Published:Updated:

இறுதிச்சுற்று... சாலா கதூஸ்... இப்போது குரு! - மூன்று மொழியிலும் ஹிட்டடிக்க என்ன காரணம்?

இறுதிச்சுற்று... சாலா கதூஸ்... இப்போது குரு! - மூன்று மொழியிலும் ஹிட்டடிக்க என்ன காரணம்?
இறுதிச்சுற்று... சாலா கதூஸ்... இப்போது குரு! - மூன்று மொழியிலும் ஹிட்டடிக்க என்ன காரணம்?

இறுதிச்சுற்று... சாலா கதூஸ்... இப்போது குரு! - மூன்று மொழியிலும் ஹிட்டடிக்க என்ன காரணம்?

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தன் கதையைச் சேர்த்திருக்கிறார் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, இந்தியில், சாலா கதூஸ்.  இப்போது தெலுங்கில் வெளியாகியிருக்கும் குரு மூன்றுமே வெவ்வேறு மொழிகளில் உருவான ஒரே படம் தான். மூன்றுக்கும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் தமிழ் மற்றும் இந்தியில் தனுஷ் ரசிகையாக வரும் ரித்திகா, தெலுங்கில் பவன் கல்யாண் ரசிகையாக வருகிறார்.   மீண்டும் ரீமேக்கிற்கும் விமர்சனம் எழுதி போர் அடிக்காமல், மூன்று மொழிகளிலும் படத்தை வலுவாக்கிய, பொதுவான ஐந்து விஷயங்கள் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.

கதை:

மதிக்குள் இருக்கும் பாக்ஸரை அடையாளம் காண்கிறார் பயிற்சியாளர் பிரபு. எப்படியாவது மதியை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஜெயிக்க வைத்து அதன் மூலம் பல பெண்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பது பிரபுவின் கனவு. விளையாட்டுத் துறைக்குள் இருக்கும் அரசியலுக்கும், ஈகோவுக்கும் நடுவே இது எப்படி நடக்கிறது என்பது தான் மையக்கதை. இந்த அடிப்படைக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.  

பிரபு அல்லது ஆதி மாஸ்டர் :

தன் லட்சியத்துக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் கோச். அது, தான் மிகவும் நேசிக்கும் குத்துச்சண்டை பயிற்சியாளர் பதவியாக இருந்தாலும் சரி, தனக்குக் கிடைக்கப் போகும் புகழாக இருந்தாலும் சரி. தமிழ் - இந்தியில் மாதவன், தெலுங்கில் வெங்கடேஷ் இருவரும் எந்த இடத்திலும் மாதவனாகவோ, வெங்கடேஷாகவோ தெரியாமல் மாஸ்டராக தெரிய வைத்ததில் இருக்கிறது இயக்குநரின் உழைப்பு. மாதவன் இதில் ஈடுபாடுடன் உழைத்தது சாதாரணம். ஆனால், வெங்கடேஷ் திரைக்கதை கேட்கும் கதாபாத்திரத்தில் தன்னை ஒப்படைப்பது சாதாரண மேட்டர் கிடையாது. வெங்கடேஷுக்கு இதற்கு முன் அது அமைந்ததும் கிடையாது. எனவே இந்த முறை தன் ஸ்டைல் எதுவும் இல்லாமல், தன் வயதைப் பளிச் எனக் காட்டிவிடும் கதாபாத்திரமாக இருந்தும் தயங்காமல் செய்திருந்தார். மாதவனுக்கு முன்பு இந்தக் கதை சென்றது வெங்கடேஷுக்குத் தான் என்பது கூடுதல் தகவல்.

மதி மற்றும் ராமுடு என்கிற ராமேஷ்வரி:

படத்தில் இந்த ரோலும் ஒரு சிறப்பான கதாபாத்திர வடிவமைப்பிற்கான  உதாரணம். தனக்கு என்ன வேண்டும் என தீர்மானம் இல்லாத பெண், தானாக வரும் ஸ்பெஷலான வாய்ப்பை உருட்டி விளையாடுவதும், பின்பு வெற்றி பெறத் துடிப்பது, தந்தை வயதுள்ள கோச் மீது வரும் ப்ரியம், அதை   தைரியமாக வெளிப்படுத்தும் விதம் என இந்த கதாபாத்திரத்தை இயக்குநர்  எழுதிய விதமும், அதை ரித்திகா சிங் அப்படியே திரையில் வெளிப்படுத்தியதும்  மிக நேர்த்தி. கூடவே ரித்திகா சிங் நிஜத்தில் பாக்ஸிங் தெரிந்தவர் என்பதும் இன்னொரு ப்ளஸ்.

ஸாகீர் ஹுசைன், மும்தாஸ் (லக்ஸ்), நாசர், ராதாரவி:

பாக்ஸிங் கமிட்டி தலைவராக வரும் ஸாகீர் ஹுசைன் நாயகனுக்கு செக் வைக்கும் போதும், பிரச்னை தரும் போதும் ஆடியன்ஸுக்கு வரும் எரிச்சல், கடைசியில் நாயகி பாக்ஸிங்கில் ஜெயிக்கும் பொழுது சிலிர்ப்பாக கன்வெர்ட் ஆகும். இன்னும் சொல்லப் போனால் இந்த இருவருக்குமான ஈகோ மட்டுமே தனி ஸ்க்ரிப்டுக்கானது. அந்த அளவுக்கு ஆழமாக காட்டப்படவில்லை என்றாலும், தன் தங்கை தன்னைவிட பெட்டர் பாக்ஸர் ஆகிறாள் என்னும் பொறாமை மனதிற்குள் வைத்துக் கொண்டு லக்ஸாக நடித்த மும்தாஸ். அவ்வப்போது கொடுத்த ரியாக்‌ஷன்களும் வேற லெவல். உறுதுணைக் கதாபாத்திரங்களாக வரும் ஜூனியர் கோச் நாசர், பாக்ஸிங் கமிட்டி மெம்பர் ராதாரவி / எம்.கே.ரய்னா / தனிகெல்ல பரணி இவர்களும் தங்களின் சீறிய பங்களிப்பை சரியாக கொடுத்திருப்பார்கள்.

சந்தோஷ் நாராயணன்:

படத்தை முழுக்க முழுக்க ரசிகனோடு ஒன்ற வைத்ததில்   சந்தோஷ் நாராயணன் இசைக்கு பெரும் பங்குண்டு. டிரெய்லரில், ‘சண்டக்காரா’ பாடலில், ‘தேடிக் கட்டிக்கப் போறேன்’ வரிகள் வரும் போது, பாக்ஸிங் பன்ச்களை வைத்து சவுண்ட் மிக்சிங் செய்யப்பட்டிருக்கும். சவுண்ட் இன்ஜினியர் அப்படி செய்தது போல, மற்றவர்களுக்கும் சந்தோஷ் நிறைய இடங்களில் ஸ்பேஸ் கொடுத்திருப்பார். குறிப்பாக க்ளைமாக்ஸில் வரும் பாக்ஸிங் காட்சியில். இந்த இடைவெளி படத்தின் மற்ற விஷயங்களுக்கு வழிவிட்டு இருக்கும். புரிதலுக்கு மேலே இருக்கு டீசரின் சவுண்டிங்கை கேட்கலாம்.

மேலே சொன்னவற்றில் எந்தக் கெடுதலும் இல்லாமல் இன்னும் எத்தனை மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் அதே பன்ச் பலமாக விழும்!

-பா.ஜான்ஸன் 

அடுத்த கட்டுரைக்கு