ரெண்டு நிமிஷ விளம்பரமா இருந்தாலும் சரி, ஒரு படத்துக்குப் பேசுறதா இருந்தாலும் சரி, டப்பிங் ஈஸி கிடையாது. அழுகை, சிரிப்பு, கோபம் என அந்தக் கதாபாத்திரமாகவே மாறி உயிர் கொடுக்கணும். அதனாலயே ஒவ்வொரு முறை டப்பிங் போகும்போதும் சேலஞ்சா இருக்கும். நான் ஹோம்லியான கேரக்டரைதான் செலக்ட் செஞ்சு நடிப்பேன். அதனால், ஒரு கட்டத்துல சினிமா வாய்ப்புகளைக் குறைச்சுக்கிட்டு, எனக்கு கம்ஃபர்டபிளா இருந்த சீரியல்களில் அதிக கவனம் செலுத்தினேன். தேவயானிக்கு குளோஸ் ஃப்ரெண்டா 'கோலங்கள்' சீரியலில் எட்டு வருஷம் நடிச்சேன். அந்தச் சமயத்துல நிஜமான நெருங்கிய தோழிகளாகப் பழகி, ரெண்டு பேரும் நடிச்சது மறக்கமுடியாத பசுமை நினைவுகள். அந்த சீரியல் முடியும் சமயத்தில், எனக்குக் கல்யாணம் ஏற்பாடு ஆச்சு. ஓடிஓடி உழைச்சது போதும். குடும்பத்து நேரம் ஒதுக்கலாம்னு முடிவெடுத்தேன். அதனால், ஆக்டிங்கை முழுசா ஸ்டாப் பண்ணிட்டேன். ஆனால், டப்பிங்கை விட மனசு வரலை. அந்த அளவுக்கு டப்பிங் என் உயிரோடு கலந்து இருக்கு. ஹலோ எஃப்.எம்லயும் தினமும் ரெண்டு மணி நேர ஷோ பண்ணிட்டு இருக்கேன்.
இப்போ, 'அறம்', 'நெஞ்சம் மறப்பதில்லை' மற்றும் 'காற்று வெளியிடை' தெலுங்கு வெர்ஷனான 'அதிதி' படத்துக்கும் டப்பிங் பேசியிருக்கேன். எங்க குடும்பத்தில் யாருமே சினிமாவுல இல்லை. நானும் இதுவரைக்கும் வாய்ப்புத் தேடி அலைஞ்சது கிடையாது. என்னைத் தேடி வரும் வாய்ப்புகளுக்குதான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். ஐடியில வொர்க் பண்ற அன்பான கணவர், அருமையான ரெண்டுப் பசங்க, பாசம் பொழியும் பிறந்த மற்றும் புகுந்த வீட்டு குடும்பம் என வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு. இதுபோதுமே. இதுக்கு மேல என்னங்க வேணும்'' என பளிச் புன்னகை சிந்துகிறார் தீபா வெங்கட்.
- கு.ஆனந்தராஜ்