Published:Updated:

“நான் சைக்கிள்ல வந்த இடத்துல, என் படத்தின் இசை வெளியீடு!” - நெகிழும் ராஜமெளலி #Baahubali2

“நான் சைக்கிள்ல வந்த இடத்துல, என் படத்தின் இசை வெளியீடு!” - நெகிழும் ராஜமெளலி   #Baahubali2
“நான் சைக்கிள்ல வந்த இடத்துல, என் படத்தின் இசை வெளியீடு!” - நெகிழும் ராஜமெளலி #Baahubali2

“நான் சைக்கிள்ல வந்த இடத்துல, என் படத்தின் இசை வெளியீடு!” - நெகிழும் ராஜமெளலி #Baahubali2

ஒற்றைக்கேள்வியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டிருக்கும் படம் ‘பாகுபலி’. ஏன் பாகுபலியை கட்டப்பா கொன்றார் என்கிற கேள்விக்கு பதில் ஏப்ரல் 28-ல் தெரிந்துவிடும். பாகுபலி 2-ம் பாகத்திற்கான தெலுங்கு இசைவெளியீட்டு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதை அப்படியே தமிழ் ரசிகர்களுக்காவும் நிகழ்த்திகாட்டியிருக்கிறது பாகுபலி டீம். 

தமிழுக்கான பாகுபலி இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ராஜா காலத்து அரங்குகள், வண்ணங்கள் மின்னும் மேடைகள், பல திரை நட்சத்திரங்கள் என்று ராஜயோகத்துடன் நிகழ்ந்தது. இதில் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பேசும் முன், அவர்களுக்காக தனி தீம் பாடலுடன் கூட வீடியோவையும் வெளியிட்டு அசத்தியது பாகுபலி டீம். ஆர்.ஜே.பாலாஜி எல்லோரையும் கலாய்த்துக் கேள்விகள் கேட்டு, நிகழ்வை நடத்தினார். பிரபலங்கள் பேசியவற்றின் ஹைலைட்கள்:- 

நாசர்:

‘பாகுபலி’ படத்திற்கான கதையை ஒன்றரை மணிநேரம் ராஜமெளலி எனக்குச் சொன்னார். சொன்னதை சொன்ன மாதிரி எடுத்தா தான் படம் நல்லா இருக்கும்னு சொன்னேன். சொன்ன மாதிரி படமாக்கி காட்டிவிட்டார் இயக்குநர். ஏன்னா,  தனக்கு நம்பிக்கை வரும் வரைக்கும் கதையை யாருக்கும் சொல்லமாட்டார் ராஜமெளலி. அதுமட்டுமில்லாம படம் எடுப்பது ஒருவகையில் சுலபம். ஆதை மார்க்கெடிங் பண்ணுறது தான் ராஜதந்திரம். அதையும் தெளிவாக செய்கிறார் ராஜமெளலி. இந்த ‘பாகுபலி கன்க்ளூசன்’- உடன் முடியறது தான் வருத்தமா இருக்கு. ஆனா இன்னும் நிறைய பாகுபலி வரணும். 

சத்யராஜ்: 

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை.. அந்த மாதிரிதான், ராஜமெளலி கைய வச்சா அது ராங்கா போனதில்லை... ஏன்னா, இவர் 11 படம் இயக்கிருக்கார். எல்லாமே ஹிட்டு. ஆர்ட்டிஸ்ட் செய்ய வேண்டிய வாள் பயிற்சியில் தொடங்கி எல்லாத்தையுமே முன்னாடியே கத்துக்குவார். இந்தப் படத்தில் நடிக்கிறது பிக்னிக் போகுற மாதிரிதான். ஆந்திராவில் பிரபாஸை டார்லிங்னு தான் சொல்லுவாங்க. இந்த மாதிரியான ஒரு டீமோடு படம் பண்ணுறது ரொம்ப மகிழ்ச்சி. தமிழ்நாட்டைத் தாண்டி எங்க போனாலும் ‘கட்டப்பா’னுதான் கூப்பிடுறாங்க. அதற்கு காரணம் ராஜமெளலி சார் தான். அதை அவரிடம் சொன்னா, நான் இல்லை, எங்க டீம் தான்னு சொல்லுவார். இந்தப் படத்தை ஆங்கிலப் படத்தோடு ஒப்பிடமுடியாது. ஏனெனில் நம்ம மண் சார்ந்த படம் இது. 

