Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதனால்தான் விஜய் இன்றைக்கும் ‘இளைய’ தளபதி!

இளைய தளபதி விஜய் டைட்டில் கார்டு

தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். தனது 18வது வயதில் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதன் பிறகு 60 படங்கள் என்று அவர் கிராஃப் உயர்ந்து, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அவரது ரசிகர்கள் ‘அண்ணா, தலைவா, தளபதி’ என பல உறவுகள் சொல்லி அழைத்தாலும்  ‘இளைய தளபதி’ என்ற பெயர் தான் ஒவ்வொரு படத்தின் டைட்டில் கார்டிலும் அவர் பெயருக்கு மேல் மகுடமாய் அலங்கரித்து வருகிறது. 

 

‘செந்தூர பாண்டியன்' படத்தில் ‘இளைய நட்சத்திரம் விஜய்’ என்றுதான் டைட்டில் கார்டு போட்டார்கள். அந்த காலகட்டத்தில், ரஜினியின் ‘தளபதி’, ஸ்டாலினின் அடைமொழி என ‘தளபதி’ என்ற பெயரே ஊர் முழுக்க பெரும் பரபரப்பில் இருந்தது. எனவே விஜய்யின் ரசிகர்கள், 20 வயது இளைஞனான விஜய்க்கு ‘இளைய தளபதி’ என பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள். அடுத்து ரிலீசான `ரசிகன்' படத்திலேயே  `இளைய தளபதி விஜய்' என டைட்டில் கார்டு போட்டனர். அன்று இளைஞன், ரஜினியின் ரசிகன் என்கிற காரணத்தினால் அந்தப் பட்டம் விஜய்க்கு பொருத்தமாய் இருந்தது. ஆனால், இன்று அவருக்கு வயது நாற்பதை தாண்டி விட்டது. ‘இப்போதும் அந்த பட்டம் அவருக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறதா?’ என்ற கேள்வி எழுந்தால் `ஆம்' என்றுத்தான் சொல்ல தோன்றுகிறது. அதற்கான காரணம் ஒன்றும் 20 வருடங்கள் பழமையானது அல்ல, பல சமீபத்திய உதாரணங்கள்.

ஹீரோவாக நடித்த முதல் ஐந்து படங்களில் நான்கு படங்களை இயக்கியது அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான். அதற்குப் பிறகு விக்ரமன், பாசில், வஸந்த் போன்ற முன்னணி இயக்குநர்களின் படத்திலும் நடித்தார். ஆனாலும், பெரும்பாலும் ரொமாண்டிக் படங்களிலேயே நடித்துவந்த விஜய்க்கு `திருமலை' படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. புது டீம், புது லுக், புது ஸ்டைல் என `திருமலை' படத்தின் மூலமே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தி கொண்டார். அச்தை செய்து காட்டியது ரமணா எனும் இளம் அறிமுக இயக்குநர்.

அப்போதிருந்தே நிறைய புது இயக்குநர்களுடன் பணியாற்ற தொடங்கினார் விஜய். `முதல்வன்', `சாக்லேட்' ஆகிய படங்களை தயாரித்த ஆர்.மாதேஷ் `மதுர' படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். `திருப்பாச்சி' படம் தான் பேரரசுவின் முதல் படம். `சச்சின்' படம் மூலம் தான் தமிழில் அறிமுகமானார் இயக்குநர் ஜான் மகேந்திரன். முன்னணி நடிகராக வலம் வந்த பிரபுதேவா `போக்கிரி' படம் மூலம் தான் தமிழில் இயக்குநர் ஆனார். `கில்லி',`மதுர' படங்களுக்கு வசனம் எழுதிய பரதனுக்கு `அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதேபோல், `குருவி' படத்திற்கு வசனம் எழுதிய பாபுசிவன் `வேட்டைக்காரன்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு, விஜய் எந்த அறிமுக இயக்குநரின் இயக்கத்திலும் நடிக்கவில்லை. ஆனால், அட்லி, ஆர்.டி.நேசன்,  ஏ.எல்.விஜய் என இளம் இயக்குநர்களோடு பணியாற்ற ஆரம்பித்தார். 'திருமலை' படத்திற்குப் பிறகு அவர் ஹீரோவாய் நடித்த படங்கள் 23. பணியாற்றியுள்ள இயக்குநர்களின் எண்ணிக்கை 17. இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை 12. இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களான அனிருத், சந்தோஷ் நாராயணன் இருவருடன் பணியாற்றிவிட்டார். இந்த அளவிற்கு வேறு எந்த முன்னணி நடிகரும் இப்படி இளம் கலைஞர்களுடன் அடுத்தடுத்து பணியாற்றுவதில்லை. ஒரு படம், இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை.

இப்படி இளம் திறமைகளுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கி வருவதால்தான், விஜய் இன்றும் தமிழ் சினிமாவின் `இளைய தளபதி' என்ற  பட்டத்திற்கு பொருத்தமானவராய் இருக்கிறார். 

-ப.சூரியராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்