Published:Updated:

அந்த 8வது தோட்டா யாருக்கு? - ‘8 தோட்டாக்கள்’ பட விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அந்த 8வது தோட்டா யாருக்கு? - ‘8 தோட்டாக்கள்’ பட விமர்சனம்
அந்த 8வது தோட்டா யாருக்கு? - ‘8 தோட்டாக்கள்’ பட விமர்சனம்

அந்த 8வது தோட்டா யாருக்கு? - ‘8 தோட்டாக்கள்’ பட விமர்சனம்

வங்கிக்கொள்ளை ஒன்றில்  தெரியாமலே சிக்கிக் கொள்கிறார் ஒரு காவல் அதிகாரி. அந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்களை அவர் தேடி அலைவதே 8 தோட்டாக்கள்.

சத்யா (வெற்றி), சிறு வயதில் செய்யாத கொலைக்காக சிறைக்குச் சென்று அங்கிருந்து படித்து போலீஸ் ஆனவர். மிக சாந்தமாக, எந்த வம்பிற்கும் போகாத, லஞ்சம் வாங்காத நல்லவர். குற்றவாளி ஒருவரைப் பின் தொடரும் பொறுப்பு சத்யாவுக்கு வழங்கப்படுகிறது. பாதுகாப்புக்கு எட்டு தோட்டாக்கள் அடங்கிய ப்ரூனி ரக துப்பாக்கியும் வழங்கப்படுகிறது. முதல் நாளிலேயே அந்த துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார் சத்யா. ஒரு நாளுக்குள் அதைக் கண்டிபிடிக்க வேண்டிய கட்டாயம். ஆனால், வேகமாக கைமாறும் அந்தத் துப்பாக்கி மிகப்பெரிய குற்றத்தில் முக்கிய அங்கமாகிறது. துப்பாக்கியும் அந்த போலீஸும் என்ன ஆனார்கள்; எட்டு தோட்டாவில் கடைசித் தோட்டா யாருக்கு என்பதையெல்லாம் கொஞ்சம் நீளமாகச் சொல்லியிருக்கிறது படம்.

காவல்துறை விசாரணைகள், கூடவே பயணிக்கும் குற்றவாளிகளின் கதை, அவர்களின் பின்புலம் என மிக எமோஷனல் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ். ஃப்ரெஷான இந்தக் களத்தைத் தேர்ந்தெடுத்ததுக்காகவே பாராட்டலாம். மிஷ்கினின் சிஷ்யர் என்பது படத்தில் நிறைய இடங்களில் பிரதிபலித்திருந்தது. 

ஹீரோவாக நடித்திருக்கும் வெற்றி, நடிக்க முயல்கிறார். ஆனால் முழுமையாக இல்லை.   துப்பாக்கி காணாமல் போகும் போது, நாயகி தன்னை ஏமாற்றும்போது, தன் வாழ்க்கையையே சிதைத்தவனைப் பார்க்க நேரிடும்போது... எனப் பல முக்கியமான தருணங்களில் அவர் கொடுக்கும் நடிப்பு நிறைவாக இல்லை. 

 படத்தின் ஒரிஜினல் ஹீரோ எம்.எஸ்.பாஸ்கர்தான். பெற்ற பிள்ளைகளே தன்னை ஒதுக்கும்போது காட்டும் சோகம், பென்ஷன் பணம் கிடைக்காத விரக்தி, திடீரென சிலை போல உறைந்து நிற்பது எனப் பல இடங்களில் பிரமாதப்படுத்துகிறார். இருந்தும், அவரின் நடிப்பும் ஓவர் டோஸ் ஆக மாறவும் செய்கிறது. முக்கியமாக, ஹீரோவும் பாஸ்கரும் காபி ஷாப் ஒன்றில் பேசும் காட்சி பத்து நிமிடத்துக்கும் மேலாக நீள்வது, தனது பின்கதையை பாஸ்கர் வசனங்கள் மூலம் சொல்வது எல்லாம் சீரியல் பார்க்கும் அனுபவம். தவிர, தன் செயல்களுக்காக பாஸ்கர் சொல்லும் காரணங்கள் அத்தனை ஏற்புடையதாக இல்லை. அதனாலே அவரின் நிறைவான நடிப்பும் மிகையாக தெரிகிறது. 

ஹீரோயினாக வரும் அபர்ணா, இந்த வழக்கை விசாரிக்கும் நாசர், துப்பாக்கியைத் திருடும் சிறுவன், சார்லஸ் வினோத், மணிகண்டன், லல்லு, மீரா மிதுன் என அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மிக அழுத்தமாக நகர்ந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது வரும் சின்ன காமெடிகள் ஆறுதல் அளிக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர், மணிகண்டன், லல்லு இந்த மூவரின் கூட்டணியில், அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய தேவையும், காரணமும் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். பணத் தேவைகளுக்கு அவர்களுக்கான பின்னணியும் டீடெயிலாகச் சொல்லியிருக்க வேண்டிய ஒன்று. 

ஹீரோ வெற்றிக்கு, துப்பாக்கி காணாமல் போனால் வாழ்க்கையே முடிந்தது என பயமுறுத்திவிட்டு, பின்னால் சஸ்பென்ஷன் கொடுத்து, விசாரணைக்கு அழைப்பதோடு முடிந்து விடுகிறது. இதுதான் யதார்த்தமும் கூட. ஆனால், முன் கதையில் அந்தத் துப்பாக்கி இல்லையென்றால் அவர் வாழ்க்கையே இல்லையென்ற பீடிகை ஏன்?  

தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை முடிந்த அளவு கூட்டியிருக்கிறது. பாடல்களில் மோஷன் ப்ளர் பயன்படுத்தியது போல சில காட்சிகளிலும் அந்த ஜெர்க் இருந்தது சின்ன உறுத்தலாக இருந்தது. இடைவேளைக்குப் பிறகான படத்தின் நீளம் பெரிய அலுப்பை உண்டாக்குகிறது. நாகூரான் படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பின்னணி இசையில் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும் பாடல்கள் மூலம் கவர்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி.

துரோகம் செய்தவர்களுக்கான அந்த க்ளைமாக்ஸ் ட்ரீட்மென்ட் நச். அந்த “சுருக்” டெக்னிக்கை படம் முழுக்க பயன்படுத்தியிருந்தால் 8 தோட்டாக்களும் தெறித்திருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு