Published:Updated:

நாய்களுக்கு டூயட், வில்லிக்கு ரொமான்ஸ் பாட்டு! - தமிழ் சினிமாவின் 'தெறி' பாடல்கள்

நாய்களுக்கு டூயட், வில்லிக்கு  ரொமான்ஸ் பாட்டு! - தமிழ் சினிமாவின் 'தெறி' பாடல்கள்
நாய்களுக்கு டூயட், வில்லிக்கு ரொமான்ஸ் பாட்டு! - தமிழ் சினிமாவின் 'தெறி' பாடல்கள்

டீசரும், ட்ரெய்லரும் பார்த்துவிட்டு படம் செமையா இருக்கும்னு போய் உட்கார்ந்தா மரண மொக்கை போட்டு பீதியைக் கிளப்பி அனுப்பிவிடுற மாதிரி ஏதோ ஒரு ஆடியோவில் அற்புதமா ஒரு பாட்டு கேட்டுவிட்டு அதற்கான விஷுவல்ஸ் நம் மனசுக்குள் வேற லெவலில் பண்ணி வெச்சுருப்போம். ஆனா நாம நெனச்சே பார்க்க முடியாத அளவுக்கு அப்படியே ஷாக் ஆயிட்டேன் ரியாக்‌ஷன்ல நடந்தா... அப்படி நடந்த சில எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்.

* 'சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது', இந்தப் பாட்டு ஏதாவது ஒரு ரூபத்துல எப்படியாவது உங்க காதை எட்டியிருக்கும். எஸ். பி பாலசுப்ரமணியம் பாடி இளையராஜா இசையமைச்ச பிரமாதமான பாட்டு. வரிகள்லாம் கேட்டா காதலியை இழந்த காதலனின் கதறலாதான் இருக்கும். எக்குத்தப்பா ஒருநாள் யூ டியூபில் இந்தப் பாட்டைப் பார்த்தா ஆத்தி... தேங்காய் சீனிவாசன் பியானோவிலும், வீணையிலும் தன் சோகத்தைக் கொட்ட அந்தப் பக்கம் ராதிகா வெள்ளை ட்ரெஸ் போட்டு ஸ்லோமோஷனில் ஆடிவர... 'அன்பே சங்கீதா'ங்கிற அந்தப் படத்தை அப்புறம் நான் பார்க்கவே இல்லையே... சிலுக்கு ஜிப்பான் சிக்கான்.

* என் ரூம்மேட் ஒருத்தன் லவ்வுல விழுந்த நேரம். எல்லாமே லவ்வுதான். எங்க போனாலும் லவ்வுதான்னு திரிஞ்ச பய வெறும் காதல் பாடல்களா டவுன்லோட் பண்ணி கேட்டுக் கேட்டு டயர்டாவான். அப்படி அவன் உருகி உருகிக் கேட்ட ஒரு பாட்டோட பிக்சரைஸை ஒருநாள் சண்டே மதியானம் விட்டத்தைப் பார்த்து படுத்துக் கிடக்காம விஷுவல் பார்க்க நினைச்சு டி.வி போட்ருக்கான். அவனோட ரிங்டோன் அங்கே படமா விரிய அதுக்குப்புறம் அவன் காதலிக்கிறதையே மறந்து காணாமப் போனான். பாட்டு வேறொண்ணும் இல்லை பாஸ். 'அன்பு'ங்கிற படத்துல வர்ற 'தவமின்றி கிடைத்த வரமே' தான். வித்யாசாகர் இசையில் வைரமுத்து வரிகளில் ஹரிஹரனும், சாதனா சர்கமும் பாடின பாட்டுக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா பாடி ஆடிய ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும்தான் ட்ரெஸ் ரொம்பக் குறைச்சல். ஹீரோ ஷார்ட்ஸ் போட்டு பனியனோட ப்ராக்டிஸ் பண்ண ஹீரோயினோ ஒயிட் ட்ரெஸ்ல செயற்கை நீரூற்றுல நனைஞ்சு ஆடிய அந்தப் பாட்டு பார்த்துதான் அவன் அன்பே இல்லாம போனான். இப்படி பண்ணலாமா டைரக்டர்?

*   ரஜினிகாந்த் ஹீரோ. ஸ்ரீதேவி ஹீரோயின், இளையராஜா இசையில் மயங்க வைக்கிற மெலடி, ' பேசக் கூடாது... வெறும் பேச்சில் சுகம்... '.  'அடுத்த வாரிசு' படம் பார்க்க ஆவலா உட்கார்ந்தா இந்தப் பாட்டு வில்லி ரோல்ல வர்ற சிலுக்கும் ரஜினியும் பாடும் டூயட். தலைவா கவுத்திட்டியே தலைவா...

* ' இளமனது... பல கனவு... விழிகளிலே... வழிகிறதே...' இந்த வரி கேட்டா உங்க மனசுக்கு பளிச்சுனு எந்த பல்பு எரியும்? ரெக்கார்டிங் தியேட்டர்ல எஸ். பி. பாலசுப்ரமணியமும் , எஸ். ஜானகியும் இந்தப் பாட்டை 'செல்வி' படத்துக்காக இளையராஜா இசையில் பாடும்போது கொஞ்சம்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி காதலின் உணர்வைக் கொட்டி நாம் பாடும் இந்தப்  பாடலுக்கு நடிக்கப் போவது இரண்டு நாய்கள் என்று... ஆமா பாஸ். வாயசைக்காம வால் அசைச்சே ரெண்டு நாய்கள் இந்தப் பாட்டுக்கு ஸ்லோ மோஷனில் தாவிக் குதிக்கும்போது ரசிக மனம் என்ன பாடுபட்டிருக்கும்? லொள் லொள் பவ் பவ்...

* இப்போ இல்லை பாஸ் இந்த எக்ஸ்பெக்டேஷனும் ஏமாற்றமும் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே ஆரம்பிச்சுட்டாங்க. உதாரணத்துக்கு எம். ஜி. ஆர் பாட்டுன்னா நம் ஞாபகத்துக்கு வர்றது டி. எம். எஸ்தானே... ஆனா 'பாசம்'ங்கிற படத்துல 'உலகம் பிறந்தது எனக்காக'ன்னு ஒரு பாட்டு. டி. எம். எஸ் தான் பாடியிருப்பார். அப்படி இருக்கிறப்போ ஜெமினி கணேசனுக்கும் ஜெய்சங்கருக்கும் பாடிக்கிட்டுருந்த  பி. பி. சீனிவாஸ் எம். ஜி ஆருக்குப் பாடுவார்னு நான் என்ன கனவா கண்டேன். ' பால் வண்ணம் பருவம் கண்டு' பாட்டு கற்பூர ஃபேக்டரி கொளுத்தி சத்தியம் பண்ணினாலும் எம். ஜி ஆருக்குன்னு இப்பவும் நம்ப முடியவில்லை... இல்லை....இல்லை...

இன்னும் நிறைய இருக்கு. இப்போதைக்கு இவ்ளோதான்.

- கணேசகுமாரன்