தனுஷ்: 

இந்தி, தமிழ்னு எல்லா மொழியிலும் எதிர்பார்க்கப்படும் படம் ‘பாகுபலி 2’. கணக்கிடமுடியாத உழைப்பு இந்தப் படத்திற்குப் பின்னாடி இருக்கு. ஐந்து வருடமா இந்தப் படத்தைப் பண்ணிட்டு இருக்காங்கனு நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு. ராஜமெளலி சார் இயக்கம் பத்திப் பேசுற அளவுக்கு நான் பெரிய இயக்குநர்லாம் கிடையாது. படத்தோட டிரெய்லர் பார்க்கும்போதே தெரியுது படத்தோட பிரமாண்டம். இந்தப் படத்தை எப்படி இயக்கியிருப்பார்னு நினைச்சாலே பைத்தியம் பிடிக்கும் நமக்கு. அப்போ அவரைப் பத்தி நான் என்ன பேசமுடியும்?

யுவன்ஷங்கர் ராஜா: 

படத்தோட சக்ஸஸ் தான் நமக்குத் தெரியும். ஆனா அதற்குப் பின்னாடி இருக்கற உழைப்பைதான் நாம பாராட்டணும். ஒவ்வொரு பாடலுமே அவ்வளவு அழுத்தமா வந்திருக்கு என நறுக்கென பேசிவிட்டு நகர்ந்தார் யுவன். 

ரம்யா கிருஷ்ணன்

‘படையப்பா’ படம் என் கேரியர்ல ரொம்ப முக்கியம். என் கேரக்டரை ஆடியன்ஸ் மனசுல ரொம்ப அழுத்தமா பதியவச்ச படம். அதைத் தாண்டி மிகப்பெரிய படம் வரும்னு நினைச்சுக்கூட பார்க்கலை. பாகுபலியின் சிவகாமி, நீலாம்பரியை மறக்கடிச்சிடுச்சு. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. ‘மகேந்ந்ந்திர பாகுபலி,,,’னு உரக்க சொல்லவும் அரங்கமே அதிர்ந்தது. 

தமன்னா: 

தனுஷ், யுவன்னு எங்களை வாழ்த்த வந்த எல்லோருக்குமே நன்றி. சின்ன ப்ளாஷ்பேக் சொல்லப்போறேன். இந்தப் படத்தோட கதையைக் கேட்கும் போது எனக்குள்ள ஓர் எண்ணம். இந்தப் படத்துக்காக எனக்கு விருது கிடைக்கலைன்னா, வேற எந்தப் படத்துக்கு நமக்கு கிடைக்கப்போகுதுன்னு நினைச்சேன். ஆனா இந்தப் படத்தில் நடிச்சதே எனக்கு விருதுகிடைச்ச மாதிரி தான் இப்போ நினைக்கிறேன். விருதுகளை விட பெரியது இந்தப் படம். இன்றுமே ராஜமெளலி சாரோட மிகப்பெரிய ரசிகை. என் வாழ்க்கையில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.  என்னோட டார்லிங் பிரபாஸ்...! அவரை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா, எனக்கு நெருங்கிய நண்பர். இந்தப் படத்துல நடிக்கும் போது இன்னும் நெருக்கமான நண்பரா மாறிட்டோம். ஸ்வீட்டி (அனுஷ்கா) என்னோட மதர் இன் லா... நீ ரொம்ப அழகு... அமேசிங் அனு..! உன்னோட நடிப்பைப் பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன். விவரிக்கமுடியாத நிறைய அன்பு பாகுபலி டீமோடு எனக்கு இருக்கு. படையப்பாவில் அழகியா பார்த்துப் பழகிய ரம்யாகிருஷ்ணன் மேமை திரையில் அவ்வளவு வலிமையான பெண்ணா பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

அனுஷ்கா: 

ஏப்ரல் -28 படம் ரிலீஸ். நிச்சயமா எல்லோருக்குமே இந்தப் படம் பிடிக்கும். தேவசேனா கதாபாத்திரத்தை நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அப்படியொரு கதாபாத்திரம் கிடைச்சதே ரொம்ப சந்தோசம். ஸ்கிரிப்ட் மேல இருக்குற நம்பிக்கை தான் படத்திற்காக எத்தனை வருடம் என்றாலும் பரவாயில்லை என நடிக்க தைரியம் கொடுத்துச்சு. 

