Published:Updated:

மம்மூட்டி, ஆர்யாவுடன் ‘ என்னை அறிந்தால்’ அனிகா - ‘தி கிரேட் ஃபாதர்’ படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
மம்மூட்டி, ஆர்யாவுடன் ‘ என்னை அறிந்தால்’ அனிகா -  ‘தி கிரேட் ஃபாதர்’ படம் எப்படி?
மம்மூட்டி, ஆர்யாவுடன் ‘ என்னை அறிந்தால்’ அனிகா - ‘தி கிரேட் ஃபாதர்’ படம் எப்படி?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மகளை மீட்டெடுக்கும் தந்தை, வில்லனைப் பழிவாங்குவதற்காக மாஸ் ஹீரோவாக மாறும் படம் ‘தி கிரேட் ஃபாதர்’. 

பில்டிங் கட்டுமான நிறுவனம் வைத்து நடத்திவருகிறார் மம்மூட்டி.  அவரின் மகள் அனிகா. செம க்யூட், சுட்டிப்பெண். தந்தையே உலகம் என்று வாழும் அனிகா ஒருநாள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள். மகளின் நிலை வெளியே தெரியவிடாமல், அதே சமயம் அந்த குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மம்மூட்டி.  அதே நேரத்தில் நகரத்தில் பல பெண் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட அந்தக் குற்றவாளியைப் பிடிக்கும் ஸ்பெஷல் போலீஸாக என்ட்ரி கொடுக்கிறார் ஆர்யா. கொலைகாரனைப் பிடிக்க ஆர்யா ஒருபுறமும், மகளுக்காக மம்மூட்டி மறுபுறமும் களம் இறங்க, கடைசியில் என்ன ஆகிறது என்பது படம். 

கடந்தவருடம் நான்கு படங்களில் நடித்த மம்மூட்டிக்கு, இந்த வருடத்திற்கான முதல் ரிலீஸ் ‘தி கிரேட் ஃபாதர்’.  தாடியும், கூலிங் க்ளாஸூமாக அசத்துகிறார் ஸ்டைலிஷ் மம்மூட்டி. மகளுக்காக தான் உருவாக்கிய அழகான உலகம், யாரோ ஒருவனால் சிதைந்து போனதும், துடித்துப் போவது, அவனைத் தேடி வெறியுடன் கிளம்புவது என நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார் மம்மூக்கா. எந்த இடத்திலும் அதிக உணர்ச்சிகளைக் கொட்டிவிடாமல், மிக நிதானமான ரியாக்‌ஷன்கள்.. கலக்கல் சாரே!  க்ளைமாக்ஸில் வில்லனை கண்டுபிடித்து தாக்கும்போது வெடிக்கும் கோபமும் பக்கா.

மம்மூட்டியின் மனைவியாக சில காட்சிகள் மட்டுமே வந்துசெல்கிறார் சினேகா. மகளின் அந்த நிலைக்குக் காரணமானவனை கொன்றுவிடும்படி மம்மூட்டியிடம் சொல்லும் இடத்தில் கவனிக்க வைக்கிறார். மற்றபடி பெரிதாக நடிக்க வாய்ப்பில்லாவிட்டாலும் கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். 

அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு....’ என்று அழகாக நடித்து அசத்திய அனிகா மீண்டும் நடிப்பில் தன்னை நிரூபித்திருக்கிறார். மம்மூட்டியின் ‘டான்’ கதைகளை நண்பர்களிடம் சொல்லுவது, பள்ளிக்கூடத்திற்கே துப்பாக்கியைக் கொண்டுவருவது, அந்த சம்பவத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் அழுது, ஒரு கட்டத்தில் அது யார் என மம்மூட்டியிடம் சொல்லும் காட்சி என நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார்.

கட்டுமஸ்தான உடல், முரட்டு குணம் என நிஜப்போலீஸாகவே வருகிறார் ஆர்யா. மம்மூட்டியை முறைக்கும் காட்சிகளிலும், தனியாக மேன்ஷனுக்குள் நுழைந்து சண்டையிடம் காட்சியிலும் கைதட்டல் பெறுகிறார். பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கொடுக்கும் அந்த பனிஷ்மெண்ட்... டிபிகல் போஸீஸ் டிரீட்மெண்ட். இருந்தாலும் மம்மூட்டியைத் தாண்டி ஆர்யாவின் கதாபாத்திரம் வெளியே தெரியவில்லை. 

வில்லனாக வரும் ஜோக்கர் கேரக்டரை மம்மூட்டியும், ஆர்யாவும் கண்டுபிடிக்கும் காட்சிகள் படத்தில் பரபர. ஆர்யாவிற்கு முன்னாடியே மம்மூட்டி கண்டுபிடிப்பது, அசால்டாக வெடிகுண்டு, துப்பாக்கி பயன்படுத்துவது, கெத்தாக கருப்பு நிற காரில் வருவது என ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகள். படமே சைக்கோ த்ரில்லர். ஆனால் த்ரில்லிங் கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனால் நட்புக்காக  ஷாம்  வந்துபோகும் காட்சி மிரட்டுகிறது. 

ப்ரித்விராஜ், சந்தோஷ் சிவன், ஆர்யா மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். சின்ன பட்ஜெட்டில் தொடங்கி பெரிய பட்ஜெட் படம் வரையிலும் கண்ணில் சிக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசை இந்தப் படத்தில் ஓகே ரகம். ஆனால் பின்னணி இசையிலும், மம்மூட்டி வரும் காட்சிகளுக்கான தீம்களில் அசத்துகிறார் சுஷின் ஷாம். 

சமூகத்திலிருந்து விரட்டப்படவேண்டிய மிகமுக்கிய பிரச்னை பாலியல் வன்கொடுமைகள். சீரியஸான விஷயம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹனீஃப். ஆனால், எடுத்துக் கொண்ட விஷயத்தில் இருந்த பலம், படத்தின் திரைக்கதையில் இல்லாமல் போனது தான் பிரச்னை. மிக மெதுவாக செல்லும் திரைக்கதை படத்துக்கு பெரிய பலவீனம். அந்த இடம் படத்தை மாஸ் படமாகவும் ஆக்காமல், சீரியஸ் பிரச்னையைப் பேசும் படமாகவும் மாற்றாமல், அரைகுறையாய் விட்டுவிடுகிறது.