Published:Updated:

ஹாலிவுட்டில் கலக்கப்போகும் கமல்!

விகடன் விமர்சனக்குழு
ஹாலிவுட்டில் கலக்கப்போகும் கமல்!
ஹாலிவுட்டில் கலக்கப்போகும் கமல்!
ஹாலிவுட்டில் கலக்கப்போகும் கமல்!

சென்னை: ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன்,அந்த படத்தை டைரக்ட்டும்  செய்யப்போவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது.இந்த விழாவில்  கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட்டு செய்துள்ள `விஸ்வரூபம்' படத்தின்  `டிரெய்லர்' வெளியிடப்பட்டது.

இதே விழாவில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்து கொண்டார்.  அப்போது கமல்ஹாசனை பேரிஆஸ்போன் சந்தித்துப் பேசினார்.இருவரும் இணைந்து  ஒரு `ஹாலிவுட்' படத்தில் பணிபுரிவது என்று அப்போது முடிவு செய்தார்கள்.

இதுபற்றி கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில்,”பேரி ஆஸ்போன் ஹாலிவுட்டில் பல  வெற்றி படங்களை தயாரித்தவர் `மேட்ரிக்ஸ்', `லாட் ஆப் தி ரிங்ஸ்',`கிரேட்  கேட்ஸ்பி' ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார். நானும்,அவரும் சந்தித்து  பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகளை சொன்னேன்.நான் மூன்றாவதாக  சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது.இது சர்வதேச தரத்திலான கதை என்றும்,  எனவே இந்த கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் பேரி ஆஸ்போன்  தெரிவித்தார்.

நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஹாலிவுட் படத்தில், நானே கதாநாயகனாக  நடித்து டைரக்ட்டும் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,

அவர் கேட்டு கொண்டதன்பேரில் ஹாலிவுட் படத்தை நான் இயக்கி, நடிக்க சம்மதித்து  இருக்கிறேன். என் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்சுடனும் இணைந்து படம்  தயாரிக்க பேரி ஆஸ்போன் தயாராக இருக்கிறார்.

இத்தனை விசயங்களுக்கும் வித்திட்டது `விஸ்வரூபம்' படம் தான்.விஸ்வரூபம்  படத்தின் `சவுண்ட் மிக்ஸிங்' வேலைகளை நான் சிங்கப்பூரில் செய்து  கொண்டிருந்தபோது, பேரி ஆஸ்போன் என்னை வந்து சந்தித்தார். என்ன படம்  செய்கிறீர்கள்? என்று என்னை கேட்டார்.

நான் `விஸ்வரூபம்' படத்தின் சில காட்சிகளை அவருக்கு காட்டினேன். அதை பார்த்த  அவர் என் மகளையும் அழைத்து வந்து இன்னொரு முறை பார்க்கலாமா? என்று  என்னிடம் கேட்டார். நான் சம்மதம் சொன்னதும் அவர் மகளுடன் வந்து 2-வது  முறையாக விஸ்வரூபம் படத்தை பார்த்தார்.

அவருடைய பங்குதாரரை அழைத்து வந்து 3-வது முறையாக விஸ்வரூபம் படத்தை  பார்த்தார். 3 முறை அவர் முழுமையாக அந்த படத்தை பார்த்து ரசித்தார்.

ஹாலிவுட் படத்திற்கான கதையை நான் எழுத ஆரம்பித்து விட்டேன்.நாங்கள் இருவரும்  இணைந்து உருவாக்கும் `ஹாலிவுட்' படம் தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள்  பாணியில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும். உலக தரத்துடன் இந்த படம் உருவாகும்.  அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன”என்றார்.