Published:Updated:

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் அடுத்த திட்டங்கள் என்னென்ன?

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் அடுத்த திட்டங்கள் என்னென்ன?
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் அடுத்த திட்டங்கள் என்னென்ன?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளாக விஷாலின் ‘நம்ம அணி’ பெரும்பான்மையுடன் தேர்வாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கே.ஆர்  224 வாக்குகள் பெற்றுள்ளனர். 

துணைத் தலைவர்களாக கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ், செயலாளராக கே.இ. ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு. இதில் கதிரேசனைத் தவிர மற்ற அனைவருமே விஷால் அணி. அதுமட்டுமின்றி 21 செயற்குழு உறுப்பினர்களில் 17 பேர் விஷால் அணி. இதனால் தயாரிப்பாளர் சங்க முடிவுகளை எடுப்பதிலும், அடுத்தக் கட்ட நகர்விற்கும் விஷால் அணிக்கு எந்தப் பிரச்னையும் வராது என்பது உறுதி. 

நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்! 

விஷாலின் ‘நம்ம அணி’, ராதாகிருஷ்ணன் தலைமையில் ‘முன்னேற்ற அணி’ மற்றும் கே.ஆரின் ‘எழுச்சி அணி’ என இந்த மூன்று அணிகளுக்கும் கடும் போட்டி.  ஒவ்வொரு அணியினரும் தங்களின் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய அட்டை ஒன்றை வாக்காளர்களுக்குத் தருவதற்காக தயார் நிலையில் வைத்திருந்தனர். 

ஒவ்வொரு அணிக்குமென தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முன்னேற்ற அணி 3 அறைகளையும், கே.ஆர் அணி இரண்டு அறைகளிலும் இருக்க, விஷால் அணி ஒரு அறை போதும் என்று பெற்றுக்கொண்டனர். இந்த அறைகளைத் தாண்டித்தான் வாக்காளர்கள் உள்ளே ஓட்டுப்போடச் செல்லவேண்டும் என்பதால் ஒவ்வொருவருமே தங்களிடம் இருக்கும் போட்டியாளர்களின் லிஸ்டை வாக்காளர்களிடம் கொடுத்து அனுப்பினர். ஸ்பெஷல் என்னவென்றால் பொதுத்தேர்தல் போலவே, அனைத்து வாக்காளர்களுமே ’உங்களுக்குத்தான் ஓட்டு’ என்று எதிர்ப்படும் வேட்பாளர்களிடம் சொல்லிச் சென்றதுதான்.  

வாக்களித்துவிட்டு வெளியே வரும் அனைத்து பிரபலங்களும் நேரடியாக செய்தியாளர்களைச் சந்தித்து செல்லவும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலை. சரியான ஏற்பாடு இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நிருபர்களை வாட்டி எடுத்தது தனிக்கதை.

தேர்தலுக்கு முன்பே தமிழகம் முழுவதும் இருக்கும் 600க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து தனக்கான வாக்குகளை சேகரித்தது ‘நம்ம அணி’. அதுமட்டுமின்றி 1000 பேருக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். அதனால் தேர்தல் நேரத்தில் கைகளை மட்டும் அசைத்துவிட்டு ஹாய் சொல்லிக் கொண்டிருந்தனர்.  அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன்னாடியே ‘நம்ம அணி’க்கான லிஸ்டை பெரும்பாலான தயாரிப்பாளர்களின் கையில் கிடைக்கும் படி செய்தது விஷால் அணிக்கு ப்ளஸ். 

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆர்யா ஸ்கூட்டியில் வந்து ஆச்சர்யப்படுத்த, ரஜினியும், கமலும் ‘ஆடி’ காரில் வந்து இறங்கினர். 

எதிரணிக்கு ஆதரவானவர்களாக இருந்தாலும் கூட, மற்ற அணியினர் வாக்குப் பகுதியில் நட்புறவுடனே பழகிக்கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னரே, ராதாகிருஷ்ணன் அணியினர் வெற்றிபெற்றுவிட்டதாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அந்த நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தயாரிப்பாளர் சங்கத்தில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1212. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு இதுவரை 800 முதல் 900 ஓட்டுகளே பதிவாகும். ஆனால் இந்தத் தேர்தலில் 1059 வாக்குகள் பதிவாகியிருந்தது.  இதில் 22 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கபட்டது.  

விஷாலின் நெக்ஸ்ட் ப்ளான்: 

நீண்ட நாட்களாகவே ஒழிக்கப்படாமல் இருக்கும் திருட்டு விசிடி பிரச்னை, சிறு தயாரிப்பாளர்களின் படத்தை வெளியிடாமல் தடுப்பது, தயாரிப்பாளர் சங்கத்தில் நிகழும் ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து தான் விஷாலின் அணி போட்டியில் களம் இறங்கியது. பெரும்பான்மை உறுப்பினர்களுடன் வெற்றியும் பெற்றுவிட்டது. இனி விஷால் அணியில் செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்று நான் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:-

விஷால் தேர்தல் வாக்குறுதிகளாகக்  கூறிய முக்கிய 12 வாக்குறுதிகளை 12 மாதத்தில் நிறைவேற்றவிருக்கிறார்கள். ரிலீஸ் பிரச்னை, சேட்டிலைட் உரிமம், சின்ன - பெரிய படங்கள் என்று பாகுபாடில்லாமல் படங்களை ரிலீஸ் செய்வது, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு முதல் பல வசதிகள் ஏற்பாடு செய்தல் என பல வாக்குறுதிகள் இதில் அடங்கும். 

 சங்கத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இனி  வெளிப்படைத்தன்மையுடன்  நடத்தவிருக்கிறார்கள். 

 இணையதள உரிமைகள், அதாவது யூ-டியூப் மற்றும் ஒரிஜினல் டிவிடி உரிமை  போன்றவை  தயாரிப்பாளர்களிடம் மட்டுமே இருக்கும். அதுமட்டுமின்றி சேட்டிலைட் உரிமம் கூட, டிவி நிறுவனங்களுக்கு சில வருடங்கள் மட்டுமே விற்பனை செய்வதற்கான சட்டம் கொண்டுவரவிருக்கிறார்கள். 

 சினிமாத்துறையை அழிக்கும்  மிகப்பெரிய வில்லன்களாக விஷால் டீம்  கருதுவது,  பைரசிதான். மேலும் சேட்டிலைட் உரிமையை முறைப்படுத்துவது, FMS உரிமையில் தயாரிப்பாளார்கள் பலன் பெறும் வண்ணம் சில மாற்றங்கள் என்பன போன்றவற்றில்  கவனம் செலுத்துவதே விஷால் அணியின் முக்கியக் குறிக்கோள்.  பிரச்னைகளை ஒவ்வொன்றாக களைந்த பிறகு, திரையரங்க கட்டணத்தையும் குறைக்க ஏற்பாடும் செய்யவிருக்கிறார்கள். 

 நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரின் பிரச்னைகளும் தீர்ந்துவிட்டால், கட்டணக்குறைப்பும் எளிது தான் என்பது அவர்களின் எண்ணம். அடுத்த 12 மாதத்தில் விஷால் அணி தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

-முத்து பகவத்-  

படங்கள் : தி,குமரகுருபரன்