Published:Updated:

“என்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல்ல..!” - யார் இந்த நடிகர்/இயக்குநர்?

“என்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல்ல..!” - யார் இந்த நடிகர்/இயக்குநர்?
“என்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல்ல..!” - யார் இந்த நடிகர்/இயக்குநர்?

‘நாயைப் போல உழை, ராஜாவைப் போல வாழு’ என்ற வார்த்தைகளை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் டி.ஆர்.கே.கிரண். இந்த வார்த்தைகளுக்கு ஏற்றார்போலவே ‘கவண்’ படத்தில் தனது வேலையை செய்திருக்கிறார் கிரண். அதை படம் பார்த்தவர்கள் நன்கு அறிவார்கள். ‘ஆர்ட் டைரக்டரின் ஒர்க் பிரமாதமாக இருக்கே! ஒரு பேட்டி எடுக்கலாம்’ என்று கிரணைத் தொடர்பு கொண்ட எனக்கு ஆச்சர்யம். இவர் ஆர்ட் டைரக்டர் மட்டுமல்ல ஆக்டரும் தான்...

நீங்க தான் ஆர்ட் டைரக்டர் டி.ஆர்.கே.கிரணா..?!

“எனக்கு இந்த கேள்வி ஆச்சரியமா இல்ல பிரதர். என்னை எல்லாருக்கும் நடிகனாகத் தான் தெரியும். அடிப்படையில் நான் ஒரு ஆர்ட் டைரக்டர். சினிமாவுல 25 வருஷமா இந்த வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். அப்பப்போ சினிமாவை விட்டு வெளிய போய் விளம்பர படங்கள் பண்ணிட்டு இருப்பேன். அப்பறம் மறுபடியும் சினிமாவுக்கு வந்திருவேன். அதனாலயே பலருக்கு என்னைத் தெரிய வாய்ப்பு இல்லை. நான் நடிக்க வந்ததுக்கு அப்பறம் எல்லாரும் என்னை நடிகனா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் ஒரு ஆர்ட் டைரக்டர்ங்கிறது பலருக்கு தெரியாது பாஸ். ‘நேருக்கு நேர்’ படத்தில் ஒர்க் பண்ணும் போது தான் கே.வி.ஆனந்த் பழக்கமானார். அப்போ இருந்து நாங்க நல்ல நண்பர்கள். அப்படித்தான் எனக்கு ‘கோ’, ‘அனேகன்’, ‘கவண்’ பட வாய்ப்புகள் கிடைச்சது.”

‘கவண்’ படத்தோட ஆர்ட் டைரக்ஷனில் சின்ன சின்ன விஷயங்களும் கிரியேட்டிவா இருந்தது. அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க..?

“நான் நுங்கம்பாக்கத்தில் ஒரு ஷோ ரூம்க்கு டிசைன் பண்ணியிருந்தேன். அதை பார்த்த கே.வி, ‘என்னோட அடுத்தப்படத்துல இந்த மாதிரி சில விஷயங்கள் யூஸ் பண்ணணும், இதே மாதிரி டிசைன்ஸ் நிறைய ரெடி பண்ணு’னு சொன்னார். நானும் நிறைய டிசைன்கள் ரெடி பண்ணியிருந்தேன். இப்போ நீங்க படத்துல பார்த்தது எல்லாம் அதில் பாதி தான். படத்தில் காட்டாத பல டிசைன்கள் இருக்கு. 

ஒரு பழைய ஆபிஸை அங்க இருக்கிற பொருட்களை வைத்தே, காசு செலவழிக்காமல் எப்படி புதுசா மாத்தலாம்னு பல நாட்கள் யோசிச்சோம். அப்படித்தான் தேங்காய் சிரட்டையில் காபி கப், நியூஸ் பேப்பர்களில் பேக் கிரவுண்ட் டிசைன், ஷூவில் பூ செடி, பெயிண்ட் டப்பாக்களில் டேபிள் டிசைன், பழைய டிவி பிக்சர் ட்யூப்களில் சீலிங் டிசைன், பழைய வெஸ்டன் டாய்லெட்களில் சேர்கள் என பல விஷயங்களை பயன்படுத்தினோம். அது எல்லாத்தையும் இப்போ மக்கள் பார்த்துட்டு பாராட்டுறாங்கனு நினைக்கும் போது பெருமையா இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் கே.வி. தான். 

