Published:Updated:

'வேணாம் அது உயிர்நாடி!' - ஸ்போர்ட்ஸ் காட்சிகள் ஆஃப் தமிழ் சினிமா! #VikatanFun

'வேணாம் அது உயிர்நாடி!' - ஸ்போர்ட்ஸ் காட்சிகள் ஆஃப் தமிழ் சினிமா! #VikatanFun
'வேணாம் அது உயிர்நாடி!' - ஸ்போர்ட்ஸ் காட்சிகள் ஆஃப் தமிழ் சினிமா! #VikatanFun

சண்டைக்காட்சியா? - முதலில் மொத்து மொத்தென அடி வாங்கிவிட்டு பின் மாத்து மாத்தென மாத்துவார் ஹீரோ. ரொமான்ஸ் காட்சியா? - கண்டதும் தலையைச் சுற்றி கிளி பறக்க, துரத்தி துரத்தி 'காதல்' என எதையோ செய்து அழுது புரண்டு பாடி, ஓடி ஓகே வாங்கிவிடுவார் ஹீரோ. இதெல்லாம் காலங்காலமாக சினிமாவில் உள்ள க்ளிஷேக்கள். இதைத் தாண்டி சில காட்சிகளிலும் அநியாய டெம்ப்ளேட்கள் தென்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை ஸ்போர்ட்ஸ் காட்சிகள். ஆஸ்கரை எட்டிப் பார்த்த 'லகான்' தொடங்கி புரொடியூசரை பதம் பார்த்த 'போட்டா போட்டி' வரை இந்தக் காட்சிகள் எல்லாம் அப்படியே அப்படியே!

வேணாம் அது உயிர்நாடி...!

ஹீரோவோ காமெடியனோ இந்த சீனில் இருந்து தப்பிக்கவே முடியாது. கிரிக்கெட்டோ கால்பந்தோ இந்த சீன் இல்லாமல் எடுக்கவே முடியாது. பயங்கர பில்டப்போடு களம் இறங்கி கம்பு சுற்றுவார் நம் ஆள். வேகமாய் வரும் பந்து படக்கூடாத இடத்தில் பட, வாயில் புகை வர சுருண்டு விழுவார். இந்த சீன் இல்லாத விளையாட்டுக் காட்சியை எல்லாத் தமிழ் சினிமாவிலும் பார்க்கலாம். ஒரு மனுஷனோட உயிர்நாடியில விளையாடுறதுல உங்களுக்கு அவ்ளோ சந்தோஷம்!

மோட்டிவேஷன் மோடி வித்தை :

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் சண்டை போடும் சீன் மாதிரிதான். முதல் பாதி முழுக்க எதிரணி 'இனி கிரவுண்டு பக்கம் வருவியா வருவியா' என அடித்து வெளுக்கும். டயர்டாகி வின்னிங் டிக்ளேர் கொடுத்துவிடலாம் என கும்பலாய் யோசிக்கும்போது ஒரு கேரக்டர் உள்ளே வந்து 'எழுச்சி' உரைகள் ஆற்றி உசுப்பேற்றும். அது பழைய கோச்சாகவோ குழந்தையோடு வேடிக்கை பார்க்க வந்த முன்னாள் காதலியாகவோ இருக்கலாம். அப்புறமென்ன, உள்ளே போய் திரும்ப மாத்து வாங்க வேண்டியதுதான். 

டெரர் வில்லன் :

ஆக்ரோஷமான போட்டியாகவே இருந்தாலும் ஹீரோ க்ளீன் ஷேவ் செய்த சச்சின் அப்பாவியாய் இருப்பார். எதிர்த்து விளையாடும் கேப்டனோ படு பயங்கர, சூழ்ச்சிக்கார, குறுக்கு புத்தியுடைய, சிவப்புக் கண்களோடு (எவ்ளோ லெங்த்தா போகுது?) முரட்டுத்தனமாய் விளையாடி ஹீரோவை வெளுப்பார். ஒரு கட்டத்துக்கு மேல், 'இதுக்கு மேல முடியாதுடா சூனாபானா' என ஹீரோவும் பாய்ந்து பாய்ந்து திருப்பித் தருவார். அதென்னய்யா எல்லா கேப்டனும் ஸ்டீவ் ஸ்மித் மாதிரியாவே இருப்பாங்க? தோனி மாதிரி ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க?

கரகோஷங்களை எழுப்புங்கள் :

இந்தியாவுக்கு பப்புவா நியூ கினியா நாடு கிரிக்கெட் விளையாட வந்தால்கூட அந்த அணியை ஆதரிக்க நாலு பேர் மைதானத்தில் இருப்பார்கள். ஆனால் ஹீரோ விளையாடும் போட்டிகளில் எதிரணிக்கு அவரின் கோச்சே ரொம்ப யோசித்துதான் சப்போர்ட் செய்வார். எதிரணியின் ஜெர்ஸி போட்டுக்கொண்டு பார்வையாளர்கள் ஹீரோவுக்காக கத்துவதெல்லாம் ஒன்லி பாஸிபிள் இன் தமிழ் சினிமா!

உப்புக்குச் சப்பாணி :

அதுநாள் வரை அந்த கேரக்டர் ஏன் டீமில் இருக்கிறதென யாருக்குமே தெரியாது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு கேட்ச் பிடித்தோ, கோல் தடுத்தோ ஹீரோ அணியை ஜெயிக்க வைக்கும். உடனே மொத்தக் கூட்டமும் அவரை தலையில் தூக்கிவைத்துச் சுற்றி பிளட் பிரஷர் ஏற்றும். அப்போ அவ்ளோ நேரம் நாக்குத் தள்ளத் தள்ள விளையாடியவன் நிலைமை? சினிமானாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா?

இ...........ழுத்துப் பிடி :

இந்த மாதிரியான ஸ்போர்ட்ஸ் சீக்வென்ஸ்களின் இறுதியில் மட்டும் கடிகாரம் நொண்டியடிக்க ஆரம்பித்துவிடும். ஸ்லோமோஷனில் ஓடி, பின்னணி இசையை அதிரவிட்டு பின் அமைதியாக்கி ஹீரோயினுக்கு ஜூம் இன் வைத்து, ஆடியன்ஸின் வியர்வையைக் கண் பக்கத்தில் காட்டி....ஸ்ஸ்ஸ்ஸ்... ஹீரோ டீம் ஜெயித்துவிட்டது என்பதற்குத்தான் இவ்வளவு பில்டப்பும். தோனி மாதிரி டப்புனு மேட்ச் முடிக்கிற ஆளுங்களே உங்க சினிமாவுல இருக்க மாட்டாங்களா ஆபீஸர்?

-நித்திஷ்