Election bannerElection banner
Published:Updated:

மணிரத்னம், கார்த்தி, காஷ்மீர்... ‘காற்று வெளியிடை’ எஃபெக்ட் என்ன? - ’காற்று வெளியிடை’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
மணிரத்னம், கார்த்தி, காஷ்மீர்... ‘காற்று வெளியிடை’ எஃபெக்ட் என்ன? - ’காற்று வெளியிடை’ விமர்சனம்
மணிரத்னம், கார்த்தி, காஷ்மீர்... ‘காற்று வெளியிடை’ எஃபெக்ட் என்ன? - ’காற்று வெளியிடை’ விமர்சனம்

மணிரத்னம், கார்த்தி, காஷ்மீர்... ‘காற்று வெளியிடை’ எஃபெக்ட் என்ன? - ’காற்று வெளியிடை’ விமர்சனம்

போர் பறவை கார்த்தி, சண்டக் கோழி அதிதி... இவர்களுக்கு இடையிலான காதலும் ஊடலுமே கதை. அதில் தேசபக்தி, பாகிஸ்தான் பார்டர், மணிரத்னம் பாணி ஆகியவை சேர்த்து வந்திருக்கும் 'காற்று வெளியிடை'... நம்மை மிதக்க வைக்கிறதா?

ராணுவத்தில் ஃபைட்டர் பைலட் வி.சி என்கிற வருண் (கார்த்தி), காஷ்மீர் ஶ்ரீநகர் மருத்துவமனையில் மருத்துவராகச் சேர்கிறார் லீலா ஆபிரஹாம் (அதிதி ராவ்). விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேரும் கார்த்திதான் அதிதிக்கு முதல் பேஷண்ட். இருவருக்குள்ளும் மலரும் காதல், ஊடல் என்ற பாதையில் பயணிக்கும்போது பாகிஸ்தான் சிறையில் சிக்கிக் கொள்கிறார் கார்த்தி. அதற்குப் பிறகு அவருக்கும், அவர் காதலுக்கும் என்ன ஆனது என்பதே கதை.  

1999 - கார்கில் யுத்தத்தில் போர் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து தப்பிக்க முயலும் கார்த்தி, முடியாமல் மரத்தில் சிக்கி, பனிவெளியில் கீழே சரிய, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கும் ஆரம்பக்காட்சி... ஆர்வமூட்டுகிறது. ‘லொகேஷன்களைத் தேர்வு செய்வதில் நான் எப்பவும் பெஸ்ட்’ என்கிறார் மணி. மற்றபடி... ப்ச்! 

படத்தின் பெரும் ப்ளஸ் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் ரவிவர்மனின் கேமரா. ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் அசரடிக்கின்றன. ‘சாரட்டு வண்டியில’ பாடல்... ரம்மியம். அதேபோல, கார்த்தி பார்ட்டியில் நண்பர்களோடு ஆடும் ‘கேளாயோ’ பாடலின் ஆரம்பத்தில் வரும் இசைக்கு நம்மையும் அறியாமல் தாளமிடுகிறோம். 

ரவிவர்மனின் கேமரா பல ஆஸம் காட்சிகளை அழகியலாக அள்ளி வந்திருக்கிறது. கார்த்தியும், அவர் காதலியும் ஜீப்பில் வேகமாகப் பயணிப்பது, காஷ்மீரின் மகா பள்ளத்தாக்குகள், பனிச் சரிவுகள், பாகிஸ்தான் சிறையின் பறவைப் பார்வை, மலைச் சரிவு சாலையின் ஓவர்வியூ, 'சாரட்டு வண்டி'யில் கண்ணாடியில் தெரியும் நடன பிம்பம் எனப் பல காட்சிகளில் ரவிவர்மன் ஜிலீர் காட்டுகிறார். 