‘அனேகன்’ படத்துல என்னோட ஒர்க்கை எல்லாரும் பாராட்டுவாங்கனு அவர் சொன்னார். ஆனால் அது நடக்கல. அப்போ என்னை விட அவர்தான் ரொம்ப கவலைப்பட்டார். என்னோட ஒர்க் வெளியில தெரியணும். என்னை எல்லாரும் பாராட்டணும்னு அவர் நினைப்பார். அதுக்காகவே இந்தப் படத்தில் சில விஷயங்களை வைத்தார். ‘கவண்’ படத்தில் பழைய ஆபிஸை புது ஆபிஸா மாத்துற அந்த எபிசோடு முதலில் ஒரு சீனாக தான் இருந்தது. சீனாக வெச்சு அதை கண்டுக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு அதை ஒரு பாட்டாக மாத்தினார். இன்று அதற்கான பலன் கிடைச்சிருக்கு.”

‘கவண்’ படப்பிடிப்பில் மறக்க முடியாத தருணம்..?

“கே.வி.ஆனந்தை திருப்திப்படுத்துறது ஈசியான காரியம் இல்ல. என்ன பண்ணினாலும், எவ்வளவு சூப்பரா பண்ணியிருந்தாலும் ‛இன்னும் நல்லா பண்ணுங்க’ன்னு தான் சொல்லுவார். ஆனால், என் ஒர்க்கை பற்றி வெளியில பெருமையா பேசுவார். இந்த படத்திற்காக அவர் என்னை பாராட்டியதை விட டி.ஆர் சார் என்னை பாராட்டியது தான் என்னால் மறக்க முடியாத தருணமாக இருந்தது. படத்தில் டி.ஆர் சாரோட ஆபிஸா இருந்த முத்தமிழ் தொலைக்காட்சி ஆபிஸை நான் டிசைன் பண்ணி முடிச்சதும், முதல் சீன் ஷூட் பண்றதுக்கு டி.ஆர் சார் வந்தார். சுத்தி சுத்தி எல்லாத்தையும் பார்த்தவர், ஆர்ட் டைரக்டரை வரச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கார். நானும் அவரை போய் பார்த்தேன். நான் பண்ணுன ஒவ்வொரு விஷயத்தையும் நோட் பண்ணி என்னைப் பாராட்டினார். அவர் என்னைப் பாராட்டுவார்னு நான் நினைக்கவேயில்லை. அவரோட படங்களை பார்த்து வளர்ந்தவங்க நாம. அவரே நம்மை பாராட்டும்போது பெருமையா இருந்தது. எனக்கும் ஒரு படம் நீங்க பண்ணித்தரணும்னு கேட்டார்.”

ஆர்ட் டைரக்டரில் இருந்து ஆக்டர் அவதாரம். எப்படி..?

“ஆரம்பத்தில் இருந்தே சில நண்பர்கள் அவங்க படத்துல என்னை நடிக்கச் சொல்வாங்க. நான் வேணாம், வேணாம்னு எஸ்கேப் ஆகிட்டே இருந்தேன். ஆர்ட் டைரக்டரா பத்து, இருபது பேரை வெச்சு வேலை வாங்கிட்டு ஒரு டான் மாதிரி சுத்திக்கிட்டு இருக்குறேன். நம்மளை நடிக்கணும்னு கூப்பிட்டு போய் கும்பலோட கும்பலா நிக்க வச்சுட்டா என்ன பண்றதுன்னு தான், நடிப்புக்கு டேக்கா கொடுத்துட்டு இருந்தேன். அப்பறம் கே.வி.ஆனந்த் என்னை ‘கோ’ படத்தில் நடிக்க வச்சார். அதிலிருந்து  சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்திட்டு இருக்குது. அப்படித்தான் ‘கவண்’ படத்தில் என்னை போலீஸ் கதாபாத்திரத்தில் கே.வி நடிக்க வைத்தார். இது தான் ஆர்ட் டைரக்டர் ஆக்டரான கதை.” 