ராஜமௌலி:

நிறைய பிராக்டிஸ் பண்ணேன் என்ன பேசணும்னு. ஆனா, இங்கே வந்ததுக்கப்புறம், (ஆர்.ஜே.பாலாஜியைப் பார்த்து) யார் பேசினாலும் ரொம்ப கிண்டல் பண்றிங்க பாலாஜி. அந்த டென்ஷன்லேயே மறந்துட்டேன் என்ன பேசுறதுன்னு. அஞ்சு வருஷமா இந்தப் படம் பண்ணிட்டு இருக்கோம். ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் எல்லோரும் இந்தப் படத்துக்காக நிறைய நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. சந்தேகமே இல்லாம இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட் தான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அப்பா, இந்தப் படத்துல வர்ற கேரக்டர்ஸ் பத்திச் சொன்னாங்க. சிவகாமி, பிங்கலத்தேவன், பல்வாள்தேவன், கட்டப்பா, பாகுபலின்னு எல்லா கேரக்டர்ஸ் பத்தியும் சொன்னாரு. இந்த கேரக்டர்ஸ் பத்தியெல்லாம் கேட்டதுக்கப்புறம் அது மனச விட்டு போகவே இல்ல. ஒரு வாரம், இரண்டு வாரம், ஒரு மாசம் ஆனதுக்கப்புறம் கூட மனசுக்குள்ள தொடர்ச்சியா அது பத்தின எண்ணங்களே ஓடிக்கிட்டு இருந்துச்சு. அப்பா அந்த கேரக்டர்ஸ் பத்தி சொன்னப்போ எனக்கு எப்படி இருந்துச்சோ, அந்த அனுபவத்தை தான் ஆடியன்ஸ்க்குக் கடத்தணும்னு நினைச்சேன்.

1991 - 92 ல சென்னையில தான் இருந்தேன். அப்போ கே.கே நகர்ல இருந்து இந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கிரவுண்டுக்கு சைக்கிள்ல வருவோம். இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் இப்போ இதே கிரவுண்ட்ல இவ்வளவு பேர் முன்னாடி, என்னோட படத்தோட ஆடியோ லான்ச் ஃபங்க்ஷன் நடக்குது. இது ரொம்ப ரொம்ப பிரவுட் மொமென்ட் எனக்கு. இந்தியன் டீம் எங்கியாச்சும் போச்சுன்னா, கொடியை முன்னாடி எடுத்துட்டு போவாங்கள்ல அந்த மாதிரி தான் தமன்னாவும், ராணாவும். பாகுபலி டீம் எங்கே போனாலும் இவங்க ரெண்டு பேர் தான் முன்னாடி போவாங்க. தேங்க் யூ ராணா அண்ட் தமன்னா. ரம்யா கிருஷ்ணன் மேம், சத்தியராஜ் சார், நாசர் சார், அண்ட் ஸ்வீட்டி எல்லோருக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ். எனக்குத் தெரியும் நிறைய பேருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன்ன்னு, இது பழக்கமாகி போயிடுச்சு. யாரையாவது விட்டுருந்தா ரொம்ப ரொம்ப சாரி அண்ட் தேங்க்யூ. நிறைய பேரு கேப்பாங்க, இதை விட பெரிய படம் பண்ணுவிங்களான்னு. அப்புறம் பிரபாஸூக்குப் பதிலா வேற யாரையாச்சும் இந்த கேரக்டருக்கு யோசிச்சு இருக்கீங்களான்னு. ஒரு கேரக்டருக்காக அவங்க லைஃப்ல 3 வருஷத்துக்காக ஒதுக்குற ஹீரோ யாராச்சும் இருந்தா சொல்லுங்க, அப்புறம் அது பத்தி யோசிக்கலாம்னு சொல்லுவேன். தேங்க் யூ டார்லிங்.

முதல் பாகத்துல இந்தப் படத்துல வர்ற கேரக்டர்ஸை அறிமுகம் மட்டும்தான் செஞ்சு வைச்சோம். அவங்களுக்குள்ள இருக்க கதைகள் பத்தி சொல்லல. ஆனா, இந்த பார்ட்ல உங்க எல்லோருக்குள்லயும் இருக்க நிறைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

பிரபாஸ் :

இங்கே வந்திருக்குற எல்லோருக்கும் ரொம்ப நன்றி. சத்யராஜ் சார் தேங்க் யூ சார் உங்க சப்போர்ட்டுக்கு. பியூட்டிஃபுல் தமன்னா, ஸ்வீட்டி அனுஷ்கா தேங்க் யூ ரெண்டு பேருக்கும். இந்த ரெண்டு ரெண்டரை வருஷமா நான் வேற எந்தப் படமும் பண்ணலை. எனக்காகக் காத்திருந்த என்னோட ரசிகர்களுக்கு லவ் யூ அண்ட் தேங்க்ஸ்..!

- முத்து பகவத்- கா.பாலாஜி-

படங்கள்:மீ.நிவேதன்

அடுத்த கட்டுரைக்கு