Published:Updated:

'வடிவேலுவை திட்டினேனா?' - காமெடி நடிகர் பெஞ்சமின் கலகல!

தார்மிக் லீ
'வடிவேலுவை திட்டினேனா?' - காமெடி நடிகர் பெஞ்சமின் கலகல!
'வடிவேலுவை திட்டினேனா?' - காமெடி நடிகர் பெஞ்சமின் கலகல!

தினமும் ஃபேஸ்புக்கை ஸ்க்ரோல் செய்தால் இவரின் மீமைக் கண்டிப்பாகப் பார்த்துவிடலாம். அந்த அளவிற்கு இவர் நடித்த அந்த சீன் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. `வெற்றிக்கொடிகட்டு' படத்தில் வடிவேலு அவருடைய மச்சானைப் பார்த்து 'எடு செருப்ப நாயே'னு சொன்னவுடேனேயே கோபம் உச்சத்துக்கு ஏறி சென்ஸார் மோடில் திட்டித் தீர்ப்பாரே ஒருத்தர். அவர் பெயர் 'பெஞ்சமின்'. மீம் சம்பந்தமாக அவரிடமே கேட்டபோது அவர் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள்!

''உங்களைப் பற்றி ஒரு இன்ட்ரோ?'' 

''நான் ஒரு ட்ராமா ஆர்ட்டிஸ்ட். மேட்டூர்ல ஒரு நாடக மன்றத்துல நடிச்சுட்டு இருந்தேன் சென்னையில் ஒரு நாடகப் போட்டிக்காக எங்க குழுவோட வந்து கலந்துகிட்டு முதல் பரிசு வாங்கினோம். அதுக்கு 'பாலச்சந்தர்' சார் நடுவர். அந்த ட்ராமாவைப் பார்த்துட்டு என்னை அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டார். அவர் சின்னத்திரையில என்னை நடிக்க வைத்தார். 'நீ வெளியில போய் ட்ரை பண்ணு'னு சொன்னார். அப்பறம் சேரன் சார் மூலமா 'வெற்றிக்கொடிகட்டு' பட வாய்ப்பு வந்துச்சு.''

'' அந்தப் படத்தில் வடிவேலுவை அப்படி என்னதான் திட்டினீங்க?''

பயங்கர சிரிப்புடன் பதில் சொல்ல ஆரம்பித்தார். '' அந்த சீன் முழுக்க முழுக்க டைரக்டர் சொன்னது. சொன்னா நம்ப மாட்டீங்க. அந்த சீனுக்கு 18 நாள் ஷூட்டிங் ஸ்பாட்லேயே இருந்தேன். முதல் 16 நாளும் சாப்பிட வேண்டியது, தூங்க வேண்டியது, இப்போ கூப்பிடுவாங்க, அப்போ கூப்பிடுவாங்கனு நானும் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். பொறுமை தாங்க முடியாம டைரடக்டர்கிட்ட போய் 'சார் எனக்கு ஊருக்கு டிக்கெட் போடுங்க நான் கிளம்புறேன்'னு சொன்னேன். அதுக்கு அவர் ஏன் சாப்பாடு எதுவும் சரியில்லையாப்பான்னு கேட்டார். 'இல்ல சார் வந்து 16 நாள் ஆச்சு. ஒண்ணுமே நடிக்காம உட்கார்ந்திருக்கேன்... இன்னும் ரெண்டு நாள்ல பேக் அப்னு வேற சொல்றாங்க. அதான் சார் நான் கிளம்புறேன்'னு சொன்னேன். அதுக்கு அவர் 'இன்னைக்கு காலையிலதான் வடிவேலு வர்றார். அவர்கூட உனக்கு சீன் இருக்கு'னு சொன்னவுடன் சரின்னு நானும் வெயிட் பண்ணேன். அப்பறம் கிட்டத்தட்ட ஏழு சீன் எடுத்தாங்க. அதுல திட்டுற சீனும் ஒண்ணு. எனக்குத் தெரிஞ்ச கெட்ட வார்த்தையில நானும் திட்டினேன். ரொம்ப இயல்பா இருந்துச்சுன்னு மிச்ச ஆறு சீனைத் தூக்கிட்டு அந்த ஒரு சீனை மட்டும் படத்துல சேர்த்துட்டாங்க. இந்த சீனுக்குப் பின்னாடி இருக்கும் கதை இதுதான்.'' 

''அதை வெச்சுப் போட்ட மீமெல்லாம் பார்த்தீங்களா?''

''நான் சும்மா யதார்த்தமாகத்தான் நடிச்சேன். ஆனா அப்போ நடந்த விஷயம் இப்போ இந்த அளவு பரவும்னு கொஞ்சம்கூட நெனச்சுப் பார்க்கலை. என்கிட்ட தனிப்பட்ட முறையில் நிறையப் பேர் வந்தும் கேட்ருக்காங்க. 'நீ நடிச்ச சீன்லதான் மீம் போடுறாங்க, அந்த டயலாக்கையும் நிறையப் பேர் இப்போ கவுன்ட்டரா சொல்றாங்க'னு சொல்வாங்க. அதைக் கேட்கும்போது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.'' 

'' வடிவேலுகூட நடித்த அனுபவம்?'' 

''அவர் இல்லைன்னா நான் இல்லை. அவர் ஸ்டைலில் நடிக்க யாராலுமே முடியாது. அந்த அளவுக்கு காமெடியில் கலக்கியவர் வடிவேலு. அவர்கூட நடிச்சப்போ எனக்கு மட்டும் இல்லாம போண்டா மணி, நெல்லை சிவா, அல்வா வாசுனு எல்லாருக்குமே எப்படி நடிக்கணும்னு உட்கார வெச்சு இப்படி நடிக்கணும், அப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுப்பார். அதே மாதிரி டேக் போயிட்டு ஏதாவது எக்ஸ்ட்ரா டயலாக் சொல்லிடுவார். அதுக்கு என்ன பண்ணனும்னு தெரியாம அப்படியே நின்னுடுவோம். 'இங்கே வாடா'னு சொல்லி 'இப்படியெல்லாம் ஸ்க்ரிப்ட்ல இருக்கிறதை மட்டும் பேசக் கூடாது... காமெடி நடிகன்னா எல்லாத்துக்குமே கவுன்ட்டர் கொடுக்கனும்'னு சொல்வார். 

- தார்மிக் லீ