இப்போ என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க..?

“நான் எப்போதும் ஒரு படத்தில் ஒர்க் பண்ணிட்டு இருக்கும் போது இன்னொரு படத்துக்கு ஒர்க் பண்ண மாட்டேன். இப்போ விக்னேஷ்சிவன் இயக்கத்துல சூர்யா நடிச்சிட்டு இருக்குற ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல ஆர்ட் டைரக்டரா இருக்கேன். கே.வி.ஆனந்த் எனக்கு அண்ணன் மாதிரினா விக்னேஷ்சிவன் எனக்கு தம்பி மாதிரி.”

ஆர்ட் டைரக்ஷன்ல உங்களுக்கு ரோல் மாடல் யார்..?

“எங்க ஜென்ரேஷனுக்கும், எங்களோட முந்தைய ஜென்ரேஷனுக்கும் தோட்டாதரணி சார் தான் இன்ஸ்பரேஷன். அவருக்கு அப்பறம் சாபு சிரில் சார். இவங்களை மாதிரி ஆர்ட் டைரக்டர் ஆகணும்னு சினிமாவுக்குள்ள வந்தவங்க தான் நாங்க. நான் சுரேஷ், நாகராஜ், ராகவன்னு மூணு பேர்கிட்ட உதவியாளரா இருந்தேன்.” 

ஆர்ட் டைரக்ஷனுக்கு எந்த அளவுக்கு மக்களும் இயக்குநர்களும் முக்கியத்துவம் தர்றாங்க..?

“மக்களை பொறுத்தவரை பெரிய பெரிய செட் போடுறது தான் ஆர்ட் டைரக்ஷன்னு நினைக்கிறாங்க. ஆனால் ஆர்ட் டைரக்ஷன்னா அது இல்ல. ஒரு இயக்குநர் எழுதின கதையை எப்படி ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்துறாரோ அதே மாதிரி நாங்களும் ஆர்ட் டைரக்ஷன்ல அந்த கதையை வெளிப்படுத்தணும். டைரக்டர் கேப்டன்னா, ஆர்ட் டைரக்டரும் கேமரா மேனும் வைஸ் கேப்டன்ஸ். இது இயக்குநர்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அவங்க எப்போதும் ஆர்ட் டைரக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க.” 

உங்க குடும்பம்...

“சென்னை தண்டையார்பேட்டையில் தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே. நான் மீனவ குடும்பத்தை சேர்ந்தவன். ‘மீனவ குடும்பத்தில இருந்து எப்படி நீ ஆர்ட் டைரக்ஷனுக்கு வந்த, அங்க இருந்து வர்றவங்க பெரும்பாலும் ஸ்டன்ட் மாஸ்டரா தானே போவாங்க’னு பல பேர் கேட்டிருக்காங்க. எனக்கு சின்ன வயசுல இருந்து ஓவியத்துல ஆர்வம். அப்படி வரைஞ்சு, வரைஞ்சே ஆர்ட் டைரக்டர் ஆகிட்டேன்.

நான் ஸ்கூல் படிக்கும் போதே என் அப்பா இறந்துட்டாங்க. எனக்கு இரண்டு அண்ணன், ஒரு அக்கா. எங்க அம்மா தான் எங்களை பெரிய ஆளாக்குனாங்க. அவங்க தான் எனக்கு அப்பா, ஃப்ரெண்ட், குரு எல்லாமே. என் மனைவி உமாராணி. என்னோட காலேஜ் ஜூனியர். காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. முதல் பையன் ப்ரணவ் ப்ளஸ் டு படிக்கிறார். இரண்டாவது பையன் தருண் எட்டாவது படிக்கிறார்.” 

உங்களோட இலக்கு என்ன..?

“இலக்கு என்னன்னு தெரியலை. நல்ல ஆர்ட் டைரக்டர்னு பேர் வாங்கணும்னு தான் உழைச்சிட்டு இருக்கேன். ஆனால் இயக்குநர் ஆகுறது தான் என்னோட ஆசை. எப்படியோ ஆர்ட் டைரக்டர் ஆகிட்டேன். அப்பறம் எப்படியோ ஆக்டர் ஆகிட்டேன். எப்படியும் ஒரு நாள் இயக்குநர் ஆகிடுவேன். அது தான் என் இலக்குனு நினைக்கிறேன்.”

கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆர்ட் டைரக்ஷன்ல இருக்கீங்க, உங்களுக்கான அங்கீகாரம் எப்போ கிடைச்சது..?

“நான் ஆர்ட் டைரக்ஷனுக்குள்ள வரும் போது யாரும் விளம்பர படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷன் பண்ண மாட்டாங்க. அதுனால நான் அதை பண்ண ஆரம்பிச்சேன். சவுத் இந்தியா ஃபுல்லா எங்க விளம்பரப் படங்கள் பண்ணினாலும் நான் தான் ஆர்ட் டைரக்ஷன் பண்ணுவேன். அப்போவே நல்ல அங்கீகாரம் கிடைச்சது. அப்பறம் சன் டிவி, விஜய் டிவினு பல சேனல்களுக்கு செட் போட்டேன். சினிமாவுக்குள்ள வரதுக்கு முன்னாடியே ஆர்ட் டைரக்டரா நல்ல பேர் எடுத்துட்டேன். ஆனால், என் முகம் வெளிய தெரிய ஆரம்பிச்சது ஆக்டர் ஆனதுக்கு அப்பறம் தான்.” 

ஆர்ட் டைரக்‌ஷன்ல ஆர்வம் இருக்கறவங்க சேரணும்னா எதை படிக்கலாம்? படிப்பில்லாம வெறும் ஆர்வம் இருக்கறவங்களுக்கு உங்களோட யோசனை ?

“ஆர்ட் டைரக்ஷனுக்கு தனியா கோர்ஸ் எதுவும் இல்ல. ஆர்ட் டைரக்டர் ஆகுணும்னா ஆர்வம் இருந்தாலே போதும். முதலில் எல்லாத்தையும் உள்வாங்கிக்கிற பழக்கம் இருக்கணும். ஒரு குப்பைத் தொட்டி பக்கத்துல முட்டை ஓடு எவ்வளவு இருக்கு, அதை சுத்தி குப்பைகள் எப்படி கிடக்குது, துக்க வீடு எப்படி இருக்கு, கல்யாண வீடு எப்படியிருக்குனு போற இடம் எல்லாத்தையும் மைண்ட்ல ஏத்திக்கணும். வரையிற பழக்கம் இருக்கணும். நாம பார்த்ததை எல்லாம் வரைஞ்சு வச்சுக்கணும். கலர் காமினேஷன் பத்தி தெரிஞ்சு வச்சுக்கணும். எந்த கலர் பக்கத்துல எந்த கலர் வரணும், எந்த கலர் வரக்கூடாதுன்னு எல்லாத்தையும் ஆர்வமா தெரிஞ்சு வெச்சுக்கணும். இந்த மாதிரி ஆர்வமா இருந்தாலே போதும், ஆர்ட் டைரக்ஷன் ரொம்ப ஈசி. அதே மாதிரி புது பசங்க சினிமாவுக்குள்ள வரும் போதும் காசு சம்பாரிக்கணும்னு நினைச்சு வரக்கூடாது. சாதிக்கணும்னு நினைச்சு வந்தாலே வெற்றி தான்.” 

சமீபத்தில் நீங்க பார்த்த சிறந்த ஆர்ட் டைரக்ஷன் உள்ள படங்கள் எது..?

“சாபு சிரில், ராஜீவன்னு பெரிய பெரிய ஆர்ட் டைரக்டர் எல்லாரும் எப்போதும் சூப்பரா தான் பண்ணுவாங்க. அவங்களை தவிர்த்துட்டு புது பசங்கள்ல நல்லா பண்ணுனவங்கன்னு பார்த்தா, ‘மாநகரம்’ படத்துல ஆர்ட் டைரக்ஷன் நல்லா இருந்தது. ‘இன்று நேற்று நாளை’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்கள்ல ஆர்ட் டைரக்ஷன் ரொம்ப நல்லா இருந்தது.”

மா.பாண்டியராஜன்