மற்றபடி படத்தில் என்ன விசேஷம்? மணிரத்னம் பட க்ளிஷேக்கள்தான்! முதல் பார்வை காதல், முதல் சந்திப்பிலேயே டேட்டிங் அழைப்பு, ரிஜிஸ்டர் ஆபிஸ், கல்யாணத்துக்கு முன் கர்ப்பம், பிரிந்த காதலியைத் தேடும் பயணம் என வழக்கமான மணிரத்ன மார்க் சம்பவங்களே இந்திய எல்லையிலும் நிகழ்கிறது.

க்ளீன் ஷேவ்வும், கண்ணாடியுமாக வந்து 'அலைபாயுதே' மாதவன் ஸ்டைலில் ஆங்காங்கே புன்னகைக்கிறார் பைலட் கார்த்தி. கண்களை விரித்து கோபப்படும் இடங்களிலும், உடைந்து அழும் இடங்களிலும் கார்த்தியை ரசிக்கலாம். அதிதியிடம் சண்டைபோட்டுவிட்டு, அவர் விலகிச் சென்றதும் சட்டென்று முகம் மாறும் இடங்களில் சபாஷ் சொல்ல வைக்கிறார். 

காதலில் உருகும் காட்சிகளிலும் ஆண்களின் முரட்டுத்தனத்தைக் கண்டு எரிச்சலடையும் காட்சிகளிலும் அழகாக நடித்திருக்கிறார் அதிதி. காது மடல் சிவப்பும், கோப முக சிவப்பும் அதிதி ப்ளஸ்.  

லொடலொட ஆர்.ஜே.பாலாஜியை, 'ஓ...', ‘ஆ..’ என்று மட்டுமே சொல்ல வைத்திருக்கிறார்கள். ‘நைஸ்’ சொல்லுமளவுக்கு என்ன இருக்கிறது? மருத்துவராக வரும் ருக்மணி, டெல்லி கணேஷ் என்று மற்றவர்களுக்கு மற்றுமொரு படம் அவ்வளவே. பாகிஸ்தான் சிறையில் இருந்து கார்த்தி தப்பிக்கும் காட்சிகள் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு வந்து சேரும் காட்சிகள்தான் படத்தின் பரபர காட்சிகள். ஏனென்றால், மற்ற சமயங்களில் எல்லாம் ‘ஃபைட்டர் பைலட்’ பேசிக் கொண்டே இருக்கிறார். மணிரத்னம் படத்தில் இவ்வளவு வசனமா..!? 

இரு நாட்டு எல்லை, ஸ்ரீநகர், லே என ராணுவ முகாம், போர் விமான பைலட் என அசத்தல் கேன்வாஸில் விரிகிறது படம். ஆனால், ஆரம்ப பில்ட்-அப்களுக்கு பின் `இரு மன ஈகோ’ மட்டுமே பேசு பொருளாக இருப்பது.... ஆவ்வ்..! இருப்பினும் ஆங்காங்கே கவனிக்க வைக்கின்றன சில ஈகோ தருணங்கள். ‘ரவி லீலாவை காதலிக்கிறான்... லீலா வி.சி-யை காதலிக்கிறா. ஆனா, வி.சி- வி.சி-யை மட்டும்தான் காதலிக்கிறான். அதான் பிரச்னை’ என கார்த்தி, அதிதி இடையிலான ஈகோவை சுட்டிக் காட்டுமிடம், ‘நீ என்னை மகாராணி மாதிரியும் நடத்துற.... திடீர்னு செல்ல நாய்குட்டி மாதிரியும் நடத்துற... நான் நானா இருக்கணும்!’ என காதலியின் மனநிலையை அழுத்தமாக உணர்த்துமிடம்.... போன்றவை சிற்சில தருணங்களே. மற்றபடி... மணி சாரும் மிஸ்ஸிங்.... மணி சார் மேஜிக்கும் மிஸ்ஸிங்!

திகட்டத் திகட்ட இமயமலையைப் பிரதேசத்தைச் சுற்றிக் காட்டுகிறார்கள். படம் முடியுமுன்னரே தியேட்டரை விட்டுக் கிளம்பி இமயமலைக்குச் செல்லத் தூண்டுவதுதான் ’காற்று வெளியிடை’ எஃபெக்ட்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு