Published:Updated:

’Life Of Pie' உதவி இயக்குநர் தமிழன், இணையத்தில் படத்தை வெளியிடுகிறார்! #FutureOfCinema

கே.ஜி.மணிகண்டன்
’Life Of Pie' உதவி இயக்குநர் தமிழன், இணையத்தில் படத்தை வெளியிடுகிறார்! #FutureOfCinema
’Life Of Pie' உதவி இயக்குநர் தமிழன், இணையத்தில் படத்தை வெளியிடுகிறார்! #FutureOfCinema

மிழ் சினிமாவின் தரம் கடந்த சில ஆண்டுகளில் நிறையவே மாறியிருக்கிறது. ஆனால், தியேட்டர் பாலிடிக்ஸில் சிக்கித் தவிக்கும் நிலை மாறவே இல்லை. திரையரங்குகளில் வெளியிடமுடியாமல் முடங்கிக்கிடக்கும் படங்களின் எண்ணிக்கை பல நூறு. அதேசமயம், சினிமா கனவோடு நுழையும் சிலர், மாற்றுவழிகளை சுயமாகவே கண்டுபிடித்து கடந்துகொண்டிருக்கிறார்கள். தியேட்டர் ரிலீஸை மட்டுமே நம்பாமல், ஒரு சினிமாவை எப்படி ரசிகர்களுடைய ரசனைக்குக் கடத்தலாம்?

சென்னையைச் சேர்ந்த செல்வமணி செல்வராஜ் என்பவர், 'நிலா' என்ற தனது படத்திற்கு திரையரங்குகளை நம்பவில்லை. ''நல்ல சினிமா பண்ணணும்னு ஆசை. 'லைஃப் ஆஃப் பை' படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு, ஒரு குறும்படம் எடுக்கலாம்னு இருந்தேன். அதுவே, 'நிலா'ங்கிற பெரிய சினிமாவா வளர்ந்துடுச்சு. தியேட்டர் ரிலீஸை நம்பி இறங்கவேணாம்னு முன்கூட்டியே முடிவு பண்ணிட்டேன். ஏன்னா, சினிமா இப்போ ரொம்பவே மாறிடுச்சு. ஒரு சினிமாவுக்கு டி.வி ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ் பெரிய வருமானம் தரக்கூடிய நிலை இருந்தது. இப்போ, இணையதளம் மூலம் கிடைக்கிற வருமானமும் பெருசாவே இருக்கு. நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் மாதிரி பல இணையதளங்கள், இன்டிபென்டென்ட் சினிமாவைத் தூக்கிவெச்சுக் கொண்டாடுது. இது தேவையும்கூட!

யாரும் படம் எடுக்கலாம் என்ற சூழல் இப்போ வந்துடுச்சு. தவிர, தொடர்ந்து படம் பார்க்குற ஆடியன்ஸுக்கு இன்டர்நெட்தான் நல்ல மீடியமா செயல்பட்டுக்கிட்டு இருக்கு. அதனாலதான், என் படத்தை நெட்ஃபிலிக்ஸ்ல ரிலீஸ் பண்ணேன். இந்த இணையதளத்துக்கு உலகம் முழுக்க எட்டரை கோடி பேர் உறுப்பினரா இருக்காங்க. இதுல கால்வாசிப் பேருக்கு நம்ம படம் போய்ச்சேர்ந்தாலே, ஒரு படைப்பாளியா நமக்குப் பெரிய திருப்தி. தவிர, நம்மளோட முதலீடும் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இணையத்துல ரிலீஸ் பண்றதுக்காகவே படம் எடுக்கிற இயக்குநர்கள் நிறையபேர் வருவாங்க. ஆனா, நாம நேர்மையா இருக்கவேண்டியது முக்கியம். 

ஏன்னா... நல்ல சினிமாவை, உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகுற சினிமாக்களை மட்டுமே நெட்ஃபிலிக்ஸ்ல ரிலீஸ் பண்ணுவாங்க. அதுதான், நியாயமான நடைமுறையும்கூட. என்னோட 'நிலா' ஒரு டாக்ஸி டிரைவருக்கும், அவரோட பால்ய சினேகிதிக்குமான கதை. வசனங்கள் அதிகமா இருக்காது. ஆனா, இந்தப் படத்தை உலகம் முழுக்க இருக்கிற எல்லா ரசிகர்களும் ஈஸியா கனெக்ட் பண்ணிக்கலாம். சமீபத்துல நெட்ஃபிலிக்ஸ்ல வெளியான 'ரேடியோபெட்டி'யும் எல்லா தரப்பு ஆடியன்ஸும் கனெக்ட் பண்ணிக்கிற கதைதான். தவிர, விருதுகள் பெற்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. 'நிலா' லண்டன், அமெரிக்கா, ஜிம்பாப்வே... என பல்வேறு நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்துகிட்டு விருதுகளைப் பெற்ற படம். அதனால, தியேட்டரில் ரிலீஸ் பண்ணித்தான் என் படத்தோட முதலீட்டை எடுக்கணும்ங்கிற கட்டாயம் எனக்கு வரலை. தவிர நெட்ஃபிலிக்ஸ்ல எல்லாப் படத்துக்கும் ஒரே மாதிரி பணம் கொடுக்கமாட்டாங்க. ஒவ்வொரு படத்துக்கும் கொடுக்கிற தொகை மாறும். ஆனா, அது நமக்கு லாபமான தொகையாவே இருக்கும். தவிர, யூ-டியூப், கூகுள் பிளே ஸ்டோர்னு இன்னும் சில வழிகளும் இருக்கு. அதுக்காக, இணையதளத்துல மட்டுமே இனி சினிமா இயங்கும்னு சொல்ல வரலை. தியேட்டர் ரிலீஸில் அங்கீகாரம் கிடைக்கலை அல்லது தியேட்டரே கிடைக்கலை எனும் சூழலில், நம்ம படத்தை இணையதளத்துல வெளியிடலாம்!'' என்கிறார், செல்வமணி செல்வராஜ். 

'நல்ல சினிமா மட்டுமே என் குறிக்கோள். அதற்கு எந்த முயற்சியையும் எடுக்கத் தயார்' என்ற மனநிலையில் இருக்கும் இயக்குநர்களுக்கு இன்னொரு வழிமுறை இருக்கிறது. அது, நம் படத்தை நாமே சுமப்பது. சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஹரி என்பவர், 'இன்விசிபிள் விங்ஸ்' என்ற தனது ஆவணப் படத்தைத் திரையிட, இந்தியா முழுக்க சைக்கிளில் சுற்றினார். இதுபோன்ற நேரடித் திரையிடல் குறித்து, 'தமிழ் ஸ்டூடியோ' அருணிடம் பேசினேன்.

''2 லட்சத்துலகூட குவாலிட்டியான சினிமா எடுக்கமுடியும். முதலீட்டை திரும்பப் பெறக்கூடிய சாத்தியம் நேரடித் திரையிடலில் அதிகம். ரெண்டு கோடி பட்ஜெட்டுக்குப் படம் எடுத்துட்டுப் போனா சரியா இருக்காது. தவிர, ஒரு படைப்பாளியோட வேலை மக்களோட ரசனையை உள்வாங்குறது. தியேட்டர் ரிலீஸ் குறிப்பிட்ட ஆடியன்ஸுக்கு மட்டுமே போய்ச்சேரும். ஊர் ஊரா திரையிடல் நடத்துங்க. முப்பது மாவட்டத்துல 100 திரையிடல்கள் நடத்துனாலே, முதலீட்டுக்கும் அதிகமான லாபம் கிடைக்கும், மக்களோட ரெஸ்பான்ஸை நேரடியா பார்த்த அனுபவம் கிடைக்கும், பயணம் பண்ற அனுபவம் கிடைக்கும், குறைஞ்ச கட்டணத்துல மக்கள் படம் பார்ப்பாங்க, தமிழ்நாட்டுல இருக்கிற தியேட்டர் பாலிடிக்ஸ் உடையும்!. ஒரே கல்லுல நாலைஞ்சு மாங்கா அடிக்கிற வழிமுறை இது. 

தவிர, இன்டிபென்டென்ட் சினிமாக்களை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி, விருது வாங்குனா... அதன்மூலமா சில தொகைகள் கிடைக்கும். பிறகு, திரையிடல் நடத்தும்போது, அந்தப் படத்துக்கு அதிக பவர் கிடைக்கும். தமிழ்நாடு மட்டுமில்ல, இந்தியா முழுக்க திரையிடல்கள் நடத்துனா, ஒரு படைப்பு இன்னும் அதிகம் பேருக்குப் போய்ச்சேரும். ஒரு படைப்பாளியா தன் படத்தை உலகம் முழுக்கக் கொண்டுபோறதுக்கு இதுதான் சிறந்த வழி என்பது என் கருத்து. இணையதளம் மூலமா ரிலீஸ் பண்றது உட்கார்ந்து பார்க்குற வேலை. நேரடியா திரையிடல்கள் நடத்துறது கள ஆய்வு. இந்தக் கள ஆய்வுதான், அடுத்து வர்ற இயக்குநர்களுக்கு ஒரு நல்ல பாதையா இருக்கும்னு நான் நம்புறேன். தவிர, தனியார் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சாட்டிலைட் ரைட்ஸ் கொடுக்கணும்ங்கிற மனநிலையில இருந்து, தூர்தர்ஷனுக்கும் கொடுக்கலாம். அதன்மூலமாகவும், நமக்கான முதலீடு திரும்பக் கிடைக்கும்'' என்கிறார் அருண்.

சினிமா இனி மெல்ல மாறும்!

- கே.ஜி.மணிகண்டன்